செவ்வாய், 10 டிசம்பர், 2013

அமல்களை பாழ்படுத்தும் செயல்கள்


அமல்களை பாழ்படுத்தும் செயல்கள் (1)

அமல்கள் என்பது அல்லாஹ்விற்கு விருப்பமான, அவன் கட்டளையிட்டு செய்ய சொன்ன விஷயங்களாகும். முதலில் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் உறுதியான உள்ளத்துடன் நம்புவது. இரண்டாவது தொழுகை, மூன்றாவது நோன்பு, நான்காவது ஸகாத், ஐந்தாவது ஹஜ். இந்த ஐந்தில் நான்கை ஒவ்வொரு முஸ்லிமான சகோதர சகோதரிகளும் செய்ய வேண்டும். ஹஜ் மட்டும் வசதி படைத்தவர்கள் மேலும் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் செய்ய வேண்டும்.

அமல்களில் சிறந்தது, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புவது. அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வது. ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புஹாரி (26, 1519)

பாவங்களிலேயே பெரும் பாவமாக கருதப்படுவது அல்லாஹ்விற்கு இணையாக படைப்பினங்களை ஆகுமாக்குவது. பெற்றோருக்கு மாறுபாடு செய்தல். ஒட்டுமொத்த பாவங்களுக்கும் ஆணிவேராக இருக்கும் பொய்சொல்லுதல், பொய் சாட்சி சொல்லுதல் ஆகும். இதற்கு அடுத்தபடியாக புறங்கூறுதல், விபச்சாரம் செய்தல், மது அறுந்துதல், மற்றவர்களி; சொத்துக்களை அபகரித்தல், ஸக்காத்தை ஒழுங்காக கொடுக்காமல் உலோபித்தனம் செய்தல் ஆகியவை ஆகும்.

இணைவைத்தல்

இணைவைத்தல் என்பது பெரும்பாலான முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு என்னவென்றே தெரிவதில்லை. அவர்கள் சிலைகளையும், சிலுவைகளையும் வணங்குவது தான் இணைவைத்தல் என்பதாக நினைத்து, அதில் இருந்து விலகியிருக்கிறார்கள். அது மட்டும் இணைவைத்தல் கிடையாது. நமது நபி (ஸல்) அவர்கள் கப்ருகளை ஜியாரத் செய்ய சொன்னார்கள். அதனால் கப்ரு என்ற போர்வை இருக்கும் தர்காக்களை பார்க்கச் செல்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் அங்கு அடக்கம் செய்யப்பட்டவருக்கு சக்தி இருக்கிறது என்று நம்பி அவரிடம் வேண்டுதல் செய்கிறார்கள். அங்கு ஓதி ஊதிய பொருட்களை பரக்கத் நிறைந்தது என நினைத்து சாப்பிடுகிறார்கள், தன் குடும்பத்தாருக்கும் கொடுக்கிறார்கள். முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் சொன்னது, அலங்காரமாக கப்ருகள் என்ற போர்வையில் இருக்கும் தர்காக்களை இல்லை. மாறாக ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் மையத்தாங்கரையைத் தான் சொன்னார்கள்.

"அடக்கத்தலங்களை சந்தியுங்கள். அவை மரணத்தை நினைவூட்டும்"
(முஸ்லிம்: 1777)
என்று தான் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்களே தவிர வேறு எதற்காகவும் அவர்கள் சொல்லவில்லை.

உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரைமட்டமாக்காமல் விடாதீர்
(முஸ்லிம்: 1764)

'அவர்களில் பெரும்பாலானோர் இணைகற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை.'
அல்-குர்ஆன் 12:106

மேலும் அல்லாஹ் தன் இறைவேதத்தில் கூறுகிறான்,
'என்னை அழையுங்கள் உங்களுக்கு நான் பதில் அளிக்கிறேன். எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராகவே நுழைவார்கள்.'

சகுனம், ஜோசியம், நம்புவது

தமது வீடுகளில் ஏதோ ஒரு துயரச் சம்பவம் நடந்தால் மருமகள் வந்த நேரம், பிள்ளை பிறந்த நேரம், பிள்ளை தருச்ச நேரம் என்று சகுனம் பார்க்கிறார்கள். அப்படிச் செய்வதால்

சகுனம் பார்ப்பது இணைவைப்பாகும் என்று மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
(அபூ தாவூத் : 3411)

'அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு ஏதும் ஏறபடாது. அவன் எங்கள் அதிபதி, நமிபிக்கை கொண்டு அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும் என்று நபியே நீர் கூறுவீராக.' (அல்-குர்ஆன் 9:51)

