செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

பெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி?

பெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி?

நவீன உலகத்தில், கருவறையில் வளரும் சிசு ஆணா? பெண்ணா? என அறிந்து பெண்ணாயிருப்பின் அதைக் கருவிலேயே சமாதி கட்டும் கொடூரம் நடந்து வருவதை நாமெல்லாம் செய்தித் தாள்கள் வாயிலாக அறிந்து வருகிறோம்.

சட்டம் இதை வன்மையாகக் கண்டித்தாலும் இக்கொடுஞ்செயலைச் செய்யும் கொடூர மனப்பான்மையுடையவர்கள் இருக்கத் தான் செய்கின்றனர். இக்கொடூரத்தைத் தடுக்க 'தொட்டில் குழந்தைத் திட்டம்' என்ற திட்டத்தை தமிழக அரசு 1992ஆம் ஆண்டு தொடங்கியது.

பெண் குழந்தையைப் பெற்றெடுத்தவர்கள் அக்குழந்தையை வளர்க்க விரும்பவில்லையெனில் அரசுத் தொட்டி­ல் போட்டு விட்டுச் செல்லலாம். இக்குழந்தைகளை அரசு பராமரிப்பது மட்டுமின்றி, தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் விரும்புவோருக்கு தத்துக் கொடுக்கிறது.

இத்திட்டங்கள் எல்லாம் இருந்தும் தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டமான தருமபுரி மாவட்டத்தில் 2001ஆம் ஆண்டு மட்டும் 178 பெண் சிசுக் கொலைகள் நடந்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

பெண் குழந்தைகளை சாக்கடைகளிலும் குப்பை தொட்டிகளிலும் வீசும் அவலமும் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது.

இது மட்டுமில்லாமல் இந்த இளம் பெண் குழந்தைகளுக்கு வாயில் நெல்லைக் கொடுத்துக் கொல்லும் கொடூரமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இவற்றையெல்லாம் சட்டங்களால் மட்டும் தடுக்க இயலுமா? வேறு வழிகள் உள்ளனவா? என ஆராய்ந்தால் இஸ்லாமிய மார்க்கம் மிகச் சிறப்பான வழிகளை சொல்­க் காட்டுகிறது.

குழந்தைகள் இறைவனின் வரம்

முதலாவதாக, குழந்தைகள் என்பது ஆணாயினும் பெண்ணாயினும் அது இறைவன் கொடுத்த வரம் என்ற எண்ணம் வர வேண்டும். இந்த எண்ணத்தை இஸ்லாம் வலுவாக ஊட்டுகின்றது.

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன். (அல்குஆன் 42:49, 50)

இறை வரத்தைப் பற்றிக் கேள்வி உண்டு

குழந்தை இறைவனுடைய வரம் என்று மட்டும் போதிக்காமல் இந்த அருட்கொடை மட்டுமின்றி எந்த அருட்கொடையானாலும் அவற்றைப் பற்றி மறுமையில் கேள்வி கேட்கப்படும் எனவும் இஸ்லாமிய மார்க்கம் போதிக்கிறது.

பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள். (அல்குஆன் 102:8)

''உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள்.

தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார்.

ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப்படுவான்.

ஒரு பெண் கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள்.

ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவான்.

ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான்'' என் நபி(ஸல்) அவர்கள் கூறினர்கள். அறிவிப்பவா: இப்னு உமர் (ர­லி) நூல்: புகாரி (2409)

உயிருடன் கொல்லப்படும் சிசுக்களைப் பற்றி மறுமையில் விசாரணை உண்டு

பொதுவாகவே இஸ்லாமிய மார்க்கம் ஓர் உயிரை நியாயமின்றிக் கொல்வதைப் பெரும் பாவமாகக் கருதுகிறது.

ஒருவர், ''இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகவும் பெரியது?'' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ''அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணை கற்பிப்பதாகும்'' என்று கூறினார்கள். அந்த மனிதர், ''பிறகு எது?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''அடுத்து உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன்னுடைய உணவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொலை செய்வதாகும்'' என்றார்கள். அந்த மனிதர், ''பிறகு எது?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் புரிவதாகும்'' என்று கூறினார்கள்.

அப்போது நபியவர்களின் இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் வ­வும் மாண்பும் உடைய அல்லாஹ் ''அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான்'' எனும் (திருக்குர்ஆன் 25:68வது) வசனத்தை அருளினான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ர­லி) நூல்: புகாரி (4761)

இஸ்லாமிய மார்க்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்குப் போதித்த காலத்தில், பெண் குழந்தைகள் உயிருடன் புதைக்கப்பட்டனர். இவ்வாறு புதைக்கப்படும் இளம் பிஞ்சுகளைப் பற்றி மறுமையில் விசாரிக்கப்படும் என்ற எச்சரிக்கையை இஸ்லாமிய மார்க்கம் மக்களிடம் கூறியது.

என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது, (அல்குஆன் 81:8, 9)

பெண் குழந்தைகளைப் பராமரித்தால் வெகுமதி உண்டு

இவ்வாறு வெறும் தண்டனைகளைப் பற்றி மட்டும் எச்சரிக்காமல் பெண் குழந்தைகள் பிறந்தால் அதை நல்லபடி பராமரிக்கும் பெற்றோருக்கு மறுமையில் சொர்க்கம் என்ற உயாந்த பாக்கியம் கிடைக்கும் எனவும் இஸ்லாமிய மார்க்கம் போதிக்கிறது.

ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவளிடம் கொடுத்தேன். அவள் அதை இரண்டாகப் பங்கிட்டு இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டாள். அவள் அதி­ருந்து சாப்பிடவில்லை. பிறகு அவள் எழுந்து சென்று விட்டாள். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும், ''இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகிறாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்தி­ருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி) நூல்: புகாரி (1418, 5985)

மனித சட்டங்கள் எவ்வளவு தான் கடுமையாக இருந்தாலும் அதை மீறுவதற்கும் அதிலுள்ள ஓட்டைகளைக் கொண்டு தப்பிப்பதற்கும் தான் மனிதன் முயலுகிறான் என்பது யதார்த்த உண்மை. எனவே இறைவனைப் பற்றிய பயமும், மறுமை அச்சமும் இருந்தால் தான் பெண் சிசுக் கொலை என்ற கொடூரம் மட்டுமில்லாமல் அனைத்துக் கொடுமைகளையும் ஒழிக்க இயலும்.

வரதட்சணை என்ற பேய், சமுதாயத்தில் மிகவும் அதிகமாகப் புரையோடி இருப்பதாலும் பெண் சிசுக் கொலைகள் நிகழ்வதாகச் செய்திகள் கூறுகின்றன. இவ்வாறு பெண் சிசுக் கொலைக்கு வழிகோலும் வரதட்சணை என்ற கொடுமையைச் செய்யும் ஆண்களும் மேலே கூறப்பட்ட 81:8, 9 வசனங்களின் படி வல்ல இறைவனால் கேள்வி கேட்கப்படுவார்கள்.

ஒரு புறம் பெண்ணுரிமை என்ற மாய ஜால கோஷங்களைப் பயன்படுத்திக் கொண்டு இது போன்ற கொடுமைகளைத் தடுக்க முடியாமல் அல்லது பார்த்தும் மவுனம் சாதித்துக் கொண்டிருப்போரின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் இஸ்லாம் சொல்கின்ற நியதிகளின் படி வாழ்ந்தால் தான் நிம்மதி என்பதை இஸ்லாமிய பெண்கள் உணர வேண்டும்.

- தீன்குலப் பெண்மணி, பிப்ரவரி 2008