வியாழன், 27 ஏப்ரல், 2017

ரமலான் தரும் நன்மைகள்


எந்த ஒரு பயிற்சியை மேற்கொள்வதற்கும், உடல் சார்ந்த, அறிவு சார்ந்த ஒரு தகுதியை நாம் நிர்ணயம் செய்திருக்கிறோம். ஆன்மிகம் சார்ந்த நல்லருளை பெற்றுக் கொள்வதற்கு அல்லாஹ் புனித ரமலான் மாதத்தை நமக்கு அருளி இருக்கின்றான். புனித ரமலான் நாட்களில் நாம் மேற்கொள்ளும் பயிற்சிகள், பின்நாளில் நமது செயல் களில் பிரதிபலிப்பதை நாம் உணர முடியும்.

பாவங்களாலும், கெட்ட செயல்களாலும் கடினப்பட்டுபோன மனங்களையும், உடற்கூறுகளையும் மென்மைப்படுத்த மனிதனை முதலில் பக்குவப்படுத்த வேண்டும். உடலில் திமிர், மனதில் ஆணவம் இவை இரண்டும் இருக்கின்ற வரையில் மனிதன் நியாயத்தின் பக்கம் திரும்பமாட்டான். எனவே முதலில் அதை மாற்றவேண்டும்.

அவனுக்கு பசியாலும், தாகத்தாலும் ஒரு பாதிப்பை ஏற்படுத்திவிட்டால் பலவீனமான உடலும், மனமும் பாவச்செயலை எண்ணிப் பார்க்கவே அச்சம் கொள்ளும். ஏழைகள் அனுபவிக்கும் பசியின் கொடுமையும், தாகத்தின் தவிப்பையும் அவன் உணர்ந்து கொள்வான். இதன்மூலம் அவன் இறைவனை நோக்கி பயணிக்கத்தொடங்குவான்.

ஈமானின் மறுபெயரே இறையச்சம். மனிதனிடம் இறையச்சம் தஞ்சம் கொள்ளும் போது நன்றியுணர்ச்சியும் அவனிடம் சேர்ந்து கொள்ளும். அந்த நன்றியை வெளிப்படுத்த அல்லாஹ்வை வணங்குவதற்கு அவன் முயற்சிகள் மேற்கொள்வான்.

அதனால் தான் ரமலான் மாதத்தில் ஐந்துவேளைத் தொழுகைகளோடு உபரி தொழுகைகளாக பலவற்றை தொழக்கூடிய வாய்ப்பினை இறைவன் நமக்கு அருளியுள்ளான். குறிப்பாக இரவு நேரத்தொழுகை ‘தஹஜ்ஜத்’, ‘கியாமுல் லைல்’, பகல் பொழுதில் ‘லுஹா’, போன்ற தொழுகைகள் உள்ளன.

கிட்டதட்ட முப்பது நாட்கள் முனைப்போடு செயல்படுத்தப்படும் இந்த தொழுகைகளின் நன்மைகள் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் ஊடுருவிப் பதியும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் ரமலான் தவிர்த்த மற்றைய நாட்களிலும் அந்த தொழுகைகளை நிறைவேற்றக்கூடிய வாய்ப்பினை அந்த பயிற்சிகள் நமக்கு கற்றுத்தருகின்றன.

“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1899), முஸ்லிம் (1957)

ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப் படுகின்றன.

இதன் கருத்து என்ன? ரமலான் மாதம் வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா? அல்லது ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற சிந்தனை இந்த செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த ஹதீஸ்களின் கருத்து இவை அல்ல!

“ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன” என்பதன் கருத்து, ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான்.

மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.

இந்த கருத்தை முஸ்லிம் (1957வது) அறிவிப்பில் “ரமலான் வந்துவிட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக் கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகிறது.

“ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்”என்றால் ஷைத்தான்கள் தங்கள் வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய முடியாது, ஷைத்தான்களின் செயல்களை முறியடிக்கக்கூடிய வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான்.

இம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள் அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல! ஏனெனில் நபி (ஸல்) அவர்களே ரமலான் மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

“யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்: புகாரீ 1903)

இந்த நபிமொழியில் நோன்புக் காலங்களில் ஷைத்தானின் வேலைகளும் இருக்க வாய்ப்பு உண்டு என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு வைத்துக் கொண்டு ஒரு நபித்தோழர் உடலுறவு கொண்டதும் (பார்க்க புகாரீ 1936) இக்கருத்தை உறுதி செய்கிறது.

கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம்

மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும். “ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நுல்: முஸ்லிம் (2119)

கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல்

ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.

யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (1901), முஸ்லிம் (1393)

உம்ரா செய்தால் ஹஜ் நன்மை

ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும்.

“ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408)

சுவர்க்கத்தில் தனி வாசல்

நோன்பு நோற்றவர் மறுமை நாளில் தனி வாசல் மூலம் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும் நுழைய முடியாது.

“சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121)

அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம்

“நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1894)

“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1904)

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்வுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருளாகும்.

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது

இம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.

(அல்குர்ஆன் 97:1-5)

எனவே இவ்வருட ரமலான் மாதத்தை, நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நற்செயல்களை செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!

வீண் விரயம் செய்யாதீர்கள்


இன்றைக்கு பணத்தின் அருமை பெருமைகளை நாம் துளிகூட உணர்வுபூர்வமாக உணரவில்லை. அதனால்தான் பணத்தைத் தண்ணீராய் செலவு செய்து கொண்டிருக்கின்றோம். செலவு என்பது தவிர்க்க முடியாத ஒன்று; அதே வேளை வீண் செலவுகள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

மரணத்தைப் பற்றி மனிதன் நினைத்துப் பார்ப்பதே இல்லை. அதனால்தான் அவன் வீண் விரயங்களைக் குறித்து கவலைப் படுவதே இல்லை. நாம் உண்ணும் உணவு, உடுத்தும் உடை, வசிக்கும் வீடு, பேசும் பேச்சு என்று நமது வீண் விரயப் பட்டியலை வெகு எளிதாகப் பட்டியலிட்டு விடலாம்..

நமக்குத் தேவை ஆரோக்கியமான வாழ்வே தவிர ஆடம்பரமான வாழ்வல்ல. நாம் வாழ்வதற்கு பொருள் வேண்டும்; நாம் வாழ்வதிலும் பொருள் வேண்டுமல்லவா?

‘‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை; அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை’’ என்ற திருக்குறளின் குரல் நம் செவிகளில் ஓங்கி ஒலிக்கவில்லையா? இப்போது திருக்குர்ஆனின் குரல் ஒன்றைச் செவியேற்போமா..

‘‘மனிதன் எத்தகையவன் என்றால்.. பொருளைச் சேமித்து அதனைக் கணக்கிட்டு தன்னிடமே வைத்துக் கொண்டான். நிச்சயமாக தனது பொருள் தன்னை இவ்வுலகில் நிரந்தரமாக்கி வைக்கும் என அவன் நினைத்துக் கொண்டான்.’’ (திருக்குர் ஆன்–104:2)

‘‘நீங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள்; நிச்சயமாக வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (திருக்குர் ஆன்–6:141)

‘‘ஒருவருக்கொருவர் அதிகமதிகமாகத் தேடிக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களை தூரமாக்கி விட்டது’’ (திருக்குர் ஆன்–102:1) என்ற திருமறை வசனம் கூர்ந்து கவனிக்கத் தக்கதாகும். ‘‘மண்ணறைகளை நீங்கள் தரிசிக்கும் வரை’’ என்று அடுத்த வசனம் அப்பேராசை அழிய அற்புதமான வழியைக் காட்டுறது.

வீண்விரயம் தொடர்பாக அல்குர்ஆனில்…

. “மேலும், (அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாக) உண்ணுங்கள். மேலும், பருகுங்கள். (ஆனால்) வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிக்கமாட்டான்.” (அல்அஃராஃப்: 31)

. “(செல்வத்தை) அளவு கடந்து வீண் விரயம் செய்யாதுமிருப்பீராக! நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ, தன் இரட்சகனுக்கு நன்றி செலுத்தா(து மாறு செய்)தவனாக இருக்கின்றான்.” (பனீ இஸ்ராயீல்: 26, 27)

வீண் விரயமானது பல்வேறுபட்ட அமைப்புக்களில் நமது சமுகத்திற்கு மத்தியில் தலைவிரித்தாடுகின்றது.…

உணவில் வீண்விரயம் . வுழு செய்யும் போது நீரை வீண்விரயம் செய்தல்.

மின்சாரம் மற்றும் எரிபொருட்கள் உபயோகங்களின் போது வீண்விரயம் செய்தல்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது கையிலிருந்து தவறி கீழே விழும் சிறுத் துண்டு உணவைக் கூட எடுத்து துடைத்து விட்டு சாப்பிடச் சொல்கிறது இஸ்லாம் ''...உங்களில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒருத் துண்டு உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தம் ஏதும் பட்டிருந்தால் அதை நீக்கி விட்டு சாப்பிடட்டும் அதை ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம்,

என்று அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுருத்தினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல்கள்: முஸ்லிம், அஹமத், அபூதாவூத், திர்மிதி)

ஒரு சிறுத் துண்டைக் கூட ஷைத்தானுக்கு விட வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகையில் தட்டை, தட்டையாக கொண்டு போய் குப்பையில் தட்டலாமா?

சிந்தித்தால் ...

விருந்துகளுக்கு அழைக்கப்படுபவர்களில் ஏழைகளும் இருக்க வேண்டும் என்று ஏற்றத் தாழ்வுகளைக் கலைந்து சமநிலைப படுத்திய இஸ்லாம் வலியுருத்துவதுடன் ஏழைகள் அழைக்கப்படாத விருந்தே விருந்துகளில் வெறுக்கத்தக்கது என்றும் கண்டிக்கிறது இஸ்லாம். வலீமா விருந்துகளில் கெட்ட விருந்து பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கனிக்கப்படும் விருந்தாகும் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரகள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி-முஸ்லீம்)

அல்லாஹ் மனிதனுக்குப் பொருள் வளத்தை அதிகப்படுத்த, அதிகப்படுத்த மனிதன் தன்னுடைய சுகபோகத்திற்காக, சுயநலனிற்காக தனக்குப் பொருள் வளத்தை வழங்கிய அல்லாஹ்வை மறந்து அதை வீண் விரயம் செய்து ஷைத்தானின் தோழனாகி விடுகின்றார்கள்.

இன்று உலகில் எத்தனையோ மக்கள் உணவு கிடைக்காமல் செத்து மடிவதற்கான காரணங்களில் குறிப்பிட்ட ஓரிடத்தில் உணவுகள் சீரழிக்கப்படுவதும் முக்கியக் காரணம் என்பதை ஏன் பலருடைய மனம் ஏற்க மறுக்கின்றது? சிந்தியுங்கள் சீர் பெறுவீர்கள்.

வீண், விரயம் நம் அன்றாட வாழ்வின் சகலதிலும் ஒட்டி, ஒன்றாகிப் போய்விட்டன. ஊதாரிகளாக வாழ்க்கைப் படகோட்டுகிறோம். நாம் அறியாமலேயே, உணராமலேயே வீணடிக்கின்றோம். விரயமாக்கின்றோம். அது எமக்கு ஒரு பொருட்டுமல்ல. ஆனால் வீணாக்கிய, விரயமாக்கிய ஒவ்வொன்றுக்கும் மறுமையில் கணக்குக் கொடுத்தாக வேண்டும்.

ஆகவே வீண், விரயம் தவிர்த்து இறை அன்பை, அருளை, பரக்கத்தைப் பெற்றிட முயற்ச்சி செய்வோம்!

பொய் பேசாதீர்கள்


மனிதர்களில் சிலரிடம் தவறைச் செய்யாதே! என்று கூறினால் நான் அப்படித்தான் செய்வேன் என்று கூறுவர். இதைச் செய் என்று கூறினால் அதைச் செய்ய மாட்டேன் என்று கூறக்கூடியவர்களும் உண்டு. நல்லதை ஏற்பதைவிட தீயதை ஏற்று நடக்கக்கூடியவர்கள் தான் மனிதர்களில் அதிகம்.