தங்களுக்கு கெட்டது நடந்தாலும், அல்லது நல்லது எப்போது நடக்கும் என்ற ஆசை அவர்களின் உள்ளத்தில் ஏற்பட்டாலும் உடனே ஜோசியரை வரவழைத்து ஜோசியம் பார்ப்பார்கள். இல்லாவிட்டால் ஜோசியரை இவர்களே போய் சந்திப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஒருவர் ஜோதிடனிடம் சென்று எதைப்பற்றியாவது கேட்டால் அவ்வாறு கேட்டவருடைய நாற்பது நாள் தொழுகையை அல்லாஹ் அங்கீகரிக்க மாட்டான்.
(முஸ்லிம் : 4488)

மவ்லீது ஓதுவது

ஆண்டுக்கு ஒரு முறை மவ்லீது ஓதுவது. இதைச் செய்யா விட்டால் நம்மலுடைய செல்வம் குறைந்துவிடுமோ! ஏன்ற பயம் மக்களில் சிலரிடம் இருக்கிறது. அதை ஓதி வந்தால் நபியுடைய சிபாரிசு கிடைககும் என்று நம்புகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் ஓதி முடிப்பதற்கு முன்னால் வந்து நின்று துஆச் செய்வார்கள் என்றும் நம்புகிறார்கள். அவர்களுக்கு இறந்த பிறகும் சக்தியுண்டு என்று நம்புகிறார்கள்.

அல்லாஹ் தன் இறைவேதத்தில் கூறுகிறான்.
'நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக்கொண்டாலும், பதில் தர மாட்டார்கள். நன்கறிந்தவனை போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.
(அல்-குர்ஆன் 35:14)

நபி (ஸல்) அவர்கள் மறுமை நாளில் 'இறைவா! உனக்கு இணையாக யாரையும் ஆக்காமல் என்னை நம்பிக்கை கொண்டு உன்னைச் சந்திக்கின்ற முஸ்லிமான ஒவ்வொரு அடியானையும் நீ மன்னித்து விடு என்று கூறுவார்கள்.'
(அஹ்மத் : 9475)

புறங்கூறுதல்

நம் மக்களிடையே புறங்கூறுதல் என்பது சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. புறங்கூறுபவருக்கு அல்லாஹ் கப்ருகளிலும் வேதனை செய்வான், நரகத்திலும் அவன் வீசப்படுவான்.

'புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். அவன் ஹுதமாவில் எறியப்படுவான். ஹுதமா என்பது கொழுந்து விட்டெறியும் நரக நெருப்பாகும்.
(அல்-குர்ஆன் 104:1, 4,5,6)

'சிறு நீர் கழித்து சுத்தம் செய்யாத ஒருவனையும், கோள் சொல்லி (புறங்கூறி) திரிந்தவனையும் கப்றுகளில் வேதனை செய்யப்படுகிறது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி : 1361, நஸஈ : 2042)

புறங்கூறுதல் என்பது இருப்பதை மிகைப்படுத்தி கூறுவது. அதில் பொய்யைத் தவிர வேறு ஏதும் இருக்காது. இதனால் அல்லாஹ் கப்ருகளில் வேதனை செய்கிறான். மேலும் நரகத்தில் தூக்கி எறிய வைக்கிறான்.

சாபமிடுதல்

சாபமிடுதல் பெண்களிடம் தான் அதிகமாக கணப்படுகிறது. ஒருவரால் துன்பம் தமக்கு ஏற்பட்டால் உடனே அவர்களை சபித்துவிடுவது. துன்பம் ஏற்பட்டால் பொறுமையைக் கொண்டு தொழுகையின் மூலம் அல்லாஹ்விடம் உதவி தேடுவதை விட்டுவிட்டு அதற்கு காரணமானவர்களை சபித்துவிடுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் பயணத்தின் போது அதிகமான பெண்கள் நரகத்தில் இருப்பதை பார்த்தார்கள். காரணம் அதில் ஒரு கூட்டத்தினர் சபிப்பவர்களாக இருந்நவர்கள்.

'அதிகமாக சபிப்பவர்கள் மறுமை நாளில் சாட்சி அளிப்பதற்காகவோ, பரிந்துரைப்பதற்காகவோ இருக்க மாட்டார்கள்'
(முஸ்லிம் : 5064)

ஆண்டை வீட்டார்கள், உறவினர்கள்

இப்போது இருக்கும் கால கட்டத்தில் நம் ஊர்களிலும் மற்ற எல்லா ஊர்களிலும் சண்டை முதலில் அண்டை வீட்டாருடன் தான் ஆரம்பமாகிறது. அதற்கு அடுத்தபடியாக உறவினர்களுடன் ஆரம்பமாகிறது. இது விதியா அல்லது சுத்தியிருப்பவர்களின் சதியா என்று அறிவதற்குள்ளாகவே அது நடந்து முடிந்துவிடுகிறது.

