ஞாயிறு, 29 மே, 2016

கத்தர் மண்டலம் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் 27-05-2016



"ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்" (அல் குர்ஆன்: 5:32)

கடந்த 27-05-2016 வெள்ளிகிழமை அன்று (QITC) ‎கத்தர் மண்டலம்‬ சார்பாக (ஹமத் மருத்துவமனை உடன் இணைந்து) மாபெரும் ‪இரத்ததான முகாம்‬ நடைபெற்றது.

ஜூம்மா தொழுகையின் பின்னர் மதிய உணவுடன் பிற்பகல் இரண்டு மணிக்கு துவங்கப்பட்ட முகாம் இரவு ஒன்பது மணிவரை நடைபெற்றது.

இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் இரத்த தானம் வழங்க வருகை புரிந்தனர். குறிப்பாக ‪ இந்திய‬ ‎இலங்கை‬ ‎முஸ்லிம்‬ மற்றும் ‪‎மாற்றுமத‬ சகோதரர்கள் ஆர்வத்துடன் குருதி கொடை முகாமில் கலந்து கொண்டார்கள்.

வருகை தந்திருந்த சகோதர்கள் அனைவரையும் முறைபடுத்தி வருகை பதிவு செய்து வருகை எண் வழங்கப்பட்டது. பின்னர்‪ ‎ஹமத் மருத்துவ‬ குழுவிற்கு உடல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு தகுதி பெற்ற சகோதர்கள் ‪இரத்ததானம்‬ அளிக்க அனுமதிக்கப்பட்டனர். மக்கள் வெள்ளம் அலைமோதிய நிலையில் நேரம் போதாமை போன்ற காரணங்களினாலும்‪ நூற்றி பதினேழு‬ நபர்கள் மாத்திரமே தங்களின் குருதிக்கொடைகளை வழங்கினர்.

நமது இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற ஹமத் மருத்துவமனை‬ ‪இரத்த வங்கி‬ ‪மருத்துவர்கள்‬,‪ செவிலியர்கள்‬, ‪ஆய்வாளர்கள்‬ என 11 பேர் கொண்ட குழுவை அனுப்பி வைத்தது. மேலும் ஆறு படுக்கை கொண்ட நவீன பேருந்தையும் QITC மர்கஸ்க்கு அனுப்பி இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற உதவியது.

‪‎கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்‬ சார்பாக குருதி கொடையளித்த‬ சகோதர்களுக்கும்‬, ஹமத் மருத்துவமனை இரத்த வங்கிக்கும் எங்களது‪ இதயம் கனிந்த‬ ‪‎நன்றிகளை‬ தெரிவித்துகொள்கிறோம்.

அல்ஹம்துலில்லாஹ்...

மேலும் படங்களுடன் ஃபேஸ் புக் செய்தி:

வியாழன், 19 மே, 2016

பாவியாக்கும் பராஅத் இரவு



சூரியன் பொழுதை அடைந்ததும் ஒரே பரபரப்பு! முஸ்லிம் வீடுகளில் பெண்கள் விழித்த உடனே மறக்காமல் கணவனிடம், கறி வாங்கிட்டு வாங்க என்று கூறுவதும், பாத்திஹா ஓத முன் கூட்டியே ஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக வீடு முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும்.

இது மாத்திரமா? மாலை நேரத்தில் ரொட்டி சுட்டு, வீடு வீடாகக் கொடுப்பதற்காக மாடிக் கட்டடங்கள் போல் அடுக்கப்பட்டிருக்கும். சிலர் நேர்ச்சைக்காக கோழிக் குழம்பு வைப்பார்கள்.

மஃக்ரிப் தொழுகை முடிந்ததும் பள்ளியிலேயே சூரத்துல் பாத்திஹா அமோகமாக ஆரம்பிக்கப்பட்டு விடும். ஹஜரத்தைக் கூட்டிச் செல்வதற்காக குழந்தைகளின் வரிசை ஒரு பக்கம். சில வீட்டினர் தங்கள் ரொட்டிகளை பள்ளிவாசலுக்கே அனுப்பி வைப்பார்கள். வழமைக்கு மாற்றமாக பள்ளிவாசலில் இறைச்சிக் குழம்பு வாடை மூக்கைத் துளைக்கும்.

தொழுகை முடிந்ததும் ஹஜரத் அவர்கள் வெளி வராண்டாவில் (வராண்டா இல்லாத ஊர்களில் உள் பள்ளியிலும்) யாசீன் ஓதுவார். எத்தனை தடவை தெரியுமா? மூன்று தடவை ஓத வேண்டுமாம். எதற்காக?

முதல் யாசீன் பாவ மன்னிப்பிற்காகவும்

இரண்டாவது யாசீன் கப்ராளிகளுக்கு ஹதியாவாகவும், நீண்ட ஆயுளுக்காகவும்

மூன்றாவது யாசீன் பரகத் கிடைக்க வேண்டியும் ஆக மொத்தம் மூன்று யாஸீன் ஓதப்படும்.

அது மட்டுமல்ல! வழமை போல் 8 மணிக்கு நடைபெறும் இஷா தொழுகை அன்றிரவு 10மணிக்கு நடைபெறும். காரணம் ஹஜரத்திற்கு வந்த பாத்திஹா ஆர்டர்களை முடித்து விட்டு, இரவு 8 மணிக்கு ஜமாஅத் தொழுகைக்கு வந்து சேர முடியாத நிலை. அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட தொழுகையை விட யாரோ உருவாக்கிய பராஅத் இரவு சிறந்ததாகப் போய் விட்டது, ஏழு வருடம் படித்த மார்க்க அறிஞருக்கு?

