செவ்வாய், 11 ஜூன், 2013

இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை


இறைவனில் திருப்பெயரால்...

"இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை"

உலக மக்களில் சுமார் 150 கோடி மக்களால் இஸ்லாம் பின்பற்றப்பட்டு வருகின்றது. முன் எப்போதும் இருந்திராத அளவுக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் ஆவல் முழு உலகிலும் அதிகரித்து வருவதைக் காண்கிறோம். ஆயினும் பெரும்பாலான மக்கள் இஸ்லாம் பற்றி தவறாகவே அறிந்து வைத்துள்ளனர்.

இஸ்லாம் எனும் ஏகத்துவ மார்க்கம் 14 நூற்றாண்டுகளுக்கு முன் இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மார்க்கம் என்பதும், அத்தகைய தவறுகளில் அடங்கும்.

மனிதன் எப்போது தோன்றினானோ அப்போதே இந்த மார்க்கமும் தோன்றி விட்டது என்பது தான் திருக்குர்ஆனிலிருந்தும் இறைத்தூதரின் அறிவுரைகளிலிருந்தும் பெறப்படும் உண்மையாகும்.

இஸ்லாம் எனும் சொல்லுக்கான பொருளிலிருந்தே இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம். இச்சொல் கட்டுப்பட்டு நடக்குதல் எனப் பொருள்படும்.

அகில உலகையும் படைத்து பராமரிக்கும் ஒரே ஒரு இறைவன் இருக்கிறான் என்பதை ஏற்று அவனது கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது இம்மார்க்கத்தின் தலையாய கொள்கையாக இருப்பதால் இப்பெயர் சூட்டப்பட்டது.

நபிகள் நாயகத்திற்கு முன் இக்கொள்கையைப் பிரச்சாரம் செய்த இறைத்தூதர்கள் பலர் வாழ்ந்தனர். அவர்கள் கடைப்பிடித்து ஒழுகிய மார்க்கமும் இஸ்லாம் தான்.

ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து மனித குலம் பல்கிப் பெருகியது. அவ்விருவரை மட்டுமே இறைவன் நேரடியாகப் படைத்தான். உலக மக்கள் அனைவரும் அவ்விருவரின் வழித்தோன்றல்களே என்று இம்மார்க்கம் கூறுகிறது.

அந்த முதல் மனிதர் கடைபிடித்த வழியும் இது தான். அவர்களும் இக்கொள்கையைத்தான் ஏற்று வாழ்ந்தனர். முதல் மனிதருக்குப் பின் முஹம்மது நபி வரை ஏராளமான நன் மக்களை இறைவன் தனது தூதர்களாக நியமித்தான். அவர்களும் இக்கொள்கையையே பிரச்சாரம் செய்தனர். ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குங்கள், அவனைத் தவிர வேறு எவரையும் வணங்காதீர்கள் என்பது தான் அவர்களின் கொள்கை முழக்கமாகத் திகழ்ந்தது.

அனைத்து நாடுகளுக்கும், அனைத்து மொழி பேசும் மக்களுக்கும் ஏராளமான இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டனர். அவர்கள் தத்தமது மொழியில் இக்கொள்கையை முழங்கிகினார்கள்.

ஆயினும் அத்தூதர்களின் மரணத்திற்குப்பின் அவர்கள் மீது அன்பு கொண்ட மக்கள் ஏக இறைவனை மறந்து அவர்களையே கடவுளாகக் கருதலானார்கள். அவர்களயே வழிபடலானார்கள். இத்தகைய மக்களை நல்வழிப்படுத்த அனுப்பப்பட்ட தூதர்களையும் கடவுளாக வழிபட்டனர்.

நாங்கள் இறைத்தூதர்கள் தான்  என  நிரூபிக்க சில அற்புதங்களை அவர்கள்  செய்து காட்டினார்கள்  அந்த அற்புதங்கள் சாதரான மனிதன் செய்ய முடியாது; கடவுளால் தான் செய்யமுடியும் என்று மக்கள் நம்பினார்கள். நபிமார்களை வணங்க இதுவும் முக்கிய காரணமாக இருந்தது

இப்படி இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களில் இறுதியாக அனுப்பப்பட்டவர் தான் முஹம்மது நபி அவர்கள்.

முஹம்மது நபி அவர்கள் புதிதாக எந்தக் கொள்கையையும் முன் வைக்கவில்லை. அகில உலகையும் படைத்து பராமரிப்பவன் ஒரே ஒரு இறைவன் மட்டுமே! அவனை மட்டுமே வணங்குங்கள். மது, வட்டி, விபச்சாரம், மோசடி, கொலை, கொள்ளை போன்ற தீமைகளிலிருந்து விடுபடுங்கள்.

