சனி, 16 ஜூலை, 2016

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமிய(?) பாடல்கள்


இவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொரு உயிரும் மரணித்தே தீரும் என்பது இஸ்லாத்தின் அடிப்படை. அல்லாஹ் மட்டுமே மரணிக்காமல் என்றென்றும் உயிருடன் இருப்பவன்.

இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும்.

அல்குர்ஆன் (55: 26,27)

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்.

அல்குர்ஆன் (3: 2)

நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே.

அல்குர்ஆன் (4: 78)

ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியவர். பின்னர் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

அல்குர்ஆன் (29: 57)

"உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்" என்று கூறுவீராக!

அல்குர்ஆன் (32: 11)

இந்த வசனங்களும், இதுபோன்ற இன்னும் ஏராளமான வசனங்களும் அல்லாஹ்வைத்தவிர அனைவரும் மரணிக்கக்கூடியவர்கள் தான். மேலும் ஒவ்வொருவருடைய உயிரையும் அவர்களுக்கென்று இறைவனால் நியமனம் செய்யப்பட்ட வானவர் கைப்பற்றுவார் என்ற இந்த அடிப்படையை நமக்கு எடுத்துரைக்கிறது.

அல்லாஹ்வை இறைவனாக ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வைத்தவிர அனைவரும் மரணிப்பவர்களே என்ற இந்த சிந்தாந்தத்தை ஆழமாக நம்ப வேண்டும். அவ்வாறு நம்பினால்தான் அவர் இறைநம்பிக்கையாளராகக் கருதப்படுவார்.

அவ்வாறில்லாமல், மனிதனும் மரணிக்காமல் சாகாவரம் பெறலாம் என்று நம்பினால் அது நரகிற்கு அழைத்துச்செல்லும் தெளிவான இணைவைப்பே! இதுபோன்று இஸ்லாத்திற்கு எதிரான ஒரு அடிப்படையைத்தான் “நமனை விரட்ட” என்று துவங்கும் நாகூர் ஹனீபாவின் பாடல் தெரிவிக்கின்றது.

“நமனை விரட்ட மருந்தொன்றிருக்குது நாகூர் தர்ஹாவிலே!
அன்பு நாணயம் கொண்டு சென்றால், பெறலாம் குருநாதர் பதப்பூவிலே”
"விஞ்ஞான பண்டிதர் சாஹுல் ஹமீது ஒலிவிற்கும் அருமருந்து
அது அஞ்ஞான அந்தகாரத்தை விலக்கும் அருளெனும் மாமருந்து”

இதுதான் அந்த பாடலின் ஆரம்ப வரிகளாகும்.

“நமன்” என்றால் தமிழில் “எமன்” என்று பொருளாகும். எமன் என்ற வார்த்தை உயிரைக் கைப்பற்றுபவர் என்ற அர்த்தத்தில் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகின்றது.

அன்போடும், பக்தியோடும் நாகூர் தர்காவில் அடங்கியிருக்கும் ஷாஹுல் ஹமீதைத் தரிசித்தால், உயிரைக் கைப்பற்றுவதற்கு இறைவனால் நியமனம் செய்யப்பட்ட வானவரை விரட்டிவிட்டு நாம் மரணிக்காமல் இருந்துவிடலாம் என்று இந்த வரிகள் கூறுகின்றன.

வானவர்கள் என்பவர்கள் இறைவன் கட்டளையிட்ட விஷயத்தை மட்டுமே செய்வார்கள். அவனுக்கு ஒருபோதும் மாற்றம் செய்ய மாட்டார்கள்.

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே சஜ்தா செய்கின்றன. வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள். தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.

அல்குர்ஆன் (16: 49,50)

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும், உங்கள் குடும்த்தினரையும் நரகை விட்டுக் காத்துக்கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்ட்டளையிட்டதை செய்வார்கள்.

அல்குர்ஆன் (66: 6)

இறைக்கட்டளைப்படியே நடப்பது வானவர்களின் இயற்கை குணம். மனிதர்களின் மீது இரக்கம் அல்லது பாசம் கொண்டு இறைக்கட்டளைக்கு மாறுசெய்து விடமாட்டார்கள் என்று மேற்கொண்ட வசனங்கள் நமக்கு தெரிவிக்கின்றன.