'அண்டை வீட்டார்கள் குறித்து வானவர் ஜிப்ரில் (அலை) அவர்கள் அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்கள். எந்த அளவிற்கு என்றால் எங்கே அண்டைவீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று நான் அஞ்சும் அளவிற்கு.'
(புகாரி : 6014)

சில அற்பக்காரணங்கக்காக ஒருவரோடு ஒருவர் பேசாமல் இருப்பது, சிலர் மாதக்கணக்கில், சிலர் வருடக்கணக்கில் வேறு சிலர் ஆயுள் உள்ளவரை பேசாமல் பேசாமல் உறவை துண்டித்து வாழ்கிறார்கள். அவர்கள் அதன் மூலம் என்ன நன்மையை இழந்துகொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்தால் ஒருவேலை இப்படி செய்யாமல் இருப்பார்களோ? என்னவோ தெரியவில்லை. அதை பெருமையாக வேறு சொல்லிக்கொள்வார்கள். சந்தோஷமும் பட்டுக்கொள்வார்கள்.

'திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் அனைத்து மனிதர்களின் அமல்களும் ஒப்படைக்கப்படுகிறது. சுவர்க்கத்தின் கதவும் திறக்கப்படுகிறது. அப்போது அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது. தமக்கும் தம் முஸ்லிம் சகோதரருக்கும் இடையே பகைமை உள்ள மனிதர்களை தவிர. அப்போது இவ்விருவரும் சமாதானம் கொள்ளும் வரை இவர்களை விட்டுவிடுங்கள் என மூன்று முறை சொல்லப்படுகிறது. அதாவது மன்னிப்பு வழங்கப்படுவது, சண்டையிட்டு சமாதானம் செய்ய முற்படாதவர்களுக்கு தடுக்கப்படுகிறது.'
(முஸ்லிம் : 3013)

'உறவை துண்டித்து வாழ்பவன் சுவர்க்கம் நுழையமாட்டான்:
(முஸ்லிம் : 4999)

தொழுகையை வீணடித்தல்

தொழுகைக்காக இகாமத் சொல்லட்டும், அதற்கு பிறகு தொழுகைக்கு போகலாம் என்ற எண்ணத்துடன் தொழுகைக்கு தாமதமாகச் சென்று ஜமாஅத்தை வீணடிக்கிறார்கள். பல சமயங்களில் தொழுகையின் சிந்தனை கூட இல்லாமல் தொழுகையை கைவிட்டு விடுகிறார்கள். ஒரு சிலர் ஜும்மா தொழுகை மட்டும் தொழுதால் போதும் என நினைக்கிறார்கள். அல்லாஹ் நம் மக்கள் அனைவரும் 5 வேலை தொழுகையை கட்டாயமாக தொழவேண்டும் என கட்டளையிட்டுள்ளான் அதை பேனுபவர்கள் சில பேர்களே.

'யாரேனும் ஒரு தொழுகை மறந்து விட்டால் நினைவு வந்ததும் தொழட்டும். இதை தவிர வேறு பரிகாரம் இல்லை.'
(புகாரி : 597)

'அல்லாஹ் கூறுகிறான் என்னை நினைக்கும் பொருட்டு தொழுகையை நிலை நிறுத்துவிராக.'
(அல்-குர்ஆன் 20 : 14)

'அஸர் தொழுகையை தவரவிடுபவர், தம் குடும்பமும் தமது செல்வமும் அழிக்கப்பட்டவரைப் போன்றவர் ஆவார்:' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி : 552)

'இகாமத் சொல்வதை செவியுற்றால் தொழுகைக்கு நிதானமாகவும், கண்ணியமாகவும் நடந்து செல்லுங்கள். அவசரப்பட்டு ஓடாதீர்கள். கிடைத்ததைத் தொழுங்கள். தவரிப்போனதை பூர்த்தி செய்யுங்கள்.' என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
(புகாரி : 636)
இந்த ஹதீஸை காரணமாக வைத்துக்கொண்டு எப்போதும் தாமதமாக செல்பவர்கள் தொழுகையை வீணடித்து, ஜமாஅத்துடன் தொழும் நன்மையையும் வீணடித்துவிடுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் கப்ரு வேதனை, நரக வேதனை, வாழ்வின் சோதனை, மரணத்தின் சோதனை மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனை ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புத் தேடி அல்லாஹ்விடம் பிரார்த்திப்பார்கள்.'
(புகாரி : 1377)

நாமும் இது போன்ற வேதனையில் இருந்து பாதுகாப்புத் தேட வேண்டும். தொழுகையை பாழ்படுத்தாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தளை செய்து நம் அமலை பாதுகாப்போமாக!