பிறருக்கு உதவுங்கள்; உறவினரைப் பேணுங்கள்; நன்மைக்கு துணை செய்யுங்கள்; தீமைக்கு எதிராகக் களமிறங்குங்கள்; இவ்வுலகில் கிடைக்கும் இன்பத்திற்காக எந்தவித முறைகேட்டிலும் ஈடுபடாதீர்கள்; என்றெல்லாம் முஹம்மது நபி அவர்கள் போதனை செய்தார்கள். இதில் எந்த ஒன்றும் புதிதானதல்ல. அவர்களுக்கு முன் சென்ற தூதர்கள் கூறிய அதே அறிவுரைகளைத்தான் மக்களுக்கு மீண்டும் நினைவூட்டினார்கள். இஸ்லாம் மார்க்கத்திற்கு புத்துயிர் கொடுக்கத்தான் அவர்கள் இறைவனால் நியமிக்கப்பட்ட்டார்களே தவிர, புது மார்க்கத்தை உருவாக்க அனுமதிக்கப்படவில்லை.

ஒரே வித்தியாசம் என்னவென்றால் நபிகள் நாயகத்திற்கு முன் அனுப்பப்பட்ட தூதர்கள் கடவுளர்களாக ஆக்கப்பட்டனர். அவர்களின் போதனைகள் திரித்து கூறப்பட்டன. முஹம்மது நபி அவர்கள் கடவுளென கருதப்படவில்லை. அவர்களின் போதனைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதுதான்.

முஹம்மது நபி அவர்கள் தமக்கு முன்னர் அனுப்பப்பட்ட தூதர்கள் கடவுளாகவோ, கடவுளின் குமாரராகவோ கருதப்பட்டதைக் கண்டு, அத்தகைய நிலை தமக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தினார்கள்.

தமக்காக யாரும் எழுந்து நின்று மரியாதை செய்யக்கூடாது; தனது காலில் விழுந்து கும்பிடக்கூடாது; தம்மிடம் எந்த ஒன்றையும் பிரார்த்திக்கலாகாது; இறந்தவர்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கக்கூடாது; என்றெல்லாம் கண்டிப்பாக கூறிச் சென்றதால் அவர்கள் அறிமுகம் செய்த அதே தூய வடிவில் இஸ்லாம் இன்றும் காட்சி தருகிறது.

இஸ்லாம் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இதுதான், ஏனெனில் இறைவனை மட்டுமே வணங்கவேண்டும் என்பதுதான் இதன் மிக முக்கியமான கொள்கையாக அமைந்துள்ளது. இக்கொள்கையில் நம்பிக்கையில்லாத ஒருவர் இது கூறும் வேறு கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றினாலும் அவர் இஸ்லாத்தை சேர்ந்தவராக முடியாது எனவும் இஸ்லாம் பிரகடனம் செய்கிறது.

இஸ்லாம் வலியுறுத்துகிறது என்பதை ஒதுக்கி வைத்து விட்டு கவனமாக சிந்தித்தாலும், இக்கொள்கை தான் அறிவுக்கு ஏற்றதாகவும், மனித குலத்துக்கு நன்மைபயப்பதாகவும் அமைந்துள்ளதை அறிய முடியும்.

இறைவன் ஒருவனே என்று மட்டும் கூறுவதுடன், இறைவனுக்குரிய இலக்கணங்களையும் இது  கூறுகிறது. அந்த இலக்கணங்களுடன் கூடிய ஓரிரைக் கொள்கை பற்றி சிந்தித்தால், அதனால் மனித குலத்திற்கு கிடைக்கும் பயன்கள் கணக்கில்லாதவை.

உலக மக்கள் மொழியின் பெயரால், பிரதேசத்தின் பெயரால், குலத்தின் பெயரால் பிளவுபட்டு நிற்கின்றனர். ஒவ்வொருவரும் தமக்கு தனித்தனியான கடவுள்கள் இருப்பதாக நம்புகின்றனர். இத்தகைய நம்பிக்கை அவர்களின் பிரிவை நிரந்தரமாக்கி விடுகின்றது.

அகில உலகையும் படைத்து பராமரிப்பவன் ஒரே இறைவன் மட்டுமே, அவன் தான் நம் அனைவருக்கும் இறைவன் என நம்பினால் உடனடியாக உலக ஒருமைப்பாட்டுக்கான வாசல் திறக்கப்படுவதை காணலாம். இம்மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட மக்களிடம் இத்தகைய ஒருமைப்பாடு நிலவுவதைக் கண்கூடாகவே காணலாம். பல்வேறு குலங்களிலிருந்தும், சாதிகளிலிருந்தும் இஸ்லாத்தை ஏற்றவர்கள் தான் இன்றைய தமிழக முஸ்லிம்கள்.

அவர்களில் ஒருவருக்கும் தமது முன்னோர்கள் எந்த சாதியைச் சார்ந்தவர்கள் என்பது கூட தெரியாது. இந்த அளவுக்கு சாதி உணர்வுகளை அறவே மறக்கச்செய்ய இந்தக் கொள்கை தான் காரணமாக இருந்தது.