அல்லாஹ் கூறுகிறான் :

பொய் பேசுவதிலிருந்தும் விலகிக் கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன் 22:30)

மனிதனின் இம்மை மறுமை வாழ்க்கை மேம்பட பின்பற்ற வேண்டிய காரியங்களில் ஒன்று மெய்யை பேசி பொய்யை தவிர்ப்பது. ஆனால் பொய் பேசுவதினால் சில நேரங்களில் நாம் தப்பித்துவிடலாம், பலரின் கோபத்திலிருந்தும் தப்பித்துவிடலாம் என்று சர்வசாதரணமாக பொய் பேசுவதை பழக்கமாக சிலர் கொண்டுள்ளனர். இது நல்லதா? கெட்டதா? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதை காண்போம்.

ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம்

ஆயிரம் பொய் சொல்லியாவது திருமணத்தை நடத்தலாம் என்ற பழமொழியை கவனத்தில் கொண்டு மூட்டை கணக்கில் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்திவிடுகின்றனர். ஆனால் திருமணத்திற்கு பின்னர் அந்த பெண் படும் கஷ்டத்தை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. இவ்வாறு பொய் சொல்லி நடத்தப்பட்ட திருமணம் பல விவாகரத்தில் முடிந்துள்ளது.

ஒரு பொய்யை மறைக்க நூறு பொய்

ஒரு பொய் சொல்ல போய் அதை நியாயப்படுத்திட நூறு பொய் சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடுகிறது. இதனால் நூறு பொய் சொன்ன பாவத்திற்கு நாம் ஆளாக நேரிடும். மேலும் இவ்வாறு பொய் சொல்லி, பொய் சொல்லி பழகிவிடுபவர்கள் அல்லாஹ்விடம் மாபெரும் பொய்யர் என்று எழுதப்பட்டு இறுதியில் அவர் நரகத்திற்கு சொந்தக்காரராக மாறி விடுகிறார்.

உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் "வாய்மையாளர்' ஆகிவிடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் "பெரும் பொய்யர்' எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரலி),
நூல் :புகாரி (6094), முஸ்லிம் (5081)

தவளை தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கு ஏற்ப சிலர் தன் வாயால் பொய்களை பேசி, பேசி, பெரும் பொய்யராக மாறி நரகத்திற்கு செல்லும் பாவியாகிவிடுகிறார்கள்.

பொய் பேசுவதின் விளைவு கெட்ட செயல்களை செய்யத் தூண்டும். கெட்ட செயல்கள் நரகத்திற்கு கொண்டு போய் சேர்த்திடும் என்ற நபிகளாரின் எச்சரிக்கையை கவனிக்க மறந்துவிடக்கூடாது.

பொய் பேசுவது கூடாது என்று தெரிந்திருந்தும் பொய் பேசுகிறாயா என்று கேட்டால் "பொய் பேசாதோர் யார்?'' என்று நம்மை கேலி செய்வார்கள். பொய் பேசாத மனிதன் உண்டா? அவ்வாறு இருக்க முடியுமா? என்று அவர்கள் நினைக்கிறார்கள். இவ்வாறு நாம் பேசும் சின்ன விஷயங்கள் கூட மறுமையில் தண்டனை பெற்றுத் தரும் என்பதை அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.

வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.

(அல்குர்ஆன் 50:17, 18)

மனிதன் பேசும் எந்த வார்த்தைகளையும் அல்லாஹ் பதிவு செய்யாமல் விடுவதில்லை. அவன் பேசும் பொய்யான பேச்சுகளும் வானவர்கள் பதிவு செய்கின்றனர். அந்த வார்த்தைகளுக்கு அவன் மறுமையில் பதில் சொல்லியே தீர வேண்டும்.

அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.

(அல்குர்ஆன் 99:7, 8)

மிகச்சிறிய அளவு பொய் சொன்னால்கூட அது மறுமை நாளில் பார்க்க நேரிடும் எனும்போது நாம் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! இதன் பாதிப்பு மறுமை நாளில்தான் தெரியும், அவன் செய்த பாவங்களில் பதிவு செய்யப்பட்ட ஏட்டை அவன் காணும்போது இதன் கடுமையை தெரிந்து கொள்வான்.

பதிவேடு வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! "இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே!'' எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண்முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான்.

(அல்குர்ஆன் 18:49)

சிறிதாயின் பெரிய தண்டனை கிடைக்கலாம்

நாம் சிறியது என்று எண்ணும் சில வார்த்தைகள் மறுமையில் நரகத்தில் அடிபாதாளத்தில்கூட தள்ளிடலாம் என்பதை கவனத்தில் கொண்டு சிறியதுதான் என்று பேசிவிடக்கூடாது.

ஓர் அடியான் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒரு சொல்லை பேசிவிடுகிறான். அதன் காரணமாக அவன் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (6477)

குழந்தைகளிடம் பொய்

பொய் பேசக்கூடாது, திருடக்கூடாது, பாவம் செய்யக்கூடாது, தீய வார்த் தைகளை பேசக்கூடாது என்று விரும்பும் பெற்றோர்கள். தம் குழந்தைகளிடமே பொய் பேசும் பழக்கத்தை உருவாக்கிவிடுகிறார்கள்.

கடன்காரன் வீட்டுக்கு வந்து தந்தை கேட்டால் வீட்டில் இருந்து கொண்டே தம் குழந்தையிடம் தான் இல்லை என்று சொல்லச் சொல்லி குழந்தையின் உள்ளத்தில் பொய் பேசும் பழக்கத்திற்கு அடித்தளம் போடுகிறார்கள்.

இவ்வாறு பொய் சொல்ல கற்றுக் கொடுப்பதினால் நம் குழந்தைகள் வளரும் போது பொய் சொல்லியே உருவாகிறது. பள்ளிக்கூடம் போகாமல் ஊர் சுற்றிவிட்டு வந்து பள்ளிக்கூடம் போனதாக சொல்வது, ஸ்பெஷல் கிளாஸ் இன்று உள்ளது என்று கூறிவிட்டு சினிமா போய்விட்டு வருவது நாம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தப் பாடத்தின் பின் விளைவே! எனவே பெற்றோர்கள் தம் குழந்தைகளிடம் பொய் பேசும் பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும்.

"ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்றவிலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில்தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள்தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),  நூல் : புகாரி (1359)

மார்க்கத்தில் பொய்

இஸ்லாமிய மார்க்கம் திருக்குர்ஆன் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் அமைந்ததாகும். ஆனால் சிலர் தங்களின் மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு தங்களின் வளர்ச்சிக்காகவும், வேறு பல காரணங்களுக்காகவும் இஸ்லாத்தின் சட்டங்களில் விளையாடுகிறார்கள். இஸ்லாத்தில் இல்லாததை நபிகளார் கூறியதாக பொய்யான செய்திகளை மக்கள் மன்றங்களில் உலா விடுகின்றனர். இதனால் கிடைக்கும் தண்டனை அவர்கள் தெரிந்து கொள்வதில்லை.

மக்களுக்கு ஆர்வமூட்ட வேண்டும் என்பதற்காவோ அல்லது தீய செயல்களிலிருந்து எச்சரிக்கை செய்வதற்காவோ நபிகளார் கூறாததை கூறியதாக கூறினால் அவருக்கு கிடைக்கும் தண்டனை நரகமாகும்.

(நான் சொல்லாததை நான் சொன்னதாக) என் மீது பொய் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி),  நூல் :புகாரி (106), முஸ்லிம் (4)

பெருமைக்காக பொய்

ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணமுடித்திருக்கும்போது சக்களத்தியிடத்தில் தம் கணவர் எதையும் தராதபோது எனக்கு இதை வாங்கிக் கொடுத்தார் அதை வாங்கிக் கொடுத்தார் என்று கூறும் பொய்யும் தண்டனைக்குரியதாகும்.

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சக்களத்தி ஒருவர் இருக்கிறார். நான் (அவரிடம்) என் கணவர் எனக்கு வழங்காத ஒன்றை வழங்கியதாகக் காட்டிக்கொண்டால், அது குற்றமாகுமா?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கிடைக்கப்பெறாத ஒன்றைக் கிடைத்ததாகக் காட்டிக் கொள்கிறவர், போலியான இரு ஆடைகளை அணிந்துகொண்டவர் போலாவார்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி), நூல் :புகாரி (5219), முஸ்லிம் (4318)

பொய்யன் குணங்கள் நான்கு

பொய்யை மையமாக வைத்து நான்கு காரியங்கள் மனிதர்கள் வாழ்வில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை ஒருவன் பின்பற்றி செயல்பட்டால் அவர் நயவஞ்சகராக கருதப்படுவார். மேலும் இந்த நான்கில் ஒரு குணம் இருந்தாலும் அவரிடம் நயவஞ்கனின் ஒரு குணம் உள்ளதாகவே கருதப் படுவார். அவர் தொழுதவராக நோன்பு நோற்றவராக இருந்தாலும் சரியே!

நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் அப்பட்டமான நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். எவனிடம் அவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதை விட்டொழிக்கும்வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் குடியிருக்கும். (ஏதேனுமொன்றை) நம்பி ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வதும், பேசும்போது பொய் சொல்வதும், ஒப்பந்தம் செய்து கொண்டால் நம்பிக்கை மோசடி செய்வதும், வழக்காடினால் அவமதிப்பதும் தான் அவை (நான்கும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல் : புகாரி (34)

இன்னொரு அறிவிப்பில் … "நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும்... அவன் நோன்பு நோற்றாலும், தொழுதாலும், தன்னை ஒரு முஸ்லிம் என்று கூறிக்கொண்டாலும் சரியே'' என்று இடம் பெற்றுள்ளது.

எனவே பொய்யினால் கிடைக்கும் நரகத்தின் தண்டனை பயந்து மறுமையின் வெற்றியை கவனத்தில் கொண்டு பொய் பேசுவதை தவிர்ப்போம்.

உண்மையை மட்டும் உரைப்போம்!

Download PDF

தொழுகையின் சிறப்பு


இஸ்லாத்தை தழுவியபின் முதற்கடமை தொழுகையாகும். இது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். பருவமடைந்த, ஆண், பெண் அனைவரின் மீதும் தொழுகை கடமையாகும்.

அல்லாஹ் நமக்களித்துள்ள எண்ணிலடங்கா அருட்கொடை களுக்கு நன்றி செலுத்தும் வணக்கமே இத்தொழுகை. எனவே அதனை கடமை உணர்வுடனும் நன்மையை எதிர்பார்த்தும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் முறையாக நிறைவேற்றவேண்டும்.

இந்தக் கடமை மனிதன் மரணிக்கும் போதுதான் முடிவடைகிறது. ஊரில் இருக்கும் போதும் பயணத்தில் இருக்கும் போதும் ஆரோக்கியமாக இருக்கும் போதும் நோயாளியாக இருக்கும் போதும் கூட தொழுகையை அதன் நேரத்தில் நிறைவேற்றுவது அவசியமாகும்.

தொழுகையைப் பற்றி அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் கூறப்பட்டிருக்கிறது

மனிதப்படைப்பின் நோக்கம் அல்லாஹ்வை வணங்குவதைத் தவிர வேறில்லை!

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.

(அல்குர்ஆன் 51:56)

தொழுகை நேரங்குறிக்கப்பட்ட கடமை

நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது.

(அல்குர்ஆன் 4:103)

மறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்

எல்லாத் தொழுகைகளையும் பேணித் தொழ வேண்டும்

எல்லாத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகைகளையும் பேணித் தொழுது கொள்ளுங்கள். தொழுகையின் போது அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சத்தோடு நில்லுங்கள்.

(அல்குர்ஆன் 2 : 238)

தொழுகையைப் பேணுபவர்கள் மட்டுமே சுவர்க்கம் செல்லமுடியும்!

இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகைகளைப் பேணுவார்கள். இத்தகையோர்தாம் (சுவர்க்கத்தை) அனந்தரம் கொள்பவர்கள், இவர்கள் எத்தகையோரென்றால் ஃபிர்தௌஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரமாக கொள்வார்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள்.

(அல்குர்ஆன் 23:9-11)

ஜமாத்அத்தோடு தொழவேண்டிய அவசியம்

நீங்கள் தொழுகையையும் நிலைநாட்டுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். மேலும் என் முன்னிலையில் (தலை சாய்த்து) ருகூஉ செய்பவர்களுடன் நீஙகளும் சேர்ந்து கொள்ளுங்கள்.