அந்நாளில் விசேஷத் தொழுகையும் நடைபெறும். எத்தனை ரக்அத்கள் தெரியுமா? 100ரக்அத்களாம். வேறு சில ஊர்களில் இதை விட அதிக ரக்அத்கள் கொண்ட தொழுகையும் உண்டு.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் இதைச் செய்யும் சுன்னத் வல் ஜமாஅத்தினரைச் சார்ந்த உலமாக்கள் குர்ஆன், ஹதீஸை விட மத்ஹபுகளுக்குத் தான் முன்னுரிமை வழங்குவார்கள். அந்த மத்ஹப் புத்தகங்களில் இவர்கள் செய்கின்ற இச்செயலுக்கு முரணாகக் கூறப்பட்டுள்ளது தான் வேடிக்கை. பராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா?

ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்ட தொழுகையும், ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி 15ஆவது இரவில் தொழும் 100ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதை செய்யக் கூடியவர் பாவியாவார். இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும்.

(இச்செய்தி ஷாபி மத்ஹபின் இஆனதுல் தாலிபீன் என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் இருக்கின்றது) மக்களிடம் அறிமுகமான ஷஅபான் பிறை 15ல் (இவர்களால் உருவாக்கப்பட்ட 100 ரக்அத்கள்) தொழும் தொழுகையும் ஆஷுரா தினமன்று தொழும் தொழுகையும் மோசமான அனாச்சாரங்களாகும். இது சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவைகளாகும்.

(இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் பத்ஹுல் முயீனில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.) பராஅத் இரவன்று பள்ளி வாசல்களிலும் வீதிகளிலும் கடை வீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது (பித்அத்) அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் பஹ்ருர் ராஹிக் என்ற புத்தகத்தில் 5ஆம் பாகத்தில் 232ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

மத்ஹப் புத்தகங்களைப் பின்பற்றும் அறிஞர்கள் இதை ஏன் பின்பற்றுவதில்லை? இவர்கள் குர்ஆன், ஹதீஸையும் பின்பற்றவில்லை; மத்ஹபுகளையும் பின்பற்றவில்லை. மறுமையில் என்ன செய்யப் போகிறார்களோ? அல்லாஹ் இவர்களைக் காப்பாற்றுவானாக!

பராஅத் அன்று நோன்பு நோற்கலாமா?

ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராமாகும். ஏனெனில் ஷஅபான் பாதியாகி விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது.

(நூல்: ஷாஃபி மத்ஹபின் இயானதுத் தாலிபீன், பாகம்: 2, பக்கம்: 273)

ஏன் இந்த சிறப்பு?

அன்றைய தினம் இந்த அளவுக்கு என்ன தான் சிறப்பு என்கிறீர்களா? அன்று தான் ஷஅபான் பிறை 15ல் வரும் பராஅத் இரவாம். அந்த இரவைப் புனிதமிக்க இரவாக மாற்ற புதுப் புது பாத்திஹாக்களை உருவாக்கி, வித்தியாசமான முறையில் அலங்கரித்து வடிமைத்துள்ளார்கள் நவீன கால பராஅத் அறிஞர்கள்.

இத்தனை ஆர்ப்பாட்டங்களும் எதற்காகத் தெரியுமா? பராஅத் இரவு கொண்டாடுவதை மார்க்கம் என்று கருதியதால் தான். அது மட்டுமின்றி ஒரு கேள்வியும் கேட்கின்றனர். சிறப்பான இரவில் நற்செயல் செய்வது தவறா? என்பது தான் அக்கேள்வி.

மார்க்கத்தில் ஒரு காரியம் உள்ளது என்றும், இல்லாதது என்றும் சொல்வதற்கு எவருக்கும் எந்த அதிகாரமுமில்லை. இவர்கள் செய்யக் கூடிய இந்த வணக்கம் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா? குர்ஆனை தெளிவுபடுத்த அனுப்பப்பட்ட தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்துள்ளார்களா? அல்லது கூறியுள்ளார்களா? அல்லது ஸஹாபாக்கள் செய்ய நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. பராஅத் இரவுக்கும் அதற்கான வணக்கங்களுக்கும் ஆதாரம் என்ற பெயரில் ஒரு சில தப்பான விளக்கங்களும் பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களையும் கூறி, பாருங்கள்! இஸ்லாத்தில் சொல்லப் பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.

இவர்கள் மறுமையை அஞ்சிக் கொள்ளட்டும்! இவர்கள் காட்டும் அனைத்து செய்திகளும் பலவீனமானவை அல்லது இட்டுக்கட்டப்பட்டவை. இக்கருத்து அவர்களின் மத்ஹப் நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. சில ஆதாரங்கள் இவர்கள் தவறாக விளங்கியவையாகும்.

முதல் ஆதாரம்


தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம். அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன.

