திங்கள், 9 மார்ச், 2015

பேச்சின் ஒழூங்குகள்

பேச்சின் ஒழூங்குகள்

நல்ல வார்த்தைகளை நவில வேண்டும் 

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! அல்குர்ஆன் (33:70) 

யாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில் சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும். 

அல்குர்ஆன் (35:10) 

ஒருவன் தன்னுடைய செல்வத்தை தர்மம் செய்வதற்கு நிகரானது அவன் பேசுகின்ற நல்ல வார்த்தைகள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் தமது மூட்டுக்கள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதுவுவதும் தர்மமாகும். அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். நல்ல (இனிய) சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (2989) 


சொர்க்கத்தை நாம் அடைவதற்குரிய வழிகளில் ஒன்று நல்ல பேச்சுக்களைப் பேசுவதாகும். . 

நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! உங்களை நான் கண்டால் எனது உள்ளம் மகிழ்சியடைகிறது. எனது கண் குளிர்ச்சியடைகிறது. எனக்கு அனைத்து பொருட்களைப் பற்றியும் சொல்லுங்கள்'' என்றேன். அதற்கு அவர்கள் ''அனைத்தும் நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்கள். ''எந்த காரியத்தை நான் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள்'' என்று கூறினேன். ''சலாத்தைப் பரப்பு. நல்ல பேச்சைப் பேசு. உறவுகளை இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன் சொர்க்கத்தில் நுழைவாய்'' என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: அஹ்மத் (9996) 


நல்ல பேச்சுக்களைப் பேசியாவது நரகத்தை விட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள் . 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இனிய சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்) அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி) நூல்: புகாரி (6023) 


மனிதனின் முன்னேற்றத்திற்கு நல்ல வார்த்தைகள் தூண்டுகோலாக அமைகிறன. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்'' என்று சொன்னார்கள். மக்கள், ''நற்குறி என்பதென்ன?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ''அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய) சொல்லாகும்'' என்று பதிலளித்தார்கள். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி). நூல்: புகாரி (5754) 


தெருக்களில் அமர்ந்திருப்போர் நல்லதையே பேச வேண்டும் 

நாங்கள் வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ''பாதையில் அமைந்துள்ள இடங்களில் என்ன செய்கிறீர்கள்? பாதையோரங்களில் அமைந்துள்ள இடங்களில் (அமர்வதை விட்டும்) தவிர்ந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். ''தவறு செய்வதற்காக நாங்கள் உட்காரவில்லை. பேசிக் கொண்டும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டும் அமர்ந்துள்ளோம்'' என்று கூறினோம். அதற்கு அவர்கள், ''அப்படியானால் அதற்குரிய உரிமையைக் கொடுத்து விடுங்கள். பார்வையைத் தாழ்த்துவதும் சலாமிற்குப் பதிலுரைப்பதும் அழகிய முறையில் பேசுவதும் (அதற்குரிய உரிமையாகும்)'' என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூதல்ஹா (ரலி) நூல்: முஸ்லிம் (4020) 


பிறரை சந்தோஷப்படுத்தும் பேச்சுக்கள் நல்லவையே! 

பிறரை சந்தோஷப்படுத்தி, நாமும் மகிழ்வதற்காக நகைச்சுவையுடன் பேசுவது குற்றமல்ல. நமது வார்த்தையால் பிறர் புண்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

பிறரது மகிழ்சிக்கு நம்முடைய சொற்கள் காரணமாக இருப்பதால் அதுவும் நல்ல வார்த்தைகளின் பட்டியலுக்குள் வந்து விடும். நபி (ஸல்) அவர்களின் முன்பாக நபித்தோழர்கள் சிரித்து மகிழ்ந்து பேசியுள்ளார்கள். பெருமானாரை மகிழ்விப்பதற்காகவே ஒருவர் பிரத்யேகமாக இருந்துள்ளார். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்றொருவர் இருந்தார். அவர் ஹிமார் (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சிரிக்க வைப்பார். 