(குறிப்பு: கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் சார்பாக ஜூன் - 2013 ல் நடைபெற்ற ரமலான் கட்டுரைப்போட்டியில் பரிசு பெற்ற சகோதரரி சித்தி ஜூனைதா அவர்களின் கட்டுரை)

அமல்களை பாழ்படுத்தும் செயல்கள் (2)

முன்னுரை :

இந்த பூமியில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் மூமினாக பிறக்கிறான். அவன் எந்த பெற்றோருக்கு பிறக்கிறானோ, அவர்களின் கொள்கைமுறைப்படி வளர்க்கப்படுகிறான். இதில் சிலர் சிந்தித்து மீண்டும் மூமினாக மாறிவிடுகின்றனர். சிந்திக்காதவர்கள் ஷைத்தானுக்கு அடிமையாகி, அவ்வாறே மரணித்துவிடுகின்றனர். மூமினாக வாழக்கூடியவர்களின் அமல்களின் தரத்திற்குத் தக்கவாறு மறுமையில் சொர்க்கத்தை பரிசளிப்பதாக அல்லாஹ் கூறுகிறான். இதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து வைத்திருந்தும் அமல்கள் பாழாகக்கூடிய பலசெயல்களை செய்துவிடுகிறோம்.

முஸ்லீம்கள் ஒவ்வொருவரும் ஆறு விதமான செயல்கள் மீது கண்டிப்பாக உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கவேண்டும்.
  1. அல்லாஹ்வை நம்பவேண்டும்
  2. மலக்குமார்களை நம்பவேண்டும்
  3. வேதங்களை நம்பவேண்டும்
  4. தூதர்களை நம்பவேண்டும்
  5. மறுமைநாளை நம்பவேண்டும்
  6. நன்மை, தீமையாவும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கிறது
என்பனவற்றை நம்பியிருக்க வேண்டும். அப்போது தான் நாம் ஒரு உண்மையான மூமினாக வாழமுடியும், நாம் செய்கின்ற நன்மையான காரியங்கள் அல்லாஹ்விடம் நன்மையை பெற்றுத் தரும். முஸ்லீம் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் ஈமான் கொண்டவற்றில் உறுதியானவர்களாக இல்லை. அல்லாஹ்வை நின்று வணங்குவதில் சிறந்தவராக இருப்பார், முறையாக நேரம் தவறாமல் வணங்குவார், அதே சமயம் நல்லடியார்களையும் வணங்கலாம், அவர்களிடம் உதவிகேட்கலாம் என்று அல்லாஹ்வுக்கு இணைவைத்துவிடுவார். நம் அமல்களை அழிக்கக்கூடிய காரியத்தில் இதைவிட பெரியசெயல் எதுவுமில்லை.

அல்லாஹ் கூறுகிறான்: “நீர் இணைகற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும்.” (குர்ஆன் 39:65)

அகில உலகையும் படைத்து காத்து பராமரிக்கும் இறைவன் அல்லாஹ். அவனுக்கு நிகராக எவரும் இல்லை, எதுவும் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக்கொள்கை. நம்முடைய துக்கம், கவலை இன்னும் நம் வாழ்க்கையில் ஏற்படுகின்ற எல்லா பிரச்சினைகளையும் போக்குமாறு இறைவனாகிய அல்லாஹ்விடமே கேட்கவேண்டும்.

அல்லாஹ்வுக்கு இணைகற்ப்பித்தல் :

இந்த உலகத்தில் பிறந்த நம்மை போன்ற மனிதரிடம் தான் உதவி தேடுகிறோம் என்பதை நம்மில் சிலர் சிந்திக்கவில்லை. நாம் ஈமான் கொண்ட முதல் காரியத்திலேயே தவறி விட்டோம் என்றால், மற்ற காரியங்களை நம்புவதில் எந்த பயனுமில்லை. அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் என்பது மாபெரும் அநியாயம். இவ்வாறு இணைகற்பித்தவருக்கு நரகத்தை அல்லாஹ் வாக்களிக்கின்றான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல், அவனை நினைக்கின்றாரோ அவர் சொர்க்கம் புகுவார், யார் இணைகற்பித்தவராக இருக்கிறாரோ அவர் நரகம் புகுவார்."
புகாரி : 1238, அறிவிப்பவர் : ஜாபர்பின் அப்துல்லாஹ்
)

"தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான், அதற்கு கீழ் நிலையில் உள்ள சிறிய பாவங்களை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்துள்ளார்" என்று அல்லாஹ் கூறுகிறான்."
குர்ஆன்: 4:48)


எந்த பாவங்களையும் அல்லாஹ் மன்னிக்க தயாராக இருக்கின்றான், விபச்சாரத்தைக் கூட மன்னித்து விடுகிறான், ஆனால் இணைவைப்பவனை மன்னிக்கவே மாட்டான். நாம் சிந்திக்க வேண்டும்.