அல்குர்ஆன் 44:2-4

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பாக்கியமுள்ள இரவு, பராஅத் இரவு தான் என்பது இவர்களின் வாதம். திருக்குர்ஆனை பொறுத்த வரை ஒரு வசனத்தை இன்னொரு வசனம் அல்லது ஹதீஸ் விளக்கும். அந்த அடிப்படையில் இந்த வசனத்தில் உள்ள பாக்கியமுள்ள இரவு எது? என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். (அல்குர்ஆன் 97:1)

அது லைலத்துல் கத்ர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அந்த இரவு ரமளான் மாதத்தில் தான் உள்ளது என்று பின்வரும் வசனம் விளக்குகின்றது.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன்2:185)

இந்த மூன்று வசனங்களிலிருந்து பாக்கியமிக்க இரவு என்பது ரமளான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ரைக் குறிக்கிறதே தவிர ஷஅபான் மாதத்தின் 15ஆம் இரவு அல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. எனவே பராஅத் இரவுக்கும் இவர்கள் காட்டும் வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

இரண்டாம் ஆதாரம்


ஷஅபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: இப்னுமாஜா 1378

இது ஆதாரப்பூர்வமான ஹதீஸல்ல. இது இட்டுக் கட்டப்பட்ட ஒன்றாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு அபீ ஸப்ரா என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று இமாம் அஹ்மதும், இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள்.

அஸ்பஹானி அவர்கள் தம்முடைய அத்தர்கீப் நூலில் (ஹதீஸ் எண்: 1831) மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்தச் செய்தியை பதிவு செய்துள்ளார்கள். அதில் உமர் பின் மூஸா அல்வஜீஹி என்பவர் இடம் பெறுகிறார். இவரும் நபிகள் நாயகம் கூறாதவற்றை இட்டுக்கட்டிக் கூறுபவர் என இமாம் அபூ ஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

மூன்றாம் ஆதாரம்


அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு, படுக்கையில் நபி (ஸல்) அவர்களை காணாமல் வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீஹ் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஷஅபான் மாதம் 15ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கல்ப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை) மன்னிக்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: திர்மிதி 670

இந்த ஹதீஸும் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் யஹ்யா பின் அபீ கஸீர் என்பவர் உர்வாவிடமிருந்து கேட்கவில்லை. அதே போன்று ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் யஹ்யா பின் அபீ கஸீரிடமிருந்து செவியேற்கவில்லை என்று இமாம் புகாரீ கூறிய கருத்தைப் பதிவு செய்து, இது பலவீனமான செய்தி என்பதை இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதி இமாம் அவர்களே தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

நான்காவது ஆதாரம்


நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிக நோன்பு நோற்பதைப் போன்று வேறு எந்த மாதத்திலும் நோற்பவராக இருக்கவில்லை. ஏனெனில் (வரும்) வருடத்தில் மரணிக்கக் கூடியவர்களின் தவணைகள் அம்மாதத்திலே மாற்றப்பட்டு விடும் என்பதனால் தான். அறிவிப்பாளர்: அதாவு பின் யஸார்

நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா 9764,

ஃபலாயிலுர் ரமளான் – இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 9, ஹதீஸ் எண்: 8

இந்த ஹதீஸை அறிவிக்கும் அதாவு பின் யஸார் என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல்மஸ்வூதி என்பவர் இடம் பெறுகிறார். இவர் தம்முடைய இறுதிக் காலகட்டத்தில் பக்தாதிற்கு வந்த பிறகு மூளை குழம்பி விட்டார். அதாவது இவரிடம் பக்தாதில் வைத்துக் கேட்டவர்கள் அறிவிக்கும் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும். இவரிடமிருந்து அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஹைரான் என்பவராவார். அல்மஸ்வூதி என்ற அறிவிப்பாளர் மூளை குழம்பிய பிறகு தான் இவர் செவியேற்றுள்ளார். இந்த அடிப்படையிலும் இது மிகப் பலவீனமான நிலையை அடைகிறது.

ஐந்தாவது ஆதாரம்


ரமளான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும், ஷஅபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் சூரதுல் இக்லாஸ் எனும் சூராவை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார்.

அறிவிப்பவர்: முஹம்மத் பின் அலீ

நூல்: ஃபலாயிலு ரமளான்- இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 10, எண்: 9

இந்த ஹதீஸை அறிவிக்கும் முஹம்மத் பின் அலீ என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதுபற்றி அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடர்களில் உள்ள அதிகமானவர்கள் யாரென்றே அறியப்படாதவர்கள், இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை என இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தம்முடைய மவ்லூஆத் என்ற நூலில் (பாகம்: 2, பக்கம்: 129)குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் ஹதீஸ் கலை ஆய்விலுள்ள பெரும்பான்மையான உலமாக்கள் இதனை நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என விமர்சித்து இவற்றைச் செய்யக்கூடியவர்கள் நரகத்திற்குரிய காரியத்தைச் செய்கிறார்கள் என மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஷாஃபி மத்ஹபைச் சார்ந்த இமாம் சுயூத்தி ஆவார்கள். அவர்கள் தம்முடைய நூலான அல் அம்ரு பில் இத்திபா வந்நஹ்யு அனில் இப்திதாஃ (நபிவழியை பின்பற்றும் உத்தரவும், பித்அத்துகளை உருவாக்குவதற்குத் தடையும்) என்ற நூலில் (பாகம்: 1, பக்கம்: 17) இவ்வாறு ஷஅபான் 15வது இரவில்,இல்லாத தொழுகையைத் தொழுபவர்களை எச்சரிக்கை செய்துள்ளார்கள். இதனால் ஏற்படும் அனாச்சாரங்களையும், அக்கிரமங்களையும் பட்டியலிட்டுள்ளார்கள்.