அனால், இந்த பாடலோ வானவர்கள் நாகூர் ஷாஹுல் ஹமீதுக்குக் கட்டுப்பட்டு அவருடைய பக்தர்களின் உயிரை கைப்பற்றாது விட்டுவிடுவார்கள் என்று கூறி இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கின்றது.

மேலும், நாகூரில் தரிசித்தபின் ஒருவர் சாகாவரம் பெற்றுவிடலாம் என்ற விஷமக்கருத்தையும் இப்பாடல் தெரிவிக்கின்றது.

இந்தப்பாடல் வரிகள் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு மாற்றமாக இருப்பது ஒருபுறமிருக்க, நிதர்சனத்திற்கும் கூட மாற்றமாக இருக்கிறது.

- நாகூர் இப்னு அப்பாஸ் எம்.ஐ.எஸ்.சி.
(ஏகத்துவம் - ஜூலை 2016 இதழில் கத்தர் மண்டலம் சார்பாக வெளிவந்த கட்டுரை)

திங்கள், 4 ஜூலை, 2016

பெருநாள் தொழுகை


பெருநாள் தொழுகை

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

தொழுகை நேரம்

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்களது காரியங்களில் முதல் காரியமாக தொழுகையைத் துவக்குவார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1472

'இன்றைய தினத்தில் நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கின்றாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார்' என்று அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டதை நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர்: பரா (ரலி)

நூல்கள்: புகாரீ 951, முஸ்லிம் 3627

இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று பெருநாள் தொழுகையைப் பகலின் ஆரம்ப நேரத்தில் தொழுவித்தார்கள். பின்னர் நாங்கள் ஜுமுஆ தொழுவதற்குச் சென்றோம். ஆனால் அவர் ஜுமுஆ தொழுகைக்கு வரவில்லை. நாங்கள் தனியாகவே தொழுதோம். இந்நிகழ்ச்சி நடக்கும் போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தாயிஃப் நகரத்தில் இருந்தார்கள். அவர் மதீனா வந்ததும் அவரிடம் இதைப் பற்றி நாங்கள் கூறினோம். அதற்கு அவர், 'இப்னு ஸுபைர் (ரலி) நபிவழிப்படியே நடந்துள்ளார்' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அதா பின் ரபாஹ்

நூல்: அபூதாவூத் 905


பெருநாள் தினத்தில் முதல் காரியமாகத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பதை இந்த ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன. மேலும் மேற்கண்ட ஹதீஸில் பகலில் ஆரம்பத்தில்... என்று கூறப்படுவதால் பெருநாள் தொழுகையைத் தாமதப்படுத்தாமல் காலை நேரத்திலேயே தொழுது விட வேண்டும்.

திடலில் தொழுகை

இரு பெருநாள் தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும். 'மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம்' (புகாரீ 1190) என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையைத் திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். எனவே இரு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1472


பெருநாள் தொழுகையில் பெண்கள்

பெருநாள் தொழுகையில் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் திடலுக்கு வரவேண்டும். அவர்கள் தொழுகையைத் தவிர மற்ற நல்ல காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்கு) அனுப்புமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும், தொழுமிடத்தை விட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டோம். பெண்களில் ஒருவர், 'அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில் என்ன செய்வது?' என்றார். அதற்கு, 'அவளுடைய தோழி தனது (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி)

நூல்கள்: புகாரீ 351, முஸ்லிம் 1475


ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்

பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச் செல்லும் போது ஒரு வழியில் சென்று வேறு வழியாகத் திரும்புவது நபி வழியாகும்.

பெருநாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரீ 986,


தொழுகைக்கு முன் சாப்பிடுதல்

நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு விட்டு தொழச் செல்வார்கள்.

சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 953


நோன்புப் பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: இப்னுகுஸைமா 1426


முன் பின் சுன்னத்துகள் இல்லை

இரு பெருநாள் தொழுகைகளுக்கு முன் பின் சுன்னத்துகள் கிடையாது. நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைக்கு முன்னரும், பின்னரும் எந்தத் தொழுகையையும் தொழுததில்லை.

நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று (திடலுக்குச்) சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும், பின்னும் எதையும் தொழவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: புகாரீ 1431, முஸ்லிம் 1476


பாங்கு இகாமத் இல்லை

இரு பெருநாள் தொழுகைக்கும் பாங்கு, இகாமத் கிடையாது.

இரு பெருநாள் தொழுகையை பாங்கும், இகாமத்தும் இல்லாமல் ஒரு தடவை அல்ல; இரு தடவை அல்ல; பல தடவை நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுள்ளேன்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1470


தொழும் முறை

பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். தக்பீர் தஹ்ரீமாவுக்குப் பின்னர், முதல் ரக்அத்தில் அல்லாஹும்ம பாயித் பைனீ... அல்லது வஜ்ஜஹத்து வஜ்ஹிய லில்லதீ... என்ற துஆவை ஓதி விட்டு, அல்லாஹு அக்பர் என்று ஏழு தடவை இமாம் கூற வேண்டும்.

பின்பற்றித் தொழுபவர்களும் ஏழு தடவை சப்தமின்றிக் கூற வேண்டும்.

பின்னர் ஸூரத்துல் ஃபாத்திஹா மற்றும் துணை சூராக்கள் ஓதி ருகூவு, ஸஜ்தா மற்றும் மற்ற தொழுகையில் செய்யும் அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும்.

பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி இரண்டாம் ரக்அத்திற்கு எழுந்தவுடன் ஸூரத்துல் ஃபாத்திஹா ஓதுவதற்கு முன்னர் இமாம் ஐந்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். பின்பற்றித் தொழுபவர்களும் சப்தமின்றி ஐந்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும்.

பின்னர் மற்றத் தொழுகைகளைப் போல் ஸூரத்துல் பாத்திஹா மற்றும் துணை சூராக்களை ஓதி, ருகூவு, ஸஜ்தா போன்ற அனைத்துக் காரியங்களையும் செய்து தொழுகையை முடிக்க வேண்டும். கூடுதல் தக்பீர் கூறும் போது தக்பீர்களுக்கு இடையில் ஓதுவதற்கு எந்த துஆவையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. எனவே கூடுதல் தக்பீர்களுக்கிடையில் எந்த துஆவும் ஓதக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறுவார்கள். இவற்றை கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 971, தாரகுத்னீ பாகம்: 2, பக்: 48, பைஹகீ 5968


ஓத வேண்டிய சூராக்கள்

நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் முதல் ரக்அத்தில் அஃலா (87வது) அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் காஷியா (88வது) அத்தியாயத்தையும் ஓதியுள்ளார்கள்.

சில சமயங்களில் காஃப் (50வது) அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் ஸூரத்துல் கமர் (54வது) அத்தியாயத்தையும் ஓதியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் ஜுமுஆத் தொழுகையிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (என்ற 87 வது அத்தியாயத்தையும்) ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியா (என்ற 88 வது அத்தியாயத்தையும்) ஓதுபவர்களாக இருந்தார்கள். பெருநாளும், ஜுமுஆவும் ஓரே நாளில் வந்து விட்டால் அப்போது இந்த இரண்டு அத்தியாயங்களை இரண்டு தொழுகையிலும் ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1452

அபூவாகித் அல்லைஸீ (ரலி) அவர்களிடம் 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள், நோன்புப் பெருநாள் தொழுகையில் என்ன ஓதுவார்கள்?' என்று உமர் (ரலி) அவர்கள் கேட்ட போது, 'அவ்விரு தொழுகையிலும் காஃப் வல்குர்ஆனில் மஜீத் (என்ற 50 வது அத்தியாயத்தையும்) இக்தரபத்திஸ் ஸாஅத்தி வன் ஷக்கல் கமர் (என்ற 54வது அத்தியாயத்தையும்) ஓதுவார்கள்' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ்

நூல்: முஸ்லிம் 1477


சுத்ரா (தடுப்பு)