ஒரு தாய் தன் மகனிடம் உரிமையாக கேட்க வேண்டியதை பக்கத்து வீட்டுக்காரர் மகனிடம் கேட்டால் நமக்கு எவ்வளவு அவமானமாக இருக்கும். கோபத்தில் கொந்தளிப்போம். என்னை கேவலப்படுத்திவிட்டீர்கள், என்னை பற்றி அவர் என்ன நினைப்பார்கள், நான் தானே உங்கள் பிள்ளை, உங்கள் தேவைகளை நிறைவேற்ற எனக்கல்லவா கடமை, என்னிடம் தானே கேட்டிருக்க வேண்டும் என்று ஆகாயத்திற்கும், பூமிக்கும் குதிப்போம். தகப்பனுக்கு பிறகு சிறிது காலம் தாயை கவனிக்க கூடிய நமக்கே இத்தனை ரோசம், கோபம் என்றால், வானம் பூமி உயிரினங்கள் என்று நாம் பார்த்தது பார்க்காதது என்று எல்லாவற்றையும் படைத்து, அரசாட்சி செய்துகொண்டு இருக்கும் அல்லாஹ்வுக்கு எவ்வளவு ரோசம் இருக்கும்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் “நிச்சயமாக அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது அவன் தடை விதித்துள்ள ஒன்றை, தடையை மீறி இறை நம்பிக்கையாளர் செய்வது தான்.” (புஹாரி : 5223, அறிவிப்பாளர் : அபுஹுரைரா ரலி).

அல்லாஹ் கூறுகிறான் “இணைகற்பிப்பவர்க்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான், அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்தவித உதவியாளர்களும் இல்லை.” (குர்ஆன் : 5:72).

மூட நம்பிக்கைகள் :

ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு இஸ்லாத்தில் நுழைந்த பின்னர், இஸ்லாமிய நெறிமுறைகளை பின்பற்றி நடக்கவேண்டும், ஆனால் இன்று இஸ்லாத்தில் இருந்து கொண்டே மார்க்கத்திற்கு முரணான காரியங்களையும், மூட நம்பிக்கைகளையும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அறியாமைக் காலத்துப் பழக்கங்களான ஜோசியரிடம் சென்று குறிபார்த்தல், நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தல், ஹஜ்ரத்திடம் போய் பால்கிதாபு பார்த்தல், இதுபோன்ற நபிகளார் காலத்தில் மண்ணோடு மண்ணாகி போன பழக்கங்களை இன்று முஸ்லீம் மக்கள், குறிப்பாக ஹஜ்ரத்மார்கள் முன் நின்று நடைமுறை படுத்துகிறார்கள். இது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்கு ஆளாகுவோம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "யார் குறிகாரன் அல்லது வருங்காலத்தை கணித்து சொல்பவனிடம் சென்று, அவன் சொல்வதை உண்மை எனக் கருதினால் அவன் நபி (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட வேதத்தை நிராகரித்துவிட்டார்." (அஹ்மத் : 9197, அறிவிப்பாளர் : அபுஹுரைரா ரலி)

குர்ஆனை நிராகரித்து எப்படி ஒருவர் முஸ்லீமாக வாழமுடியும். இறைவனை மறுப்பவர்தான் இந்த குர்ஆனை மறுப்பார்கள். குறிகாரானிடம் குறிகேட்பதன் மூலம் ஓரிறைக்கொள்கையின் அடிப்படையை மறுத்துவிட்டவர்களாக இருக்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது." (முஸ்லீம் : 37)

நாம் எத்தனை வேளை முறையாக தொழுதிருக்கிறோம், எத்தனை வேளை தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டிருக்கிறான் என்று நமக்கு தெரியாது. இந்த நிலையில் நாற்பது வேளை தொழுகை அல்லாஹ்வால் நிராகரிக்கப்பட்டால் நமது நிலை என்னவாகும். மறுமையில் நமது அமல்களில் முதன்முதலில் தொழுகையைப்பற்றிதான் விசாரிக்கபடுவோம் என்பதை நினைவில் வைத்து நாம் தவிர்க்கவேண்டிய காரியங்களை தவிர்த்து கொள்ளவேண்டும்.

