திங்கள், 23 பிப்ரவரி, 2015

நீதி! நீதியாக இருக்க வேண்டும்!

நீதி! நீதியாக இருக்க வேண்டும்!

மகத்துவமும் கண்ணியமுமிக்க எல்லாம் வல்ல அல்லாஹூதஆலா தன் திருமறையில்:

நம்பிக்கைக் கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதமாக இருந்தாலும், நீங்கள் நீதியை நிலை நாட்டுவோராகவும், அல்லாஹ்விற் காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள். (வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன்.நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின் பற்றாதீர்கள். நீங்கள் (சாட்சியத்தை) புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்: 4: 135)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்; கூறினார்கள் 'நீதமாக பங்கிடாதவன் நரகத்தில் இருப்பான்'

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்:
உறுதியாக நூற்று, பின்னர் நூற்றதைத் துண்டு துண்டாக ஆக்கியவளைப் போல் ஆகாதீர்கள்!. ஒரு சமுதாயத்தை விட இன்னொரு சமுதாயம் அதிக எண்ணிக்கையில் உள்ளது என்பதற்காக உங்கள் சத்தியங்களை மோசடியாக பயன்படுத்தாதீர்கள்!. இதன் மூலம் அல்லாஹ் உங்களைச் சோதிக்கிறான்.நீங்கள் முரன்பட்டது பற்றி கியாமத் நாளில் அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துவான் (16:92)ஆனால் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று போற்றப்படுகின்ற, பலதரப்பட்ட சமூக மக்களை உள்ளடக்கிய இந்தியாவின் நீதித்துறை பெரும்பான்மை சமூக மக்களின் விருப்பத்திற்கினங்க செயல்பட துவங்கி உள்ளதை அறிய முடிகிறது.

கடந்த 30.09.2010 அன்று உத்தரப்பிரதேச மாநில லக்னோ உயர்நீதி மன்றம், 60 ஆண்டு காலமாக நிலுவை யில் இருந்த பாபர் மசூதி விவகாரத்தில் தீர்ப்பு எனும் போர்வையில் கட்ட பஞ்சாயத்து செய்துள்ளது. இத்தீர்ப்பை கேள்வியுற்ற உலக மக்கள் அனைவரும் இந்திய நீதிமன்றங்களின் அவலங்களை எண்ணி அதிர்ச்சி அடைந்துள்ளனர். இத்தகைய தீர்ப்புகளால் இந்திய திரு நாட்டிற்கு பெருத்த அவமானமும் தலைக்குனிவும் உலக அரங்கில் ஏற்பட்டுள்ளது என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

மேலும், தாமதிக்கப்பட்ட நீதி! மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்! என்ற சொற்றொடர் வழக்கமும் இந்திய நீதித்துறையில் உள்ளது என்பதை மறந்து விட இயலாது.
அதே சமயம் இந்தச் சொற்றொடர் பாபர் மசூதி வழக்கில் உண்மைப்படுத்தப்பட்டுள்ளது என்பது தௌ;ளத் தெளிவாக தெரிகிறது.

முஸ்லீம்களால் 450 ஆண்டு காலமாக வணக்க வழிபாடுகள் செய்யப்பட்டு வந்த இறையில்லத்தில் 1949ம் ஆண்டு சங்பரிவார விஷமிகளால் இராமர், சீதை, இலட்சுமண் மற்றும் அனுமாரின் விக்ரகங்கள் இரவோடிரவாக வைக்கப்பட்டு, தேச ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. அப்போதே அன்றைய உத்தரப்பிரதேச காங்கிரஸ் அரசு அந்த விக்ரகங்களை அகற்றியிருந்தால், இத்தகைய கேவலமான தீர்ப்பு தந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்காது. முஸ்லீம்களுக்கு இத்தகைய அநீதியும் ஏற்பட்டிருக்காது.

மேலும், மதசார்பற்ற இந்திய நீதித்துறையும், அதன் சார்பு மன்றங்களும், அரசியல் அமைப்பு சட்டத்தின் படி சட்டத்தையும், சாட்சிகள் மற்றும் வாதி பிரதிவாதிகளின் வாதங்களின் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்க வேண்டுமேயொழிய நீதிபதிகள் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்து விடக்கூடாது.

பலதரப்பட்ட கொள்கை கோட்பாடுகள், மத நம்பிக்கைகளைக் கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமை காணக்கூடிய இந்திய நாட்டில், சட்டமும், நீதியும், எல்லோருக்கும் சமமாக தான் இருக்க வேண்டுமேயொழிய கேலிக்கூத்தாக்க கூடியதாகவோ அல்லது ஒரு சார்பு மக்களுக்கு சாதகமாகவும், மற்றொரு சாராருக்கு பாதகமாகவும் இருக்கக் கூடாது என்பது மிக முக்கியமான அம்சமாகும்.

