வியாழன், 19 பிப்ரவரி, 2015

சமுதாய ஒற்றுமையும்! ஒற்றுமை தலைவர்களும்!

சமுதாய ஒற்றுமையும்! ஒற்றுமை தலைவர்களும்!

மகத்துவமும் கண்ணியமுமிக்க எல்லாம் வல்ல அல்லாஹூதஆலா தன் திருமறையில்:

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே, அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே அல்லாஹ் தனது சான்றுகளை தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன்: 3: 103)

இன்றைய சூழலில் முஸ்லீம் சமுதாயத்திற்கு மிக மிக அவசியமானது சமுதாய ஒற்றுமை என்பதில் சமுதாய நலனில் அக்கறையுள்ளவர்கள் அனைவர்களின் எண்ணமாக இருந்து வருகிறது. அத்தகைய சமுதாய ஆர்வலர்களின் எண்ணங்களுக்கு வடிகால் ஏற்படுத்தும் முகமாக, தாங்கள் தான் ஒற்றுமையின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்கள் போல், அரசியலை வைத்து பிழைப்பு நடத்துபவர்களும், மார்க்கத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களும் நல்லவர்கள் போல் நடித்து வருகின்றனர்.

அவ்வாறு ஒற்றுமையை ஏற்படுத்த களம் கண்டுள்ள இந்த நேர்மை? பேர்வழிகள், உண்மையிலேயே ஒற்றுமைக்காக தான் குரல் கொடுக்கிறார்களா? என்றால், இல்லை! அவர்கள் அனைவரும் ஒற்றுமையின் பெயரால் மக்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கின்றனர்.

எந்தளவிற்கென்றால், சமுதாய ஒற்றுமைக்காக, நம் முஸ்லீம் சமுதாயத்தில் நிலவுகின்ற தீமைகளை குறிப்பாக நிரந்தர நரகிற்கு கொண்டுச் செல்லக் கூடிய இறைவனுக்கு இனை வைக்கும் செயலைக் கூட சுட்டிக் காட்ட தயங்குவதும், அத்தகைய இனைவைப்போருடன் இரண்டற கலந்து உறவாடுவதும், கும்மாளமடிப்பதும் அரங்கேறி வருவதை கண்கூடாக கண்டு வருகிறோம்.

மேலும், அதுமட்டுமன்றி, வரதட்சனை எனும் பெயரில் மாப்பிள்ளை வீட்டார்கள் பெண் வீட்டாரிடம் யாசகம் கேட்கும் இழிச் செயலையும், சினிமா போன்ற சமுதாயத்தில் ஊடுருவியுள்ள தீமைகளை (இவர்கள் நடத்தும் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பப்படுகிறது என்பது அவர்களுக்கே தெரியும்) மக்களிடம் எடுத்து சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும் என சத்திய முழக்கம் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். இத்தகைய தீமைகளை, சீர்கேடுகளை களைவதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஒற்றுமைக்கு தான் முக்கியத்துவம் என வரட்டு வாதம் புரிகின்றனர்.

மேலும், இவர்களின் இந்த வரட்டு வாதத்திற்காக, இவர்கள் வைக்கும் ஆதாரம் தான், மேற்கூறிய வசனம் 3:103 ல் எல்லாம் வல்ல அல்லாஹ் கட்டளையிட்டுள்ளதை தங்களின் வாதத்திற்கு சாதமாக மாற்றிக் கொண்டு, அதாவது ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்! என திரித்துக் கூறுகின்றனர். குர்ஆன் ஹதிஸில் உள்ளவைகளை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை கெடுகிறது! எனவே, அதைச் சொல்லாதீர்கள்! என்று இவர்கள் நேர்மாறான விளக்கத்தை தருகின்றனர்.