(அல்குர்ஆன் 2 : 43)

அல்லாஹ்வுக்கு விருப்பமான செயல்

அல்லாஹ்விடத்தில் மிக விருப்பமான அமல் எது என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன், தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் – அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது; ஆதாரம் : புகாரி

தொழுகையின் பலன்கள்

தொழுகை பாவக்கறைகளைப் போக்குகின்றது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்’ என்று தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி). ஆதரம்: ஸஹீஹுல் பூகாரி, பாகம் 1, அத்தியாயம் 9, எண் 528

தொழுகை தீய காரியங்களை அகற்றிவிடும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஒருவர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விபரத்தைக் கூறினார். ‘பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நல்ல காரியங்கள் தீய காரியங்களை அகற்றிவிடும்’ (திருக்குர்ஆன் 11:114) என்ற வசனத்தை இறைவன் அருளினான். அப்போது அந்த மனிதர் ‘இறைத்தூதர் அவர்களே! இது எனக்கு மட்டுமா?’ என்று கேட்டதற்கு ‘என் சமுதாயம் முழுமைக்கும்’ என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி), ஸஹீஹுல் புகாரி : 526

தொழுகையை விட்டவனின் நிலை

நமக்கும் அவர்களுக்குமிடையே (காஃபிர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: புரைதா (ரழி)
நூல்கள்: திர்மிதி,அபுதாவுத்,அஹமத்,இப்னுமாஜா

(நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக. இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக) நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது. அல்குர்ஆன் 17:78

இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன் மீது பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜமாஅத்தும், இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என நபி(ஸல்) அவர்கள் நவின்றனர்.

அறிவிப்பாளர்:அபூஹுரைரா (ரழி)
நூல்கள்:புகாரி, முஅத்தா, அபூதாவூத், திர்மித், நஸயீ

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கியப் பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் 3 முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் நீர் உம்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும்,உமக்கு இன்னும் இரவு இருக்கிறது, நன்றாகத் தூங்கும் என்று உளறுகிறான். அந்த அடியார் தூக்கத்திலிருந்து எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு படுக்கையிலிருந்து உளு செய்தபின், இரண்டாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால் கெட்ட எண்ணங்களோடு சோம்பல் கொண்டவராக இருக்கிறார்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், நஸயீ

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஜமாஅத் தொழுகைக்கு) முந்தி வருவதில் உள்ளதை (சிறப்பு) மக்கள் அறிந்தால் அதற்காகப் போட்டி போடுவார்கள். ஸுபுஹ், இஷாத் தொழுகைகளின் சிறப்பை மக்கள் அறிந்தால் தவழ்ந்தேனும் அதற்காக வந்து சேர்வார்கள். முதல் வரிசையின் சிறப்பை அவர்கள் அறிந்தால் (போட்டி ஏற்படும் போது) சீட்டுக் குலுக்கி (யார் முதல் வரிசையில் நிற்பது என்பதை)த் தீர்மானிப்பார்கள்.

அறிவிப்பாளர்:அபூஹுரைரா (ரழி)

அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி


1430 ஆண்டுகளுக்கு முன்னால் அன்றைய அரபுலகத்தில் அறியாமை இருள் நிறைந்த காலகட்டத்தில் அந்த இருளை நீக்கி இறுதி இறைதூதராக நம் நபி(ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் அழகிய போதனைகள் நிறைந்த வாழ்க்கையானது அறியாமை இருளை அழகிய வாழ்க்கை முறையை மக்களுக்கு தந்ததோடு, இன்றும் அந்த வாழ்க்கை முறையை பின்பற்றி நடக்கும் அறிய வாய்ப்பை நபி(ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் நமக்கு தந்ததோடு அல்லாமல் நபி(ஸல்) அவர்களின் நற்குணங்களைத் தன் திருமறையிலும் நமக்கு அறிவித்து கொடுத்துள்ளான்.

நபித்துவம் கிடைப்பதற்கு முன்பும் சரி, பின்பும் சரி நபி(ஸல்) அவர்கள் அழகிய நற்குணங்கள் நிறைந்தவர்களாக இருந்ததோடு, நமக்கு இறைவன் கூறுவது போல் முன்மாதிரியாகவும் விளங்குகிறார்கள். அல்குர்ஆன் கூறுகிறது: அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.

சற்று சிந்தித்து பாருங்கள் நம்பிக்கை கொண்டவர்களே! அழகிய முன்மாதிரி என்று இறைவனே சொல்லக்கூடிய அளவிற்கு நம் நபி(ஸல்) அவர்கள் இருக்க நம்மில் சிலர் தனக்கு முன்மாதிரி என்று சில நடிகர், நடிகைகளையும் வேறு சிலரையும் கூறிக்கொண்டு நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.அல்லாஹ் அதிலிருந்து நம்மை காப்பானாக)

நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கின்றீர். அல்குர்ஆன்: 68:4

அல்லாஹ்வே நபி(ஸல்) அவர்களை திருமறையில் புகழ்ந்து கூறுகின்ற அளவிற்கு பல அழகிய நற்குணங்கள் நிறைந்த நம் நபி(ஸல்) அவர்களே உலகத்திற்கெல்லாம் சிறந்த முன்மாதிரி என்று உணர்ந்து அவர்களின் நற்குணங்களை தம் வாழ்வில் செயல்படுத்திட வேண்டும்.

பொறுமையும், மென்மையும்

தலைவராக இருக்கும் அனைவருக்கும் பொறுமையும், மென்மையும் அவசியம். அப்போதுதான் தன்னைவிட கீழிருக்கும் மக்களை நல்வழிப்படுத்தவும், அவர்களின் செயல்கள் சில சமயங்களில் கோபத்தை ஏற்படுத்தும்படி இருக்கும்போது அவர்களிடம் மென்மையாக நடந்துக் கொண்டு பொறுமைகாத்து அவர்களுக்கு நல்வழிக் காட்டிடவும் முடியும்.

அத்தகைய பெரும் நற்குணங்களை நபிகளார் பெற்றிருந்ததால்தான் மிகவும் மோசமான செயல்பாடுகளைக் கொண்ட அரபு மக்களிடம் அல்லாஹ்வின் உதவியைக்கொண்டு மென்மையோடும், பொறுமையோடும் அவர்கள் எவ்வித துன்பங்களை நபி(ஸல்) அவர்களுக்கு தந்திருந்தாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாது நடந்து கொண்டதால்தான் அம்மக்களை நபிகளார் அவர்களால் அரவணைத்துச் செல்ல முடிந்தது, என வல்ல ரஹ்மானே கூறுகிறான்.

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராக, கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடுவீராக!. அல்குர்ஆன்: 3:159

இத்தகைய முன்மாதிரி, நபி(ஸல்) அவர்களுக்கு இருக்கும்போது நாம் ஏன் பிறரைப் பின்பற்றி பாவத்தில் மூழ்கக்கூடிய காரியங்களை செய்ய வேண்டும். சற்று சிந்தித்துப் பாருங்கள், மிகவும் மோசமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு நபி(ஸல்) அவர்களையே கொல்ல முயன்றவர்களிடமே நபி(ஸல்) அவர்கள் பொறுமைக்காத்து மென்மையுடன் நடந்துள்ளார்கள் எனில் சிறுசிறு விஷயத்துக்குகூட நாம் ஏன் பொறுமை இழந்து உறவினர்களிடமும், நண்பர்களிடமும் பகைக் கொள்கிறோம். இதனால் நமக்கு என்ன பயன் கிடைத்துள்ளது அல்லது இனி கிடைக்கபோகிறது என்று ஆராய்ந்தால் ஒன்றுமேயில்லை, நாம் நன்மையை தவர விடுகிறோமே தவிர இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதால் நமக்கு பலன் ஏதுமில்லை என உணர்ந்து இனியேனும் அவர்களிடமும் ஒற்றுமையுடன் பழகுவோம். அல்லாஹ் திருமறையில் கூறும் போது.

நன்மையை ஏவி தீமையை தடுப்பீராக! பகைமை உடையவர்க்கும் நன்மையைச்செய் பகைவர்களும் நன்பர்களாகிவிடுவர். எனவே இதை நினைவில் கொண்டு நபி(ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைப் போல் நமக்கு ஏற்படவில்லை அல்ஹம்துலில்லாஹ். அதனால் பல ஆண்டுகள் பல தலைமுறைகளென உறவை, நட்பை முறித்து வாழ்ந்துக்கொண்டிருக்கும் நம் சகோதரர்கள் இனியேனும் அதனை மறந்து நபி(ஸல்) அவர்களை முன்மாதிரியென ஏற்று பகைமை மறந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.

குர்ஆனே அவர்கள் குணம்

ஒரு முறை ஆயிஷா(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் குணம் எப்படியிருந்தது எனக்கேட்டபோது நபி(ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாக இருந்தது எனக்கூறினார்கள். முஸ்லிம்:1357

பார்த்தீர்களா! நபி(ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் எந்த குணங்கள் இருக்க வேண்டுமென கட்டளையிட்டதோ அதுவாகவே வாழ்ந்து காட்டினார்கள். ஆனால் நாமோ குர்ஆன் என்ற மிகப்பெரும் அற்புதத்தை நம் கைகளில் பெற்றிருந்தும் அதனை சரியாகப் பயன்படுத்தாது ரமலான் மாதத்திலும், வெள்ளிக் கிழமைகளிலும், இறந்த வீடுகளிலும் இன்னும் பிற குறிப்பிட்ட நாட்களிலும் தான் அதனை ஓதவேண்டும் என்று சில மூடநம்பிக்கைகளை நாமே ஏற்படுத்திக்கொண்டு பெரும்பெரும் நன்மைகளை இழந்து வருகிறோம் ஆனால் விஞ்ஞானிகளும், பிற உலக அறிஞர்களும் இதனைக் கண்டு வியந்து பிறருக்கும் அதை வெளிப்படுத்தி பலரும் இதை ஆராயத்தக்க வகையிலும் செயல்படுத்தத்தக்க வகையிலும் வியந்து போற்றுகின்றனர். மேலும் இஸ்லாத்தை ஏற்கவும் இந்த அருள்மறையாம் திருமறை அமைந்துள்ளது. (அல்லஹம்துலில்லாஹ்)

இப்படியிருக்க நாம் ஏன் இதை சிந்திக்கவில்லை. குர்ஆன் தன்னை ஓதியருக்கு மறுமையில் பரிந்துரை செய்யும் வேரெவரும் நமக்கு உதவிட முடியாது அல்லாஹ் நாடினால் தவிர.

எனவே நாம் நபி(ஸல்) அவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்வது என்பது பெயரளவிலின்றி செயலிலும் இருக்க குர்ஆனை நாம் சிந்தித்து ஓதுவதோடு நில்லாமல் நபி(ஸல்) அவர்களை போன்று அதிலுள்ளவற்றை நம் வாழ்விலும் செயல்படுத்த வேண்டும்.

ஒரு முறை பள்ளிவாசலில் பொதுச் சொத்தாக குவிந்துக் கிடந்த பேரீத்தம் பழங்களில் ஒன்றை நபி அவர்களின் பேரர் ஹஸன் எடுத்து தன் வாயில் வைத்துவிட்டார்.​ உடனே தன் பேரரை நோக்கி,​​ “”சீ!​ சீ!​ அதைத் துப்பிவிடு” என்று கூறிவிட்டு,​​ “”தர்மப் பொருளை நாம் உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?” என்று கேட்டு பொதுச் சொத்தை தம் குடும்பத்தினர் சாப்பிடுவதைத் தடை செய்தார் அண்ணலார் அவர்கள்.

ஆகவே இறைத்தூதரின் வழி நடந்து இம்மை,​​ மறுமை வெற்றிகளைப் பெறுவோமாக!

அகழ்ப் போர்


அல்அஹ்சாப் என்று அறியப்படும் யுத்தம் ஹிஜிரி 5ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தம் ஆகும்.

பனூ நளீர் குலத்து யூதர்களுடன் நடைபெற்ற போரில் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது. இதனால் பனூ குறைழா என்ற யூதர்கள் மிகவும் கவலையடைந்தனர். முஸ்லிம்களை அழிப்பதற்காக பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டினர்.

முஸ்லிம்களுக்கு எதிராக குரைஷிகள், மற்றும் பல்வேறு குலத்தினரை ஒன்று திரட்டுவதில் யூதர்கள் வெற்றி கண்டனர்.

