செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம்

எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம்

இன்றைய மருத்துவ விஞ்ஞான உலகத்திற்கு சவால் விடக் கூடிய வகையில் உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய ஒரு நோய் எய்ட்ஸ் ஆகும். இக்கொடிய நோய் வராமல் தடுப்பதற்கு உலகம் முழுவதும் எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மிக வீரியமாக மேற்கொள்ளப்படுகிறது. நம்முடைய இந்திய நாட்டிலும் மிக அதிவேகமாக இந்நோய் பரவி வருகிறது. எய்ட்ஸ் நோயைத் தடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு வாரியத்தையே நம்முடைய அரசாங்கம் அமைத்துள்ளது. அதன் மூலம் இந்நோய்க்கு எதிராகத் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால் இந்நோய் பரவுவதற்கு மூல காரணம் என்ன? என்பது அனைவருக்கும் தெரிந்தாலும் அந்த ஆணிவேரைப் பிடுங்கி எறிவதற்கு யாரும் முன்வருவது கிடையாது. ஏன் அதைப் பற்றி பேச்சுக்குக் கூட வாய் திறப்பது கிடையாது.

எய்ட்ஸ் நோய் பரவுவதற்கான மூல காரணம் முறையற்ற உடலுறவு தான். எங்கெல்லாம் விபச்சாரம் அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் இக்கொடிய நோய் பல்கிப் பெருகி வருகிறது. இன்றைய கேடு கெட்ட உலகில் விபச்சாரம் என்பது ஒரு முறையான தொழிலைப் போன்று பார்க்கப்படுகிறது. விபச்சாரத் தொழில் புரிபவர்களெல்லாம் பா­யல் தொழிலாளர்கள் என்று தான் அழைக்கப்பட வேண்டும் என்று அரசாங்கமே சட்டம் இயற்றியுள்ளது.

இன்றைய உலகில் மக்களுக்கு மத்தியில் தவறான காரியங்கள் அதிகரிப்பதற்கு மூல காரணமாகத் திகழ்வது சினிமாக்களும், சின்னத்திரை காட்சிகளும் தான். நடிகர், நடிகைகளின் ஆபாச நடிப்புகள் தான் அதிகமான மக்கள் தவறான பாதையில் செல்வதற்கு வழிவகுக்கிறது. ஆடுகள் நனைகிறதே என்று ஓநாய்கள் அழுததாம். அதுபோல் இன்று உலகத்தில் எய்ட்ஸ் நோய் பரவி வருவதால் நடிகர் நடிகைகளுக்கு மிகவும் அக்கறை ஏற்பட்டு அவர்கள் எய்ட்ஸ் நோய்க்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்களாம்.

அதிலும் வெட்கக்கேடு என்னவென்றால் எய்ட்ஸுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் கூட மிக அநாகரிகமாக நடந்து எய்ட்ஸ் நோயை எப்படிப் பரப்ப வேண்டும் என்பதற்கு இந்த பிரச்சாரப் பீரங்கிகள் வழிகாட்டியுள்ளார்கள். எப்படி என கேட்கின்றீர்களா?

அண்மையில் தில்­யில் எய்ட்ஸ் நோய்க்கு எதிராக ஒரு பிரச்சாரம் நடைபெற்றது. அதில் முக்கியமான பிரச்சாரப் பீரங்கிகளாக நடிகை ஷில்பா ஷெட்டியும், ஹா­வுட் நடிகர் ரிச்சர்டு என்பரும் கலந்து கொண்டனர். எய்ட்ஸ் நோயை வியாபாரம் செய்யக் கூடியவர்களே அதற்கு எதிராகப் பிரச்சாரத்திற்கு வந்து விட்டார்கள் என்பதால் அவர்களின் பிரச்சாரத்தைக் கேட்பதற்கு அதிகமாக மக்கள் கூட்டம் வேறு! இந்நிலையில் தான் அந்தப் பொது மேடையில் ரிச்சர்டு என்ற நடிகர், நடிகை ஷில்பாவை நின்ற வண்ணமும், வளைத்துப் பிடித்தும் முத்த மழைகளைப் பொழிந்தார். இது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்தது. பலர் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் முத்தமிட்டு, இப்படித் தான் எய்ட்ஸ் நோயைத் தடுக்க வேண்டும் என பிரச்சாரம் செய்தார். நடிகை ஷில்பாவும் அதனை ஆமோதிப்பது போல் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல், ''இவர் எய்ட்ஸ் நோய்க்கு எதிரான பிரச்சாரப் பீரங்கி! எனவே இவர் செய்ததை யாரும் கண்டு கொள்ள வேண்டாம்'' என வேண்டுகோள் விடுத்தார்.