ஆனால் இந்த 3:103 வசனம் என்ன தான் சொல்கின்றது, அது இறக்கப்பட்டதன் காரணம் இவற்றை அறிந்துக் கொண்டால், இந்த சமுதாய துரோகிகளின் பித்தலாட்டங்கள், தகிடுத்தங்கள் வெளியாகி விடும்.

இந்த வசனத்தில், எல்லாம் வல்ல மகத்தான இரட்சகன், அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! என்று கட்டளையிடுகின்றான். மேலும் அல்லாஹ்வின் கயிறு என்பது திருக்குர்ஆனும், நபிமொழிகளும் தான். அனைவரும் சேர்ந்து திருக் குர்ஆனையும், நபிமொழிகளையும் பற்றி பிடியுங்கள் என்று இயம்புகின்றது.
இந்த வசனம் அருளப்பட்டதன் நோக்கம் என்னவென்றால், அது எத்தகைய ஒற்றுமையை கொண்டு வந்ததென்றால், பின்வரும் சம்பவம் சான்று பகர்கின்றது.

அதாவது மதினாவில் வசித்து வந்த அவ்ஸ், கஜ்ரஜ் ஆகிய கூட்டாத்தார்கள் தொடர்பாக அருளப்பெற்றது. ஆறியாமைக் காலத்தில் அவர்களிடையே ஏராளமான போர்கள் நடைபெற்றன. அவர்களுக்குள் கடுமையான விரோதமும் வன்மங்களும் காழ்ப்புகளும் இருந்து வந்தன. அவற்றின் காரணத்தால் அவர்களிடையே மோதல்களும் பிரச்னைகளும் நீண்டகாலமாக இருந்து வந்தன. இந்நிலையில் அல்லாஹ் இஸ்லாம் மார்க்கத்தைக் கொண்டு வந்தான். அப்போது அவ்விரு கூட்டத்தாரில் இஸ்லாத்தைத் தழுவிய அனைவரும் சகோதரர்களாக மாறினர். அல்லாஹ்வுக்காக ஒன்றினைந்து ஒருவருக்கொருவர் நேசம் பாராட்டினர். நன்மை மற்றும் இறையச்சத்தில் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்தனர்.

இந்த சம்பவத்தை இந்த அறிவுஜீவிகள்! மறுக்கின்றார்களா? அல்லது ஏற்றுக் கொள்கிறார்களா? என்பதை அவர்கள் தான் மக்கள் முன் பதில் சொல்ல வேண்டும்.

மேலும் காலங்காலமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த அவ்ஸ் மற்றும் கஜ்ரஜ் கூட்டத்தாரின் சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தது இந்த குர்ஆன் தான், அதாவது இந்த குர்ஆனை அதில் கூறியுள்ளவாறு பின்பற்றியதால் தான் இவர்களிடையே ஒற்றுமை ஏற்பட்டது என்பதை இவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா?

மேலும், சமுதாய ஒற்றுமையை எற்படுத்த போகிறோம் என புறப்பட்டுள்ள இந்த ஒற்றுமைவாதிகளும், அவர்களோடு இனைந்து பணியாற்றும் மார்க்கப்? பிரச்சாரர்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதை கண்ணியத்துக்குரிய அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பின்வரும் நபிமொழியின் மூலம் அற்புதமாக சொல்லி விட்டு சென்று விட்டார்கள்.

எனது நிலையும் மக்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது.அவர் தீ மூட்டீனார். அவரைச் சுற்றிலும் அது ஒளி வீசியபோது விட்டில் பூச்சிகளும் நெருப்பில் விழும் இதர பூச்சிகளும் அந்தத் தீயில் விழலாயின. அந்த மனிதரோ அவற்றைத்(தீயில் விழாமல்) தடுத்துக் கொண்டிருந்தார். அவை அவரையும் மீறி தீயில் விழுகின்றன. (இவ்வாறு தான்) நரகத் (தில்விழுவ) திலிருந்து தடுக்க உங்கள் இடுப்புக்களை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன். (ஆனால்) நீங்களோ (என்னையும் மீறி) நரகத்தில் நுழைந்து கொண்டிருக்கிறீர்கள் (அறிவிப்பவர்: அபூஹீரைரா (ரலி) புகாரி 6483)

