புதன், 13 ஜூன், 2012

"சோதனைகளுக்கு கிடைக்கும் நன்மைகள்"


இறைவனின் திருப்பெயரால்...

அல்லாஹ் இந்த உலக வாழ்க்கையில் நிறைய பாக்கியங்களை தந்திருக்கிறான். நம்மை சோதிப்பதற்காக சில சோதனைகளையும் தருகிறான்.

யார் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற மன உறுதியில் இருக்கின்றார்களோ அவர்களை பல்வேறு சோதனைகளை வழங்கி அல்லாஹ் சோதிப்பான். இச்சோதனைகள் எல்லாம் நாம் அல்லாஹ்வை உண்மையில் நம்புகின்றோமா என்பதை மறுமையில் அடையாளம் காட்டுவதற்காகத்தான்.

நாம் யாரையும் ஏமாற்றாமல், மோசடி செய்யாமல் வாழ வேண்டும் என்ற மனஉறுதியுடன் செயல்படும் போது நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி அல்லாஹ் நம்முடைய இறைநம்பிக்கையை சோதிப்பான். இது போன்ற நேரங்களில் நாம் தடுமாறி விடக் கூடாது. அப்போதுதான் நாம் இறைவனின் பாக்கியத்தை பெற்று மறுமையில் வெற்றி பெறலாம்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள் உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது “நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்.
அல்குர்ஆன் 2:155, 156, 157

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.
அல்குர்ஆன் 2:286

ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி) நூல்: திர்மிதீ 2319

இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ 2323
  

சோதனைகள் எல்லோருக்கும் பொதுவானவை


அல்லாஹ் தன் திருமறையில் பல நபிமார்களின் வரலாறுகளைக் கூறுகிறான். அதில் நபிமார்களுக்கு ஏற்பட்ட கடுமையான சோதனைகளை அறியலாம்.. எனினும் அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையை வைத்திருந்தனர். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தூதுத்துவப் பணியை சரியாக நிறைவேற்றினார்கள்.

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمْ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ
உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன. "அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்" என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள். "நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது" (என்று நாம் ஆறுதல் கூறினோம்) அல்குர்ஆன் 2:214
  

செல்வமும் குழந்தைகளும் சோதனையே

إِنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ وَاللَّهُ عِنْدَهُ أَجْرٌ عَظِيمٌ
உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான். ஆனால் அல்லாஹ்விடமே மகத்தான (நற்) கூலியிருக்கிறது.
அல்குர்ஆன் 64:15

இந்த உலகத்தில் மனிதன் மிகவும் விரும்பக் கூடியதாக செல்வமும், குழந்தைகளும் இருக்கின்றன. அல்லாஹ் இவ்விரண்டையும் மனிதனுக்கு சோதனை என்று அறிவிக்கின்றான். அல்லாஹ் ஒருவருக்கு அளவுக்கு அதிகமான செல்வத்தைக் கொடுத்துள்ளான் என்றால் அதைக்கொண்டு அவரை சோதிப்பதற்காகத் தான்.

فَإِذَا مَسَّ الْإِنْسَانَ ضُرٌّ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلْنَاهُ نِعْمَةً مِنَّا قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ بَلْ هِيَ فِتْنَةٌ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான். பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால், அவன் "இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்!" என்று கூறுகின்றான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே - ஆனால் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
அல்குர்ஆன் 39:49


اللَّهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ وَفَرِحُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَمَا الْحَيَاةُ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مَتَاعٌ
அல்லாஹ் தான் நாடியவருக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக்குகிறான் (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான். எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள் - இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிடும் போது மிகவும் அற்பமேயன்றி வேறில்லை.
அல்குர்ஆன் 13:26

இறை வழியில் அதிக நாட்டம் கொண்ட மக்களாக இருப்பினும் அவன் நாடினால் வியாபாரத்திலும் தன் செல்வங்களிலும் சற்று சரிவை ஏற்படுத்தி அல்லாஹ் சோதனையைத் தருவான். நல்லடியார்கள் இதை அல்லாஹ் ஏற்படுத்திய விதியின் மேல் மனப்பூர்வமான நம்பிக்கைக் கொண்டு அவனிடமே உதவியையும் நாடவேண்டும்.

لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَخْلُقُ مَا يَشَاءُ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ. أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான். தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான் மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான். அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான். அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் ஆக்குகிறான் - நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன் பேராற்றலுடையவன்.
அல்குர்ஆன் 42:49-50

ஆகவே இறைவன் நமக்கு கொடுத்த குழந்தைச் செல்வங்களின் மகத்துவத்தை எண்ணி சந்தோசப்படவேண்டும். அவ்வாறல்லாமல், அதனை பாரமாகவோ அல்லது பெண்குழந்தைகள் கிடைத்ததை துக்கமாகவோ கருதக்கூடாது.