மேலும், மதசார்பற்ற இந்திய நாட்டில், அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமாக நீதி செலுத்தக்கூடிய, நீதி வழங்கக்கூடிய மன்றங்களில், அலுவலகங்களில் பதவியில் இருப்பவர்கள் அனைவர்களையும் இந்திய திருநாட்டின் குடிமக்களாக தான் பாவிக்க வேண்டுமே தவிர, வேறுபடுத்தி பார்ப்பவர்களாக இருத்தல் கூடாது. அதே போல் நீதியையும் சட்டத்தின் சாட்சிகளின் அடிப்படையில் வழங்க வேண்டும்.

ஆனால் பாபரி மசூதி வழக்கைப் பொறுத்தவரை, அந்த இடம் முஸ்லீம்களுக்கு சொந்தமான இடம் என்பதை சாதாரண பாமரனும் அறிந்து வைத்திருக்கின்ற நிலையில், 450 ஆண்டு காலமாக பள்ளிவாசலாக இருந்ததை மக்கள் பயன்படுத்தி வந்த வழிபாட்டு தலம், 1992ம் ஆண்டு சங்பரிவார கரசேவகர்களால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டதை உலக மக்கள் அனைவரும் பார்த்து வெட்கி தலைகுனிந்ததை இந்த நீதிபதிகள் மறந்தது ஏனோ?

மேலும், மதசார்பற்ற இந்திய திருநாட்டில் நீதி மான்களாக பதவி வகிப்பவர்கள், எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், மதசார்பற்றவர்களாக இருப்பவர்களாக மட்டுமன்றி தங்களின் நம்பிக்கை மற்றும் கொள்கை கோட்பாடுகளை தங்கள் வகிக்கும் பதவிகளில் அதனை திணிப்பவர்களாக இருக்கக்கூடாது. அவ்வாறு திணிப்பது மதசார்பற்ற இந்தியாவின் ஒற்றுமைக்கு களங்கத்தை ஏற்படுத்த வழி வகை செய்து விடும் என்பதை உணரக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்
நம்பிக்கைக் கொண்டோரே! அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களை தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை நன்கறிந்தவன் (அல்குர்ஆன்: 5:8)

நீதி வழங்குபவர்கள், நீதிமான்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகாக இந்த வசனத்தின் மூலம் எல்லாம் வல்ல ஏக இறைவன் படம் பிடித்துக் காட்டுகிறான். ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகையோ அல்லது வெறுப்போ அவர்கள் மீது நீதி வழங்குவதில் பாரபட்சம் காட்டக் கூடாது என அல்குர்ஆன் இயம்புகிறது. ஆனால் தங்களின் கடவுள் மற்றும் மத நம்பிக்கை, அடுத்தவர்களின் சொத்தை, உரிமையை பறித்து விட்டது தான் வேதனையான விஷயம்.

மேலும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது, யூதர் ஒருவர் வந்து, அபுல் காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்து விட்டார் என்று புகார் கூறினார். நபி(ஸல்) அவர்கள் (அந்த தோழர்) யார்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், அன்சாரிகளில் ஒருவர் என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், அவரை கூப்பிடுங்கள், என்று உத்தர விட்டார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன், இவரை நீர் அடித்தீரா? என்று கேட்டார்கள். அந்த அன்சாரி தோழர், இவர் கடை வீதியில் மனிதர்கள் அனைவரையும் விட மூசாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக! என்று ஆணையிட்டுக் கூறிக் கொண்டிருந்ததை நான் செவியுற்றேன். உடனே நான், தீயவனே! முஹம்மதை விடவா (மூசா மேன்மை வாய்ந்தவர்) என்று கேட்டேன். என்னைக் கோபம் ஆட்கொண்டு விட, இவரது முகத்தில் அறைந்து விட்டேன் என்று கூறினார். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரை விட உயர்த்திப் பேசாதீர்கள். ஏனெனில் மறுமை நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள். அப்போது பூமி பிளந்து வெளிப்படுத்துபவர்களில் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது நான் மூசாவை அர்ஷின் (இறை சிம்மாசனத்தின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பவராகக் காண்பேன். மூர்ச்சை அடைந்தவர் களில் அவரும் ஒருவராக இருந்தாரா? அல்லது (தூர்சீனா மலையில் இறைவனின் ஒளியை அவர் கண்டபோது அவர் அடைந்த) முதல் மூர்ச்சை கணக்கிலெடுக்கப்பட்டு (அதுவே போதுமென்று)இப்போது மூர்ச்சையடையத் தேவையில்லையென்று அவருக்கு விலக்களிக்கப்பட்டு விட்டதா என்று எனக்கு தெரியாது என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) புகாரி 2412).

இந்த நபிமொழியை கூர்ந்து கவனியுங்கள்! தன்னை விட மூசா(அலை) அவர்களை பெருமையாக பேசியவனை, தன்னை விரும்பும், இவர்கள் தான் அல்லாஹ்வின் தூதர் என்று நம்பிக்கை கொண்டவர் அடித்து விட, அவரின் நம்பிக்கை தான் முக்கியம் என்று பாராமல், மூசா (அலை) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் தான் என்று விளக்கமளித்து, இவ்வாறு செய்யக்கூடாது என்று அந்த அன்சாரி தோழரை கண்டித்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சரியான தீர்ப்பை வழங்கி ஒரு முன்மாதிரியாக உலகில் உள்ள அனைத்து நீதிபதிகளுக்கும், குறிப்பாக பாபர் மசூதி வழக்கில் சட்டத்தையும், உரிமையும் மதிக்காமல், தங்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் அநியாய தீர்ப்பளித்த நீதிபதிகளின் முன் நட்சத்திரமாக திகழ்கின்றார்கள். மேலும் ஒரு ஆட்சியாளர், நீதிமான் நீதி வழங்கும் விஷயத்தில் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை அழகாக படம் பிடித்து காண்பிக்கின்றார்கள்.