இரு பெருநாள் தொழுகையிலும் திடலில் தொழும் போது இமாமிற்கு முன்னால் எதையாவது தடுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (தடுப்பாக) நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஒரு ஈட்டி நாட்டப்படும். நபி (ஸல்) அவர்கள் (அதை நோக்கித்) தொழுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்கள்: புகாரீ 972, முஸ்லிம் 773

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்காக) தொழும் திடலுக்குப் புறப்படுவார்கள். அவர்களுக்கு முன்பு கைத்தடி எடுத்துச் செல்லப்பட்டு, தொழுமிடத்தில் அவர்களுக்கு முன்னால் நாட்டப்படும். அதை நோக்கித் தொழுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்கள்: புகாரீ 973, முஸ்லிம் 774


மிம்பர் இல்லை

வெள்ளிக்கிழமை ஜுமுஆவில் இமாம் மிம்பரில் நின்று உரை நிகழ்த்துவது போல் பெருநாள் தொழுகைக்கு மிம்பரில் நின்று உரையாற்றக் கூடாது. தரையில் நின்று தான் உரை நிகழ்த்த வேண்டும். இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (வீட்டிற்குத்) திரும்புவார்கள்.

மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானுடன் நோன்புப் பெருநாள் தொழுகையையோ ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையோ தொழச் செல்லும் வரை மக்கள் இவ்வாறே கடைப்பிடித்து வந்தனர். (மர்வான் ஆட்சியில் ஒரு நாள்) நாங்கள் தொழும் திடலுக்கு வந்த போது கஸீர் பின் ஸல்த் என்பார் உருவாக்கிய மேடை ஒன்று அங்கே திடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் தொழுவதற்கு முன்பே அதில் ஏற முன்றார். நான் அவரது ஆடையைப் பிடித்து கீழே இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் அவர் மேடையில் ஏறித் தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்தலானார். அப்போது நான், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் (நபி வழியை) மாற்றி விட்டீர்கள்' என்று கூறினேன்.

அதற்கு மர்வான், 'நீர் விளங்கி வைத்திருக்கும் நடைமுறை மலையேறி விட்டது' என்றார். 'நான் விளங்காத (இந்தப் புதிய) நடைமுறையை விட நான் விளங்கி வைத்துள்ள நடைமுறை அல்லாஹ்வின் மீது ஆணையாக மிகச் சிறந்ததாகும்' என நான் கூறினேன்.

அதற்கு மர்வான், 'மக்கள் தொழுகைக்குப் பிறகு இருப்பதில்லை, எனவே நான் தொழுகைக்கு முன்பே உரையை அமைத்துக் கொண்டேன்' என்று கூறினார்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1472


அபூதாவூத் 963, இப்னுமாஜா 1265, அஹ்மத் 10651 ஆகிய நூல்களின் அறிவிப்பில் 'மர்வானே! நீர் சுன்னத்திற்கு மாற்றம் செய்து விட்டீர்! பெருநாள் தினத்தில் மிம்பரைக் கொண்டு வந்துள்ளீர். இதற்கு முன்னர் இவ்வாறு கொண்டு வரப்படவில்லை...' என்று இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று ஒரேயொரு உரையை நிகழ்த்தினார்கள் என்பதற்கே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இரண்டு குத்பாக்கள் நிகழ்த்துவதற்கோ, குத்பாக்களுக்கு இடையில் அமர்வதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (திடலுக்கு) வெளியேறினார்கள். மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்து ஸலாம் கூறினார்கள். தரையில் நின்று மக்களை நோக்கி (உரை நிகழ்த்தி)னார்கள். மக்கள் அமர்ந்திருந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: இப்னுமாஜா 1278


சொற்பொழிவு பெண்களுக்குக் கேட்காவிட்டால்...

இரு பெருநாள்களிலும் பெண்களுக்கும் சொற்பொழிவு கேட்கும் வண்ணம் ஏற்பாடு செய்ய வேண்டும். பெண்களுக்குக் கேட்கவில்லையானால் தனியாக அவர்களுக்கு பயான் செய்யலாம்.