சகுனம் பார்ப்பது :

நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ் கூறுகிறான், ஆதமுடைய மகன் காலத்தை திட்டுவதின் மூலம் எனக்கு துன்பம் தருகிறான். நான் தான் காலமாக இருக்கிறேன், என்னுடைய கையில் தான் அதிகாரம் உள்ளது, நான் தான் இரவையும் பகலையும் புரட்டுகிறேன்." (புகாரி : 4826)

நபி (ஸல்) அவர்கள் கூறுகிரார்கள் “எவன் சகுனம் பார்த்து தனது காரியத்தை மாற்றுகிறானோ, அவன் அல்லாஹ்வுக்கு இணைவைத்துவிட்டான்." (அஹ்மத் : 6748, அறிவிப்பாளர் : இப்னு அம்ரு ரலி)

முஸ்லீம் என்று சொல்லிகொள்ளும் சிலர் தனது வீட்டுக்காரியங்கள் எதுவாகயிருந்தாலும் நல்ல நேரம், கெட்ட நேரம் என்று பார்த்து கொண்டிருப்பார்கள். அதே போன்று விதவைப் பெண், பூனை குறுக்கே வருவது, பறவை சகுணம் என்று நம்பிக்கை வைத்துள்ளனர். நாம் எவ்வளவு பாரதூரமான செயல்களில் ஈடுபட்டு வருகிறோம் என்பதை இதை செய்பவர்கள் சிந்திக்க வேண்டும். சில சகோதரர்கள் ஊர்களுக்கு செல்லும்பொழுது நல்ல நேரத்தில் வாகனத்தில் ஏற வேண்டும் என்று காத்திருந்து செல்கின்றனர். நாம் கருவாக இருக்கும் நிலையில் நமது காரியங்களை அல்லாஹ் எழுதி வைத்திருக்கும்போது மனிதர்கள் எழுதிய குறிப்புகளால் அல்லாஹ்வை வெற்றிகொள்ளமுடியுமா?.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் "என் சமுதயத்தாரில் 70,000 பேர் விசாரணையின்றி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் யாரெனில் ஒதிப்பார்க்கமாட்டார்கள், பறவை சகுனம் பார்க்கமாட்டார்கள், தன் இறைவனையே சார்ந்து இருப்பார்கள்." (புஹாரி : 5705, அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரலி)

மறுமை நாளில் சொர்க்கம் செல்வதற்கு இலகுவான ஒரு வழியை நபி (ஸல்) அவர்கள் காட்டிதந்துள்ளர்கள், சகுனம் பார்க்காமல், ஓதி பார்க்காமல், இறைவன்மீது முழு நம்பிக்கை வைத்து வாழ்ந்தால் நாம் கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்லலாம், மறுமையில் வெற்றிபெறலாம்.

பொறுமையை மேற்கொள்ளுவது :

அல்லாஹ் கூறுகிறான் "ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் பலன்களை சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம் பொறுத்துக்கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக." (குர்ஆன் 2:155)

மனிதன் வாழ்க்கையில் துன்பங்கள் என்பது கண்டிப்பாக வந்து சென்று கொண்டிருக்கும். அப்பொழுது பொறுமையை மேற்கொள்ளுவது இறைநம்பிக்கையாளரின் கடமையாகும். ஆனால் நாம் துன்பம் ஏற்படும்போது கன்னங்களில் அறைந்து கொள்வது, சட்டையை கிழித்துக் கொள்வது, இரத்த காயங்கள் ஏற்படுத்திக் கொள்வது , ஒப்பாரி வைத்து அழுவது என்று செய்துவருகிறோம்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் "பொறுமை என்பது துன்பம் ஏற்பட்டவுடன் கைகொள்வது." (புஹாரி : 1283, அறிவிப்பாளர் : அனஸ் ரலி)

நாம் இறைவனால் சோதிக்கப்படும்பொழுது உடனே பதட்டம் அடைகிறோம். வாயில் வந்த வார்த்தைகளைப் பேசி கத்தி கதருகிறோம். இப்படி செய்வதன் மூலம் நம் நன்மை அழிந்துவிடுகிறது. துன்பம் ஏற்பட்ட அடுத்த வினாடி பொறுமையை மேற்கொள்பவரே மறுமையில் வெற்றிபெறுகிறார். துன்பங்கள் நேரும்போழுது படைத்தவன் நம்மைச் சோதிக்கிறான் என்று எண்ணி நாம் பொறுமையாக இருக்கவேண்டும். இறைவா இந்த சோதனைக்கு பகரமாக கூலியைக் கொடு, இதைவிட சிறந்ததை வழங்கு என்று கேட்க வேண்டும். அப்பொழுது தான் உண்மையான இறை நம்பிக்கையாளர்களாக ஆகமுடியும்.

அல்லாஹ் கூறுகிறான் "நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்." (குர்ஆன் 2:153)

முகஸ்துதி :

தீர்ப்பு கூறப்படும் மறுமை நாளில், மூன்று மனிதர்களில் முதல் நபர் கொண்டுவரப்படுவார். இவர் இறைவழியில் உயிரை தியாகம் செய்தவராவார். அவருக்கு தனது அருட்கொடையை அல்லாஹ் எடுத்து கூறுவான். "நீ உலகில் என்ன அமல் செய்தாய்" என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவர் "உனக்காகவே போரிட்டேன் இறுதியில் கொள்ளப்பட்டேன்" என்று கூறுவார். "நீ பொய் கூறுகிறாய். பெரும் வீரர் என்று மக்கள் புகழப்படவே நீ போரிட்டாய். அவ்வாறே உலகில் மக்களால் புகழப்பட்டுவிட்டது" என்று அல்லாஹ் கூறுவான். பின்பு முகம் குப்பற அவரை நரகில் போடும் படி கட்டளை இடப்படும்.