முஸ்லிம்களுக்கு எதிராகப் பல்வேறு குலத்தினரும் பெரும்படை திரட்டி வந்ததினால் இப்போருக்கு ”அல்- அஹ்சாப்- கூட்டுப் படை என்ற பெயர் வந்தது.

இப்பெரும் படை முஸ்லிம்களின் மீது போர்தொடுக்க மதீனாவை நோக்கி வந்தது.

பெரும்படை மதீனாவைத் தாக்க வருகின்ற செய்திகள் கிடைத்தவுடன் நபி (ஸல்) அவர்கள் உடனடியாக ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழுவைக் கூட்டினார்கள். மதீனாவையும் முஸ்லிம்களையும் எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசனை நடத்தினார்கள். பல கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின் மதீனாவைச் சுற்றிலும் அகழ் தோன்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் இதற்கு ”அகழ் யுத்தம்” என்றும் பெயர் கூறப்பட்டுள்ளது. இந்தக் கருத்தை முன்வைத்தவர்கள் ஸல்மான் ஃபார்ஸி (ரழி) என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த முடிவு எடுக்கப்பட்டவுடன் முஸ்லிம்கள் மிகுந்த உற்சாகத்துடன் அகழ் தோண்டுவதில் ஈடுபட்டார்கள். நபியவர்கள் முஸ்லிம்களுக்கு ஆர்வமூட்டி வந்தார்கள்.

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அகழ்ப் போர் சமயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் இருந்தோம். நபித்தோழர்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தனர். நாங்கள் எங்கள் தோள் மீது மண் சுமந்து கொண்டிருந்தோம். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

இறைவா! மறுமை வாழ்வைத்தவிர வேறு (நிரந்தர) வாழ்வு கிடையாது. ஆகவே, (அதற்காக உழைக்கும்) முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் மன்னிப்பருள்வாயாக! என்று (பாடியபடி) கூறினார்கள் நூல் : புகாரி (4098)

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அகழ்ப் போரின் போது) அகழ் (வெட்டும் பணி நடக்கும் இடத்தை) நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் (கடும்) குளிரான காலை நேரத்தில் (அகழ்) தோண்டிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பணியை அவர்களுக்காகச் செய்திட அவர்களிடம் அடிமை(ஊழியர்)கள் இல்லை. அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்ட போது நபி (ஸல்) அவர்கள்,

இறைவா! (நிலையான) வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கை தான். ஆகவே, அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளி என்று (பாடிய வண்ணம்) கூறினார்கள். இதைக் கேட்ட நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பதிலளித்தவண்ணம்,

நாங்கள் வாழும் காலமெல்லாம் இறைவழியில் அறப்போர் புரிந்து கொண்டிருப்போம்' என்று முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதி மொழி தந்துள்ளோம் என்று (பாடிய படி) கூறினார்கள்.

நூல் : புகாரி (2834)

பராஉ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அகழ்ப் போரின் போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் மண்ணைச் சுமந்து கொண்டு செல்வதை நான் பார்த்தேன். மண் அவர்களுடைய வயிற்றின் வெண்மையை மறைத்(துப் படிந்)திருந்தது. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய வண்ணம்) கூறிக் கொண்டிருந்தார்கள்:

(இறைவா!) நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்க மாட்டோம்; தருமம் செய்திருக்கவும் மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட் டோம். நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும்போது எங்கள் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இவர்கள் (குறைஷிகள்) எங்கள் மீது அக்கிரமம் புரிந்து விட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தர மாட்டோம்.

நூல் : புகாரி 2837

கடுமையான பசி பட்டினிக்கு ஆளாகி இருந்தும் முஸ்லிம்கள் சுறுசுறுப்பாக அகழ் தோண்டுவதில் ஈடுபட்டிருந்தனர்.

இதைப் பற்றி அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: (அகழ் தோண்டிக் கொண்டிருக்கும்) அவர்களுக்கு எனது ஒரு கையளவு வாற்கோதுமை கொண்டு வரப்பட்டு, கெட்டுப் போன கொழுப்புடன் சேர்த்துச் சமைக்கப்பட்டு அந்த மக்களுக்கு முன் வைக்கப்படும். அப்போது அவர்கள் எல்லாரும் பசியுடன் இருப்பார்கள். அந்தக் கெட்டுப்போன கொழுப்பு நாற்றமடித்தபடி தொண்டையிலேயே சிக்கிக் கொள்ளும்.

நூல் : புகாரி (4100)

அபூ தல்ஹா (ரழி) அறிவிக்கிறார்கள் : எங்களின் பசியைப் பற்றி நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டோம். எங்களது வயிற்றில் ஒரு கல்லைக் கட்டி இருந்ததைக் காட்டினோம். நபி (ஸல்) அவர்களோ தங்களது வயிற்றில் இரண்டு கற்கள் கட்டி இருந்ததைக் காட்டினார்கள். நூல் : திர்மிதி (2293)

மேலும் பல அற்புதங்களும் அகழ் யுத்தத்தின் போது நடந்தது.

ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள் ; நாங்கள் அகழ்ப் போரின் போது அகழ் தோண்டிக் கொண்டிருந்தோம். அப்போது கெட்டியான பாறாங்கல்லொன்று வெளிப்பட்டது. (அதை எவ்வளவோ முயன்றும் எங்களால் உடைக்க முடியவில்லை. உடனே இதுபற்றித் தெரிவிக்க) நபி (ஸல்) அவர்களிடம் சென்று, இதோ ஒரு பாறாங்கல் அகழில் காணப்படுகிறது என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் இறங்கிப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டு எழுந்தார்கள். அப்போது அவர்களது வயிற்றில் ஒரு கல் கட்டப்பட்டிருந்தது. (ஏனெனில்,) நாங்கள் மூன்று நாட்கள் எதையும் உண்ணாமலிருந்தோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் குந்தா - எடுத்து பாறை மீது அடித்தார்கள். அது குறுமணலாக மாறியது.

நூல் : புகாரி (4101)

மற்றொரு அற்புதமும் நடந்தது

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :(போருக்காக) அகழ் தோண்டப்பட்டுக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்களின் வயிறு (பசியினால்) மிகவும் ஒட்டியிருப்பதைக் கண்டேன். உடனே நான் திரும்பி என் மனைவியிடம் வந்து, நபி (ஸல்) அவர்களின் வயிறு மிகவும் ஒட்டிப் போயிருப்பதைக் கண்டேன். உன்னிடம் ஏதேனும் (உண்ண) இருக்கிறதா? என்று கேட்டேன். உடனே என்னிடம் என் மனைவி ஒரு பையைக் கொண்டு வந்தாள். அதில் ஒரு ஸாவு' அளவு வாற்கோதுமையிருந்தது. வீட்டில் வளரும் ஆட்டுக் குட்டி ஒன்றும் எங்களிடம் இருந்தது. அதை நான் அறுத்தேன். என் மனைவி அந்தக் கோதுமையை அரைத்தாள். நான் (அறுத்து) முடிக்கும் போது அவளும் (அரைத்து) முடித்து விட்டாள். மேலும் அதனைத் துண்டுகளாக்கி அதற்கான சட்டியிலிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்தேன். (நான் புறப்படும் போது என் மனைவி,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் முன்னால் என்னை நீங்கள் கேவலப் படுத்திவிட வேண்டாம். (உணவு கொஞ்சம் தானிருக்கிறது' என்று கூறிவிடுங்கள்) என்று சொன்னாள். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இரகசியமாக, அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குச் சொந்தமான ஆட்டுக் குட்டியொன்றை அறுத்து, எங்களிடம் இருந்த ஒரு ஸாவு' அளவு வாற்கோதுமையை அரைத்தும் வைத்துள்ளோம். எனவே, தாங்களும் தங்களுடன் ஒரு சிலரும் (என் இல்லத்திற்கு) வாருங்கள் என்று அழைத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் உரத்த குரலில், அகழ்வாசிகளே! ஜாபிர் உங்களுக்காக உணவு தயாரித்துள்ளார். எனவே, விரைந்து வாருங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜாபிர் -ரலி- அவர்களிடம்), நான் வரும் வரை நீங்கள் சட்டியை (அடுப்பிலிருந்து) இறக்க வேண்டாம். உங்கள் குழைத்த மாவில் ரொட்டி சுடவும் வேண்டாம் என்று கூறினார்கள். நான் திரும்பி வந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களை அழைத்துக் கொண்டு) அவர்களுக்கு முன்னால் வந்து கொண்டிருந்தார்கள். நான் மனைவியிடம் வந்து சேர்ந்தேன். (நபி -ஸல்- அவர்கள் தோழர்கள் பலருடன் வருவதைப் பார்த்து என் மனைவி கோபமுற்று) என்னைக் கடிந்து கொண்டாள். உடனே நான், நீ நபி (ஸல்) அவர்களிடம் சொல்லச் சொன்ன விஷயத்தை நான் (அவர்களிடம்) சொல்லிவிட்டேன் என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் என் மனைவி குழைத்த மாவைக் கொடுத்தாள். நபி (ஸல்) அவர்கள் அதில் (தமது திரு வாயினால்) ஊதினார்கள். மேலும், மாவில் பரக்கத் - பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு, எங்கள் இறைச்சிச் சட்டியை நோக்கி வந்தார்கள். பிறகு அதில் வாயால் ஊதி பரக்கத் - பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், (என் மனைவியை நோக்கி), ரொட்டி சுடுபவள் ஒருத்தியை (உதவிக்கு) அழை. அவள் என்னோடு ரொட்டி சுடட்டும். உங்களுடைய பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக் கொடுத்துக் கொண்டிரு. பாத்திரத்தை இறக்கி வைத்து விடாதே என்று கூறினார்கள் அங்கு (வந்தவர்கள்) ஆயிரம் பேர் இருந்தனர்.

ஜாபிர் (பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு, அந்த உணவை விட்டுத் திரும்பிச் சென்றனர். அப்போது எங்கள் சட்டி நிறைந்து சப்த மெழுப்பியவாறு கொதித்துக் கொண்டிருந்தது. அது (கொஞ்சமும் குறையாமல்) முன்பிருந்தது போலவே இருந்தது. மேலும், எங்கள் குழைத்த மாவும் (கொஞ்சமும் குறைந்து விடாமல்) முன்பு போலவே ரொட்டியாகச் சுடப்பட்டுக் கொண்டிருந்தது புகாரி (4102)

எதிரிப் படைகள் மதீனாவை அடைவதற்கு முன்பாகவே அகழ் தோண்டும் பணியை முஸ்லிம்கள் முடித்து விட்டனர்.

முஸ்லிம்கள் இந்தக் கூட்டுப் படையைக் கண்ட போது அவர்களின் இறைநம்பிக்கை அதிகரித்து. அவர்கள் சிறிதும் அஞ்சவில்லை. இதைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

நம்பிக்கை கொண்டோர் கூட்டுப் படையினரைக் கண்ட போது "இதுவே அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும், அவனது தூதரும் உண்மையே சொன்னார்கள்'' என்று கூறினர். நம்பிக்கையையும், கட்டுப்படுதலையும் தவிர வேறெதனையும் அவர்களுக்கு (இது) அதிகமாக்கவில்லை

(அல்குர்ஆன் 33 : 22)

ஆனால் முனாஃபிக்கீன்கள் இந்தப் படையைப் பார்த்து அஞ்சி நடுங்கினர். இதைப் பற்றியும் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏமாற்றும் வாக்குறுதியையே அளித்தனர்'' என்று நயவஞ்சகர்களும், உள்ளங்களில் நோய் உள்ளோரும் கூறிய போதும் (சோதிக்கப்பட்டனர்).

(அல்குர்ஆன் 33:12)

எதிரிகள் முஸ்லிம்களைத் தாக்கவும், மதீனாவில் நுழையவும் நாடிய போது அதற்குத் தடையாக அகழ் இருப்பதைப் பார்த்தனர். வேறு வழியின்றி முஸ்லிம்களை முற்றுகையிடுவோம் என்ற முடிவில் அனைவரும் அகழைச் சூழ்ந்து கொண்டனர்.