(பெருநாளன்று) நான் நபி (ஸல்) அவர்களைக் கவனித்தேன். அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்னால் தொழுவித்தார்கள். பிறகு தமது உரை பெண்களின் செவிகளைச் சென்றடையவில்லை என அவர்கள் கருதியதால் பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கு உபதேசம் செய்துவிட்டு, தர்மம் செய்யுமாறு கட்டளையிட்டார்கள். பிலால் (ரலி), ஒரு ஆடையை ஏந்தியவராக நின்றிருந்தார்கள். அப்போது பெண்கள் அதில் (தமது அணிகலன்களைப்) போடலானார்கள்.

அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)

நூல்: புகாரீ 1449


தக்பீரும் பிரார்த்தனையும்

இரு பெருநாள்களிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும். மேலும் திடலில் இருக்கும் போது, தமது தேவைகளை வல்ல இறைவனிடம் முறையிட்டுக் கேட்க வேண்டும். திடலில் கேட்கும் துஆவிற்கு முக்கியத்துவமும் மகத்துவமும் உள்ளது.

பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள்,ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும், புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி)

நூல்கள்: புகாரீ 971, முஸ்லிம் 1474


அல்லாஹு அக்பர் என்று கூறுவது தான் தக்பீர் ஆகும். பெருநாளைக்கு என நபி (ஸல்) அவர்கள் தனியான எந்தத் தக்பீரையும் கற்றுத் தரவில்லை. அதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. மேலும் பெருநாளில் கடமையான தொழுகைகளுக்கு முன்னால் அல்லது பின்னால் சிறப்பு தக்பீர் சொல்ல வேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை. மேலும் பெருநாளில் தக்பீர்களைச் சப்தமிட்டு கூறக் கூடாது.

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! அல்குர்ஆன் 7:205

ஜுமுஆ அன்று பெருநாள்

வெள்ளிக்கிழமையன்று பெருநாள் வந்து விட்டால் விரும்பியவர் பெருநாள் தொழுகையை மட்டும் தொழுதுவிட்டு ஜுமுஆத் தொழுகையை தொழாமல் இருக்கலாம். விரும்பியவர் இரண்டு தொழுகைகளையும் நிறைவேற்றலாம்.

நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும், ஜுமுஆத் தொழுகையிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பபிக்கல் அஃலா (என்ற 87 வது அத்தியாயத்தையும்) ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியா (என்ற 88 வது அத்தியாயத்தையும்) ஓதுபவர்களாக இருந்தார்கள். பெருநாளும் ஜுமுஆவும் ஓரே நாளில் வந்து விட்டால் அப்போதும் இந்த இரண்டு அத்தியாயங்களை இரண்டு தொழுகையிலும் ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1452


இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையையும், ஜுமுஆத் தொழுகையையும் நிறைவேற்றியுள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாக உள்ளது.

'இன்றைய தினம் உங்களுக்கு இரண்டு பெருநாட்கள் வந்து உள்ளன. யார் இந்தப் பெருநாள் தொழுகையைத் தொழுகிறாரோ அவர் ஜுமுஆ தொழாமல் இருக்கலாம். ஆனால் நாம் ஜுமுஆ தொழுகையை நடத்துவோம்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அபூதாவூத் 907

இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று பெருநாள் தொழுகையைப் பகலின் ஆரம்ப நேரத்தில் தொழுவித்தார்கள். பின்னர் நாங்கள் ஜுமுஆ தொழுவதற்குச் சென்றோம். ஆனால் அவர் ஜுமுஆ தொழுகைக்கு வரவில்லை. நாங்கள் தனியாகவே தொழுதோம். இந்நிகழ்ச்சி நடக்கும் போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தாயிஃப் நகரத்தில் இருந்தார்கள். அவர் மதீனா வந்ததும் அவரிடம் இதைப் பற்றி நாங்கள் கூறினோம். அதற்கு அவர், 'இப்னு ஸுபைர் (ரலி) நபிவழிப் படியே நடந்துள்ளார்' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அதா பின் ரபாஹ்

நூல்: அபூதாவூத் 905


(மௌலவி எம்.ஐ.சுலைமான் அவர்களின் "தொழுகையின் சட்டங்கள்" என்ற நூலிலிருந்து)

"திருமறை வசனங்களிலிருந்து..." தொடர் உரை - மௌலவி அப்துஸ்ஸமது மதனி



"திருமறை வசனங்களிலிருந்து..." 2016 ரமலான் தொடர் உரை - மௌலவி அப்துஸ்ஸமது மதனி



பாகம் - 1

பாகம் - 2

பாகம் - 3

ஞாயிறு, 3 ஜூலை, 2016

ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்


ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)   நூல்: புகாரி 1503


ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.