அடுத்தவர் கல்வியை கற்று பிறருக்கு கற்றுக்கொடுத்து குர்ஆனை ஓதியவர். அவர் கொண்டுவரப்படுவார். தனது அருட்கொடையை அவரிடம் அல்லாஹ் எடுத்து கூறுவான். "நீ உலகில் என்ன அமல் செய்தாய்" என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவர் "நான் கல்வி கற்றேன், உனக்காக பிறருக்கு கற்பித்து கொடுத்தேன், குர்ஆனை ஓதினேன்" என்று கூறுவார். "நீ பொய் கூறுகிறாய். உன்னை அறிஞர் என்று மக்கள் புகழப்படவேண்டும் என்பதற்காக நீ செய்தாய். உலகில் மக்கள் புகழ்ந்துவிட்டனர்" என்று கூறுவான். அவரும் நரகம் செல்வார்.

அடுத்தவர் அல்லாஹ்வினால் அனைத்து செல்வங்களும் பெற்ற செல்வந்தர் வருவார். அவருக்கு அல்லாஹ் தன் அருட்கொடையை அறிவிப்பான். அவர் "நான் உனக்காகத்தான் தருமங்கள் செய்தேன். நீ எந்த வழியில் செலவு செய்யப்படுவதை விரும்பினாயோ அதே வழியில்தான் செலவு செய்தேன்" என்று கூறுவார். அல்லாஹ் கூறுவான் “மக்கள் கொடை வள்ளல் என்று புகழப்படவேண்டும் என்பதற்காக செய்தாய். உலகில் மக்கள் புகழ்ந்து விட்டனர்” அவரும் நரகம் செல்வார். (முஸ்லீம் : 1905, அறிவிப்பவர் : அபூஹுரைரா ரலி)


எந்த அமல்கள் செய்தாலும் அதை அல்லாஹ்வுக்கு செய்கிறோம் என்ற ஈமான் கொண்டிருக்க வேண்டும். நாம் செய்யக்கூடிய அமல்கள் எதுவாயினும் அல்லாஹ்வின் திருப்தியை நாடி செய்யவேண்டும். முகஸ்துதிக்காக, மக்கள் பாராட்டவேண்டும் என்பதற்காக செய்யக்கூடாது. நாம் செய்யகூடிய தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் இன்னும் நாம் செய்யும் எந்த அமலாக இருந்தாலும் இறைவனின் திருப்தியை மட்டும் நாடி செய்ய வேண்டும்.

நம்மில் சிலர் ஹஜ், உம்ரா அமல்களை நிறைவேற்ற போகும்பொழுது ஊரையே ஒரு கலக்கு கலக்கிவிட்டுதான் போகிறார்கள். இஸ்லாம் கூறிய அடிப்படையில் ஹஜ் கடைமையை நிறைவேற்றினால் அவர் அன்று பிறந்த பாலகனை போன்று ஆகி விடுவார். எவ்வளவோ பெரிய பாக்கியத்தை தரும் ஹஜ் என்னும் கடைமையை செய்யப்போகிறவர்களுக்கு மாலை மரியாதை செய்கின்றனர். ஊரையே கூட்டி விருந்து வைக்கின்றனர், ஆனால் விருந்தில் ஏழை மட்டும் இல்லை. வருபவர்களுக்கு எல்லாம் 5, 10 என்று பணம் கொடுக்கிறார்கள். இதுதான் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ, அவரைப் பற்றி அல்லாஹ் மறுமையில் விளம்பரப் படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் மறுமையில் அம்பலபடுத்துவான்" (புஹாரி : 6499, அறிவிப்பாளர் : ஜுன்துப் பின் அப்துல்லாஹ் ரலி).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில், அதில் இல்லாததை புதிதாக எவன் உண்டாக்குகிறானோ, அவனுடைய அந்த புதுமை நிராகரிக்க பட்டதாகும்" (புஹாரி : 2679, அறிவிப்பவர் : ஆய்ஷா ரலி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “நம்முடைய கட்டளை இல்லாமல், அமல்களை யார் செய்கிறாரோ அவை அல்லாஹ்விடம் நிராகரிக்கப்படும்." (முஸ்லீம் : 3541, அறிவிப்பாளர் : ஆய்ஷா ரலி)

இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படையை விளக்கும் இது, ஒரு நபி மொழியாகும். இறையச்சம் உண்மையான வடிவத்தை முழுமையாக மாற்றும் அளவிற்கு மார்க்கத்தின் பெயரால் பல அமல்கள் நிறைந்துள்ளன. பிறந்ததிலிருந்து இறக்கும் வரை ஒவ்வொரு அமலும் மார்க்க அங்கீகாரம் இல்லாததாகவே இருக்கிறது. மவ்லுத் ஓதுதல், இறந்தவர்க்கு பாத்திஹா, தர்ஹா வழிபாடுகள், சீமந்தம், திருமணத்தில் பல அனாச்சாரங்கள் என்று ஏராளமான மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை வளர்வதற்கு காரணம் நபிவழியை பற்றி விளங்காதது தான்.