அறிஞர் இப்னு அபீ முலைக்கா அவர்கள் இவ்வாறு ஷஅபான் 15வது இரவை சிறப்பிப்பதை மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

அய்யூப் அவர்கள் அறிவிக்கிறார்கள்: நீதிபதியாக இருந்த ஸியாதன் முன்கிரிய்யு என்பவர்,ஷஅபான் 15ஆம் இரவின் கூலி லைலத்துல் கத்ரின் கூலியைப் போன்றதாகும் என்று கூறியதாக இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்களிடம் கூறப்பட்டது. என்னுடைய கையில் பிரம்பு இருக்கும் நிலையில் அவர் இவ்வாறு கூறியதை நான் செவியேற்றிருந்தால் அந்தப் பிரம்பினால் அவரைச் சாத்தியிருப்பேன் என்று இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் (பாகம்: 4, பக்கம்: 317)

முஹ்ம்மத் பின் ஸலாம் என்பார் அறிவிக்கிறார்கள்: நான் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களிடம் ஷஅபான் 15ஆம் இரவில் (அல்லாஹ்) இறங்குவதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் பலவீனமானவனே! 15ஆம் இரவு (பற்றிய செய்திகள் பலவீனமானவையாகும்.) அல்லாஹ் ஒவ்வொரு இரவிலும் இறங்குகிறான் என்று கூறினார்கள்.

நூல்: அகீததித் ஸலஃப் அஸ்ஹாபுல் ஹதீஸ், பாகம்: 1 பக்கம்: 12

பராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானவை அல்ல! எனவே இவர்கள் புதுமையான ஒரு காரியத்தை உருவாக்கியுள்ளார்கள். இவர்கள் பின்வரும் நபிமொழிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2697

நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

நூல்: முஸ்லிம் 3243

எனவே இத்தூய்மையான மார்க்கத்தில் அனைத்தும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில் கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதியில்லை.

அப்படி அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத ஒன்றை எவனாவது ஒருவன் மார்க்கம் என்று செய்தால் அது நிராகரிக்கப்படுவது மட்டுமின்றி, அதைச் செய்தவர் நரகத்திலும் புகுவார். இது நபிகளாரின் எச்சரிக்கையாகும்.


வியாழன், 12 மே, 2016

நோன்பின் நோக்கம்


நோன்பு நோற்பது கட்டாயக் கடமை

புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தி பெற்ற அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.

அல்குர்ஆன் 2:184

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.

அல்குர்ஆன் 2:185

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது சமுதாயத்தின் மீது மட்டுமின்றி அவர்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டிருந்ததை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்கிறோம்.

ரமளான் மாதம் தேர்வு செய்யப்பட்டது ஏன்?

நோன்பைக் கடமையாக்குவதற்கு ஏனைய மாதங்களை விடுத்து ரமளான் மாதத்தை இறைவன் ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

மேற்கண்ட வசனத்தில் இந்தக் கேள்விக்கு இறைவன் விடையளிக்கிறான்.

மனித சமுதாயத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழும் திருக்குர்ஆன் இம்மாதத்தில் அருளப்பட்டதால் இம்மாதம் ஏனைய மாதங்களை விட உயர்ந்து நிற்கிறது. எனவே தான் இம்மாதம் தேர்வு செய்யப்பட்டது என்று இறைவன் சுட்டிக் காட்டுகிறான்.

இதிலிருந்து திருக்குர்ஆனின் மகத்துவமும் நமக்குத் தெரிய வருகிறது.

நோன்பு நோற்பதுடன் நமது கடமை முடிந்து விடுகிறது என்று நினைக்காமல் திருக்குர்ஆனுடன் நமது தொடர்பை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாகப் புனித ரமளான் மாதத்தில் திருக்குர்ஆனை விளங்குவதற்கு அதிகம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

நோன்பின் நோக்கம்

எதற்காக நோன்பு நோற்க வேண்டும்? இக்கேள்விக்குப் பலர் பலவிதமாக விடையளிக்கின்றனர்.

பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பர் சிலர்.

பசியை உணர்வது தான் காரணம் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. இது இவர்களின் கற்பனையே தவிர வேறில்லை.

பசியை உணர்வது தான் காரணம் என்றால் செல்வந்தர்களுக்கு மட்டும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்க வேண்டும். அன்றாடம் பசியிலேயே உழல்பவனுக்கு நோன்பு கடமையில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் பணக்காரர்கள் கூட நோன்பு நோற்காமலேயே பசியின் கொடுமையை உணர்ந்து தான் இருக்கின்றனர். பசியை உணர்வதால் தான் சாப்பிடுகின்றனர். நெருப்பு சுடும் என்பதை எப்படிச் சர்வ சாதாரணமாக உணர்கிறோமோ அது போலவே மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் பசியை உணர்ந்திருக்கின்றன. எனவே பசியை உணர்வதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டதாகக் கூறுவது முற்றிலும் தவறாகும்.

உடல் ஆரோக்கியம் பேணப்படுவது தான் நோன்பின் நோக்கம் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.

நோன்பு நோற்பதால் உடல் ஆரோக்கியம் பேணப்படும் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. உடல் ஆரோக்கியம் இதனால் ஏற்படும் என்பது காரணம் என்றால் நோயாளிகள் வேறு நாட்களில் நோற்றுக் கொள்ளுங்கள் என்று இறைவன் கூறுவானா?