மக்ஸூமி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டாள். அப்போது குறைஷி குலத்தவர்கள்,தண்டணை கொடுக்கப்படாமல் இருப்பதற்காக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களின் செல்லப் பிள்ளையான உசாமாவை (அந்த பெண்ணுக்காக) பரிந்து பேச அல்லாஹ்வின் தூதரிடம் அனுப்பினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றின் விணயத்திலா (அதை நிறைவேற்றாமல் விட்டு விடுமாறு) நீ பரிந்துரைக்கிறாய்? என்று கேட்டு விட்டுப் பிறகு எழுந்து நின்று உரையாற்றினார்கள்.

மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயில்) மக்கள் வழிகெட்டுப் போனதற்கு காரணமே, (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடி விட்டால் அவர்கள் அவரை (தண்டிக்காமல்) விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடி விட்டால் அவர்கள் மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக!(இந்த)முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் முஹம்மத் அவரது கையைத் துண்டித்தே இருப்பார் (ஆயிஷா(ரலி) புகாரி 6787, 6788)

இன்றைய ஆட்சியார்கள், தங்களது ஆட்சி அதிகாரம் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமென் பதற்காகவும், தங்களுக்கு வேண்டியவர்களின் மனம் குளிர வேண்டுமென்பதற்காகவும் நீதியையும், சட்டத்தையும் அவர்களுக்கு தோதாக வளைப்பதை நாம் கண்கூடாக பார்த்தும் கண்டும் வருகிறோம்.

ஆனால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நீதி வழங்கும் விஷயத்தில் உயர்ந்த குலம், தாழ்ந்த குலம் என்ற பாராமல் நீதியை நீதியாக வழங்கியுள்ளதை காண முடிகிறது.

மேலும், பாபர் மசூதி நில வழக்கிலேயே அநியாயா தீர்ப்பு வழங்கியிருக்கும் வேளையில், முஸ்லிம்களின் இறையில்லத்தை இடித்து தரைமட்டமாக்கிய சங்பரிவார குற்றவாளிகள் குறிப்பாக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, கல்யான்சிங் போன்றவர்கள் தண்டிக்கப்படுவார்களா? அல்லது மாட்டார்களா? மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் நீதி கிடைக்குமா? என்கின்ற கேள்வி நடுநிலைவாதிகள் மத்தியில் சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி விட்டது என்றால் அது மிகையல்ல.

மேலும் இத்தகைய அநியாயக்காரர்களும், அநீதியிழைப்பவர்களும் இவ்வுலகம், இவ்வுலக மக்கள் அனைவரையும் படைத்த இறைவனின் முன் நிற்க வேண்டி வரும் என்பதை மறந்து விட வேண்டாம். மேலும் அவர்களை இறைவன் கண்டுக் கொள்ளவில்லை என்றும் எண்ண வேண்டாம்.

மகத்துவம் மிக்க கண்ணியவான் எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்:

மனிதர்களுடைய அநீதியின் காரணத்தால் அவர்களை தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள். (அல் குர்ஆன்: 16:61)

மேலும், தங்களின் ஆட்சியின் ஸ்திரத் தன்மைக்காக முஸ்லிம்களின் நண்பன் வேடம்பூண்டு அரசியல் நாடகமாடும் காங்கிரஸ் ஆட்சியில் தான் பாபர்மசூதி இழுத்து மூடப்பட்டது. ராமருக்கு வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.பள்ளிவாசல் இடிக்கப் பட்டது. இப்போது அந்த இடமும் தாரைவார்த்து சங்பரிவார கும்பலுக்கு தரப்பட்டுவிட்டது. இத்தகைய நடுநிலை தவறிய செயல்களை தொடர்ந்து செய்து வருமேயானால், தன்னுடைய நிலையினை மாற்றிக் கொண்டு நேர்மையாக நடக்க தவறினால், காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் ஏற்பட்ட நிலைதான் மத்தியிலும் ஏற்படும் என்பதை மட்டும் தற்போது சொல்லிக் கொள்கிறோம்.

மேலும் இத்தகைய நேர்மையற்ற தீர்ப்புகளால், இந்திய இறையாண்;மைக்கும், தேச ஒற்றுமைக்கும் பங்கம் எற்படும் என்பதை நடுநிலைவாதிகள் சிந்தித்து, சீர்தூக்கிப் பார்த்து, இத்தகைய அநீதிகளுக்கு எதிராக அணி திரள வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாகும்.

நன்றி: துபை TNTJ