வியாழன், 5 மார்ச், 2015

அண்டை வீட்டாரின் உரிமைகள்

அண்டை வீட்டாரின் உரிமைகள்

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதை களுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டாருக்கும், உறவினரல்லாத அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 4:36) 

மூன்று வகை அண்டை வீட்டார்

''அண்டை வீட்டார் மூன்று வகைப்படுவர். 1. ஒரேயொரு உரிமையுள்ள அண்டை வீட்டார். இவர் முஸ்லிமல்லாத அண்டை வீட்டார். அவருக்கு அண்டை வீட்டார் என்று உரிமை மட்டும் உள்ளது. 2. இரண்டு உரிமைகள் உள்ள அண்டை வீட்டார். இவர் முஸ்லிமான அண்டை வீட்டார். இவருக்கு அண்டை வீட்டார் உரிமையும், இஸ்லாமிய மார்க்க உரிமையும் உண்டு. 3. மூன்று உரிமைகள் உள்ள அண்டை வீட்டார். இவர் முஸ்லிமாகவும் உறவினராகவும் உள்ளவர். இவருக்கு அண்டை வீட்டடார் என்ற உரிமையும் இஸ்லாமிய மார்க்க உரிமையும் உறவுக்காரர் என்ற உரிமையும் உண்டு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)நூல்: தப்ரானீ அவர்களுக்குரிய முஸ்னதுஷ் ஷாமியீன், பாகம்: 7, பக்கம்: 185) 

கண்ணியப்படுத்துங்கள்!

''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாரை கண்ணியப் படுத்தட்டும்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரீ (6019) 

இறைவனின் அன்புக்கு அழகிய வழி

''அல்லாஹ்வும் அவன் தூதரும் விரும்புவது யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர், தம் அண்டை வீட்டாரிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அபீ குராத் (ரலி) 
நூல்கள்: ஷுஅபுல் ஈமான்லிபைஹகீ (1502), ஹக்குல் ஜார், பக்கம்: 6. 

நபிகளாரின் இறுதி அறிவுரை

நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது ''நான் அண்டை வீட்டாரிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்'' என்று அதிகமாகக் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) 
நூல்: அல்முஃஜமுல் கபீர்லிதப்ரானீ, பாகம்: 8, பக்கம்: 111 

யார் முஸ்லிம்?

அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் முஸ்லிமாக இருப்பவன் அண்டை வீட்டாருக்கு நலம் நாடுபவனாக இருப்பான். 

''உன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டாருக்கு நன்மை செய்! நீ முஸ்லிமாவாய்'' என்று நபிகளார் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 

உதவுங்கள்

''அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: இப்னுமாஜா (4207) நூல்: புகாரீ (6014) 

குழம்பில் தண்ணீரை அதிகப்படுத்துங்கள்

''அபூதரே! நீ குழம்பு வைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்து! உன் பக்கத்து வீட்டாரை (அதைக் கொடுத்து) கவனித்துக் கொள்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
நூல்: புகாரீ (6014) 

அற்பமானது என்று கொடுக்காமல் இருந்து விடாதீர்!

நாம் அண்டை வீட்டாருக்கு வழங்கும் பொருள் தரம் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையில்லை. சாதாரண பொருளாக இருந்தாலும் அதை வழங்க வேண்டும். கொடுப்பவரும் வாங்குபவரும் அதை அற்பமாகக் கருதக் கூடாது. 

''முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ (2566) 

அன்பளிப்புச் செய்வதில் முதலிடம்

ஒருவருக்கு மட்டுமே அன்பளிப்புச் செய்ய முடியும், குறைவான பொருட்களே இருக்கின்றன என்றால் அண்டை வீட்டாரில் நம் வீட்டு வாசலுக்கு யார் பக்கத்தில் இருக்கிறாரோ அவருக்கு வழங்க வேண்டும். 

''அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு'' என்றார்கள். 
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: புகாரீ (2259 

சிறந்ததைத் தேர்வு செய்யுங்கள்

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையான வற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! 
(அல்குர்ஆன் 2: 267) 

''எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! தமக்கு விரும்பியதை தன் அண்டை வீட்டாருக்கு அல்லது தன் சகோதரனுக்கு விரும்பாத வரை ஒரு அடியான் (உண்மையான) நம்பிக்கை கொண்டவனாக மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம் (71) 

தான் மட்டும் வயிறார சப்பிட மாட்டான்

பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் உணவுக்கு வழியில்லாமல் இருக்கும் போது, பசியோடு இருக்கும் போது தான் மட்டும் வயிறு புடைக்கச் சாப்பிடுவது முஃமினுக்கு அழகல்ல! அண்டை வீட்டில் இருப்பவருக்கு வழங்கி விட்டுச் சாப்பிடுவது தான் இறை நம்பிக்கை உள்ளவனின் செயலாக இருக்கும். 