நோயாளிகளுக்குத் தானே ஆரோக்கியம் அவசியத் தேவை! நோன்பே ஒரு மருந்து என்றிருக்குமானால் நோயாளிகளுக்கு நோன்பிலிருந்து விலக்கு அளிப்பதில் எந்த நியாயமும் இல்லை. எனவே நோன்பு நோற்பதற்கு இதைக் காரணமாகக் கூறுவதும் தவறாகும்.

சில மனிதர்களுக்கு இதனால் ஆரோக்கியம் ஏற்படலாம். அல்சர் போன்ற நோய் ஏற்பட்டவர்களுக்கு இதனால் நோய் அதிகரிக்கவும் செய்யலாம். எனவே இறை திருப்தியை நாடி நிறைவேற்றப்படும் ஒரு வணக்கத்திற்கு இது போன்ற அற்பமான காரணங்களைக் கூறி நோன்பைப் பாழாக்கி விடக் கூடாது.

நோன்பு கடமையாக்கப்பட்டதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே மிகத் தெளிவாகக் கூறி விட்டான். அந்தக் காரணம் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் நோன்பு கடமையாக்கப்படவில்லை.

மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனத்தில், நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டது என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

நோன்பு நோற்பதால் இறையச்சம் ஏற்படும். இறையச்சம் ஏற்பட வேண்டும் என்பது தான் அல்லாஹ் கூறுகின்ற காரணம்.

நமக்குச் சொந்தமான உணவைப் பகல் நேரத்தில் அல்லாஹ் கட்டளையிட்டதால் தவிர்த்து விடுகிறோம். நமது வீட்டில் நாம் தனியாக இருக்கும் போது நமக்குப் பசி ஏற்படுகிறது. வீட்டில் உணவு இருக்கிறது. நாம் சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டதால் நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்காவிட்டாலும் நாம் சாப்பிடுவது அல்லாஹ்வுக்குத் தெரியும்; அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதால் தான் நாம் சாப்பிடுவதில்லை.

யாரும் பார்க்காவிட்டாலும் இறைவன் பார்க்கிறான் என்பதற்காக நமக்குச் சொந்தமான உணவை ஒதுக்கும் நாம், ரமளான் அல்லாத மாதங்களிலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நம்ப வேண்டும்.

ஹராமான காரியங்களில் ஈடுபட நினைக்கும் போது, ஹலாலான பொருட்களையே இறைவனுக்குப் பயந்து நாம் ஒதுக்கி வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந்த ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான ஒரே காரணம். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.

யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1903, 6057

பசித்திருப்பது நோன்பின் நோற்கமல்ல என்பதும் இங்கே விளக்கப்படுகிறது. நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி நம்மிடம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் இங்கே விளக்கப்படுகிறது.

நோன்பின் மூலம் பெற்ற பயிற்சி, பொய் சொல்வதிலிருந்தும் தீய நடவடிக்கையிலிருந்தும் தடுக்கவில்லை என்றால் அது நோன்பு அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் நோன்பு நோற்றுள்ள நிலையில் நம்முடன் வீண் வம்புக்கு யாரேனும் வந்தால் கூட சரிக்குச் சரியாக அவர்களுடன் வம்புக்குப் போகக் கூடாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வலியுறுத்துகிறார்கள்.

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் சண்டைக்கு வந்தால், யாரேனும் திட்டினால் நான் நோன்பாளி என்று கூறி விடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1893, 1903

நோன்பு என்பது ஒரு ஆன்மீகப் பயிற்சி என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இது தான் நோன்பின் நோக்கம் என்று உணர்ந்தால் தான் அந்த நோக்கத்தை நாம் அடைய இயலும்.

முப்பது நாட்கள் நோன்பு நோற்றுப் பயிற்சி எடுத்தவர்கள் நோன்பை நிறைவு செய்தவுடன், சினிமாக் கொட்டகைகளில் வரிசையில் நிற்கிறார்கள் என்றால் இவர்கள் பட்டினி கிடந்தார்கள் என்று கூறலாமே தவிர நோன்பு நோற்றார்கள் என்று கூற முடியாது.

ரமளானுக்கு முன் எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலை தான் ரமளானுக்குப் பிறகும் நம்மிடம் இருக்கிறது என்றால் நாம் எந்தப் பயிற்சியும் பெறவில்லை என்பது தான் இதன் பொருள்.

எனவே இத்தகைய நிலை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்

நோன்பின் மூலம் இவ்வுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு அல்லாஹ்விடம் என்ன கிடைக்கும்?

வேறு எந்த நல்லறத்துக்கும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

ஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1945

மற்ற எந்த வணக்கத்தையும் விட நோன்பு அதிகமான பரிசுகளைப் பெற்றுத் தரும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1894, 1904

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1904

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்ச்சியுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருள்.

மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?

யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 38, 1901, 2014

பாவம் செய்யாதவர்கள் யாரும் கிடையாது. அனைத்துப் பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைப்பதென்பது சாதாரணமானதல்ல! சிறிய அமல் மூலம் இவ்வளவு பெரிய பாக்கியங்கள் கிடைப்பதால் நோன்பு நோற்பதில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும்.

புதன், 4 மே, 2016

கோடை வெயிலும் குளு குளு சொர்க்கமும்!