இணைவைப்பவர்கள் மிகக் கோபத்துடன் அகழைச் சுற்றி வந்தார்கள். எங்காவது ஒரு சிறு வழி கிடைத்தால் அதன் மூலம் சென்று விடலாம் என்று முயன்றனர். ஆனால், முஸ்லிம்கள் அகழின் பக்கம் எதிரிகளை நெருங்கவிடாமல் அம்பால் தாக்கினர்.

எதிரிகள் அங்கு முற்றுகையிட்டிருந்த சில நாட்களில் பலமுறை அகழியில் இறங்குவதற்கும், அதன் மீது பாதை அமைப்பதற்கும் மிகத் தீவிரமாக முயன்றனர். ஆனால், முஸ்லிம்களின் அம்பு மழைக்கு எதிராக அவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. இதுபோன்ற தற்காப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால் நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சில நேரத் தொழுகைகள் தவறின.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:அகழ்ப் போரின் போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் குறைஷிக் குல இறைமறுப்பாளர்களை ஏசிக் கொண்டே வந்து, சூரியன் மறையத் தொடங்கும் வரை என்னால் அஸ்ர் தொழுகையை தொழ முடியாமல் போய்விட்டது என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் (இதுவரை) அஸ்ர் தொழவில்லை என்று கூறினார்கள். பின்னர் புத்ஹான் எனும் பள்ளத்தாக்கை நோக்கி நாங்கள் சென்றோம். அங்கே தொழுகைக்காக நபி (ஸல்) அவர்கள் உளூ செய்தார்கள். நாங்களும் தொழுகைக்காக உளூச் செய்தோம். சூரியன் மறைந்த பிறகு அஸ்ர் தொழுதார்கள். அதன் பின்னர் மஃக்ரிப் தொழுதார்கள். (அவர்களுக்குப் பின் நின்று நாங்களும் தொழுதோம்).

நூல் : புகாரி 596)

தொழுகைகள் தவறியதற்குக் காரணமாயிருந்த இணைவைப்பவர்களுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். இது குறித்து அலீ (ரலி) கூறுகிறார்கள்:

அஹ்ஸாப் (அரபுக் குலங்கள் அனைத்தும் ஒன்றுதிரண்டு தாக்க வந்த அகழ்ப்) போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் (எதிரிகளுடைய) வீடுகளையும் புதை குழிகளையும் நெருப்பால் நிரப்புவனாக! அவர்கள் சூரியன் மறையும் நேரம் வரை நடுத் தொழுகை(யான அஸர் தொழுகை) யிலிருந்து நமது கவனத்தைத் திருப்பி விட்டார்கள் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி (2931)

இதிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவெனில்: எதிரிகள் அகழைக் கடக்க முயற்சி செய்ததும், முஸ்லிம்கள் அதை எதிர்த்ததும் பல நாட்களாக நீடித்தது. ஆனால் இரு படைகளுக்கும் இடையில் அகழ் தடையாக இருந்ததால் நேரடியான சண்டையோ, பலத்த சேதமோ யாருக்கும் ஏற்படவில்லை. இரு தரப்பிலிருந்தும் அம்பெறிந்தே தாக்குதல் நடந்தது.

இவ்வாறு இருதரப்பினரும் அம்பெய்து கொண்டதில் விரல்விட்டு எண்ணும் அளவுக்கு இரு தரப்பிலும் ஒரு சிலர் கொல்லப்பட்டனர்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அகழ்ப் போரின் போது சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் தாக்கப்பட்டார்கள். அன்னாரது கை நரம்பில் குறைஷிகளில் ஒருவனான ஹிப்பான் பின் அரிஃகா என்றழைக்கப்பட்டவன் அம்பெய்து (அவர்களைக் காயப்படுத்தி) விட்டான். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்கு வசதியாக (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலிலேயே (அவருக்குக்) கூடாரமொன்றை அமைத்தார்கள்.

(புகாரி 4122)

இந்நிலையில் மதீனாவில் முஸ்லிம்களுக்கு மிக அருகில் இருந்த பனூ குறைழா குலத்து யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மறைமுகமாக உதவி செய்து கொண்டு இருந்தாலும் வெளிப்படையாக நபியவர்களுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக முறித்தனர். முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த முற்பட்டனர்.

முஸ்லிம்களுக்கு இது மிக இக்கட்டான நிலையாக இருந்தது. குரைளா யூதர்கள் பின்புறத்திலிருந்து தாக்குதல் நடத்தினால் அதைத் தடுக்கவும் முடியாது. எதிர்த் திசையிலோ மிகப் பெரிய படை. அதை விட்டு எங்கும் செல்லவும் முடியாது.

முஸ்லிம்களுடன் இருந்த சில நயவஞ்சகர்களின் வஞ்சகத்தனம் அப்போது வெளிப்பட்டது. அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏமாற்றும் வாக்குறுதியையே அளித்தனர்'' என்றும் ‘‘எங்களின் வீடு பாதுகாப்பின்றி இருக்கின்றது. எனவே, நாங்கள் போரிலிருந்து திரும்பி விடுகிறோம். எங்களது வீடுகள் மதீனாவிற்கு வெளியில் இருக்கின்றன'' என்று முனாஃபிக்கீன்கள் கூறினர். இவர்களைப் பற்றியே பின்வரும் குர்ஆன் வசனம் இறக்கப்பட்டது.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏமாற்றும் வாக்குறுதியையே அளித்தனர்'' என்று நயவஞ்சகர்களும், உள்ளங்களில் நோய் உள்ளோரும் கூறிய போதும் (சோதிக்கப்பட்டனர்) . யஸ்ரிப் (மதீனா)வாசிகளே! உங்களால் (எதிர்த்து) நிற்க முடியாது. எனவே திரும்பிச் செல்லுங்கள்!'' என்று அவர்களில் ஒரு சாரார் கூறிய போதும் (சோதிக்கப்பட்டனர்). பாதுகாப்பானவையாக இருந்தும் "எங்கள் வீடுகள் பாதுகாப்பற்றவையாக உள்ளன'' எனக் கூறி நபியிடம் அவர்களில் ஒரு பிரிவினர் அனுமதி கோரினார்கள். அவர்கள் வெருண்டோடுவதைத் தவிர வேறெதனையும் விரும்பவில்லை.

(அல்குர்ஆன் 33:12, 13)

இந்த இக்கட்டான நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடினார்கள்.

அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

(அரபுக் குலங்கள் அனைத்தும் திரண்டு வந்த அகழ்ப் போரான) அஹ்ஸாப்' போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இறைவா! வேதம் அருளியவனே! விரைவாகக் கணக்கு வாங்குபவனே! இந்தக் குலங்களைத் தோற்கடிப்பாயாக! அவர்களை நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள் நூல் : புகாரி (7489)

அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் வேண்டுதலை ஏற்று எதிரிப்படைகளை நிலைகுலையச் செய்தான். அவர்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்பட்டது. அது மிகவும் கடுமையான குளிர்காலமாகவும் இருந்தது. இதனால் எதிரிப்படையினர் மிகவும் பலவீனமடைந்தனர். எனவே அவர்கள் மக்காவை நோக்கித் திரும்ப ஆயத்தமாகினர்.

அல்லாஹ் தனது இஸ்லாமியப் படைக்குக் கண்ணியத்தையும் வெற்றியையும் வழங்கினான். தனது அடியாருக்கு உதவி செய்தான். எதிரி ராணுவங்களை அவனே தோற்கடித்தான். நபியவர்கள் தங்களது படையுடன் மதீனா திரும்பினார்கள்.

இந்த அகழ்ப்போரில் பெரும் நஷ்டங்கள் ஏதும் ஏற்படவில்லை. இதில் கடுமையான மோதலும், சேதங்களும் ஏற்படவில்லை. இருப்பினும் இது இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான போராக விளங்குகிறது.

எதிரிப் படைகள் வெளியேறிய பின் நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :(அகழ்ப் போரில் தோல்வியுற்று எதிர்) அணியினர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பிய போது இப்போது (போர் புரிவதானால்) நாம் தாம் அவர்களுடன் போர் புரியவேண்டும்; (இனி) அவர்கள் நம்முடன் போர் புரியமுடியாது; நாம் தாம் அவர்களை நோக்கிச் செல்லவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.

புகாரி (4110)

பிறர்நலம் நாடும் இஸ்லாம்


இஸ்லாம் என்பது இறை மார்க்கம். மனிதன் அமைதியாக வாழ வேண்டும்; நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்தும் அறிந்த ஏக இறைவனால் வழிமுறைகள் வகுக்கப்பட்ட மார்க்கம். இத்தகைய இஸ்லாமிய மார்க்கம், மனித சமுதாயம் எப்போதும் சிறப்பாக இயங்குவதற்குத் தேவையான அனைத்து விதமான அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்குகின்றது.

சமுதாய நலனைச் சீர்குலைக்கும் அனைத்து விதமான இடையூறுகளையும், பிரச்சனைகளையும் அடையாளம் காட்டுவதோடு, அவற்றை முழுமையாகக் களைவதற்கான ஆலோசனைகளை அளிக்கின்றது. ஒவ்வொருவரும் பிறர் நலத்தை நாட வேண்டும், பேண வேண்டும் என்பது அவற்றுள் முக்கியமான முதன்மையான ஒன்றாகும். இது குறித்து இஸ்லாத்தில் கூறப்பட்டிருக்கும் செய்திகளைப் பார்ப்போம்.

பிறர்நலம் நாடுவதே இஸ்லாம்

உலகில் பல்வேறு கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள் இருக்கின்றன. அவற்றை உருவாக்கியவர்கள், பின்பற்றுபவர்கள் என்று பலரும் அவை ஒவ்வொன்றுக்கும் பல்வேறு வகையில் விளக்கங்களை, வரையறைகளைக் குறிப்பிடுகிறார்கள்.

இஸ்லாம் என்பதற்கும் அதன் அடிப்படையை அனைவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் அல்லாஹ்வும், அவனது தூதரும் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அவற்றுள் முக்கியமான ஒன்று, பிறர் நலம் நாடுதல் என்பதாகும். இதன் மூலம் இஸ்லாம் எந்தளவிற்கு அடுத்தவர்களின் நலனில் அக்கறை கொள்கிறது; ஆர்வம் காட்டுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

"மார்க்கம் (தீன்) என்பதே "நலம் நாடுவது' தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: தமீமுத்தாரீ (ரலி)
நூல்: முஸ்லிம் (95)

பொதுநலனுக்குப் பங்கம் விளைவிக்கும் கருத்துக்களை இஸ்லாம் கூறுவதாக எவராலும் எந்தவொரு சட்டத்தையும் சுட்டிக் காட்ட இயலாது. இஸ்லாம் கூறும் பொதுநலம் சம்பந்தமான கருத்துக்களைக் குறித்து சுட்டிக் காட்டாமல் இஸ்லாத்தை ஒருவருக்கு முழுமையாக எடுத்துச் சொல்ல இயலாது எனும் அளவிற்கு இஸ்லாம் அது பற்றி அதிகம் அதிகமாகப் பேசுகிறது என்பதே உண்மை.

(ரோம மன்னர்) ஹிராக்ளியஸ் என்னிடம் கூறியதாவது:

"அவர் (முஹம்மது - ஸல்) எதையெல்லாம் கட்டளையிடுகின்றார்?' என்று உம்மிடம் நான் கேட்டேன். அதற்கு நீர், "அவர் தொழுகை தொழும்படியும், வாய்மையையும் நல்லொழுக்கத்தையும் கைக்கொள்ளும்படியும், ஒப்பந்தத்தையும், வாக்குறுதியையும் நிறைவேற்றும்படியும், நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைச் சரிவரப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படியும் கட்டளையிடுகிறார்' என்று சொன்னீர். இதுதான் ஓர் இறைத்தூதரின் பண்பாகும்.