இன்றைய உலகம் எப்படிப்பட்ட அநாகரிகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒன்றே போதுமான சான்றாகும். எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் என்ற பெயரிலேயே அதை வளர்ப்பதற்கான பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இவற்றைத் தடுப்பதற்கு இஸ்லாம் காட்டும் வழியே மிகச் சரியானது என்பதை என்றைக்கு இவ்வுலகம் உணர்கிறதோ அன்றைக்குத் தான் இது போன்ற கேடுகெட்ட நோய்களுக்கு ஒரு முடிவு ஏற்படும்.

ஒரு அநியாயத்தைத் தடுக்க வேண்டுமென்றால் அதன் ஆணிவேரையே பிடுங்கி எறிய வேண்டும். அதன் இலைகளை மட்டும் கத்தரித்துக் கொண்டிருந்தால் அது மென்மேலும் ஓங்கி வளரும்.

இந்த எய்ட்ஸைத் தடுப்பதற்கு இஸ்லாம் காட்டும் வழிமுறையைப் பார்ப்போம். அல்லாஹ் கூறுகிறான்.

விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன் 17:32)

ஒரு ஆணும் பெண்ணும் தவறான முறையில் உடலுறவு கொள்வதை மட்டும் இஸ்லாம் விபச்சாரம் என்று கூறவில்லை. மாறாக அதைத் தூண்டக்கூடிய அனைத்துக் காரியங்களையுமே விபச்சாரம் என்ற அட்டவணையில் தான் இஸ்லாம் சேர்க்கிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது. இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவையனைத்தையும் உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகிறது. அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ர­லி), நூல்: புகாரி (6243)

தவறான பேச்சுக்களும், காட்சிகளும் தான் மனதிற்கு ஆசையைத் தூண்டி தவறான காரியங்களுக்குத் தூண்டுகோலாக அமைகின்றன. இது போன்ற தவறான எண்ணங்களுக்கு இன்று மூல காரணமாகத் திகழ்வது சினிமாக் காட்சிகளும், அதில் நடிக்கின்ற ஆபாச நடிகர் நடிகைகளும் தான். சினிமாக் காட்சிகள் மட்டுமல்ல! அதனைத் தொடர்ந்து வருகின்ற சின்னத்திரை காட்சிகள், ஆபாச விளம்பரங்கள், ஆபாசப் பத்திரிக்கைகள் இவையனைத்தும் தான்.

சினிமாவாக இருந்தாலும், விளம்பரங்களாக இருந்தாலும், பத்திரிகைக் காட்சிகளாக இருந்தாலும் இவையனைத்திலும் தோன்றக் கூடியவர்கள் நடிகர் நடிகைகள் தான். இவர்கள் தான் விபச்சாரத்தின் ஊற்றுக் கண்கள். எனவே விபச்சாரத்தை ஒழித்து சமுதாயத்தை எய்ட்ஸ் நோயில்லாத சமுதாயமாக மாற்ற வேண்டுமென்றால் இந்த நடிகர், நடிகைகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவர்களை வைத்தே எய்ட்ஸுக்கு எதிரான பிரச்சாரம் என்றால் அது சிந்தனைவாதிகளுக்கு மத்தியில் கே­க்கூத்தாகத் தான் அமையும்.