வழக்கமாக மே மாதத்தில் தெறிக்கின்ற கோடை வெயில் இப்போது மார்ச் மாதமே தெறிக்க ஆரம்பித்து விட்டது. ஏப்ரலில் அது ஏறுமுகத்தில் போய்க் கொண்டிருக்கின்றது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வீசுகின்ற அனல் காற்றுக்கு இது வரை நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இவ்விரு மாநிலங்களில் 118 டிகிரி வெயில் அடிக்கின்றது. இதன் விளைவாக கொதிக்கின்ற சட்டியில் பொறிக்க வேண்டிய முட்டையை கொதிக்கின்ற சாலையில் பொறிக்கின்றனர். அந்த அளவுக்குக் கோடையின் வெப்பம் உக்கிரத்தை அடைந்திருக்கின்றது.

சென்ற ஆண்டு இதே கோடையில் ஆந்திராவில் 1700 பேரும், தெலுங்கானாவில் 500 பேரும் பலியாயினர் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழகத்திலும் கோடை வெயிலுக்கு இந்த ஆண்டு மக்கள் ஒரு சில இடங்களில் பலியாகிக் கொண்டிருப்பதை ஊடகங்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் வேலூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் கோடை வெயில் 105, 106, 107 என்று ஏறிக் கொண்டே சென்று 110 டிகிரியைத் தொட்டு விட்டது. இதன் விளைவாக ஒரு பக்கம் ஏழை பணக்காரர் என்ற வித்தியாசமில்லாமல் தங்கள் வீடுகளில் ஏர் கண்டிஷனர்களை மாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஓரிரு வேளைகள் சாப்பிடாமல் இருந்து விட்டு போகலாம். ஆனால் இந்த வெயிலின் வெட்கையில் மாட்டித் தவிக்க முடியாது என்று கூற ஆரம்பித்து விட்டனர்.

மற்றொரு பக்கம், "ஏழைகளுக்கு ஏற்காடு! வசதியானவர்களுக்கு ஊட்டி' என்று ஒரு காலத்தில் இருந்த நிலை மாறிப் போய், இப்போது ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடில்லாமல், அனைவரும் இந்த வெயிலின் உச்சககட்ட தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காகவும், விரண்டோடுவதற்காகவும் ஊட்டி, கொடைக்கானல் நோக்கிக் கூட்டம் கூட்டமாகப் படையெடுக்கின்றனர்.

ஊட்டி, கொடைக்கானல் போன்ற எந்தக் கோடை கால உல்லாச வாசஸ்தலமாக இருந்தாலும் பெரும்பாலும் அவை மலைப் பகுதியில் அமைந்திருப்பவை என்று நாம் அறிந்திருக்கின்றோம்.

சமதளப் பாதையில் சாலைப் பயணம் என்பது இன்றைய காலத்தில் சவாலான பயணமாக இருக்கையில், மலைப் பாதையில் அதை விடப் பன்மடங்கு சவாலான, உயிரைப் பணயம் வைத்து, மரணத்தின் மிக அருகில் அமைந்த ஆபத்தான பயணம் என்பதை எல்லோரும் தெரிந்திருக்கின்றார்கள்.

இந்த மலைப் பயணத்தில் என்னென்ன ஆபத்துக்கள் இருக்கின்றன? என்பதை முதலில் பார்ப்போம்.

1. சாதாரண சாலைகளில் 50 கிலோ மீட்டரை ஒரு முக்கால் மணி நேரத்தில் கடந்து விடலாம். ஆனால் இதே தூரத்தை மலைப் பகுதியில் மூன்று மணி நேரத்தில் தான் அடைய முடியும். போக்குவரத்து பாதித்து விட்டால் நான்கைந்து மணி நேரம் கடக்க வேண்டும். இது மலைப் பகுதியில் பயணிகள் சந்திக்கின்ற முதல் சவாலாகும்.

2. மலைப் பாதையில் கற்கள், மரங்களை ஏற்றிச் செல்கின்ற கனரக வாகனங்களின் ஓட்டுனர்கள் மது போதையில் இருந்து அல்லது ஏதோ தவறுதலாக பிரேக் பிடிக்காமல் ஆக்ஸிலரேட்டரிலிருந்து காலை எடுத்து விட்டால் போதும். கண்ணிமைக்கும் நேரத்தில் வண்டி பின்னோக்கிப் பாய்ந்து விடும். அவ்வளவு தான் பின்னால் அடுத்து அடுத்து நிற்கின்ற வண்டிகள் பாதிப்புக்கும், பயங்கர விபத்திற்கும் உள்ளாகி விடும். பின்னால் நின்று கொண்டிருந்த காரில் அல்லது பஸ்ஸில் பயணிகளின் உயிர்களை ஒரு நொடிப் பொழுதில் பலி வாங்கி விடும். இந்தியாவில் கனரக வாகனங்கள் மலைப் பாதையில் செல்வதற்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.

3. ஊட்டி கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர்கள் உயரத்தில் அமைந்த மலைப் பகுதியாகும். வளைந்து, வளைந்து செல்கின்ற அதிலும் குறிப்பாக தலையை சுற்றச் செய்கின்ற கொண்டை ஊசி வளைவுகளில் கொஞ்சம் வேகமாக வாகனங்கள் சென்றால் கூட பல அடிகள் பள்ளத் தாக்கில் விழுந்து மனித உடலின் எலும்பும் வண்டி உடலின் இரும்பும் தேறாத அளவுக்கு சுக்கு நூறாக அப்பளமாக நொறுங்கிப் போய் விடும். இந்தியாவில் மலைப் பகுதியில் செல்கின்ற வாகனங்களுக்கு எவ்வித வேகக் கட்டுப்பாடும் கண்காணிப்பும் கிடையாது.