அறிவிப்பவர்: அபூ சுஃப்யான் (ரலி)
நூல்: புகாரி (2681)

முஸ்லிம்களுக்கும் இறைமறுப்பளர்களுக்கும் இடையே ஹுதைபிய்யா உடன்படிக்கையின் ஒப்பந்தங்கள் நடைமுறையில் இருந்த காலகட்டத்தின் போது, அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. அப்போது அவரிடம் ஹிராக்ளியஸ் மன்னர், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எதைப் போதிக்கிறார் என்று இஸ்லாத்தைப் பற்றிக் கேட்கிறார். அப்போது அதற்கு அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் அளிக்கும் பதிலில் இருந்து, இஸ்லாம் என்பது பிறர் நலத்தைப் பற்றி போதிக்கும் மார்க்கம் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். இதுதான் இறைத்தூதரின் பண்பாகும் என ஹிராக்ளியஸ் மன்னரே ஒப்புக் கொள்வது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

இறை நம்பிக்கையின் அடையாளம்
இறை நம்பிக்கையாளராக இருக்கும் ஒருவர், இஸ்லாம் கூறும் அனைத்து செய்திகளையும் நம்பியவராக இருந்தால் மட்டும் போதாது. அந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் செயல்பாடுகளும் அவரிடம் அவசியம் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர், உண்மையாக நம்பிக்கை கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அந்த வகையில் ஈமான் கொண்டவர்களிடம் இருக்க வேண்டிய பண்புகளுள் முக்கிய ஒன்றாக, பிறருக்கு நலம் நாடும் பண்பு இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. பிறர் நலத்தைக் கெடுக்கும் காரியம் எதுவாயினும் அதனைச் செய்வது இறைநம்பிக்கைக்கு எதிரானது என்பதையும் பின்வரும் ஆதாரங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

முஃமின்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்படிக் கூறும்போது) நபி (ஸல்) அவர்கள் தமது கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
நூல்: புகாரி (2446)

ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்துகொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: புகாரி (6011)

நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும்: அவன் பேசும் போது பொய் பேசுவான். அவனிடம் ஒரு பொருள் (அல்லது பணி) நம்பி ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வான். அவன் வாக்களித்தால் மாறு செய்வான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (2682)

சமுதாயத்தில் ஒரு சிலர் தீமையான காரியங்களைச் செய்கிறார்கள். அந்த மோசமான செயல்கள் காரணமாக மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் ஒருவர், எந்தளவிற்கு முனைப்போடு அந்தத் தீய காரியங்களைக் களைவதற்கு களத்தில் இறங்குகிறோரோ அதைப் பொறுத்து அவரது நம்பிக்கையின் வீரியம் வெளிப்படுகிறது. இவ்வாறு, மக்களுக்குத் துன்பம் தரும் காரியங்களைத் தடுத்து, அதன் தாக்கத்தில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவதும் இறை நம்பிக்கையின் அடையாளம் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது.

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் (78)

இறையச்சத்தின் வெளிப்பாடு

நமக்குச் கொடுத்திருக்கும் அனைத்து அருட்கொடைகளைப் பற்றியும் இறைவன் மறுமையில் நம்மை விசாரிப்பான். அப்போது அதற்குரிய சரியான பதில் நம்மிடம் இருந்தால் மட்டுமே நாம் முழுமையாக வெற்றி பெற்றவர்களாக இருக்க முடியும். ஆகவே, அல்லாஹ்விற்குப் பயந்து அவன் அருளியிருக்கும் அருட்கொடைகளைக் கொண்டு அடுத்தவர்களுக்கு நலம் நாடுபவர்களாக, நன்மை செய்பவர்களாக நாம் இருக்க வேண்டும். இவ்வாறு பிறருக்கு நன்மை செய்யும் வகையில் நற்காரியங்களைச் செய்வது; தீய காரியங்களை விட்டும் விலகியிருப்பது என்பது இறைச்சத்தின் வெளிப்பாடு என்பதைப் பின்வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதிநாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போர், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.

(திருக்குர் ஆன் 2:177)

உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.

(திருக்குர்ஆன் 3:133,134)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ, அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் (5010)

பிறர் நலம் நாடிய நபிகளார்

பிறருக்கு நலம் நாடுவதுதான் இஸ்லாம் என்று போதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அதற்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள். அண்ணலாரின் சிந்தனைகள், செயல்பாடுகள் அனைத்தும் பிறருக்கு நன்மை நாடும் வகையில் அமைந்து இருந்தன. நீதி, நேர்மை, தர்மம், பெருந்தன்மை, மன்னித்தல், உதவி செய்தல், பிறருக்கு துஆ செய்தல் போன்ற மக்களுக்கு நலம் தரும் எல்லா விதமான நற்பண்புகளின் உறைவிடமாகத் திகழ்ந்தார்கள். இந்த மாபெரும் மகத்தான உண்மையை நபிகளாரின் வாழ்க்கையைப் படிப்பவர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்வார்கள். இதற்குரிய சில சான்றுகளை மட்டும் இப்போது பார்ப்போம்.

(நபியவர்கள் ஹிரா குகையில் இருந்த போது அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்தித்தார்கள். 96 அத்தியாயத்தின் 1-5 வரையிலான வசனங்கள் அருளப்பட்டன) பிறகு (அச்சத்தால்) அந்த வசனங்களுடன் இதயம் படபடக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தம் துணைவியார்) கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்களிடம் வந்து "எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்'' என்றார்கள். அவ்வாறே வீட்டாரும் அவர்களுக்குப் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. பின்னர் கதீஜாவிடம் நடந்தவற்றைத் தெரிவித்துவிட்டு "எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன்'' என்று சொன்னார்கள்.

அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், "அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை)'' என்று (ஆறுதல்) சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (3)

உஹுத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்து, அதிலிருந்து ஒரேயொரு பொற்காசு என்னிடம் (எஞ்சி) இருந்தாலும் (அதை மக்கள் நலனுக்காகச் செலவிடாமல்) மூன்று இரவுகள்கூட கழிந்துசெல்வது எனக்கு மகிழ்ச்சியளிக்காது; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கும் பொற்காசைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (1810)

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) அஸ்ர் தொழுகை தொழுதேன். அவர்கள் சலாம் கொடுத்ததும் மக்களைத் தாண்டிக் கொண்டு தம் துணைவியரில் ஒருவரது இல்லம் நோக்கி விரைந்து சென்றார்கள். அவர்களது விரைவைக் கண்டு மக்கள் திடுக்குற்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள் (திரும்பி) வந்தபோது தாம் விரைவாகச் சென்றது பற்றி மக்கள் வியப்புற்று இருப்பதைக் கண்டார்கள். எனவே, "எங்களிடம் இருந்த (ஸகாத் நிதியான) தங்கக்கட்டி ஒன்று (தொழுது கொண்டிருக்கும்போது) என் நினைவுக்கு வந்தது. அது (பற்றிய சிந்தனை தொழுகையில் கவனம் செலுத்த விடாமல்) என்னைத் தடுத்துவிடுவதை நான் வெறுத்தேன். ஆகவே நான் (சென்று) அதைப் பங்கிட்டுவிடுமாறு பணித்(து வந்)தேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி)
நூல்: புகாரி (851)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானில் தம்மைச் சந்திக்கின்ற வேளையில் நபியவர்கள் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது (அதுவரை அருளப்பெற்ற) குர்ஆனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் மழைக் காற்றைவிட அதிகமாக நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (6)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை முன்வைத்து எது கேட்கப்பட்டாலும் அவர்கள் அதைக் கொடுக்காமல் இருந்ததில்லை. இந்நிலையில் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து (கேட்டபோது), இரு மலைகளுக்கு இடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை அவருக்கு வழங்கினார்கள். அந்த மனிதர் தம் சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று, "என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், முஹம்மத் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்'' என்று சொன்னார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (4629)

நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையில் நிற்பேன். அப்போது (பின்னால் தொழுதுகொண்டிருக்கும் பெண்களின்) குழந்தை அழுவதை நான் கேட்பேன். அந்தக் குழந்தையின் தாய்க்கு சிரமமளிக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுவேன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி)
நூல்: புகாரி (707)

நபி (ஸல்) அவர்கள் இந்த (இஷா)த் தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! பெண்களும் குழந்தைகளும் தூங்கிவிட்டார்கள் என்று சொல்ல, நபி (ஸல்) அவர்கள் தமது விலாவிலிருந்து வழியும் தண்ணீரைத் துடைத்தபடி, "என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிராவிட்டால், (இஷாத் தொழுகைக்கு) இதுதான் சரியான நேரம் (என்று சொல்லியிருப்பேன்)'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (7239)

அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் சில விஷயங்களைப் பற்றிக் கேட்பதற்காக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், "நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?'' என்று கேட்டார்கள். நான், "எகிப்தியரில் ஒருவன்'' என்று பதிலளித்தேன். அவர்கள், "உங்கள் ஆட்சியாளர் இந்தப் போரில் உங்களிடம் எப்படி நடந்துகொண்டார்?'' என்று கேட்டார்கள்.

அதற்கு நான், "வெறுக்கத் தக்க அம்சங்கள் எதையும் நாங்கள் அவரிடம் காணவில்லை. எங்களில் ஒருவரது ஒட்டகம் செத்துவிட்டால், அவருக்கு அவர் ஒட்டகம் வழங்கினார். அடிமை இறந்துவிட்டால், அவருக்கு அடிமை தந்தார். செலவுக்குப் பணம் தேவைப்பட்டால் பணம் தந்தார்'' என்று விடையளித்தேன்.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், "அவர் என் சகோதரர் முஹம்மத் பின் அபீபக்ர் விஷயத்தில் நடந்துகொண்ட விதம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு செய்தியைக் கூறவிடாமல் என்னைத் தடுக்காது'' என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய இந்த இல்லத்தில் வைத்து, "இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கினால், அவரை நீயும் சிரமத்திற்கு உள்ளாக்குவாயாக! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்து கொள்வாயாக!'' என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

நூல்: முஸ்லிம் (3732)

(ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், "(தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் காலகட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்துவிட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது "அகபா (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும்.

ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். "கர்னுஸ் ஸஆலிப்' என்னுமிடத்தை நான் அடையும்வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன்.

அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக்கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, "உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்'' என்று கூறினார்கள்.

உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு சலாம் சொல்லி, பிறகு, "முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலுமுள்ள) இந்த இரு மலைகளையும் அவர்கள் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)'' என்று கூறினார்.

அதற்கு நான், "(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)'' என்று சொன்னேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (3231)

பிறர் நலம் நாடும் உறுதிமொழி

இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள், தமது காலத்தில் வாழ்ந்த மக்களுக்குப் பல்வேறு போதனைகளை போதித்து அதன்படி வாழும்படி அவர்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். நபித்தோழர்களும் நபித்தோழியரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தார்கள். பிறருக்கு நலம் நாடும் வகையில் இருக்கும் பல்வேறு காரியங்கள் அந்த உறுதிமொழியில் பிரதானமாக இடம் பெற்றிருந்தன. இதன் மூலம் பிறருக்கு நலம் நாடுதல் எனும் உயர்ந்த உன்னதமான பண்பினை, நபிகளார் அவர்கள் எந்தளவிற்கு அழுத்தமாக வலியுறுத்தி இருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நாட்டுவதாகவும், ஸகாத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலம் நாடுவதாகவும் உறுதிமொழி (பைஅத்) அளித்தேன்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: புகாரி (57), (58), (2714)

(ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, "அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்க மாட்டீர்கள் என்றும், திருடமாட்டீர்கள் என்றும், விபசாரம் புரியமாட்டீர்கள் என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும், நீங்களாக அவதூறு எதனையும் புனைந்துகொண்டு வரமாட்டீர்கள் என்றும், எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறுசெய்ய மாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்! உங்களில் எவர் (இந்த உறுதிமொழியின் மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்குரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டு விட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலகவாழ்வில்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்'' என்ற சொன்னார்கள். உடனே நாங்கள் அவற்றுக்காக நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.

அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலிலி)
நூல்: புகாரி (18), (3893), (6073)

அனைவரும், அனைவருக்கும் நலம் நாடுதல்

சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரும், பிறருக்கு நலம் நாடுபவராக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. நலம் நாடும் செயல்களை இவர்கள் தான் செய்ய வேண்டும்; அவர்கள் தான் நன்மையான காரியங்களைச் செய்ய வேண்டும் என்று எவரும் ஒதுங்கிக் கொள்ளாமல், அனைவரும் பிறருக்கு நலம் நாடி செயல்பட வேண்டும். இந்தப் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இதைக் கவனத்தில் கொண்டு எல்லோரும் தமது பொறுப்பின் கீழ் இருப்பவர்களுக்குக் கண்டிப்பாக நலம் நாட வேண்டும்; நன்மை செய்ய வேண்டும். இது குறித்தும் இறைவன் நம்மை விசாரிப்பான் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் (அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. அவர் (தம் குடிமக்கள் குறித்து) விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். அவன் (தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி) விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவரின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவள் (அந்தப் பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவாள். அடிமை தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் (தனக்குரிய பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவான். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் (உங்கள்து பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி (5188)

பிறர் நலம் எனும் பட்டியலில் பெற்றோர், உடன் பிறந்தவர்கள், வாழ்க்கைத் துணை, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டினர், ஊர்மக்கள் என்று அனைத்து மக்களும் அடங்குவர். எனவே அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதோடு அதற்குரிய காரியங்களைச் செய்ய வேண்டும்.