கறுப்பர், வெள்ளையர் என்று நிறத்தின் அடிப்படையில் நிலவும் பாகுபாட்டையும் ஒழித்துக்கட்டி கருப்பர்களை முதல் வரிசையிலும் நிறுத்தி, அதை வெள்ளையர்களும் மனமுவந்து ஏற்கும் அதிசயத்தை பள்ளிவாசல்களிலும் காணலாம். இந்த அற்புதத்தை நிகழ்த்திடக் காரணமாக அமைந்ததும் இந்த ஓரிறைக் கொள்கை தான்.

ஒரே ஒரு கடவுள் தான் உலகுக்கு இருக்க முடியும் என்பதை முஸ்லிமல்லாத மக்களில் பலரும் ஏற்றுக்கொள்ளவே செய்கின்றனர். அனால் கடவுளின் இலக்கணம் குறித்து இஸ்லாம் தனி வழியில் செல்கின்றது.
  • கடவுளுக்கு தாய் தந்தை இல்லை; இதனால் அவனுக்கு உடன்பிறப்புகளும் இல்லை.
  • கடவுளுக்கு பாலுணர்வு இல்லை; இதனால் அவனுக்கு மனைவிகள் இல்லை.
  • கடவுளுக்கு அழிவோ, மரணமோ இல்லை; இதனால் அவன் இடத்துக்கு வாரிசுரிமை கொண்டாட பிள்ளைகளும் இல்லை.
  • அவனுக்கு இயலாதது எதுவும் இல்லை; அதனால் அவனுக்கு உதவியாளர் எவரும் இல்லை.
  • அவனை மீறி உலகில் எதுவும் நடந்து விடமுடியாது என்பதால் அவனுக்கு கவலையோ, துக்கமோ இல்லை.
  • அவனுக்கு எந்தத் தேவையும் இல்லை; இதனால் அவனுக்கு உறக்கம் இல்லை, அசதி இல்லை, பசி இல்லை, மல, ஜல உபாதை இல்லை, நோய் இல்லை, முதுமை இல்லை, அவனுக்கு எந்த இடைத்தரகரும் தேவையில்லை, எந்த விதமான பலவீனமும் இல்லை என்று கடவுளுக்கான இலக்கணத்தை நறுக்குத் தெறித்தாற்போல் இஸ்லாம் கூறுகிறது.
இவ்வாறு நம்புவதுதான் கடவுளின் தகுதிக்கு ஏற்றதாக இருக்கிறது. இதனால் மனிதகுலத்துக்கு பல நன்மைகளும் கிடைக்கின்றன,

கடவுளுக்கு தேவை உண்டு என்று மக்கள் நம்பாமல் கடவுளுக்கு எதுமே தேவையில்லை என்று நம்பினால் ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்றப்படாமல் தவிர்க்கலாம்.

கடவுளுக்கும், மனிதர்களுக்கும் இடைத்தரகர் தேவையில்லை என்ற நம்பிக்கையினாலும் இத்தகைய நன்மை கிடைக்கின்றது. நம்மால் கடவுளை நெருங்க முடியாது என்று நம்பும் போது கடவுளிடம் மக்களை நான் நெருக்கமாக்கி விடுவேன் என்று சிலர் கூற ஆரம்பித்து விடுகின்றனர். மற்றவர்களை விட தாங்களே கடவுளுக்கு நெருக்கமானவர்கள் எனவும் கூற ஆரம்பித்து விடுகின்றனர். கடவுளுக்கு எந்தத் தேவையில்லை என்று நம்புவது மட்டுமே இவர்களிடமிருந்து மக்களைக் காக்கும் கேடயமாக அமையும்.

தன்னை விட எல்லா வகையிலும் குறைந்த மனிதர்கள் வடிவிலோ, வேறு வடிவிலோ கடவுள் ஒருக்காலும் வர மாட்டான் என்பதும் இஸ்லாம் கூறும் கடவுள் இலக்கணத்தில் முக்கியமானதாகும்.

நம்மைப் போலவே மனிதர்களாக இருப்போரை நம்மில் பலர் கடவுள் என்றோ, கடவுள் அவதாரம் என்றோ நம்புகிறோம். அவர்களும் நம்மைப் போலவே உண்கிறார்கள்; பருகுகிறார்கள்; மல, ஜலம் கழிக்கிறார்கள் என்றெல்லாம் தெளிவாக தெரிந்திருந்தும் நம்மைப் போலவே நோய்வாய்ப்படுவதையும், பின்னர் மரணித்து விடுவதையும் கண்ணால் கண்ட பின்பும் அவர்களை கடவுளாகக் கருத காரணம் என்ன? கடவுள் மனிதனாகவும் வருவான் என்ற நம்பிக்கை தான். இந்த வாசலை இறுக்கமாக இஸ்லாம் அடைத்து விடுகிறது. இதனால் மனிதனை மனிதன் வணங்கி சுயமரியாதையை இழப்பதை தடுத்து நிறுத்துகிறது இஸ்லாம்.

மேலும் இஸ்லாத்தை அறிந்து கொள்ள:
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
அல் துமாமா, E ரிங் ரோடு, தோஹா, கத்தர்.
போன்: 4431 5863 / 7013 8460  www.qatartntj.com