''தன் அண்டை வீட்டாரை விட்டு தான் (மட்டும்) வயிறு நிரம்ப ஒருவன் சாப்பிட மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: உமர் (ரலி) நூல்: அஹ்மத் (367) 

'முஸ்னத் அபூயஃலா' என்ற ஹதீஸ் நூலில் அண்டை வீட்டார் பசியோடு இருக்கும் போது வயிறார சாப்பிடுபவன் முஃமின் அல்லன்! என்று நபிகளார் கூறியதாக இடம் பெற்றுள்ளது. 

மரப் பலகை அடித்தல்

''ஒருவர் தன் (வீட்டுச்) சுவரில் தன் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை பதிப்பதைத் தடுக்க வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹுரைரா (ரலி) சொல்லி விட்டு ''என்ன இது! உங்களை இதை (நபிகளாரின் கட்டளையைப்) புறக்கணிப்பவர்களாக நான் பார்க்கின்றேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த நபி வாக்கைத் தொடர்ந்து எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருப்பேன்'' என்று கூறினார்கள். 
அறிவிப்பவர்: அல்அஃரஜ் நூல்: புகாரீ (2463) 

வீட்டை விற்றல்

நமது வீட்டை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் முதலில் அண்டை வீட்டாரிடம், விலைக்கு வாங்கிக் கொள்கிறீர்களா? என்று கேட்க வேண்டும். அவர் தேவை இல்லை என்றால் மட்டுமே மற்றவரிடம் விற்பனை செய்ய வேண்டும். இதுவும் அண்டை வீட்டாருக்கு இருக்கும் உரிமைகளில் ஒன்றாகும். 

நான் ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடம் தங்கியிருந்தேன். அப்போது மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் வந்து, தமது கையை எனது தோள் புஜங்களில் ஒன்றில் வைத்தார்கள். அப்போது (அடிமையாயிருந்து) நபி (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அபூராஃபிவு (ரலி) அவர்கள் வந்து ''ஸஅதே! உமது வீட்டிலுள்ள எனக்குச் சொந்தமான இரண்டு அறைகளை என்னிடமிருந்து வாங்கிக் கொள்வீராக!'' எனக் கூறினார்கள். அதற்க ஸஅத் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவற்றை நான் வாங்க மாட்டேன்'' என்றார்கள். அருகிலிருந்த மிஸ்வர் (ரலி) அவர்கள், ஸஅத் (ரலி) அவர்களிடம் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீர் வாங்கிக் கொள்ளத் தான் வேண்டும்'' என்றார்கள். அப்போது ஸஅத் (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! தவணை அடிப்டையில் நாலாயிரம் வெள்ளிக் காசைத் தவிர உமக்கு அதிகமாகத் தர மாட்டேன்'' என்று கூறினார்கள். அதற்கு அபூராஃபிவு (ரலி) அவர்கள் ''ஐநூறு தங்கக் காசுகளுக்கு அது கேட்கப்பட்டுள்ளது. ''அண்டை வீட்டில் இருப்பவர் அண்மையில் இருப்பதால் அவரே அதிகம் உரிமை படைத்தவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுறாவிட்டால் ஐநூறு தங்கக் காசுக்குக் கேட்கப்பட்டதை நாலாயிரம் வெள்ளிக் காசுக்கு உமக்கு விற்க மாட்டேன்' என்று கூறி விட்டு ஸஅதுக்கே விற்றார். 
அறிவிப்பவர்: அம்ர் பின் ஷரீத் நூல்: புகாரீ (2258) 

தொல்லை தருதல்

வீட்டில் ரேடியோ டேப்ரிக்கார்டர், டி.வி. போன்றவற்றை வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் அல்லது ஓய்வு நேரங்களில் அண்டை வீட்டாருக்குக் கடும் சப்தத்தை ஏற்படுத்தி தொல்லை தருவது, அல்லது சண்டையிட்டுக் கொண்டு அடுத்தவர் உறக்கத்தைக் கெடுப்பது என்று எந்த வகையிலும் அண்டைவீட்டாருக்குத் தொல்லை தரக்கூடாது. 

''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தன் அண்டை வீட்டாருக்குத் தொந்தரவு தரவேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (5187) 

அண்டைவீட்டாருக்குத் தொல்லை தருபவன் உண்மையான முஃமினாக இருக்கமாட்டான் என்பதை இந்த நபிமொழி மிகத் தெளிவாக விளக்கிறது. 

''அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்'' என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள கூறினார்கள். ''அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்'' என்று பதிலளித்தார்கள். 

