வியாழன், 2 ஜனவரி, 2014

"முஸ்லிம்களின் இலக்கு மறுமையை நோக்கி"


"முஸ்லிம்களின் இலக்கு மறுமையை நோக்கி"

உலகத்தில் ஏராளமான மதங்கள் உள்ளன. ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கின்றது. இந்த நம்பிக்கைகளிலேயே இஸ்லாம் சொல்லக்கூடிய மறுமை நம்பிக்கையானது மற்றவைகளிலிருந்து வேறுபட்டு காணப்படுகிறது. எல்லா மதங்களிலும் கடவுளை நம்புகிறார்கள், தீர்க்கதரிசிகளை நம்புகிறார்கள். ஆனால் இஸ்லாம் சொல்லக்கூடிய வகையிலே மறுமை வாழ்கையை நம்புகிறார்களா? மறுமை நம்பிக்கை வேறு எந்த மார்க்கத்திலாவது உண்டா என பார்த்தால் இஸ்லாம் மட்டும் இதில் தனித்து விளங்குவது விளங்கும்.

மறுமை நம்பிக்கை என்றால் என்ன? இந்த உலகத்தில் மனிதன் வாழுகின்ற பொழுது மனிதன் செய்கின்ற நன்மை, தீமையான காரியங்களுக்கெல்லாம் இவ்வுலகத்திலேயே பரிசோ அல்லது தண்டனையோ கிடைப்பதில்லை. தீயவர்கள் நன்றாக வாழ்கிறார்கள். அப்பாவிகள் தண்டிக்கப்படுகிறார்கள். தீயவர்கள் தண்டிக்கபடுவதில்லை. அப்பாவிகள் நன்றாக வாழ்வதில்லை ஏன்? இது மாதிரியான கேள்விகளுக்கெல்லாம் விடைதான் மறுமை வாழ்க்கை. இந்த மறுமை வாழ்க்கையைத்தான் முஸ்லிமாகிய நாம் நமது இலக்காக கொண்டு வாழ வேண்டும்.

மறுமையை இலக்காக கொள்வது என்றால் எப்படி? நாம் செய்கின்ற எந்த ஒரு செயலையும் அது இறைவனுக்கு செய்கின்ற கடமைகளாக இருந்தாலும் சரி, சக மனிதர்களுக்கு செய்கின்ற கடமைகளானாலும் சரி, உலகில் நாம் வாழ்வதற்கு உண்டான பொருளாதார மற்றும் இன்ன பிற செயல்களையும் மறுமை நம்பிக்கையை அடிப்படையாக கொண்டதாக அமைத்துக் கொள்ள வேண்டும். மறுமையை இலக்காக கொண்டுள்ள காரியங்கள் அனைத்தும் ஒட்டு மொத்த மனிதகுலத்திற்கே நன்மை செய்யக் கூடியதாக இருக்கிறது இதை அடிப்படையாக கொண்டுதான் இஸ்லாத்தில் வணக்க வழிபாடுகள் கூட தரப்பட்டுள்ளன.

உதாரணமாக நோன்பை எடுத்துக் கொள்வோம். “பொய் சொல்லுவதையும் தீய செயல்களையும் எவன் விட்டு விடவில்லையோ அவன் உண்ணாமல் பருகாமல் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை”. நாம் நோன்பு வைக்கிறோம் ஏன்? அல்லாஹ்விடம் உணவு பஞ்சம் வந்துவிட்டது நாம் கொஞ்சம் நோன்பு வைத்தால் அது கூடும் என்றா? இல்லை. நோன்பில்தான் நாம் அதிகம் சாப்பிடுகிறோம். பின் எதற்கு ?

நோன்புகூட ஒரு மறுமையை இலக்காக கொண்ட வழிபாடுதான். எப்படியென்றால், நோன்பு சமயத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாப்பிடும் உணவுகள் எல்லாம் இருந்தும் நாம் சாப்பிடுவதில்லை. ஏன்? அல்லாஹ் பார்த்துகொண்டிருகிறான் என்ற எண்ணம் இருப்பதால் தான் அந்த எண்ணம் மறுமையை இலக்காக கொண்டால் தான் மட்டுமே வரும்.