ஒரு ஸாவு என்பது இரு கைகள் கொள்ளும் அளவு போல் நான்கு மடங்காகும். நிறுத்தல் அளவையில் சுமார் இரண்டரைக் கிலோ அரிசியாகும். அல்லது அதற்கான கிரயமாகும்.

நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.

ஃபித்ராவின் நோக்கம்:

இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட்டுள்ளது.

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)   நூல் : அபூதாவூத் 137, இப்னுமாஜா 1817


நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.

கொடுக்கும் நேரம்:

மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)   நூல்: புகாரி 1503, 1509


இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக்குப் பின், பெருநாள் தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள்.

பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும்.

பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கக் கூடாது. எத்தனை நாட்களுக்கு முன்னாலும் கொடுக்கலாம் எனவும் பொருள் கொள்ளலாம்.

பெருநாள் தொழுகைக்கு முன் என்பதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள இடமிருந்தாலும் வேறு பல ஹதீஸ்களை ஆராயும் போது, "பெருநாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது. பெரு நாளைக்கு சில நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்'' என்ற கருத்தே சரியானது என்பது உறுதியாகிறது.

ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்'' என்று நான் கூறினேன். அதற்கு அவன் "எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது'' எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, "நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?'' என்று கேட்டார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்'' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்'' என்று கூறினார்கள். நான் அவனுக்காக்க் காத்திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து "உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகிறேன்'' என்று கூறினேன். "எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்'' என்று அவன் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்ற போது, "உன் கைதி என்ன ஆனான்?'' என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக் கூறினேன். "அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்.... என்ற ஹதீஸ் புகாரியில் வக்காலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது.

(இங்கே ஷைத்தான் என்பது திருட்டுத் தொழில் செய்யும் கெட்ட மனிதனைக் குறிக்கிறது. திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் கெட்ட மனிதர்களை ஷைத்தான் என்று சொல்லும் வழக்கம் உள்ளது )

ஜகாத் வேறு ஃபித்ரா வேறு:

"இந்த ஹதீஸில் ஃபித்ரா என்று கூறப்படவில்லை. ரமளான் ஜகாத் என்று தான் கூறப்பட்டுள்ளது. இது ரமளான் மாதத்தில் ஜகாத்தைத் திரட்டுவதையே குறிக்கிறது. ஃபித்ராவை குறிக்கவில்லை'' என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறாகும்.

ஜகாத் என்பது ஆண்டு தோறும் ரமளானில் மட்டும் திரட்டப்படும் நிதி அல்ல. அன்றாடம் திரட்டப்பட்டுக் கொண்டே இருக்கும் நிதியாகும். ஆனால் 'ரமளான் ஜகாத்' என்ற சொல் ஃபித்ராவை மட்டும் தான் குறிக்கும்.

இதை நாம் சுயமாகக் கூறவில்லை. பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

ரமளான் ஸகாத்தை அடிமை, சுதந்திரமானவன், ஆண், பெண் அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரிச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு கோதுமை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்ற ஹதீஸ் நஸயீ 2453, 2455 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

"ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று ரமளான் ஜகாத்தை ஏற்படுத்தினார்கள்'' என்பது ஃபித்ராவைத் தான் குறிக்கும்.

ஜகாத்தைக் குறிக்காது. ஜகாத் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். அனைவருக்கும் ஒரு ஸாவு என்று ஜகாத் வசூலிக்கப்படாது. எனவே அபூஹுரைரா (ரலி) சம்பந்தப்பட்ட ஹதீஸ் ஃபித்ராவையே குறிக்கிறது.