4. மலைப் பாதையில் குறிப்பாக மழைக் காலங்களில் பாறைகள் வாகனங்களின் மீது உருண்டு விழுவதற்கும், மரங்கள் சாய்ந்து விழுவதற்கும் அதிகம் அதிகம் வாய்ப்புகள் உள்ளன. இதனால் உயிர் பறிபோகின்ற அபாயம் அதிகமாகவே காத்திருக்கின்றது.

5. சுய நலமிக்க மனிதனின் சுரண்டல் வேலையின் காரணமாக காடுகளும் சுரண்டல்களுக்கு உள்ளாயின. அதன் விளைவாக காடுகள் அழிக்கப்பட்டு அங்குள்ள நீர் வளங்கள் வற்றிப் போனதால் யானைகள் காடுகளிலிருந்து கூட்டம் கூட்டமாக சாலைகளுக்குள் படை எடுத்து வர ஆரம்பித்து விட்டன. இப்படிப்பட்ட யானைகளின் பவனியும், படையெடுப்பும் மனிதனின் சாலைப் பயணத்தை சாவுப் பயணமாக மாற்றி விடுகின்றது.

6. சாதாரண சாலைகளிலேயே வாகனங்கள் ஒன்று மற்றொன்றுடன் சர்வ சாதாரணமாக மோதி உயிர்ப்பலிகள் ஏற்பட்டு விடுகின்றன. ஆனால் மலைப் பாதையில் மோதல்களுக்குரிய சாத்தியக் கூறுகள் அதாவது சாவுக்குரிய சாத்தியக் கூறுகள் இன்னும் பன்மடங்கு பரிமாணத்தில் உள்ளன.

7. சாலைப் பயணத்தில் சில ஆண்களுக்கும், அதிகமான குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பஸ், கார் பயணங்களின் போது வாந்தி வரத்துவங்கி விடும். வளைந்து வளைந்து செல்கின்ற மலைப் பயணத்தில் வாந்திக்கும், குடலைப் புரட்டுகின்ற குமட்டல்களுக்கும் சொல்லவே வேண்டியதில்லை. அதனால், ஊட்டி, கொடைக்கானல் பாதையில் செல்வோர் ஆங்காங்கு கார்களை நிறுத்திக் கொண்டு கூட்டம் கூட்டமாக, குடம் குடமாக வாந்தி எடுப்பதை அதிகம் பார்க்க முடியும்.

8, மலைகளில் பாயும் அருவிகளில் குளிப்பதற்காகவும் மக்கள் இதுபோன்ற சவால்களைச் சந்தித்து, தங்களது உயிர்களைப் பணயம் வைத்து பயணம் மேற்கொள்வதற்கும் ஆயத்தமாகவே இருக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட சிறிய, பெரிய சோதனைகளைச் சந்தித்துக் கொண்டும், சகித்துக் கொண்டும் இவ்வளவு சங்கடங்களும் சவால்களும் சடுதியில் சாவுக்கு அழைத்துச் செல்கின்ற சாத்தியக் கூறுகளும் நிறைந்த இந்த சாகசப் பயணத்தை மக்கள் மேற்கொள்வது எதற்கு? சுட்டெரிக்கின்ற சூரிய வெப்பத்திலிருந்து ஒரு சில நாட்களாவது தப்பிக்க வேண்டும் என்பதற்காகத் தான்!

ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் சாதாரண நாட்களில் தங்கும் விடுதி அறைகளில் ஒரு நாள் வாடகை ஐநூறு ரூபாய் என்றால் இது போன்ற சீசன் நாட்களில் ஆயிரம், இரண்டாயிரம் என்று பன்மடங்கு அதிகரித்து விடுகின்றது. மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் ஒரு மாதத்திற்குக் கொடுக்கும் வாடகையை இங்கு ஒரு நாளுக்குக் கொடுக்கிறார்கள். ஒரு மாதச் செலவுகளை ஒரே நாளில் செலவழிக்கின்றார்கள்.

மக்கள் இப்படிச் செலவழிப்பதற்கு ஆயத்தமாக இருக்கின்றார்கள் என்றால் இது வெப்பத்தின் வேகத்தையும், அதில் அவர்கள் வெந்து நீர்ந்து வியர்வையில் குளித்து அனுபவிக்கின்ற வேதனையும் தான் எடுத்துக் காட்டுகின்றது.

ஆட்டம் போட்ட சூரியன் அந்தி நேரத்தில் அஸ்தமமான பின்னரும், அடிவானத்தில் அடைக்கலமான பின்னரும் அவனது தாக்கம் அடங்க மறுக்கின்றது. பகலில் அடித்த வெயிலின் வெட்கை இரவில் மக்களின் தூக்கத்தைக் கலைக்கின்றது. படுக்கும் பாய்களை நனைக்கின்றது. அதனால் தான் மக்கள் என்ன விலை கொடுத்தேனும் இதை விட்டுத் தப்பிக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

இந்தக் கொடிய வெயிலுக்கே இப்படித் தப்பிக்க வேண்டும் என்று நினைக்கின்றார்களே! நாளை மறுமையில் மக்களை வாட்டி எடுக்கப் போகும் கொடிய நரகத்தின் வெப்பத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், தடுத்துக் கொள்ளவும், அதிலிருந்து தப்பித்து, தங்களை விடுவித்துக் கொள்ளவும் என்ன விலையேனும் கொடுப்பார்கள் அல்லவா? இதோ அல்லாஹ் சொல்கின்றான்:

அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு ஈடாகத் தனது சந்ததிகளையும், மனைவியையும், சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலை யாகலாம் என்று குற்றவாளி விரும்புவான். அவ்வாறில்லை! அது பெரும் நெருப்பாகும். அது தோலை உரிக்கும்.