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

(திருக்குர்ஆன் 4:36)

"அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்; மக்களிடம் அழகானதையே பேச வேண்டும்; தொழுகையை நிலை நாட்ட வேண்டும்; ஸகாத்தையும் கொடுக்க வேண்டும்'' என்று இஸ்ராயீலின் மக்களிடம் நாம் உறுதி மொழி எடுத்த பின்னர் உங்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்து அலட்சியப்படுத்தினீர்கள்.

(திருக்குர் ஆன் 2:83)

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். "நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்'' எனக் கூறுவீராக!

(திருக்குர்ஆன் 2:215)

நபி (ஸல்) அவர்கள், "மார்க்கம் (தீன்) என்பதே "நலம் நாடுவது' தான்'' என்று கூறினார்கள். நாங்கள், "யாருக்கு (நலம் நாடுவது)?'' என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கும், அவனுடைய வேதத்துக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: தமீமுத் தாரீ (ரலி)
நூல்: முஸ்லிம் (95)

மற்றவர்களின் நலம் நாட வேண்டும் என்று சொல்வதோடு ஒதுங்கிக் கொள்ளாமல், அதை எந்தளவிற்குக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதற்குரிய பல்வேறு போதனைகளை இஸ்லாம் முன்வைக்கிறது. அவற்றுள் மிக முக்கியமான சிலவற்றை மட்டும் இப்போது பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு விஷயம் (சொல்கிறேன்:) ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப்பட்டுள்ளார்கள். எனவே, யார் அந்த முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளின் எண்ணிக்கை அளவிற்கு அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி (தக்பீர்), அல்லாஹ்வைப் புகழ்ந்து (தஹ்மீத்), அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று (ஏகத்துவ உறுதி) கூறி, அல்லாஹ்வைத் துதித்து (தஸ்பீஹ்), அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி (இஸ்திஃக்ஃபார்), மக்களின் நடை பாதையில் (இடையூறாகக்) கிடந்த ஒரு கல்லையோ அல்லது முள்ளையோ அல்லது எலும்பையோ அகற்றி, நல்லதை ஏவி, அல்லது தீமையைத் தடுத்(து நல்லறங்கள் புரிந்)தாரோ அவர் அன்றைய தினத்தில் தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திவிட்ட நிலையிலேயே நடமாடுகிறார்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் (1833)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், "சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். அதற்கு, "மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (448)

"நீங்கள் சாலைகüல் அமர்வதைத் தவிருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், "எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள் சபைகள்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும் போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், "பாதையின் உரிமை என்ன?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி (2465)

(கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்கள், (கலகக்காரர்களால்) முற்றுகையிடப்பட்டார்கள். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் மேற்புறத்தில் நின்று கொண்டு, "அல்லாஹ்வின் பெயரால் உங்களைக் கேட்கிறேன். நான் நபி (ஸல்) அவர்களின் தோழர்களைத் தான் கேட்கிறேன். "யார் "ரூமா' என்னும் கிணற்றை (விலைக்கு வாங்கி) தூர்வாரி (பொது மக்கள் நலனுக்காக வக்ஃப் செய்து) விடுகிறாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்கும்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற, நான் அதை (விலைக்கு வாங்கித்) தூர் வாரி(வக்ஃபாக ஆக்கி)யது உங்களுக்குத் தெரியாதா? நபி (ஸல்) அவர்கள் "எவர் பொருளாதார நெருக்கடியிலிருக்கும் (தபூக் போருக்கான) படையை (பொருளுதவி செய்து) தயார்படுத்துகின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்கும்' என்று கூற, நான் அதைத் தயார்படுத்தியது உங்களுக்குத் தெரியாதா?'' என்று கூறினார்கள். நபித்தோழர்கள் அவர்கள் கூறியதை உண்மையென ஏற்றுக் கொண்டனர்.

அறிவிப்பவர்: அபூ அப்திர் ரஹ்மான் (ரலி)
நூல்: புகாரி (2778)

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் நபியே! நான் பயனடையக்கூடிய (நற்செயல்) ஒன்றை எனக்குக் கற்றுத் தாருங்கள்'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "முஸ்லிம்கள் (மக்கள்) நடமாடும் பாதையிலிருந்து தொல்லை தரும் பொருட்களை அப்புறப்படுத்துவீராக'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூபர்ஸா (ரலி)
நூல்: முஸ்லிம் (5109)

பிறர் நலம் நாடுவோரும், கெடுப்போரும்
சமுதாயத்தில் பிறர் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக மனமுவந்து உழைப்பவர்கள் இருக்கிறார்கள். இதற்காகப் பல்வேறு சிரமங்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். பொதுநலன் சார்ந்த பணிகளில் அயராது ஈடுபடுகிறார்கள். இத்தகைய மக்களுக்கு இறைவனின் உதவி இம்மையிலும் மறுமையிலும் இருக்கும். மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று தூய சிந்தனையோடு செயல்படும் இவர்களுக்கு அல்லாஹ் அளவற்ற நன்மைகளை அள்ளி வழங்குவான்.

இதற்கு மாற்றமாக, தாம் மட்டும் நன்றாக இருந்தால் போதும்; அடுத்தவர்கள் எப்படி இருந்தால் நமக்கென்ன? என்று சுய நலத்தோடு இருப்பவர்களும் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் உலக ஆதாயங்களுக்காக அடுத்தவர்களுக்குத் தீமை செய்வது, உரிமைகளைப் பறிப்பது என்று கல் நெஞ்சம் கொண்டவர்களாக, தீய காரியங்களைச் செய்பவர்களும் இருக்கிறார்கள். இத்தகையவர்கள் ஈருலகிலும் இறைவனின் அன்பையும் கருணையும் இழந்தவர்கள். அவனது எச்சரிக்கைக்கும் தண்டனைக்கும் உரித்தானவர்கள். இதை மனதில் கொண்டு நாம் எப்போதும் பிறர் நலம் நாடுவேராக இருக்க வேண்டுமே தவிர ஒருபோதும் பிறர் நலம் கெடுப்போராக இருந்துவிடக் கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் இம்மையில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அகற்றுகிறான். யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி செய்கிறான். யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் மறைக்கிறான். அடியான் தன் சகோதரன் ஒருவனுக்கு உதவி செய்துகொண்டிருக்கும் வரை அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்துகொண்டிருக்கிறான். யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக் கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான். அறச் செயல்களில் பின்தங்கிவிட்ட ஒருவரைக் குலச் சிறப்பு முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவதில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (5231)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு நாளும் இரு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், "அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!'' என்று கூறுவார். மற்றொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக்கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!'' என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (1442)

நபி (ஸல்) அவர்களிடம் யாசகர் எவரேனும் வந்தால் அல்லது அவர்களிடம் (எவரேனும் தமது) தேவையை முறையிட்டால், அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), "(உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவிசெய்யும்படி பிறரிடம்) பரிந்துரை(யாவது) செய்யுங்கள். அதனால் உங்களுக்கும் நற்பலன் வழங்கப்படும்'' என்று கூறுவார்கள். பிறகு "அல்லாஹ் தன் தூதருடைய நாவினால் தான் நாடியதை பூர்த்தி செய்கிறான்'' என்பார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
நூல்: புகாரி (1432)

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக்கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு (வழங்கப்படாமல்) முடிந்து வைத்துக்கொள்ளப்படும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)
நூல்: புகாரி (1433)

மக்களுக்குத் தொல்லை கொடுத்துவந்த மரமொன்றை, ஒரு மனிதர் வந்து வெட்டி (அப்புறப்படுத்தி)னார். இ(ந்த நற்செயலைச் செய்த)தற்காக அவர் சொர்க்கத்திற்குள் நுழைந்தார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (5108)

தரீஃப் அபீதமீமா பின் முஜாலித் அல்ஹுஜைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள், ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் அவர்களுக்கும் அவர்களுடைய தோழர்களுக்கும் உபதேசம் செய்து கொண்டிருந்த இடத்தில் நான் இருந்தேன். அப்போது ஸஃப்வானும் அவர்களுடைய தோழர்களும், "நீங்கள் அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கüடமிருந்து (ஹதீஸ்) எதையேனும் செவியுற்றீர்களா?'' என்று கேட்க ஜுன்தப் (ரலி) அவர்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூற நான் கேட்டேன் என்று சொன்னார்கள்: யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவரை (அவரது நோக்கத்தை) அல்லாஹ் மறுமை நாüல் விளம்பரப்படுத்துவான். யார் (மக்களைச்) சிரமப்படுத்துகிறாரோ அவரை அல்லாஹ் மறுமை நாளில் சிரமத்திற்குள்ளாக்குவான்.

நூல்: புகாரி (7152)

பிறருக்கு நலம் தரும் காரியங்களைச் செய்யுங்கள்; நலத்தைக் கெடுக்கும் காரியங்களைச் செய்யாதீர்கள் என்று இஸ்லாம் போதிக்கிறது.

இது தொடர்பாக இஸ்லாம் மேலோட்டமாக, பெயரளவிற்குப் பேசவில்லை. இதனைத் தனது கொள்கையின் அடிப்படையாக, அடிநாதமாக வைத்து உரக்கச் சொல்கிறது. பிறர் நலம் நாடுவது என்பது இறைநம்பிக்கை மற்றும் இறையச்சத்தின் பிரதிபலிப்பு, மறுமை வெற்றிக்கான மகத்தான வழிமுறை என்று பறைசாற்றுகிறது.

இத்தகைய இனிமையான இஸ்லாமிய மார்க்கம், மக்களுக்கு இன்னல்களை அளிக்கின்ற, பொதுமக்களை அழித்தொழிக்கின்ற தீவிரவாதத்தை ஆதரிக்குமா? என்று நெஞ்சின் மீது கைவைத்து யோசித்துப் பாருங்கள். இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாதத்தை ஆதரிக்காது; எப்போதும் அதற்கு எதிரானது என்ற உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

- எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

தர்மத்தின் சிறப்புகள்


குடும்பத்திற்குச் செலவு செய்வதும் தர்மமே!

ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாகி விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி 55

அறம் செய்தோர் அர்ஷின் நிழலில்..

அல்லாஹ்வுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தனது நிழலை ஏழு பேருக்கு அளிக்கின்றான். அவர்கள்: நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளிவாசல்களுடன் தமது உள்ளத்தைத் தொடர்பு படுத்திக் கொண்ட ஒரு மனிதர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகின்ற இரு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கின்ற போது "நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன்' என்று சொல்லும் மனிதர், தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்பவர், தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்துபவர் ஆகியோர் ஆவர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 660

இறந்தவருக்காக தர்மம்

ஸஅத் பின் உப்பாதா (ரலி) அவர்கள் வெளியே சென்றிருந்த போது அவருடைய தாயார் இறந்து விட்டார். அப்போது அவர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் நான் வெளியே சென்றிருந்த போது மரணமடைந்து விட்டார். நான் அவர் சார்பாக தர்மம் ஏதும் செய்தால் இது அவருக்குப் பயனளிக்குமா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ஆம்! என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட ஸஅத் (ரலி) அவர்கள், "நான் எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாக தர்மம் செய்து விட்டேன். அதற்கு தங்களை சாட்சியாக்குகின்றேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1388, 2756

வங்கியில் வளரும் தர்மம்

அல்லாஹ் பரிசுத்தமானதைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை. யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம்பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக் கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1410

பெருநரகை விட்டு காக்கும் சிறு பேரீச்சம்பழம்

"அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் பேசாமல் இருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்க மாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காண மாட்டார். பிறகு தமக்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்பு தான் வரவேற்கும். ஆகவே முடிந்தால், பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல்: புகாரி 6539

மனைவியின் தர்மத்தில் கணவனுக்குப் பங்கு

"ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் அவளது கணவனுக்கும் நன்மை கிடைக்கும். அது போலவே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்து விட முடியாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1425, 2065

சிறந்த தர்மம் எது?