ஆனால் சமுதாயத்தில் போலி(?) ஒற்றுமையை ஏற்படுத்த துடியாய் துடிக்கும் (போலி) ஒற்றுமை தலைவர்கள், அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக பாமர மக்களை நரகின் பக்கம் அழைத்துச் செல்கின்றனர். அதுமட்டுமன்றி பாமர மக்களிடம் குடிகொண்டுள்ள மூடபழக்கவழக்கங்கள், இறைவனுக்கு இனைவைக்கும் செயல்கள் போன்றவைகளை களைவதற்குண்டான செயல்களை செயல்படுத்த தயங்குகின்றனர்.

உண்மையிலேயே இவர்களுக்கு முஸ்லீம் சமுதாய மக்களின் மேல் நல்லெண்ணம் இருக்குமானால், அவர்களின் இம்மை மற்றும் மறுமை வாழ்வு நிம்மதியானதாக, சந்தோஷமானதாக அமைய விரும்புவார்களேயானால், அவர்கள் இதை தான் செய்திருக்க வேண்டும். அதாவது தமிழகத்தில் நிலவி வருகின்ற இறைவனுக்கு இனைவைக்கின்ற செயலுக்கு எதிராக கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், மகத்துவமிக்க, ஈடில்லா இரட்சகன், கண்ணியவான் தன் திருமறையில்,

தனக்கு இனை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இனை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார் (அல்குர்ஆன் 4: 48)

மேலும் இறைவன் கூறுகின்றான்,
அல்;;லாஹ்வுக்கு இனை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். (அல்குர்ஆன்: 5:72)

முஸ்லீம் மக்களின் இலட்சியமே மறுமையில் வெற்றி பெற்று, சொர்க்கம் செல்ல வேண்டும் என்பது தான். அப்பேர்ப்பட்ட சொர்க்கம், எந்த செயலை செய்தால் கிடைக்காமல் போய் விடுமோ, அந்த செயல் தான் தங்களின் வழிமுறை அதைதான் செய்வோம், மக்களிடமும் பிரச்சாரம் செய்து அந்த மக்களையும் வழிகெடுப்போம் என்று கங்கனம் கட்டிக் கொண்டு செயல்ப்பட்டு வருபவர்களுடன் இணையும் அளவிற்கு இவர்களின் ஒற்றுமை கோஷம் ஒலிக்கின்றது.

மேலும் மார்க்கப் பிரச்சாரம் செய்கிறோம் எனும் பெயரில் ஆரம்பிக்கப்படுகின்ற இஸ்லாமிய வலை குழுமங்கள் அனைத்தும் (ஒன்றிரண்டு விதிவிலக்கும் உண்டு) இறைவனுக்கு இனைவைப்பதையும், சமுதாயத்தில் நிலவி வரும் மூடபழக்க வழக்கங்களையும், வரதட்சணையும் களைவதற்கு பதிலாக, இந்த குழுமங்கள், இத்தகைய போலி ஒற்றுமைவாதிகளுக்கு ஆதரவாக ஆக்கங்களை வெளியிடுவது மட்டுமல்லாமல் ஏகத்துவ பிரச்சாரர்களை எதிர்ப்பதன் மூலம் ஏகத்துவ பிரச்சாரத்திற்கு தடைகல்லாகவும், முட்டுகட்டையாகவும் இருந்து வருகின்றனர். இந்த முக்கியத்துவம் இல்லாத ஒற்றுமையை முன்னிறுத்தி மக்களை நரகிற்கு அழைத்துச் செல்கின்றனர்.

ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹூதஆலா தன் திருமறையில் இறைவனுக்கு மாற்றமான செயலை செய்து, அல்லாஹ்வை மறுப்பவர்களை நேசர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம் என்று கூறுகின்றான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக்கூடிய சமுதாயத்தினர், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்போர் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் அவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். (அல்குர்ஆன்: 58:22)

இந்த வசனத்தின் மூலம் எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லாவற்றையும் விட அல்லாஹ்வை நேசிக்க வேண்டும் என்று கூறுகின்றான். அல்லாஹ்வை நேசிப்பது என்பது அவனுக்கு எதையும் இனைவைக்காமல் அவனை மட்டும் நம்புவதாகும்.

ஆனால் இந்த போலி ஒற்றுமை தலைவர்களுக்கு, மக்கள் இனைவைத்தாலும் பரவாயில்லை, அதனால் மக்கள் அனைவரும் நரகம் சென்றாலும் அவர்களுக்கு கவலையில்லை.அதைப்பற்றிய அக்கறையுமில்லை. ஆனால் தங்களின் வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக இருந்து வரும் ஏகத்துவ பிரச்சாரமும் அதனை மக்களிடம் கொண்டு செல்லும் தவ்ஹித் ஜமாஅத்தையும் தமிழகத்தை விட்டு விரட்டிவிட வேண்டும் என்று செயல்பட்டு வருகின்றனர். ஆனால் நாளை மறுமையில் அல்லாஹ்வின் கேள்விகளுக்கு இவர்களின் பதில் என்ன?

மேலும், அல்லாஹ்வின் தூதரோடு தோள் நின்;று தோள் கொடுத்த சஹாபாக்கள் தங்களின் வாழ்வில் எதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஓற்றுமைக்கா? கொள்கைக்கா? என்பதை அவர்களின் வாழ்வியல் சம்பவங்களே! படம் பிடித்து காட்டுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் மரணித்து அபூபக்கர் (ரலி) ஆட்சிக்கு வந்ததும், அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்ததன் மூலம்) காஃபிர்களாகி விட்டனர். அவர்களுடன் போர் தொடுக்க அபூபக்கர் (ரலி) அவர்கள் தயாரானார். உமர்(ரலி) அவர்கள், லா இலாஹா இல்லல்லாஹூ கூறியவர் தமது உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார். தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர – அவரது விசாரனை அல்லாஹ்விடமே உள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்? என்று கேட்டார். அபூபக்கர்(ரலி), உமரை நோக்கி அல்லாஹ்வின் மீதானையாக! தொழுகைகளையும், ஸகாத்தையும் பிரித்து பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும். அல்லாஹ்வின் மீதானையாக! நபி(ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்;டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட நான் இவர்களுடன் போர் செய்வேன் என்றார்கள். அல்லாஹ்வின் மீதானையாக! அபூபக்கரின் இதயத்தை அல்லாஹ் விசாலமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என்று நான் விளங்கிக் கொண்டேன் என்றார். (அபூஹூரைரா(ரலி) புகாரி 1399 மற்றும் 1400)

இங்கு அபூபக்கர்(ரலி) அவர்கள், தங்களுக்கு பல பிரச்னைகள் இருந்தபோதும், கொள்கைக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தார்களே தவிர, ஒற்றுமைக்கு முக்கியத்துவம் தரவில்லை என்பது இதன் மூலம் நமக்கு விளங்குகின்றது. ஆனால் இந்த ஒற்றுமை தலைவர்களுக்கு விளங்கியும் விளங்க மறுக்கின்றனர்.

ஆகவே, ஒற்றுமை என்பது குர்ஆனையும் நபிவழியையும் உறுதியாக பிடித்து அதனை பின்பற்றுவதால் தான் ஏற்படும் என்பதை விளங்கி, குர்ஆனையும் நபிவழியையும் பின்பற்றக்கூடிய சமுதாயமாக நம்மை எல்லாம் வல்ல அல்லாஹ் ஆக்கி வைப்பானாக!

நன்றி: துபை TNTJ