செவ்வாய், 3 மார்ச், 2015

வறுமை

வறுமை

ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன் (2:268) 

தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சி யடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும் போது இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம் தவிர வேறில்லை (6:26) 

தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும்இருக்கிறான். (17:30) 

தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும், குறைத்தும் வழங்குகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத் துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (30:37) 

எனது இறைவன் தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அதை குறைத்தும் கொடுக்கிறான். நீங்கள் எப்பொருளை (நல் வழியில்) செலவிட்டாலும் அவன் அதற்கான பிரதி பலனை அளிப்பான். அவன் வழங்கு வோரில் சிறந்தவன் என்று கூறுவீராக! (34:39) 

வானங்கள் மற்றும் பூமியின் திறவு கோல்கள் அவனுக்கே உரியன. தான் நாடியோருக்குச் செல்வத்தை அவன் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். (42:12) 

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (2:155) 

....வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள் . (2:177) 

அபூ ஸயீத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தம்முடைய ஏழ்மையைப் பற்றி முறையிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''அபூ ஸயீத் அவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். உங்களில் யார் என்னை நேசிக்கிறாரோ அவரை நோக்கி, பள்ளத்தை நோக்கிப் பாய்கின்ற வெள்ளத்தை விட விரைவாக அல்லது மலை உச்சியிலிருந்து கீழ்நோக்கி விழுகின்ற வெள்ளத்தைப் போல வறுமை விரைந்தோடி வரும்'' என்று கூறினார்கள். 
அறிவிப்பவர்: ஸயீத் பின் அபீ ஸயீத்(ரலி) அஹ்மத் 10952 

எத்தனையோ நபிமார்கள் இந்த வறுமையினால் பீடிக்கப்பட்டுள்ளனர். 

நபி யாகூப் (அலை) அவர்கள் மிகக் கடுமையான ஏழ்மை நிலையில் வாழ்ந்திருக்கிருக்கிறார்கள். அவர்கள் ஏழ்மையின் காரணமாக தன்னுடைய மகன்களை அருகிலுள்ள நாட்டின் மன்னரிடம் சென்று உணவுப் பொருட்களை வாங்கி வருமாறு அனுப்பியதாக திருமறைக் குர்ஆன் கூறுகிறது.அவர்கள் அவரிடம் (யூஸுஃபிடம்) வந்தனர். ''அமைச்சரே! எங்களுக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் வறுமை ஏற்பட்டுள்ளது. அற்பமான சரக்கு களையே கொண்டு வந்திருக்கிறோம். எனவே எங்களுக்கு முழுமையாக உணவுப் பொருள் தருவீராக!எங்களுக்குத் தானமாகவும் தருவீராக! தானம் செய்வோருக்கு அல்லாஹ்வழங்குவான்''என்றனர். (12:86) 

நம்முடைய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அருமை ஸஹாபாக்களும் கூட வறுமையின் மூலம் சோதிக்கப் பட்டுள்ளனர். 

ஒரு தடவை நபியவர்களின் வீட்டிற்கு நபியவர்களைச் சந்திப்பதற்காகச் சென்ற உமர்(ரலி) அவ்வீட்டின் வறுமை நிலையைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள். 

அப்போது நபியவர்கள் ஒரு ஈச்சம் பாயில் அமர்ந்து இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்கும் இடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களுடைய தலைக்குக் கீழ் ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்று இருந்தது. அவர்களின் கால்களுக்கு அருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம் பாயின் சுவடுகள் பதிந்திருப்பதைக் கண்டு அழுது விட்டேன். 

அப்போது நபி (ஸல்) அவர்கள், ''ஏன் அழுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு நான், ''அல்லாஹ்வின் தூதரே! கிஸ்ரா, கைஸர் போன்ற மன்னர்களெல்லாம் (தாராளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே'' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''அவர்களுக்கு இம்மையும், நமக்கு மறுமையும் இருப்பதை விரும்பவில்லையா?'' என்று கேட்டார்கள். 
நூல்: புகாரி 4913 

நபியவர்கள் வீட்டில் வறுமையின் காரணத்தினால் இரண்டு மாதங்களுக்கு மேல் அடுப்பு பற்ற வைக்க முடியவில்லை. 
(பார்க்க: புகாரி 2567) 