"தேவை போக எஞ்சியதைத் தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உமது வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1426

இறுக்கினால் இறுகி விடும்

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் "நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் அருள்) உனக்கு (வழங்கப் படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்'' என்று கூறினார்கள்.

அப்தாவின் அறிவிப்பில், "நீ (இவ்வளவு தான்) என்று வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான்'' என்று கூறியதாக உள்ளது.

அறிவிப்பவர்: அஸ்மா (ரலி), நூல்: புகாரி 1433, 1434

இறைவனிடம் கையேந்தும் இரு மலக்குகள்

ஒவ்வொரு நாளும் இரண்டு மலக்குகள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், "அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!'' என்று கூறுவார். இன்னொருவர், "அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!'' என்று கூறுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1442

சுவனத்தின் ஸதகா வாசல்

"ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து, "அல்லாஹ்வின் அடியாரே! இது நன்மையாகும். (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்)'' என்று அழைக்கப் படுவார். தொழுகையாளிகளாக இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர். அறப்போர் புரிந்தவர்கள் ஜிஹாத் எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். நோன்பாளிகளாய் இருந்தவர்கள் ரய்யான் எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். தர்மம் செய்தவர்கள் ஸதகா எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே எவரேனும் எல்லா வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நான் நம்புகின்றேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1897

மரம் நடுதல்

ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து அதிலிருந்து (அதன் விளைச்சலை) ஒரு பறவையோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: புகாரி 2320

உறவினருக்கு உதவுவதில் உயர்ந்த கூலி

நான் ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்கவில்லை. என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தங்குகின்ற முறை வந்த போது, "அல்லாஹ்வின் தூதரே! அடிமைப் பெண்ணை விடுதலை செய்து விட்டேனே! அறிவீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ (விடுதலை) செய்து விட்டாயா?'' என்று கேட்க, நான், "ஆம்'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "நீ உன் தாயின் சகோதரர்களுக்கு (அன்பளிப்பாக) அவளைக் கொடுத்து விட்டிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அன்னை மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி), நூல்: புகாரி 2592

அல்லாஹ் சொல்லும் சேதி

"ஆதமின் மகனே! (மற்றவர்களுக்காக) செலவிடு! உனக்கு நான் செலவிடுவேன்'' என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 5352

தர்மமே நமது சொத்து

நபி (ஸல்) அவர்கள், "உங்களில் யாருக்காவது தமது செல்வத்தை விட தமது வாரிசுகளின் செல்வம் விருப்பமுடையதாக இருக்குமா?'' என்று கேட்டார்கள். தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் அனைவருக்குமே எங்களின் செல்வம் தான் விருப்பமானதாகும்'' என்று பதிலளித்தார்கள். "அவ்வாறாயின் ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) எதைச் செலவிட்டாரோ அது தான் அவரது செல்வமாகும். (இறக்கும் போது) எதைச் விட்டுச் செல்கின்றாரோ அது அவருடைய வாரிசுகளின் செல்வமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி 6442

அல்லாஹ்வின் மன்னிப்பு

மிஸ்தஹ் பின் உஸாஸா என்பவர் தமது உறவினர் என்பதால் அபூபக்ர் (ரலி) அவர்கள் அவருக்காக செலவிட்டு வந்தார்கள். "அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒரு போதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிட மாட்டேன்'' என்று அபூபக்ர் (ரலி) கூறினார்கள்.

அப்போது அல்லாஹ், "உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்'' என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' எனும் (24:22) வசனத்தை அருளினான்.

அபூபக்ர் (ரலி) அவர்கள், "ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்'' என்று கூறிவிட்டு மிஸ்தஹுக்கு ஏற்கனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், "அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு (செய்யும் இந்த உதவியை) ஒரு போதும் நான் நிறுத்த மாட்டேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 6679

- எம். ஷம்சுல்லுஹா

தொடர்புடையவை: தர்மத்தின் சிறப்பு

திங்கள், 24 ஏப்ரல், 2017

உளூவின் சிறப்புகள்


எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே அனைத்து புகழும். மனித குலத்திற்கு வழிகாட்டியாக வந்த முஹம்மத் (ஸல்) அவர்களின் மீதும், உத்தம சஹாபாக்கள் மீதும், முஸ்லீமான அனைவர்கள் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக!

உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப் படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும் ." என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல் : அநநசாயி : 1578

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே பெரியோர்களே நம்மை படைக்கப்பட்டதின் நோக்கம் இறைவனுக்கு வணக்கங்கள் புரிவதற்காகத்தான். அந்த வணக்கத்தை புரிவதற்கு தன்னை சுத்தப்படுத்திக்கொள்வது அவசியம். ஏன் உளூ செய்யவேண்டும், என்ன பயன் என்றால் அல்லாஹ் குர்ஆனில் உளூ செய்வது முறையை விலக்கிவிட்டு அதன் சிறப்பையும் காரணத்தையும் கூறிக்காட்டுகிறான்.

அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

அல்குர்ஆன் : 5:6

எனவே உளூ அங்கசுத்தம் செய்வது மனிதர்களை சிரமத்தில் ஆழ்த்தவேண்டும் என்பதற்கல்ல . மாறாக தூய்மை படுத்துவதோடு அருளைவழங்குவதற்காகவும் தான் என்று இறைவன் கூறுகிறான். இவ்வாறு உளூவின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் முறையாக அங்கத் தூய்மை செய்யும்போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிலிருந்து வெளியேறிவிடுகின்றன. முடிவில், அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (அவருடைய பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) நூல் : முஸ்லிம்: 413

ஒரு முறை உளூ செய்வதினால் அவனுடைய சிறு பாவங்கள் அனைத்தும் நீங்கி விடுகிறது என்றும் கடைசியாக அவனுடைய நெகக்கண்கள் வழியாக பாவங்கள் வெளியேறிவிடுகிறது என்று இதன் சிறப்பை பற்றி நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் . இது மட்டுமல்ல மறுமை நாளில் அல் கவ்தர் எனும் தண்ணீர் தடாகத்தில் நீரைப் பெற முடிகிறது.

(மறுமையில் எனக்கு வழங்கப்படவிருக்கும் அல்கவ்ஸர் எனும்) எனது நீர்த்தடாக(த்தின் இரு கரைகளுக்கிடையேயான தூர)மானது, (தென் அரபகத்திலுள்ள) அதன் நகரத்திலிருந்து (வட அரபகத்திலுள்ள) அய்லா நகர(ம் வரையிலான தூர)த்தைவிட அதிகத் தொலைவுடையதாகும். அ(தன் நீரான)து, பனிக்கட்டியைவிட மிகவும் வெண்மையானது; பால் கலந்த தேனைவிட மதுரமானது. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கையை விட அதிகமானவை. ஒருவர் தமது நீர்த்தொட்டியை விட்டும் (பிற) மக்களின் ஒட்டகங்களைத் தடுப்பதைப் போன்று, நான் அந்தத் தடாகத்தை விட்டும் மக்கள் சிலரைத் தடுப்பேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அன்றைய தினம் (உங்கள் சமூகத்தாராகிய) எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ஆம்; வேறெந்தச் சமுதாயத்தாருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும். அங்கத் தூய்மை செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். (அதை வைத்து உங்களை நான் அடையாளம் கண்டு கொள்வேன்)என்று கூறினார்கள்.

இ அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி) நூல் : முஸ்லிம் :416

மறுமை நாளில் அல் கவ்தர் எனும் தண்ணீர் தடாகத்தில் நீரைப் பெற அனைத்து மக்களும் வருகின்ற போது அதில் உலக வாழ்க்கையில் உளூ செய்தவர்களை உளூவின் உறுப்புகள் பிரகாசமளிக்கும் இந்த அடையாளம் கண்டு இவர்களுக்குமட்டும் அதில் இடமளிப்பார்கள்.

உமர் (ரலி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: சற்று முன்னர்தான் நீங்கள் இங்கு வந்தீர்கள்; நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நீங்கள் வருவதற்கு முன் பின்வருமாறு) கூறினார்கள்:

உங்களில் ஒருவர் முழுமையான முறையில் அங்கத் தூய்மை செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்துகொள்ளலாம்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி) நூல் : முஸ்லிம் : 397

இப்படி ஒரு வாய்ப்பு வேறு யாருக்கும் கிடைக்குமா? இது போன்ற எண்ணற்ற சிறப்புகள் உளூ செய்வதின் மூலம் கிடைக்கிறது . ஆகவே அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே பெரியோர்களே நாம் ஒவ்வொருவரும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறையில் உளூ செய்து அதற்குரிய சிறப்புகளை அடைய அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன் .

புறம் பேசாதீர்கள்!


எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே அனைத்து புகழும். மனித குலத்திற்கு வழிகாட்டியாக வந்த முஹம்மத் (ஸல்) அவர்களின் மீதும், உத்தம சஹாபாக்கள் மீதும், முஸ்லீமான அனைவர்கள் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக!

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே அல்லாஹ் நம்மை இந்த உலகத்தில் மிக உயர்ந்த படைப்பாக படைத்துள்ளான். அப்படி படைத்த இறைவன் நாம் இந்த உலகத்தில் எப்படி வாழவேண்டும் என்பதையும் முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாக அனுப்பி தந்து எவைகளை செய்யவேண்டுமோ அவைகளுக்கு ஊக்கமளித்தும், எவைகளிலிருந்து விளகவேண்டுமோ அவைகளை தடுத்தும் அனைத்து விஷயங்களையும் கற்றுத் தந்தான்.

இப்படி நமக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட செய்திகளில் ஒன்றுதான் "புறம் பேசாதீர்" என்பதாகும் . புறம் பேசுவது அல்லாஹ்வும் ரசூலும் தடுத்திருக்கிறார்கள். குர்ஆனில் அல்லாஹ் இப்படி சொல்லிக்காட்டுகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன்:49:12

என்று இறைவன் குர்ஆனில் கூறுகிறான் . எனவே புறம் பேசுவது கூடாது, புறம் பேசுவது சகோதரனின் இறைச்சியை சாப்பிடுவதற்கு சமம் என்று எச்சரிக்கின்றான் . எனவே நாம் ஒவ்வொருவரும் புறம் பேசுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளவேண்டும் .

புறம் பேசுவது என்றால் என்ன? இது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவாக சொன்னார்கள்.

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்" என்று பதிலளித்தார்கள்.

அப்போது, "நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? (புறம் பேசுதலாக ஆகும்), கூறுங்கள்" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ, நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர்" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம்: 5048

ஆக நம்மில் இருவர் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி ஓரிடத்தில் சந்தித்தால் மூன்றாமவரை பற்றி பேசாமல் இருப்பதில்லை . இப்படி புறம் பேசுவது அல்லாஹ்வும் , நபி (ஸல்) அவர்களும் தடைசெய்திருப்பது தெரிந்திருந்தும் அதிலிருந்து நாம் விலகிக்கொல்வதில்லை . ஆனால் புறம் பேசினால் அல்லாஹ்விடம் தண்டனை இருக்கிறது என்பதை விளங்காமல் இருக்கிறோம். இதற்குரிய தண்டனை இருக்கிறது என்பதை ஒரு ஹதீஸ் நமக்கு விளக்குகிறது .

நபி(ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தபோது, கப்ரில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை' என்று சொல்லிவிட்டு, 'இருப்பினும் (அது பெரிய விஷயம்தான்) அவ்விருவரில் ஒருவர், தாம் சிறு நீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு ஒரு பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் 'நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) நூல் : புகாரி:216

எனவே ஒருவர் புறம் பேசுவது குற்றம் என்பதும், அப்படி பேசினால் அதற்க்கு இறைவனிடம் தண்டனை இருக்கிறது என்பதும் தெளிவாகிறது. எனவே இது பொன்ற செயல்களிலிருந்து நாம் தவிர்ந்துகொள்ளவேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் என்னையும், உங்களையும் மார்க்கத்தை சரியாக அறிந்து அதன் படி செயல்படக்கூடிய நல்லோர்களாக வாழ அருள் புரிவானாக! ஆமீன்.