புதன், 2 மே, 2012

"தொழுகையின் முக்கியத்துவம்"


தொழுகையின் முக்கியத்துவம்

இறைவனின் திருப்பெயரால்...

இஸ்லாம் கடமையாக்கிய ஐம்பெருங் கடமைகளில் ஏகத்துவ நம்பிக்கைக்கு அடுத்தபடியாக தலையான கடமையாக தொழுகை இருக்கிறது. தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதை விடுவதினால் ஏற்படும் நஷ்டங்களைப் பற்றிய ஏராளமான அல்லாஹ்வின் திருமறை வசனங்களும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் நமக்கு தெளிவாக விளக்குகின்றன.

1. தொழுகையின் அவசியம்

அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:
ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. (51: 56)

அல்லாஹ் நம்மை படைத்ததே அவனை வணங்குவதற்காத் தான்! அதை நாம் மறந்து உலக விசயங்களில் மட்டுமே மூழ்கிக்கிடக்கிறோம்.

தொழுகை என்பது நமக்கு நேரங்குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது! அனால் நம்மில் பலர் நேரத்திற்குத் தொழுவதில்லை.

அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம்-குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (4: 103)

அதனால் வேலையை முடித்துவிட்டு தொழுகலாம் என்று அலட்சியமாக இருக்காமல் தொழுகையை நேரத்திற்கு தொழ முயற்சிக்க வேண்டும்.

மறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றித்தான் முதலில் விசாரிக்கப்படும். அது ஒழுங்காக அமைந்து விடுமேயானால் மற்ற அனைத்து வணக்க வழிபாடுகளும் நல்லதாகவே அமையும். அது சரியில்லையென்றால் மற்ற அனைத்து விசாரணைகளும் சிரமமாகவே இருக்கும். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), அபூதாவுத்)

எல்லாத் தொழுகைகளையும் பேணித் தொழ வேண்டும்!

அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:
தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்! (திருக்குர்ஆன் 2: 238)

தொழுகையைப் பேணுபவர்கள் மட்டுமே சுவர்க்கம் செல்லமுடியும்!

அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:
மேலும் அவர்கள் தமது தொழுகைகளைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (திருக்குர்ஆன் 23: 9-11)

அல்லாஹ்வுக்கு விருப்பமான செயல்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்விடத்தில் மிக விருப்பமான அமல் எது? என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன், தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது. (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது; புகாரி)

2. தொழுகையின் பலன்கள்

தொழுகை பாவக்கறைகளைப் போக்குகின்றது!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்என்று தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவரின் அழுக்குகளில் சிறிதளவும் மிச்சமிருக்காதுஎன நபித் தோழர்கள் கூறினர். இதே மாதிரித்தான் ஐவேளைத் தொழுகைகளின் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா. பூகாரி - 528)

மானக்கேடானவைகளைத் தடுக்கிறது!

அல்லாஹ் கூறுகிறான்:
(முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். (திருக்குர்ஆன் 29: 45)

தொழுகை இறுதித் தீர்ப்புநாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமையும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'யார் ஐவேளைத் தொழுகையினை முறைப்படி நிறைவேற்றி வருகின்றாரோ, அவருக்கு அத்தொழுகை மறுமையில் பேரொளியாகவும், வழிகாட்டியாகவும், மாபெரும் வெற்றியாகவும் ஆகிடும். எவர் அதனைச் சரிவர நிறைவேற்றி வரவில்லையோ அவர்களுக் அது ஒளியாகவோ, வெற்றியாகவோ, வழிகாட்டியாகவோ ஆகி விடாது. அவன் மறுமையில் பிர்அவ்ன், ஹாமான், உபய் இப்னு கலப் போன்ற கொடியோர்களுடன் இருப்பான்.' (முஸ்லிம்)

3. தொழுகையை விடுவதனால் ஏற்படும் விளைவுகள்

தொழுகையை விடுவது இறை நிராகரிப்பு!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள வித்தியாசம் தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (அஹ்மத், திர்மிதி)

சடைந்தவர்களாக தொழுவோரின் தான தர்மங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது!

அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மறுத்ததும், சோம்பலாகவே தொழுது வந்ததும், விருப்பமில்லாமல் (நல் வழியில்) செலவிட்டதுமே அவர்கள் செலவிட்டவை அவர்களிடமிருந்து ஏற்கப்படுவதற்குத் தடையாக இருக்கிறது. (திருக்குர்ஆன் 9: 54)

ஆகவே இந்த அளவிற்கு கடுமையாக எச்சரிக்கப்பட்ட தொழுகையை எந்த சூழ்நிலையிலும் விடாது பேணி தொழக்கூடியவர்களாக முஸ்லிமான நம் அனைவரையும் ஆக்கி, நம்மை சுவர்க்கத்தில் சேர்த்தருள்வானாக.