செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

பெற்றோரின் மகிமை


பெற்றோரின் மகிமை

அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணி முடியாது. (அல்குர்ஆன் 14:34)

அல்லாஹ் இந்த மனித சமுதாயத்துக்கு எண்ணற்ற அருளைச் செய்துள்ளான். இந்த அருளில் உள்ளது தான் ஒவ்வொரு குழந்தைக்கும் இறைவன் கொடுத்துள்ள பெற்றோர் எனும் பாக்கியம். அந்த அருளையும் அதன் உன்னதத் தன்மையையும், மகிமையையும் உணர்த்தவே இந்தக் கட்டுரை.

இஸ்லாமிய மார்க்கம், பெற்றோரின் மதிப்பைப் பிள்ளைகளுக்கு உணர்த்தும் போது பின்வருமாறு கூறுகின்றது.

''என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக! (அல்குர்ஆன் 17:23)

இந்த வசனத்தில் அல்லாஹ் தனக்கு அடுத்தபடியாகப் பெற்றோரை முன்வைக்கின்றான். காரணம் பெற்றோர் முதுமை அடைவதற்கு முன் நம்மை முன்னேற்றப் பாடுபடுவார்கள். இதுவரை தனது உழைப்பு, திறமை அனைத்தையும் நமக்காகச் செலவிட்டார். இப்போது அவருக்கு இந்த முதுமை ஏற்பட்டதற்கு அவரது வயது மட்டும் காரணமல்ல. அவரது உடல் உழைப்பும் ஒரு காரணம்.

இப்படி எல்லா வகையிலும் முதுமையை அடைந்த உன் பெற்றோரைப் பார்த்து சீ என்று சொல்­ விடாதே! ஏனெனில் குழந்தைப் பருவத்தில் எதுவுமே அறிய முடியாத நிலை இருக்கும். அந்த நேரத்தில் நீ செய்த அசுத்தங்களையும் இன்னல்களையும் பொறுத்துக் கொண்டார்கள். அதே பெற்றோர்கள் முதுமையை அடையும் போது நீ எவ்வாறு குழந்தைப் பருவத்தில் நடந்து கொண்டாயோ அதே நிலை அவர்களுக்கும் உருவாகும் தருணமே அந்த முதுமைப் பருவம்.

அப்போது நீ அவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். ஏனெனில் உன்னைக் கருவில் சுமக்கும் போது பல இன்னல்களையும் சேர்த்தே சுமந்தாள். அவளின் இயற்கையான பழக்க வழக்கங்கள் மாறி விடும். நீ நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மருத்துவரிடம் சென்று சிகிச்சை செய்வாள். சாப்பிட முடியாமலும், இரவில் தூங்க முடியாமலும், நிம்மதியாக திரும்பியோ, நிமிர்ந்தோ படுக்க முடியாமலும் அடிக்கடி எழுந்தும் சிரமப்படுவாள். இவ்வாறு பல இன்பங்களை இழந்து சிரமப்பட்டு உன்னைச் சுமந்தாள். இதைப் பற்றி அல்லாஹ் கூறும் போது,

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வ­யுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். (அல்குர்ஆன் 31:14)

மேலும் ஒவ்வொரு தாய்மார்களும் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் போது மரணத்தைத் தழுவி விட்டுத் திரும்புகின்றார்கள். இதை மர்யம் (அலை) அவர்களின் சம்பவத்தி­ருந்து அறியலாம்.

பிரசவ வ­ அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப் பாகத்திற்குக் கொண்டு சென்றது. ''நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப் பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 19:23)
அந்தத் தாய் குழந்தையைப் பெற்றெடுப்பதற்குள் அவள் படும் சிரமங்களைப் பார்த்து அக்குழந்தையின் தந்தை ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைப்பார். பிரசவ நேரத்தில் தாய், சேய் இரண்டில் எதை இழந்தாலும் அவர் நஷ்டப்படுவார். இந்தச் சோதனையை ஒவ்வொரு தந்தைமாரும் அனுபவிப்பார்கள்.

அதிலும் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வெளிநாடுகளில் பணி புரியும் தந்தைகளின் நிலை இன்னும் மோசம். தன் வேலையிலும் கவனம் செலத்த முடியாமல் தன் மனைவி, குழந்தைக்கு என்ன நடந்ததோ? எப்படி இருக்கிறார்களோ? என்று எண்ணி அவர் பெரும் அவஸ்தைப்படுவார்.

மேலும் குழந்தையைப் பெற்றெடுப்பதுடன் தாய்மார்களின் கடமை முடிந்து விடாது. மேலும் மேலும் சிரமங்கள் தொடரும். தாய்ப்பால் ஊட்டும் கடமை அவள் மீது சுமத்தப்படும்.

அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (அல்குர்ஆன் 31:14)

இவ்வாறாக ஒவ்வொரு தாய்மாரும் கருவுற்றது முதல் பெற்றெடுத்து, பால் குடி நிறுத்தும் வரை ஆக முப்பது மாதங்கள் சிரமப்படுகின்றார்கள்.

தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வ­யுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள். அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும் போது ''என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்­ம்களில் ஒருவன்'' என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 46:15)

மேலும் அந்தக் குழந்தையைப் பேணிப் பராமரித்து வளர்க்க வேண்டிய கடமை, நேர்வழியைப் போதிக்க வேண்டிய கடமை அதன் பெற்றோருக்கு உண்டு. ஏனெனில் ஒவ்வொரு பெண்ணும் அவளது குழந்தைக்குப் பொறுப்பாளி என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

''உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்வை குறித்து விசாரிக்கப்படுவான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின்உமர்(ரலீ) நூல்: புகாரீ 5200

என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும். மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். ''நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப் பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும். (அல்குர்ஆன் 31:17,18,19)

தாய், சேய் ஆகியோரைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு தந்தையைச் சேர்கின்றது. இந்தக் கடமை அவர்களுக்கு இருப்பதால் அதற்கான சம்பாத்தியத்திற்காகக் கூடுதலான சிரமம் எடுத்து வேலை பார்ப்பார்கள்.

இந்தச் சிரமங்களைத் தன் மனைவி மக்கள் பார்த்து சங்கடப்படக் கூடாது என்பதற்காக வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் போய் வேலை பார்ப்பார்கள். இவ்வாறு பிள்ளைக்காக பெற்றோர் மெழுகுவர்த்தியைப் போல் உருகி, பிள்ளைகளின் வாழ்வில் ஒளியை வீசுகின்றார்கள்.

இவ்வாறு தாய், தந்தை இருவரும் நமக்காகவே வாழ்பவர்கள். இதனால் அவர்களோடு அதிகமாக நட்பு பாராட்ட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதை யானவர் யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''உன் தாய்'' என்று கூறினார்கள். ''பிறகு யார்?'' என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''உன் தாய்'' என்றார்கள். ''பிறகு யார்?'' என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''உன் தந்தை'' என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரி 5971

மேலும் பெற்றோருக்கு நன்மை செய்வது அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது.

''அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் எது?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது, ''தொழுகையை அதன் நேரத்தில் தொழுவதாகும்'' என்று பதிலளித் தார்கள். ''அதற்கு அடுத்தது எது?'' என்றேன். ''பெற்றோருக்கு நன்மை செய்தல்'' என்றார்கள். ''அதற்கு அடுத்தது எது?'' என்றேன். ''அல்லாஹ்வின் பாதையில் போர் புரிதல்'' என்றனர். இவற்றை (மட்டுமே) நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். (கேள்வியை) மேலும் நான் அதிகப் படுத்தியிருந்தால் நபி (ஸல்) அவர்கள் மேலும் சொல்­யிருப்பார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ர­லி) நூல்: புகாரி 527

இவ்வாறு பெற்றோர்களை இஸ்லாம் கண்ணியப்படுத்துகின்றது. அவர்களின் தியாகம், பிரதிபலன் எதிர்பாராமல் தன் கடமைகளைச் சரியாகச் செய்து நம்மைக் கண்ணியப்படுத்தியதற்காக நாமும் இஸ்லாம் சொல்லும் வழியில் கண்ணியப்படுத்தி மறுமையில் சுவனத்தைப் பெறுவதற்கான உரிய வழியைத் தேட வேண்டும்.

இதற்கு முற்றிலும் மாற்றமாக சிலர் பெற்றோரின் தியாகங்களைக் கொச்சைப்படுத்தியும், அவர்கள் மனம் புண்படும் படியாகப் பேசியும், தொல்லைகள் கொடுத்தும் வருகின்றனர். பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி விட்டால் நாம் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைக்கின்றனர். இவ்வாறு பெற்றோருக்கு நோவினை செய்வோருக்கு நரகம் என்று இஸ்லாம் கூறுகின்றது.

''மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (நாசமாகட்டும்)'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! யார்?'' என்று கேட்ட போது, ''பெற்றோரில் இருவரோ அல்லது ஒருவரோ இருந்து (அவர்களுக்குப் பணிவிடை செய்வதன் மூலம்) சொர்க்கம் செல்லாதவன்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரி 4627
எனவே இஸ்லாம் கூறுவது போன்று பெற்றோரைக் கண்ணியப்படுத்தி அதன் மூலம் நன்மைகளைப் பெற்று சுவனத்தை அடைவோமாக! வல்ல அலர்லாஹ் அதற்கான அருளை நம்மீது பொழிவானாக!

நன்றி: துபை TNTJ