எனவே நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம் திரட்டப்பட்டது என்பதற்கும் இது ஆதாரமாக அமைந்திருக்கிறது.

திரட்டும் பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது ஆதரமாக அமைந்துள்ளது.

ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட பொருட்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்துள்ளது. மூன்று நாட்களும் ஷைத்தான் (கெட்ட மனிதன்) வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பது தெரிகிறது.

நபித் தோழர்கள் நோன்புப் பெருநாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர் என்று புகாரி 1551-வது ஹதீஸ் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே நடந்ததை இது குறிக்கும் என்றால் இது மற்றொரு ஆதாரமாக அமையும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் நபித் தோழர்கள் இவ்வாறு கொடுத்து வந்தார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை உறுதி செய்வதாக இது அமையும்.

எனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை. பெருநாள் தொழுகை ஆரம்பமாகும் வரை அதன் கடைசி நேரம் உள்ளது.

ஒரு ஊரில் திரட்டி வேறு ஊரில் கொடுத்தல்:

ஒரு ஊரில் திரட்டப்படும் ஃபித்ரா தர்மத்தை வேறு ஊர்களுக்கு வழங்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு நேரடியாக எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை.

ஜகாத்தை அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து பெற்று அவர்களில் உள்ள ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கூறி முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யமன் பகுதிக்கு அனுப்பினார்கள்.

(புகாரி 1395, 1496, 4347)


"அவர்களில் செல்வந்தர்களிடம் திரட்டி அவர்களில் ஏழைகளுக்கு வழங்க வேண்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் எந்தப் பகுதியில் திரட்டப்பட்டதோ அங்கு தான் விநியோகிக்க வேண்டும் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

இது நோன்புப் பெருநாள் தர்மத்தைப் பற்றிய ஹதீஸ் அல்ல. ஜகாத் பற்றிய ஹதீஸாகும் என்பதை முதலில் நாம் கவனிக்க வேண்டும்.

அவர்களில் ஏழைகள், அவர்களில் செல்வந்தர்கள் என்பது அந்த ஊரைச் சேர்ந்த ஏழைகள், அந்த ஊரைச் சேர்ந்த செல்வந்தர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டதா?

முஸ்லிம்களில் உள்ள செல்வந்தர்கள், முஸ்லிம்களில் உள்ள ஏழைகள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதா? இரண்டுக்கும் இடம் தரக்கூடிய வகையில் இது அமைந்துள்ளது.

இரண்டாவது கருத்தில் தான் இது பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பின்வரும் ஹதீஸ் உறுதி செய்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பனூசுலைம் கோத்திரத்தினரிடம் ஜகாத்தைத் திரட்ட ஒருவரை நியமனம் செய்தார்கள். அவர் வந்ததும் அவரிடம் கணக்குக் கேட்டார்கள். "இது உங்களுக்கு உரியது; இது எனக்கு அன்பளிப்பாக கிடைத்தது'' என்று அவர் கூறினார்...

(புகாரி 6979)


பனூ சுலைம் கூட்டத்தார் மதீனாவைச் சேர்ந்தவர்கள் அல்லர். வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் வசூலித்த ஜகாத்தை அந்த நபித்தோழர் நபிகள் நாயகத்திடம் மதீனாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஒரு இடத்தில் வசூலித்து இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

எனவே, ஜகாத்தாக இருந்தாலும் ஃபித்ராவாக இருந்தாலும் ஒரு இடத்தில் திரட்டி இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம்.

மேலும் ஏழைகளுக்கு உணவாகப் பயன்படுவதற்காகவே ஃபித்ரா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய காரணமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

வசதிபடைத்தவர்கள் அதிகமாக வாழும் பகுதியில் திரட்டி ஏழைகள் அதிகம் வாழும் பகுதியில் விநியோகம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. பொருள் வசதி படைத்த நாடுகளில் வசிப்போர் ஏழைகள் வசிக்கும் பகுதிக்கு அனுப்பினால் தான் ஃபித்ராவின் இரண்டு நன்மைகளையும் பெற முடியும்.