வியாழன், 19 பிப்ரவரி, 2015

சத்தியப் பாதையும், சமூக மரியாதையும்

சத்தியப் பாதையும், சமூக மரியாதையும்

நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். ''நான் உங்களுக்குப் பகிரங்கமாக எச்சரிக்கை செய்பவன்'' (என்று அவர் கூறினார்.) 

அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்காதீர்கள்! துன்புறுத்தும் நாளின் வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன் (எனவும் கூறினார்).

''எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக உங்களைப் பொய்யர்களாகவே கருதுகிறோம்'' என்று அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்.

''என் சமுதாயமே! நான் என் இறைவனிடமிருந்து பெற்ற சான்றின் அடிப்படையில் இருந்து, அவன் தனது அருளையும் எனக்கு வழங்கியிருந்து, அது உங்களுக்கு மறைக்கப்பட்டு, நீங்கள் அதை வெறுத்தால் உங்கள் மீது அதை நாங்கள் திணிக்க முடியுமா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!'' என்று (நூஹ்) கேட்டார்.

''என் சமுதாயமே! இதற்காக நான் உங்களிடம் எந்தச் செல்வத்தையும் கேட்கவில்லை. எனது கூலி­ அல்லாஹ்விடமே உள்ளது. நம்பிக்கை கொண்டோரை நான் விரட்டுபவனாகவும் இல்லை. அவர்கள் தமது இறைவனைச் சந்திப்பவர்கள். எனினும் உங்களை அறியாத கூட்டமாகவே நான் கருதுகிறேன்''

என் சமுதாயமே! நான் அவர்களை விரட்டியடித்தால் அல்லாஹ்விடமிருந்து என்னைக் காப்பாற்றுபவன் யார்? சிந்திக்க மாட்டீர்களா?

''என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். உங்கள் கண்கள் இழிவாகக் காண்போருக்கு அல்லாஹ் எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன். (அவ்வாறு கூறினால்) நான் அநீதி இழைத்தவனாகி விடுவேன்'' (எனவும் கூறினார். (அல்குர்ஆன் 11:25,31)

மேற்காணும் வசனங்கள் நம்மிடம் படம் பிடித்துக் காட்டுகின்ற செய்தி, சத்தியத்தை முதன்முத­ல் பின்பற்றுபவர்கள் சமூகத்தில் எந்த அந்தஸ்தும் இல்லாதவர்கள் தான். சத்தியத்தை ஏற்க மறுப்பவர்கள் சமூக அந்தஸ்தைக் கொண்ட செல்வாக்கு படைத்தவர்கள். இவர்கள் தான் சத்தியப் பாதைக்குக் குறுக்கே வந்து நிற்கின்றார்கள் என்பதை மேற்கண்ட வசனங்களில் நாம் காண முடிகின்றது. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றிலும் இதை நாம் காண முடியும்.

பொதுவாக சமூகத்தில் மரியாதை பெற்றிருப்பவர்கள் இந்த மார்க்கத்தில் இணையும் போது அவர்களுக்கு அந்த சமூக அந்தஸ்து, மரியாதை பறி போய் விடும். இதன் காரணமாகவே இவர்கள் சத்தியப் பாதைக்கு வருவதில்லை. அதுமட்டுமின்றி சத்தியத்தையும், அதில் உள்ளவர்களையும் மிகக் கடுமையாக எதிர்க்கத் துவங்கி விடுகின்றார்கள்.

எந்த ஊருக்கு எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பினாலும் ''எதைக் கொடுத்து அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்கள்'' என்று அங்கே சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை. (அல்குர்ஆன் 34:34)

''இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார்'' என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏக இறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதி, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர். (அல்குர்ஆன் 23:33)

இவ்வாறே எந்த ஊருக்கும் எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பும் போதெல்லாம் ''எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின் பற்றுபவர்கள்'' என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை. (அல்குர்ஆன் 43:23)

எனவே சமூக மரியாதை என்பது சத்தியப் பாதைக்கு ஒரு தடைக்கல் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். இந்த சமூக மரியாதை என்பது செல்வத்தினால் மட்டுமல்லாது இன்னபிற பதவி, பொறுப்புகளின் மூலமாகவும் கிடைக்கும்.

அல்லாஹ் சத்தியப் பாதையில் உள்ளவர்களை பலவிதமான சோதனைகளைக் கொண்டு சோதிக்கின்றான்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 2:155)

இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடும் சோதனைகளின் பட்டியலில் 'பலன்களைப் பறித்தல்' என்ற சோதனையையும் குறிப்பிடுகின்றான்.

இதன்படி ஓர் ஏகத்துவவாதிக்குக் கிடைத்திருக்கும் சமூக மரியாதை என்பது அல்லாஹ்வால் அளிக்கப்பட்ட ஒரு பலனாகும். அந்தப் பலனை அந்த ஏகத்துவவாதியிடமிருந்து பறிக்கும் சூழலை அல்லாஹ் உருவாக்குவான். ஏகத்துவமா? அல்லது சமூக மரியாதையா? மார்க்கமா? அல்லது மக்களிடம் கிடைக்கும் அந்தஸ்தா? என்ற ஒரு சோதனையை அல்லாஹ் ஏற்படுத்துவான்.

