சனி, 22 ஏப்ரல், 2017

ஏகத்துவத்தில் உறுதி


அல்குர்ஆனில் இறைவன், முன்னர் வாழ்ந்த பல்வேறு நபிமார்களின் வரலாற்று நிகழ்வுகளையும், அவர்கள் சந்தித்த பிரச்சனைகளையும், அவர்கள் அதனை எப்படி எதிர்கொண்டார்கள் என்ற விஷயங்களையும் சொல்லிக் காட்டுகிறான். இவ்வாறு முந்தைய நபிமார்களின் வரலாற்று நிகழ்வுகளை அல்லாஹ் கூறுவதன் நோக்கம் அதிலருந்து நாம் படிப்பினை பெற வேண்டும்; நம்முடைய செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் அவர்களைப் போன்று ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

அவர்களின் வரலாற்றில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. (இது) இட்டுக்கட்டப்பட்ட செய்தி அல்ல. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்தி, ஒவ்வொரு பொருளையும் விளக்கிக் கூறுகிறது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர் வழியாகவும், அருளாகவும் உள்ளது. (அல்குர்ஆன் 12.111)

இந்த வகையில் நபி இப்ராஹீம், யஃகூப் நபி ஆகிய இருவரும் தனது பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட அறிவுரைகளை வழங்கி வந்தார்கள் என்பதை அல்லாஹ், குர்ஆனில் 2:132 வது வசனத்தில் இவ்வாறு சொல்லிக் காட்டுகின்றான்.

"என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது'' என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்.

அதாவது நபி இப்ராஹிம்(அலை), நபி யஃகூப்(அலை) ஆகிய இருவரும் தமது பிள்ளைகளுக்கு அல்லாஹ் இந்த இஸ்லாமிய மார்க்கத்தை உங்களுக்காக தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கின்றான். எனவே இப்போது இஸ்லாத்தில் (ஓரிறைக் கொள்கையில்) வாழக்கூடிய நீங்கள், மரணம் வரும் போதும் அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டு முஸ்லிம்களாக (ஓரிறைக் கொள்கையை ஏற்றவர்களாக) மரணிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

அதாவது இஸ்லாமியர்களாக (ஓரிறைக் கொள்கை எனும் ஏகத்துவத்தை ஏற்றவர்களாக) வாழ்வது பெரிதல்ல. இருதி மூச்சு இவ்வுலகை விட்டுப் பிரியும் போதும் இஸ்லாமியர்களாக- ஏகத்துவவாதிகளாக மரணிக்க வேண்டும்.

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதை நாம் தகர்த்தெறிந்து மரணத்தின் கடைசி மூச்சு வரை இஸ்லாம் எனும் ஏகத்துவத்தைக் கொண்டு செல்ல வேண்டும்.

எல்லா நிலைகளிலும் ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பது மிகவும் அவசியமானதாகும். உறுதியான நம்பிக்கைக் கொண்டு, அதில் நிலையாக நிற்க கூடியவர்களையே அல்லாஹ் வெற்றியாளர்கள் என கூறுகிறான்.

கொள்கை உறுதிக்கு சில உதாரணங்களையும் நம்முடைய படிப்பினைக்காக அல்லாஹ் தன்னுடைய திருமறையில் சொல்லி காட்டுகின்றான்.

பிர்அவ்னின் மனைவி & மர்யம் (அலை)

உலக மூஃமின்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக இவ்விரு பெண்களையும் அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான். இதற்கு அவர்கள் உறுதியான் ஈமான் கொண்டு அதில் நிலையாக நின்றதை அல்லாஹ் காரணமாகக் கூறுகிறான். துன்பங்கள், துயரங்கள் ஏற்பட்ட போதும் தமது இறைவனையே சார்ந்தவர்களாக அவர்கள் இருந்தது அவர்களின் இறுதி மூச்சுவரை ஏகத்துவம் எவ்வாறு உறுதியாக இருந்ததது என்பதர்ககு எடுத்துக்காட்டு……

‘என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும், அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக!’ என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான். (அல்குர்ஆன் 66:11)

இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன்னுதாரணமாகக் கூறுகிறான்) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார். (அல்குர்ஆன் 66:12)

பிர்அவ்ன் vs ம‌ந்திர‌க்கார‌ர்க‌ள்

மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த அற்புதத்தை நேரடியாகக் கண்ட பிர்அவ்னுடைய மந்திரக்காரர்கள், உடனடியாக ஈமான் கொள்கின்றனர். ஈமான் கொணட்து மட்டுமல்லாது, கொடியவனான பிர்அவ்ன் அவர்களை வேதனையை கொண்டு எச்சரிக்கும் போதும் கொண்ட கொண்ட கொள்கையில் உறுதியாக அல்லாஹ்வையே சார்ந்து நின்றதை அல்லாஹ் பின்வருமாறு சொல்லிக் காட்டுகின்றான்.

உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்து, ‘மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்’ என்றனர். ‘நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்’ என்று அவன் கூறினான். ‘எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்’ என்று அவர்கள் கூறினார்கள். ‘எங்கள் குற்றங்களையும், நீ எங்களைக் கட்டாயப்படுத்தி செய்ய வைத்த சூனியத்தையும் எங்கள் இறைவன் மன்னிப்பதற்காக எங்கள் இறைவனை நாங்கள் நம்பி விட்டோம். அல்லாஹ்வே சிறந்தவன்; நிலையானவன்’ (என்றும் கூறினர்.) (அல்குர்ஆன் 20:70-73)

ஈமான் கொண்டு சில பொழுதுகளே ஆன போதும் அவர்கள் காட்டிய உறுதி நம் அனைவருக்கும் மிகச்சிறந்த படிப்பினை. 10 வருட முஸ்லிம், 20 வருட முஸ்லிம், பிறந்ததிலிருந்து முஸ்லிம், தலைமுறை தலைமுறையாக முஸ்லிம் என பெருமைபட்டுக் கொள்ளும் நாம், சோதனைகள் ஏற்படும் போது நம்முடைய ஈமானில் உறுதியாக இருக்கின்றோமா என்பதை சிந்திக்க கடைமைப்பட்டுள்ளோம். சிறு சோதனை ஏற்பட்டால் கூட சகிக்காமல் பச்சையான ஷிர்க், பித்அத் என வழிதவறுவோர் எத்தனை பேர்?

உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. ‘அல்லாஹ்வின் உதவி எப்போது?’ என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது. (அல்குர்ஆன் 2:214)

எவ்வளவு தான் துன்பங்களும் சோதனைகளும் வந்தாலும், அவையெல்லாம் நிரந்தரமல்ல…. சகித்துக் கொண்டு ஏகத்துவக் கொள்கையில் இறுதி மூச்சுவரை உறுதியோடு இருந்தால் அல்லாஹ்விடமே மகத்தான வெற்றி உள்ளது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

நபிமார்களின் சமூகம் துன்பங்களுக்கும் சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்ட போதும், தங்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட போதும், நபிமார்களும் அவர் உடனிருந்தவர்களும் அல்லாஹ்வையே முற்றிலும் சார்ந்திருந்தது, அவர்களின் ஈமானின் வலிமையை பறைசாற்றுகின்றது.

‘அல்லாஹ்வையே சாராதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? அவன் எங்களுக்கு எங்களின் பாதைகளைக் காட்டி விட்டான். நீங்கள் எங்களுக்கு அளிக்கும் துன்பங்களைச் சகித்துக் கொள்வோம். உறுதியான நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்’ (என்றும் கூறினர்.) ‘உங்களை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்’ என்று (ஏக இறைவனை) மறுப்போர் தமது தூதர்களிடம் கூறினர். ‘அநீதி இழைத்தோரை அழிப்போம்; அவர்களுக்குப் பின்னர், உங்களைப் பூமி யில் குடியமர்த்துவோம்’ என்று அவர்களது இறைவன் அவர்களுக்குச் செய்தி அனுப்பினான். இது, என் முன்னே நிற்க வேண்டும் என்பதை அஞ்சியோருக்கும், எனது எச்சரிக்கையை அஞ்சியோருக்கும் உரியது. (தூதர்கள்) வெற்றி பெற்றனர். பிடிவாதம் பிடித்த ஒவ்வொரு அடக்குமுறையாளனும் இழப்பை அடைந்தான். (அல்குர்ஆன் 14:12-15)

கொள்கையை ஏற்றுக் கொண்ட சிலர், நான்கைந்து தீனாரையும் ரியால்களையும் கண்டு கொள்கையை தூக்கி எரிந்து விட்ட சிலரைப் போன்று இல்லாமல், இறுதி முடிவை பொறுத்துத் தான் அல்லஹ்விடம் நமது தீர்ப்பு அமைகின்ற காரணத்தால் முடிவு நன்றாக இருக்க வேண்டும் என்றால் எந்த ஏகத்துவத்தை ஏற்றோமோ அதிலே உறுதியாக இருந்து மரணிக்க வல்லவன் அல்லாஹ் நம்மனைவருக்கும் அருள் புரிவானாக ...