அடுத்ததாக தொழுகை “தொழுகையானது தீமையிலிருந்தும் மானக்கேடான காரியங்களை விட்டும் மனிதனை தடுக்கும்” தடுக்க வேண்டும். அந்த தொழுகைதான் நாம் மறுமையை இலக்காக்கி தொழுகின்ற தொழுகையாக இருக்கும். அவ்வாறு இல்லையெனில், அது சாதாரணமாக குனிந்து நிமிர்த்து உடற்பயிற்சி செய்தது போல்தான் ஆகும். தொழுகையில் நீங்கள் குனிந்து நிமிர்வதால் அல்லாஹ்விடம் அந்தஸ்து உயரப்போகிறதா? அல்லது ஒட்டுமொத்தமாக தொழுகையை நாம் புறக்கணித்தால் அல்லாஹ்விடம் அந்தஸ்து குறையப்போகிறதா? தொழுகையை நமக்காக மறுமைக்காக தொழ வேண்டும்.“உங்களுக்காக தொழப்படும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்“ என்று சொன்னது ஏன்?. மறுமையை இலக்காக்கி வெற்றியடையதான்.

ரமழான் மாதத்தில் பள்ளிவாயில்கள் நிரம்பி வழியும். மற்ற அடுத்த மாதத்தில் கூட்டம் குறைந்து விடும் இதன் மூலம் தெரிவது என்ன? அல்லாஹ் ரமழான் மாதத்திற்கு மட்டும்தானா? அல்லது வெள்ளிகிழமைகளுக்கு மட்டும் தானா? ரமழான் மாதமும் வெள்ளிக்கிழமைகளும் மட்டும் மறுமை இலக்கை அடைய போதுமானதா?

மறுமை நம்பிக்கையானது மனித குலத்திற்கு எவ்வாறு நன்மை பயக்கிறது என்று பார்ப்போம்.

முதலாவதாக தூய்மையான உழைப்பு. நம்முடைய இலக்கு மறுமை நம்பிக்கையாக இருந்ததால் நம் உழைப்பு தூய்மையானதாக இருக்க வேண்டும்

“யார் தூய்மையான உழைப்பில் ஒரு பேரிச்சம் பழம் மதிப்பிற்கு தர்மம் செய்தாரோ அதை அல்லாஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக்கொண்டு பிறகு உங்களின் குதிரைக்குட்டியை நீங்கள் வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்” (நூல்கள்: புகாரி: 1410 முஸ்லிம்: 1842)

மறுமையில் வெற்றி பெறுவதற்கு தர்மம் செய்வது முக்கியமானதாகும், அந்த தர்மம் நம் உழைப்பில் மூலம் வந்த பொருளாக இருக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ் நல்வழியில் உழைத்து அதன் மூலம் செய்யும் தர்மத்தை மட்டுமே ஏற்றுக்கொள்வான். ஹராமான மார்க்கம் தடுக்கும் வழியில் சம்பாரித்து கொடுக்கும் தர்மம் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான். எனவே மார்க்கம் அனுமதித்த வழியில் மட்டும் உழைத்து தர்மம் செய்து மறுமையில் வெற்றியடைவோம்.

மேலும் மறுமை வெற்றிக்கு “ஒருவர் தனது கையால் உழைத்து உண்பதை விட சிறந்த உணவை ஒரு போதும் உண்ணமுடியாது. தாவுது நபி தனது கையால் உழைத்து உண்பவர்களாக இருந்தார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி: 2072)

இந்த தூய்மையான உழைப்பானது ஒரு வியாபாரமாக இருக்கலாம். மனித வாழ்க்கை செழிப்பு பெற வியாபாரம் மிக முக்கியமானதாகும். இதன் மூலம் செல்வத்தை ஈட்டி நல்ல வசதியுடன் வாழ்கையை அமைத்து கொள்ள முடியும். ஆனால் வியாபாரத்தில் இலாபத்தை மட்டும் மனதில் கொண்டு பொய், புரட்டு, பித்தலாட்டம் என்று அனைத்து முறைகேடுகளையும் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி கொள்ளை இலாபம் அடைகின்றனர். இவ்வாறான வியாபாரத்தில் இறைவனின் மறைமுகமான அருள்வளம் நீக்கப்பட்டு விடும். அதே நேரத்தில் பொய் சொல்லாமல் நியாயமான முறையில் குறை நிறைகளை தெளிவு படுத்தி செய்யும் வியாபாரத்தில் இறைவனின் அருள்வளம் கண்டிப்பாக கிடைக்கும். இவ்வாறு உலக இலாபத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் படைத்தவனின் அருள்வளத்தை கவனத்தில் கொண்டு செய்தால் பொது மக்களும் அதிக நன்மை அடைவார்கள்.