நபியவர்கள் மரணிக்கின்ற வரை ஒரு தடவை கூட தொடர்ந்து மூன்று நாட்கள் அவர்களுடைய குடும்பம் வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை. 
(புகாரி 5373) 

நபியவர்கள் மரணிக்கும் போது கூட வறுமையின் காரணத்தினால் தமது உருக்குச் சட்டையை ஒரு யூதனிடம் கோதுமைக்காக அடகு வைத்த நிலையில் தான் சென்றார்கள். 
(புகாரி 2069) 

நபியவர்கள் பசிக் கொடுமை தாங்க முடியாமல் இரவு நேரத்தில் உணவு தேடிச் சென்றிருக்கிறார்கள். அவ்வாறே நபியவர்களோடு அபூபக்கர்(ரலி), உமர் (ரலி) அவர்களும் பசிக் கொடுமை தாங்க முடியாமல் இரவு நேரத்தில் உணவு தேடிச் சென்றிருக்கிறார்கள் என்ற சம்பவத்தை நாம் புகாரி (3799) யில் காணலாம். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போல் உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட்டு, அவர்களை அது அழித்து விட்டதைப் போன்று உங்களையும் அது அழித்து விடுமோ என்று தான் நான் அஞ்சுகிறேன்'' 
அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா(ரலி) புகாரி( 3158) 

இதன் காரணமாகத் தான் நபியவர்கள் பணக்காரர்களை விட ஏழைகளைச் சிறப்பித்து பல ஹதீஸ்களில் கூறியுள்ளார்கள். 

சஹ்ல் பின் ஸஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 
ஒரு (பணக்கார) மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), ''இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?'' என்று கேட்டார்கள். தோழர்கள், ''இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்'' என்று கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மவுனமாயிருந்தார்கள். 

பிறகு, நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் முஸ்லிம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''இவரைக் குறித்து என்ன கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டார்கள். தோழர்கள், ''இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப் படாமலும் இருக்கத் தகுதியானவர்'' என்று கூறினர். 

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்'' எனக் கூறினார்கள். 
நூல்: புகாரி( 5091) 

நபியவர்கள் பணக்காரர்கள் இந்த உலகம் நிரம்ப இருப்பதை விட ஈமானோடு வாழக்கூடிய ஒரு ஏழை சிறந்தவன் என சிறப்பித்துக் கூறுகிறார்கள். 

ஏழைகளே மறுமையிலும் சிறந்தவர்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''நான் சுவர்க்கத்தை எட்டிப் பார்த்தேன் அதில் மிக அதிகமானவர்களாக ஏழைகளைக் கண்டேன். நரகத்தை எட்டிப் பார்த்தேன். அதில் மிக அதிகமானவர்களாகப் பெண்களைப் பார்த்தேன்'' 
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) நூல்: புகாரி( 3241) 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''பணக்காரர்களுக்கு ஐநூறு வருடங்களுக்கு முன்பாக ஏழைகள் சொர்க்கத்தில் நுழைவார்கள். (ஐநூறு வருடங்கள் என்பது மறுமையினுடைய) பாதி நாளாகும்'' 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதி (2276) 

ஃபழாலா பின் உபைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்தும் போது தொழுகையில் அவர்களோடு நின்ற ஆண்களில் சிலர் பசியின் காரணமாக (மயங்கி) விழுந்து விடுவார்கள். அவர்கள் தான் திண்ணை ஸஹாபாக்கள். அவர்கள் (மயங்கி விழுவதைப் பார்க்கும் கிராமவாசிகளில் சிலர் அவர்களின் நிலையை அறியாமல்) ''இவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள்'' என்று கூறுவார்கள். நபியவர்கள் தொழுகை நடத்தி முடித்து விட்டால் அவர்களை நோக்கித் திரும்பி  ''அல்லாஹ்விடம் உங்களுக்குக் கிடைக்கவிருப்பதை நீங்கள் அறிந்தீர்கள் என்றால் உங்களுடைய ஏழ்மை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்'' என்று கூறுவார்கள். 
நூல்: திர்மிதி (2291) 

எனவே வறுமை என்பது நமக்கொரு வரப்பிரசாதம் என்பதை உணர்ந்து சத்திய நெறி தவறாமல் வாழக்கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!