ஞாயிறு, 8 மார்ச், 2015

செல்வம் ஒரு சோதனையே

செல்வம் ஒரு சோதனையே

பெண்கள், ஆண் மக்கள், திரட்டப் பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய மன விருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது. 
(அல்குர்ஆன் 3:14) 

உங்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் சோதனை என்பதையும், அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! 
(அல்குர்ஆன் 8:28) 

ஆதமின் மகனுக்கு ஒரு நீரோடை நிறைய பொன் வழங்கப்பட்டாலும் அதனுடன் இரண்டாவது நீரோடை கிடைக்க வேண்டுமென விரும்புவான். இரண்டாவது நீரோடை அவனுக்கு வழங்கப்பட்டால் அதனுடன் மூன்றாவது கிடைக்க வேண்டுமென்று அவன் விரும்புவான். ஆதமுடைய மகனுடைய வயிற்றை மண்ணைத் தவிர வேறெதுவும் மூடாது. மேலும் (மேற்கண்ட பேராசை போன்ற பாவங்களிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) நூல்: புகாரி 6438 

''மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன. 1. பொருளாசை, 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 6421 

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை 

''ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனையுண்டு. என்னுடைய சமுதாயத்திற்குச் செல்வம் சோதனையாகும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: கஅப் பின் இயாஸ் (ரலி) நூல்கள்: திர்மிதீ 2258, அஹ்மத் 16824 

''அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டு அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட அது (மறுமையின் எண்ணத்திலிருந்து) அவர்களின் கவனத்தைக் திருப்பி விட்டதைப் போன்று உங்களின் கவனத்தையும் அ(ந்த உலகாசையான)து திருப்பி விடுமோ என்று தான் நான் அஞ்சுகிறேன்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) நூல்: புகாரி 6425 

தொழுகையை விட்டுத் திசை திருப்பும் செல்வம் 

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள். 
(அல்குர்ஆன் 63:9) 

தடுக்கப்பட்ட செயல்களை செய்யத் தூண்டும் 

''தாம் சம்பாதித்தது ஹலாலா? ஹராமா? என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் வரும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 2059 

மார்க்கம் தடை செய்த வியாபாரத்தைச் செய்து அதன் மூலம் இவ்வுலகில் இலட்சாதிபதிகளாக வாழ்ந்தாலும் மறுமையில் இறைவனிடமிருந்து தப்ப முடியாது. 

''ஒருவன் தன் செல்வத்தை எங்கிருந்து சம்பாதித்தான்? எப்படிச் செலவழித்தான் என்று விசாரணை செய்யப்படாமல் அவனின் இரு பாதங்களும் (மறுமை நாளில் அவன் நிற்கும் இடத்தை விட்டு) நகர முடியாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) நூல்கள்: திர்மிதீ 2341, தாரமி 536 

செல்வரும் முன்னே! பெருமை வரும் பின்னே! 

அவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன் உதவி பெறுபவனாகவும் இல்லை. 
(அல்குர்ஆன் 28:81) 

''தமது உள்ளத்தில் கடுகளவு இறை நம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு பெருமை உள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: முஸ்லிம் 148 

உறவினர்களை உதாசீனப்படுத்துதல் 

பணம் படைத்தவர்கள் தங்களுடைய அந்தஸ்திற்கு ஏற்றாற் போல் உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஏழை உறவினர்களைப் புறக்கணிக்கின்றனர். அவர்களைப் பார்த்தால் பார்க்காதது போல் செல்கின்றனர். வெறுக்கின்றான். 

நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா? 
(அல்குர்ஆன் 47:22) 

''யார் தம்முடைய ஆயுளும், செல்வமும் அதிகப்பட விரும்புகிறாரோ அவர் தம் உறவினர்களைச் சேர்த்துக் கொள்ளட்டும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) புகாரி 2067