மரணத்தைக் கொண்டு சோதனை


அல்லாஹ் கூறுகின்றான்: இறை நம்பிக்கையுள்ள என் அடியான் அவனுக்குப் பிரியமான ஒருவரது உயிரை நான் கைப்பற்றி விடும் போதுஇ நன்மை நாடிப் பொறுமை காப்பாரானால் சொர்க்கமே நான் அவருக்கு வழங்கும் பிரதிபலனாக இருக்கும். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6424 அஹ்மத் 9024


குழந்தைகள் பிறந்து மகிழ்ச்சியில் இருக்கும் பெற்றோர்களிடத்திலிருந்து குழந்தைகளை இறக்கச் செய்து சோதிக்கின்றான். சிலருக்கு குழந்தைகளை உயிரோடு விட்டுவிட்டு தாயின் உயிரை எடுத்துக்கொள்கிறான். இதன்மூலம் குழந்தைகளை அனாதையாக விட்டுவிடுகிறானா அல்லது மனைவி இழந்த துக்கத்தில் தன் நேரான வாழ்க்கையை மாற்றிக்கொண்டுவிடுகிறானா அல்லது குழந்தைகளை கவனிப்பாரற்று விட்டுவிடுகிறானா என்று கணவனை சோதிக்கின்றான்.

சிலர் தான் விரும்பக்கூடிய ஒருவரின் உயிரை அல்லாஹ் கைப்பற்றிவிட்டால் அவனுக்கு ஏற்பட்ட துக்கத்தில் அல்லாஹ்வையே மறந்துவிடுகிறனர். இதிலும் சில பெண்கள் ஓலமிட்டு அழுவதும் அல்லாஹ்வுடன் தர்க்கம் செய்வது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் போன்ற நிகழ்வுகளை காணமுடிகிறது. ஆனால் இவர்கள், அல்லாஹ் இதன் மூலம் தங்களை சோதிக்கின்றான் என விளங்கிவிட்டால் இத்தவறுகளிலிருந்தும் நாம் நம்மை விடுவித்துக் கொள்ளலாம்.

قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلْ الْمُؤْمِنُونَ
"ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும். முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!
அல்குர்ஆன் 9:51

நோயைக் கொண்டு சோதனை


பிளேக் நோய் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் தான் நாடியவர்களைத் தண்டிப்பதற்காக அல்லாஹ் அனுப்பும் வேதனை தான் அது என்று கூறிவிட்டு மூமின்களுக்கு (இறை நம்பிக்கையாளருக்கு) அல்லாஹ் அதை அருளாக ஆக்கியுள்ளான். ஒருவர் வசிக்கும் ஊரில் பிளேக் நோய் ஏற்பட்டு,அல்லாஹ் நாடியதைத் தவிர வேறு எதுவும் நமக்கு ஏற்படாது என்று சகித்துக் கொண்டும் நன்மையை எதிர் பார்த்தும் தங்கி விட்டால் அவருக்கு ஷஹீத் - உயிர்த் தியாகி - உடைய கூலி கிடைக்காமல் இருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 3474

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்று அவர்களை என் கையால் தொட்டு, 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!' என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஆம்; உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று நான் (ஒருவனே) அடைகிறேன்' என்று கூறினார்கள். நான், '(இந்தத் துன்பத்தின் மூலம்) தங்களுக்கு இரண்டு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதாக இதற்குக் காரணம்?' என்று கேட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஆம்' என்று கூறிவிட்டுப் பிறகு, 'ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் விடுவதில்லை' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: புகாரி 5660

நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான் என் அடியானின் இரு கண்களை (போக்கிவிடுவது) கொண்டுஅவனை நான் சோதித்து அவன் அதன் மீது பொறுமை கொள்வானேயானால் அவ்விரு கண்களுக்குப் பகரமாகநான் அவனுக்குச் சுவர்க்கத்தை வழங்குவேன்
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி5653

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலி, துன்பம், நோய், கவலை, அவர் உணரும் சிறு மனவேதனை உள்பட எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல் : முஸ்லிம் 5030

அல்லாஹ் இவ்வுலகில் மனிதனுக்குக் கொடுத்திருக்கும் செல்வங்கள், மனைவி, குழந்தைகள், ஆரோக்கியம், கல்வி, அதிகாரம், பதவி மற்றும் பொறுப்புக்கள், நோய், உடல் குறைபாடுகள், மற்றும் மரணம் எல்லாம் சோதனைகளே தவிர வேறில்லை. எனினும் அவன் நல்லடியார்களுக்கும் இதைக்கொண்டு அதிகமாக சோதிப்பான். அவ்வாறு சோதனைகள் வந்து சேரும் போது பொறுமையைக் கடைபிடித்து, அவன் விதித்த விதியின் மீது அதிருப்தியடையாமல் அவன் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும். நாம் அனைவரும் அவன் பக்கமே மீள்பவர்களாக இருக்கிறோம். இறைவனின் பாக்கியத்தைப் பெற்று வெற்றி பெற்றவர்களாக மறுமையில் நம் அனைவரையும் ஆக்கி வைப்பானாக.