இதுபோன்ற கட்டங்களில் ஓர் ஏகத்துவவாதி, தான் ஏற்றிருக்கும் கொள்கைக்கு ஆபத்து வந்து விட்டால் இந்த சமூக மரியாதையைத் தூக்கி எறிந்துவிட முன் வருவான். இத்தகைய தியாகிகளுக்கு முன்னுதாரணம், அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) ஆவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்களுக்கு (அவர்கள் யூதராயிருந்த போது) எட்டியது. உடனே அவர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''தங்களிடம் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகின்றேன். அவற்றை ஓர் இறைத் தூதர் மட்டுமே அறிவார்'' என்று கூறினார்.

பிறகு, ''1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசி மு­தலில் உண்ணும் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையை ஒத்திருப்பது எதனால்? அது தாயின் சதோதரர்களின் (சாயலை) ஒத்திருப்பது எதனால்?'' என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''சற்று முன்பு தான் இது குறித்து ஜிப்ரீல் எனக்குத் தெரிவித்தார்'' என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்கள், ''வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே'' என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''இறுதி நாளின் அடையாளங்களில் முதல் அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களை கிழக்கி­ருந்து மேற்கு திசையில் ஒன்று திரட்டும். சொர்க்கவாசிகளின் முதல் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். குழந்தையிடம் காணப்படும் சாயலுக்குக் காரணம், ஆண் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது, அவனது நீர் முந்தி விட்டால் குழந்தை அவனது சாய­ல் பிறக்கின்றது. பெண்ணின் நீர் முந்திக் கொண்டால் அவளது சாய­ல் பிறக்கின்றது'' என்று கூறினார்கள்.

அப்துல்லாஹ் பின் ஸலாம் (ர­லி), ''தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என நான் சாட்சி கூறுகின்றேன்'' என்று கூறினார்கள். பிறகு ''அல்லாஹ்வின் தூதரே, யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அவர்கள் அறிந்தால் என்னைப் பற்றி தங்களிடம் பொய்யுரைப்பார்கள்'' என்று கூறினார்.

அப்போது யூதர்கள் வந்தார்கள். உடனே அப்துல்லாஹ் பின் ஸலாம் (ர­லி) வீட்டினுள் புகுந்து மறைந்து கொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (யூதர்களிடம்) ''உங்களில் அப்துல்லாஹ் பின் ஸலாம் எத்தகைய மனிதர்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ''அவர் எங்களில் ஞானம் மிக்கவரும், எங்களில் அறிவு மிக்கவரின் மகனும் ஆவார். எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், எங்களில் அனுபவமும் விபரமும் மிக்கவரின் மகனும் ஆவார்'' என்று பதிலளித்தார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''அப்துல்லாஹ் (பின் ஸலாம்) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ''அல்லாஹ் அவரை அதி­லிருந்து காப்பானாக'' என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் ஸலாம் (ர­லி) வெளியே வந்து, ''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் சாட்சி கூறுகின்றேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகின்றேன்'' என்று கூறினார்.

உடனே யூதர்கள், ''இவர் எங்களில் கெட்டவரும், கெட்டவரின் மகனும் ஆவார்'' என்று சொல்­லி விட்டு அவரைக் குறித்து அவதூறு பேசலானார்கள்.அறிவிப்பவர்: அனஸ் (ர­லி), நூல்: புகாரி 3329

அப்துல்லாஹ் பின் ஸலாம் (ர­லி) அவர்களுக்கு யூத சமுதாயத்தில் எத்தகைய மதிப்பும் மரியாதையும் இருந்தது என்பதை இந்த ஹதீஸி­ருந்து விளங்கலாம். ஆனால் சத்தியம் என்று வருகின்ற போது, அந்த சமூக அந்தஸ்தை, மரியாதையைத் தூக்கி எறிந்து விடுகின்றார்கள்.

அவ்வாறு சமூக மரியாதையைத் தூக்கி எறிந்து சத்தியப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் போது, அதுவரை மதிப்பு மரியாதை கொடுத்து வந்தவர்கள் கூட அவரைப் பற்றி அவதூறுகளைக் கூறி, வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசத் துவங்கி விடுவதையும் இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது.

இதுபோன்ற கட்டத்தில் அவர் இந்த இழப்பிற்காக பொறுமையை மேற்கொள்கின்றார். இத்தகையவர்களுக்கு அல்லாஹ் தன் திருமறை மூலம் ஆறுதல் அளிக்கின்றான்.

தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது ''நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர். (அல்குர்ஆன் 2:156,157)

எனவே ஓர் ஏகத்துவவாதி அவனது கொள்கைக்கு, ஏகத்துவத்திற்கு ஆபத்து வருகின்ற போது, அதற்காக அந்தஸ்து, மரியாதை உள்ளிட்ட எந்தத் தியாகத்தையும் செய்யத் தயங்கி விடக் கூடாது.

அப்படி ஒரு தயக்கம் நம்மிடம் வந்து விடுமானால், நம்முடைய அந்தஸ்துகள் நமது சத்தியப் பாதைக்கு ஒரு தடைக்கல்லாக அமைந்து விடுமானால் அல்லாஹ் வைத்த சோதனையில் தோற்று விட்டதாகத் தான் அர்த்தம். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

 ஏகத்துவம் மே 2004