மேலும் வியாபாரத்தின் போது “வாங்கும் போதும் விற்கும் போதும் வழக்காடும் போதும் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் மனிதனுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 2076)

மறுமையை இலக்காக கொண்ட முஸ்லிம் மட்டுமே இதையெல்லாம் கடைபிடிக்க இயலும். வியாபாரத்தில் பெருந்தன்மையுடன், நேர்மையுடன் நடந்து கொள்வதைப் போன்றே நமக்கு கீழ் வேலை பார்க்கும் தொழிலாளிகளிடம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

“மறுமை நாளில் மூவருகெதிராக நான் வழக்காடுவேன் என்று அல்லாஹ் கூறுகிறான், ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு அதில் மோசடி செய்தவன், இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று, அதன் பணத்தை சாப்பிட்டவன் மூன்றாவதாக ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிகொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதில் தொழிலாளிகளிடம் நடக்கும் முறை குறித்து நாம் அறியலாம்.

ஒரு வேலைக்காரனிடம் முழுமையாக வேலை வாங்கி விட்டு அவனுக்குரிய கூலியை கொடுக்காமல் ஏமாற்றினால் அல்லது கொடுக்கும் சம்பளத்தை விட கூடுதலாக வேலை வாங்கிக்கொண்டு வேலைக்காரனிடம் கூலியை வழங்காமல் இருந்தாலோ அல்லாஹ் நமக்கு எதிராக வழக்காடுவான் ஆகையால் மறுமை நம்பிக்கையோடு இறைவனுக்கு அஞ்சி நடந்து கொள்ள வேண்டும்.

மறுமை நம்பிக்கை கொண்டவர்கள் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத மேலும் சில காரியங்களை பார்ப்போம்.

இரத்த உறவைப் பேணி வாழ்வது முஸ்லிம்களின் கடமைகளில் ஒன்றாகும். உறவு முறையைப் பேணி அவர்களின் நலன்களில் அக்கறை கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது.

“பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவை பேணுகின்றவர் அல்லர்! மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைந்து வாழ்பவரே உறவை பேணுபவர் ஆவார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி: 5991)

இதே போல் சகோதரத்துவம் குறித்து இஸ்லாம் கூறுவதாவது, ஓரிறை கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் தம் சகோதர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மிகத்தெளிவாக ஹதீஸ்கள் புகாரி: 6011 மற்றும் முஸ்லிம்: 5044 கூறுகின்றன.

ஒரு தலைவலி வருமானால் தலைக்குதானே வலி என்று கால் சும்மா இருப்பதில்லை மருத்துவரிடம் செல்கிறது வாய் அது பற்றி சொல்கிறது கை மாத்திரையை எடுத்து வாயில் போடுகிறது, இப்படி உடலில் அனைத்து உறுப்புகளும் செயல்படுவது போல் ஒரு முஃமினுக்கு சிரமம் என்றால் எல்லா இறை நம்பிக்கையாளர்களும் ஒன்றிணைந்து உதவ வேண்டும்.

இதே போல் இறை நம்பிக்கையாளர்கள் மனிதர்களுக்கு செய்ய வேண்டிய முக்கிய கடமைகளில் ஒன்று அண்டை வீட்டாரை பேணுதல். வீட்டில் குழம்பு வைத்தால் அவர்களுக்கு கொடுப்பது பெரிய சிறிய கொடுத்து அன்பை பரிமாறுவது, தொல்லை தரும் வண்ணம் நடந்து கொள்ளாதது இப்படி பலகாரியங்கள் எந்த அளவிற்கு எனில் நமது சொத்தில் பங்கு கொடுக்கும் வாரிசுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்போமோ அதேபோல் முக்கியத்துவம் கொடுக்கச்சொல்லி நபியவர்கள் வலியுறுத்துகிறார்கள் (புகாரி: 6015)

“நல்வழியில் செலவிடு கணக்கிட்டுக் கொண்டிருக்காதே அவ்வாறு நடந்தால் அல்லாஹ் தன் அருளை உனக்கு கணக்கிட்டே தருவான். முடிந்து வைத்துகொள்ளாதே அவ்வாறு செய்தால் அல்லாஹ்வும் தன் அருளை தராமல் முடிந்து வைத்து கொள்வான். (புகாரி: 2591)