நாம் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். மார்க்கம் தொடர்பான எந்த அமலாக இருந்தாலும், அதற்கு நபிகளாரின் அங்கீகாரம் இருக்கிறதா, கட்டளை இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு நாம் அமல்களை செய்யவேண்டும். அப்பொழுதுதான் மார்க்கத்தின் பெயரால் செய்யப்படுகின்ற பல அனாச்சாரங்களை வேரோடு எடுத்து களைய முடியும்.

தீய பண்புகள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “ஆதாரம் இல்லாமல் பிறரை சந்தேகப்படுவது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரிய பொய்யாகும்.” (புஹாரி : 6065, அறிவிப்பவர் : அபுஹுரைரா ரலி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “ஒர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றை பேசி விடுகிறார். அதன் காரணமாக அவர் கிழக்குக்கும், மேற்குக்கும் இடையிலான தொலைவை விட அதிகமான தூரத்தில் நரகில் விழுகிறார் (புஹாரி : 6477, அபூஹுரைர ரலி)

நமக்கு எந்த விஷயத்தில் தெளிவில்லையோ, அதைப் பற்றி பிறரிடம் பேசாமல் இருப்பது நல்லது. ஊகம் என்ற அடிப்படையில் மனிதர்கள் பலர் தனது மனதில் எண்ணுவதையெல்லாம் பிறரிடம் கூறுவார்கள். ஒன்றும் இல்லாத காரியத்தை ஊதி பெரிது படுத்தி விடுவார்கள். இதனால் அண்ணன் தம்பி பிரச்சினை, மாமியார் மருமகள் பிரச்சினை, அதையும் தாண்டி ஒழுக்கமான பெண்ணின் மீது அவதூறு என்று விபரீதமான செயல்களை செய்துவிடுவார்கள்.

ஊகம் என்ற காரணத்தினால் உலகெங்கும் முஸ்லீம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுவிட்டனர். எங்கு எது நடந்தாலும் இந்த முஸ்லீம் தீவிரவாத இயக்கம் தான் காரணம் என்று செய்திவரும். சிறிது நாட்கள் கழித்து அதை செய்தது வேறு ஒருவர், முஸ்லீம்கள் இல்லை என்று செய்தி வரும். இப்படி தான் ஊகம் ஒரு சமூகத்தையே தலை குனியவைத்துவிட்டது. நாம் பிற மதத்தினர் மத்தியில் எவ்வளவு நல்லவிதமாக நடந்தாலும், நம்மை தீவிரவாதியாகத்தான் பார்க்கிறார்கள். இதில் முஸ்லீம்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஊகத்தின் அடிப்படையில் பேசுவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான் "நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக்கொள்ளுங்கள். சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்." (குர்ஆன்: 49:12)

மூமீன்களாக வாழக்கூடிய நாம், ஊகத்தின் அடிப்படையில் பேசுவது, துருவித் துருவி ஆராய்வது, கேட்டதையெல்லாம் பரப்புவது, இது போன்ற செயல்களை விட்டு விலகியிருக்கவில்லை என்றால், அது நமது அமல்களை அழித்துவிடும்.

அல்லாஹ் கூறுகிறான் "இத்தூதர் உங்களுக்கு எதைத் கொடுத்தாரோ அதை வாங்கிக்கொள்ளுங்கள், எதை விட்டு உங்களை தடுத்தாரோ விலகிக்கொள்ளுங்கள் (குர் ஆன்:59:7)

நாம் இந்த உலகில் வாழும் வாழ்க்கை மறுமையில் நன்மையை பெறுவதற்காகத்தான். இந்த மார்க்கத்தை தந்தவன் அல்லாஹ். இந்த மார்க்கம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டியுள்ளர்கள். நாம் அதன் வழியில் அமல்கள் செய்ய முயற்சிப்போம்.

(குறிப்பு: கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் சார்பாக ஜூன் - 2013 ல் நடைபெற்ற ரமலான் கட்டுரைப்போட்டியில் பரிசு பெற்ற சகோதரரி அஸ்ரஃப் நிஸா அவர்களின் கட்டுரை)