அல்குர்ஆன் 70:11-16

இந்த வசனங்கள் நாளை நரகத்தின் பரிமாணத்தையும், பயங்கரத்தையும், அதற்காக மனிதன் என்ன விலையையும் கொடுப்பதற்குத் தயாராக இருப்பான் என்பதையும் படம் பிடித்துக் காட்டுகின்றன.

ஆனால் அப்போது மனிதன் என்ன விலையும் கொடுக்கவும் முடியாது. அப்படியே கொடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ளவும் படாது என்பதைக் கீழ்க்காணும் வசனங்கள் எடுத்துக் கூறுகின்றன.

அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருவதைத் தவிர செல்வமோ, மக்களோ அந்நாளில் பயன் தராது.

அல்குர்ஆன் 26:88

இன்று உங்களிடமிருந்தும், (ஏக இறைவனை) மறுத்தோரிடமிருந்தும் எந்த ஈடும் பெற்றுக் கொள்ளப்படாது. உங்கள் தங்குமிடம் நரகமே. அதுவே உங்கள் துணை. அது மிகவும் கெட்ட தங்குமிடம்.

அல்குர்ஆன் 57:15

இந்த உலகில் மனிதன் தப்ப நினைக்கின்ற வெப்பம் அதிகப்பட்சம் ஒரு மூன்று மாத கால அளவு தான்! அதன் பின்னர் குளிர் காலம் அவனை அரவணைத்துக் கொள்கின்றது. ஆனால் நரகம் அவ்வாறானது அல்ல! இதோ அல்லாஹ் சொல்கின்றான்.

(நம்மை) மறுத்தோருக்கு நரக நெருப்பு உள்ளது. அவர்கள் மரணிக் குமாறு முடிவு செய்யப்படாது. அதன் வேதனை அவர்களுக்கு இலேசாக்கப் படவும் மாட்டாது. (நம்மை) மறுக்கும் ஒவ்வொருவருக்கும் இவ்வாறே வேதனை அளிப்போம்.

அல்குர்ஆன் 35:36

அது ஓர் அணையாத நெருப்பு என்று அல்குர்ஆன் சொல்கின்றது.

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு அவனையன்றி வேறு பாதுகாவலர்களை நீர் காண மாட்டீர். அவர்களை முகம் கவிழச் செய்து குருடர்களாக, ஊமைகளாக, செவிடர் களாக கியாமத் நாளில் எழுப்புவோம். அவர்களின் தங்குமிடம் நரகம். அது தணியும் போதெல்லாம் தீயை அதிகமாக்குவோம்.

அல்குர்ஆன் 17:97

எனவே அப்படிப்பட்ட நெருப்பை விட்டு தப்பிப்பதற்கு என்ன வழி?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசான வேதனை தரப்படுபவரிடம், "பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன் வருவாய் அல்லவா?'' என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், "ஆம்'' என்று பதிலளிப்பான்: அப்போது அல்லாஹ், "நீ ஆதமின் முதுகுத் தண்டில் (கருவாகாமல்) இருந்த போது இதை விட இலேசான ஒன்றை - எனக்கு (எதையும் எவரையும்) இணை கற்பிக்காமலிருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பிய போது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக் கொள்ளவில்லை'' என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 3334

ஆம்! ஒருவன், இறைவனுக்கு இணை வைத்து விட்டால் அவன் நிரந்தர நரகத்திற்குப் போய் விடுவான் என்று இந்த நபிமொழி கூறுகின்றது.

"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப் பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரை யும் இணைகற்பிக்காது இருக்கட்டும்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 18:110

இந்த வசனம் கூறுகின்றபடி, ஒருவர் அல்லாஹ்வுக்கு எதையும், எவரையும் இணையாக்காமல் இவ்வுலகில் அவனை மட்டும் வணங்கி, நல்லறங்கள் செய்து வாழ்ந்து மரணித்தால் அவர்களுக்கு நிச்சயமாக சுவனம் பரிசாகக் கிடைக்கும்.

இன்றைக்கு உயிரைப் பணயம் வைத்துச் செல்கின்ற தற்காலிக சோலைகள் போலல்லாமல் நிரந்தரமான சுவனச் சோலைகளில் இருப்பார்கள் என்று அழுத்தம் திருத்தமாக அல்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடுகின்றன.

நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதி. அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?

அல்குர்ஆன் 4:122

நாம் நரகத்திலிருந்து காப்பாற்றப்பட்டு சொர்க்கச் சோலைகளில் காலாகாலம் வசிக்கின்ற நன்மக்களாக ஆவோமாக! இந்தக் கோடை காலம் நமக்கு ஒரு பாடமாகவும், படிப்பினையாகவும் அமையட்டுமாக!

ஏகத்துவம் மே 2016 - தலையங்கம்