மனிதரிடம் இருக்கும் செல்வம் படைத்தவனின் அருளால் கிடைத்ததாகவும் , இதை நல்வழியில் செலவழிப்பதும் இல்லாதவர்களுக்கு வழங்குவதும் செல்வந்தர்கள் மீது கடமையாகும். இவ்வாறாக தர்மம் செய்வது கஞ்சத்தனம் செய்யாமலிருப்பது, வசதியற்றவர்களுக்கு கடன் கொடுப்பது, கடனாளிகளுக்கு தவணை அதிகப் படுத்தி கொடுப்பது, அல்லது கடனையே தள்ளுபடி செய்வது ஆகியன மறுமையை குறிக்கோள்களாக கொண்டவர்களின் அடையாளங்களாகும்.

மனிதனின் வாழ்கையில் துன்பம் என்பது கண்டிப்பாக வந்து கொண்டே இருக்கும் அப்போது பொறுமையை மேற்கொள்வது இறை நம்பிக்கையாளர்களின் கடமையாகும், ஒரு நோய் வந்தாலோ அல்லது ஒரு குழந்தை பேறு இல்லை என்றாலோ உடனே தட்டு, தகடு, தாயத்து என்று ஈமானை விற்றுவிடாமல் சகித்து கொள்ள வேண்டும். பொறுமையுடன் இறைவனிடம் துஆ செய்ய வேண்டும் அல்லாஹ் துஆவை அங்கீகரித்தாலும் அங்கிகரிக்கவிட்டாலும் அதில் நன்மை இருக்கும் என்று இருப்பதே மறுமை வெற்றியை குறிக்கோள்களாக கொண்டவரின் கடமையாகும். இறை நம்பிக்கையுடைய முஃமினால் மட்டுமே அவருக்கு ஏற்படக்கூடிய நன்மை தீமை இரண்டையும் அல்லாஹ்விடத்தில் கூலி பெறக்கூடியதாக ஆக்கிக் கொள்ள முடியும்.

“எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார்.
1) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட நேசத்திற்குரியோராவது,
2) ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்விற்காக நேசிப்பது
3)நெருப்பில் வீசப்படுவதை போன்று இறை மறுப்புக்கு மாறுவதை வெறுப்பது"
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 16)

மேற்கூறப்பட்ட விஷயங்கள் அனைத்தும் ஒரு மறுமை வாழ்க்கையை மட்டும் குறிக்கோள்களாக கொண்ட முஸ்லிம்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவைகளாகும்.

இறுதியாக மறுமை நம்பிக்கை உடையவர்கள், மறுமையை இலக்காக கொண்ட முஸ்லிம்கள் (முஃமின்கள்) பின்பற்ற வேண்டிய முன் உதாரணமாக அல்லாஹ் கூறுகின்றான்! ஃபிர்அவுனுடைய மனைவி அந்த ஆசியா அம்மையார் அவர்கள் செய்த துஆ இறைவா சொர்க்கத்தில் எனக்கு ஒரு மாளிகையைத் தா, ஃபிர்அவுனிடமிருந்தும் அவனுடைய சித்திரைவதைலிருந்ததும் என்னைக் காப்பாற்று, அநியாயம் செய்கின்ற இந்த கூட்டத்திடமிருந்து என்னை காப்பாற்று, என்று துஆ செய்தார்களே அதுபோல் உலகத்தில் எவ்வளவோ வசதிகள் இருந்தும் மாட மாளிகைகளும் கூடகோபுரங்களும் இருந்தும் மறுமை என்று வந்தால் அவர்கள் முடிவெடுத்தார்களே அது போல நம் வாழ்கையின் ஒவ்வொரு கட்டதிலும் அந்த அம்மையாரை முன்னிறுத்தி நாம் இலக்காக கொண்ட மறுமை வெற்றியை முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் அடைவோமாக என்று வல்ல அல்லாஹ்வை பிரார்த்தித்தவனாக இக்கட்டுரையை முடிவுக்கு கொண்டுவருகிறேன்.

(குறிப்பு: கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் சார்பாக ஜூன் - 2013 ல் நடைபெற்ற ரமலான் கட்டுரைப்போட்டியில் பரிசு பெற்ற சகோதரர் முஹம்மது ஜிந்தா அவர்களின் கட்டுரை.)