ஒழுக்கமுள்ள சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் சில கட்டுப்பாடுகளையும், தண்டனைகளையும் ஒழுக்க போதனையும் நமக்குத் தந்துள்ளது. இவற்றைப் பேணி நடந்தால் நிச்சயமாக எல்லாவிதமான அநாகரிகங்களையும் தடுத்து விட முடியும். இல்லையென்றால் கானல் நீரைப் பார்த்து தண்ணீர் தேடிச் சென்ற கதையாகத் தான் அமையும்.

ஒழுக்க வாழ்விற்குக் கூலி­ சுவனம் தான் என இஸ்லாம் வாக்களித்து, மனிதன் ஒழுக்கமாக வாழ ஆர்வமூட்டுகிறது.

தவறான எண்ணங்களைத் தூண்டும் வகையில் ஆடையணிந்து, அலங்காரத்தைக் காட்டிக் கொண்டு செல்லும் பெண்களுக்கு நபியவர்கள் நரகத்தைக் கொண்டு எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

''தன்னுடைய தலையில் ஒட்டகத் திமிலைப் போன்று (கொண்டையிட்டு) ஒய்யாரமாக, அரை குறை ஆடை அணிந்து, பிறரைக் கவரும் வண்ணம் (உடலழகைக் காட்டி) ஒய்யாரமாகத் தளுக்கிக் கொண்டு செல்லும் பெண்கள் சுவர்க்கம் புக மாட்டார்கள். எவ்வளவோ ஆண்டுகள் பயணம் செய்து அடையும் இடத்தில் (ஒருவன்) இருந்தாலும் அங்கு சுவர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால், இப்பெண்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்­லிம் 3971)

மேலும் ஒழுக்கமாக வாழக் கூடியவர்களுக்கு சுவர்க்கத்தை நற்செய்தியாக நபியவர்கள் கூறியுள்ளார்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் தம் இரு கால்களுக்கிடையே உள்ளதற்கும் (மர்ம உறுப்புக்கும்), தம் இரு தாடைகளுக்கிடையே உள்ளதற்கும் (நாவுக்கும்) என்னிடம் உத்தரவாதம் அளிக்கிறாரோ அவருக்கு நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் சஅத் (ர­லி), நூல் புகாரி (6807)

ஒழுக்கமற்று, தவறான காரியங்களைச் செய்யக் கூடியவனை இறை நம்பிக்கையற்றவன் என்று இஸ்லாம் எச்சரிக்கை செய்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபச்சாரம் புரிபவன் விபசாரம் புரியும் போது இறை நம்பிக்கையாளனாக இருந்து கொண்டு விபச்சாரம் புரிவதில்லை. மேலும் ஒருவன் மது அருந்தும் போது இறை நம்பிக்கையாளனாக இருந்து கொண்டு மது அருந்துவதில்லை. ஒருவன் திருடுகின்ற பொழுது திருடனாக இருந்து கொண்டு திருடுவதில்லை. ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க (பிறரது பொருளை அபகரித்துக்) கொள்ளையடிக்கும் போது இறை நம்பிக்கையாளனாக இருந்து கொண்டு கொள்ளையடிப்பதில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­), நூல்: புகாரி (2475)

மேலும் இது போன்ற பாவங்களைச் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுப்பதன் மூலமும் இந்நோயை அறவே விரட்டி விட முடியும். அல்லாஹ் கூறுகிறான்:

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவர் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும். (அல்குர்ஆன் 24:2)

எனவே இஸ்லாம் சொல்­த் தரும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது ஒன்று மட்டுமே எய்ட்ஸை ஒழிப்பதற்கு வழியே தவிர மற்றவை யாவும் வெறும் கே­க்கூத்தாகவே முடியும் என்பதே உண்மை!

நன்றி: துபை TNTJ