சிறந்ததைத் தேர்வு செய்யுங்கள்

எவனுடைய நாசவேலைகளிலிருந்து அண்டைவீட்டார் பாதுகாப்பு பெறவில்லை அவர் சுவர்க்கம் செல்லமுடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: 
அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (73) 

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஒரு பெண்மணி அதிகம் தொழுகை, நோன்பு, தர்மம் செய்பவளாக கருதப்படுகிறாள் ஆனால் அவள் அண்டைவீட்டாருக்கு தன் நாவால் தொல்லை தருகிறாள். (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'இவள் நரகில் இருப்பாள்' என்றார்கள். இன்னொரு பெண்மணி குறைந்த நோன்பு, தர்மம், தொழுகை உடையவளாக இருக்கிறாள் என்று கருதப்படுகிறாள். அவள் தர்மம் செய்தால் வெண்ணைத் துண்டுகளைத்தான் தர்மம் செய்வாள். ஆனால் அவள் அண்டை வீட்டாருக்கு நாவால் தொல்லை தருவதில்லை. (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவள் சுவர்க்கத்தில் இருப்பாள் என்றார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் (9298) 

ஒரு அடியானின் ஈமான் சரியாகாது, அவனுடைய உள்ளம் சரியாகும் வரை. அவனுடைய உள்ளம் சரியாகாது அவனுடைய நாவு சீராகும் வரை. யாருடை அண்டைவீட்டார் அவனின் நாசவேலையிலிருந்து பாதுகாப்புபெறவில்லையோ அந்த மனிதன் சுவர்க்கம் போக முடியாது என்று நபிகளார் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: அஹ்மத் (12575) 

மாபெரும் குற்றம்

நான் நபி (ஸல்) அவர்களிடம் ''அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப்பெரியது எது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணைகற்பிப்பது'' என்று சொன்னார்கள். நான், ''நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம்தான்'' என்று சொல்லிவிட்டு ''பிறகு எது?'' என்று கேட்டேன். ''உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குப்போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது'' என்று சொன்னார்கள். நான், ''பிறகு எது?'' என்று கேட்க, அவர்கள், ''உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது'' என்று சொன்னார்கள். 
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: புகாரீ (4477) 

நீங்கள் விபச்சாரத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? என்று தம் தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவன் தூதரும் தடைசெய்த ஒன்றாகும். இது மறுமைநாள்வரை ஹராமாகும் என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம்'' ஒருவன் பக்கத்து வீட்டு ஒரு பெண்ணிடம் விபச்சாரம் செய்வதை விட (மற்ற) பத்துபெண்களிடம் விபச்சாரம் செய்வது (தண்டனையில்) லேசானதாகும்'' என்று கூறினார்கள். திருட்டைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, 'அதை அல்லாஹ்வும் அவன் தூதரும் தடைசெய்துள்ளார்கள். எனவே அது ஹராமாகும்' என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஒருவன் பக்கத்து வீட்டில் திருடுவதை விட (மற்ற) பத்து வீட்டில் திருடுவது (தண்டனையில்) லேசானதாகும்'' என்று கூறினார்கள். 
அறிவிப்பவர்: அல்மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி), நூல்: அஹ்மத் (22734) 

தன் அண்டைவீட்டாருடன் தொடர்புள்ள எத்தனையோ பேர், அல்லாஹ்விடம் என் இறைவா! இவன் என்னை (வீட்டுக்குள்) விடாமல் கதவை தாளிட்டுக் கொண்டான், நல்லதை (எனக்கு தராமல்) தடுத்தான் என்று மறுமைநாளில் கூறுவான். 
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: அதபுல் முஃப்ரத் (111)

நன்மையான காரியங்களில் கூட்டாக செயல்படுங்கள்

நானும் அன்சாரித் தோழர்களில் ஒருவரான எனது அண்டை வீட்டுக்காரரும், உமைய்யா பின் ஜைத் என்பாரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். அது மதீனாவின் உயரமான இடங்களில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்களுடைய அவைக்கு நாங்கள் முறைவûத்துச் சென்று வந்தோம். ஒரு நாள் அவர் செல்வார். ஒரு நாள் நான் செல்வேன். 
அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: புகாரீ (89) 

நண்பர்களில் அல்லாஹ்விடம் சிறந்தவர் தம் நண்பர்களிடம் சிறந்தவர்களாக இருப்பவர்களே! பக்கத்து வீட்டாரில் அல்லாஹ்விடம் சிறந்தவர், தம் பக்கது வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர் :அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: திர்மிதீ (1867) 

நல்ல அண்டைவீட்டார்

நல்ல அண்டைவீட்டார் அமைவது, நல்ல வாகனம் கிடைப்பது, விசாலமான வீடு இருப்பதும் ஒரு மனிதனின் நற்பேறில் உள்ளதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
நூல்: அஹ்மத் (14830) 

தொல்லையை பொறுத்துக் கொள்ளுங்கள்

ஒரு மனிதனுக்கு தொல்லை தரும் அண்டைவீட்டார் இருக்கிறார்கள். அவரோ அவரின் தொல்லைகளை பொறுத்துக் கொண்டால் அல்லாஹ் அவரின் வாழ்வு, சாவுக்கு போதுமானவானாக இருப்பான் என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள். (நூல்: ஹாகிம் 2446)