செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

பெருகிவரும் பயங்கரவாதம்

பெருகிவரும் பயங்கரவாதம்

உலகம் முழுவதும் பயங்கரவாதம் பெருமளவில் பெருகி வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுப்பதாக அனைத்து நாடுகளும் கூறி வந்தாலும் நாளுக்கு நாள் பயங்கரவாதம் அதிகரித் துள்ளதே தவிர குறையவில்லை. சமீபத்தில் நடந்திருக்கும் குண்டு வெடிப்புகள் இதற்குத் தெளிவான சான்று. 

மதம், மொழி, நிறம் ஆகியவற்றாலும், தான் மட்டுமே இவ்வுலகை ஆள வேண்டும், தனக்கு கட்டுப்பட்டு அனைத்து நாடுகளும் இருக்க வேண்டும் என்ற சர்வாதிகாரப் போக்கினாலும் பயங்கரவாதம் பெருமளவில் ஏற்படுகிறது. 

இந்தப் பயங்கரவாதத்தினால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதற்கு சமீபத்தில் நடந்த சில நிகழ்ச்சிகளை எடுத்துப் பார்ப்போம். 

மும்பையில் ரயி­ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் யார்? எதுவும் அறியாத அப்பாவி பொதுமக்கள். அன்றாடம் வேலைக்குச் சென்று வரும் சாதாரண மக்கள் 200 நபர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். 700க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் அனைவரும் அடக்கம். 

இதைப் போன்று காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் பேருந்தில் குண்டு வெடித்து அதில் பயணம் செய்த பெரும்பாலான அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இலங்கையில் பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்தில் குண்டு வெடித்து இளம் தளிர்கள் கருகிப் போனார்கள். சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தினரை கண்மூடித் தனமாக சுட்டதில் குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 

இஸ்ரேல் ராணுவத்தினர் இருவரை பிடித்துச் சென்றதால் லெபனான் மீது கடும் தாக்குதலை இஸ்ரேல் துவக்கி ஆயிரகக் கணக்கான அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்து வருகிறது. உலக நாடுகள் இஸ்ரேல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகின்றன. 

இப்படி ஏராளமான உதாரணங் களை சொல்லலாம். இப்படிப் பொதுமக்களை கொன்று குவிக்கும் இந்தப் பயங்கர வாதம் அடியோடு ஒழிக்கப்படாதா? 

பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டுமானால் பயங்கர வாதத்தில் ஈடுபடுவோர் மீதும், ஈடுபடும் நாட்டின் மீதும் நேர்மையான முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாருக்கும் தயவு, தாட்சண்யம் காட்டக் கூடாது. பொதுமக்களும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பயங்கர வாதத்திற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை அடியோடு ஒழிப்பதற்கு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

மேலும் இளைஞர்களை மூளைச் சலவை செய்யும் இயக்கங்கள் விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தப் பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுவோர் அப்பாவிப் பொது மக்கள் என்பதை அனைவருக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும் எந்த மதமும் பயங்கரவாதத்தைத் தூண்டவில்லை, ஆதரிக்கவில்லை என்பதை ஆன்மீகத் தலைவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விளக்கி, பயங்கரவாதிகளிடம் செல்லும் இளைஞர்களைத் தடுக்க வேண்டும்.

பயங்கரவாதத்திற்கு எதிராக உடனடியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் அது நம்மையும் தாக்கும் காலம் தூரத்தில் இல்லை என்பதை சிந்தியுங்கள்.

'ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' (அல்குர்ஆன் 5:32)

நன்றி: துபை TNTJ