அறிவிப்பவர்: உமர் (ரலி) நூல்: புகாரி (6780) 

நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், ''நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருந்தீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''ஆம்! அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்'' என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: சிமாக் பின் ஹர்ப் நூல்: முஸ்லிம் (118) 


யாகாவாராயினும் நாகாக்க! 

நாவைப் பாதுகாப்பதை ஒரு முக்கியமான அம்சமாக இஸ்லாம் கருதுகிறது. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் தனக்கு இரத்தினச் சுருக்கமாக மிக அவசியமான போதனையைக் கூறும்படி கேட்கிறார். நபி (ஸல்) அவர்கள் நாவைப் பாதுகாத்துக் கொள்வதையும் முக்கிய போதனையாக அவருக்குச் சொன்னார்கள். 

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ''உங்களுக்குப் பிறகு (வேறு யாரிடமும் விளக்கம்) நான் கேட்காத அளவிற்கு இஸ்லாத்திலே ஒரு விஷயத்தை எனக்கு சொல்லுங்கள்'' என்று கேட்டார். ''அல்லாஹ்வை நம்புகிறேன் என்று கூறி (அதில்) நிலைத்து நில்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! நான் எதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தமது கையால் நாவை சுட்டிக் காட்டினார்கள். 

அறிவிப்பவர்: சுஃப்யான் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல்: அஹ்மத் (14870) 


தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம் 

தேவையற்ற பேச்சுக்கள் பிரிவினையை உண்டு பண்ணுவதால் அது போன்று பேசாமல் நல்ல விஷயங்களைப் பேசுமாறும் வீணானதை விட்டும் தவிர்ந்து கொள்ளும் படியும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். 

(முஹம்மதே!) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான். 
அல்குர்ஆன் (17:53) 

வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். ''எங்கள் செயல்கள் எங்களுக்கு! உங்கள் செயல்கள் உங்களுக்கு! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்'' எனவும் கூறுகின்றனர். 
அல்குர்ஆன் (28:55) 

வீணானதைப் புறக்கணிப்பார்கள். 
அல்குர்ஆன் (23:3) 

அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள். 
அல்குர்ஆன் (25:72) 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். 

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (6018) 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்போர் அல்லாஹ்வைப் பயந்து தனது அண்டை வீட்டாரிடத்தில் கண்ணியமாக நடந்து கொள்ளட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வைப் பயந்து தனது விருந்தினரை கண்ணியமாக நடத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வைப் பயந்து நல்லதைûயே சொல்லட்டும். அல்லது அமைதியாக இருக்கட்டும். 

அறிவிப்பவர்: சில நபித்தோழர்கள் நூல்: அஹ்மத் (19403) 


நபி (ஸல்) அவர்கள், நன்மையைத் தவிர வேறெதையும் பேசாதே! என்று கட்டளையிட்டார்கள். 

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தில் என்னைக் கொண்டு சேர்க்கும் நற்காரியத்தை கற்றுக் கொடுங்கள்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (சில விஷயங்களைக் கூறி விட்டு) ''உன்னால் இதற்கு முடியாவிட்டால் பசித்தவனுக்கு உணவு கொடு! தாகித்தவனுக்கு நீர்புகட்டு! நல்லதை ஏவி தீமையைத் தடு! இதற்கும் உன்னால் முடியாவிட்டால் உனது நாவை நல்லவற்றிலிருந்தே தவிர (மற்றவற்றிலிருந்து) பாதுகாத்துக் கொள்'' என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: அல்பர்ரா பின் ஆசிப் (ரலி) நூல்: அஹ்மத் (17902) 


தீய பேச்சுக்கள் வேண்டாம் 

''வெட்கக்கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானதையும், பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும், எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும், நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதையுமே என் இறைவன் தடை செய்துள்ளான்'' என (முஹம்மதே!) கூறுவீராக! அல்குர்ஆன் (7:33) 

நீதி, நன்மை, மற்றும் உறவினருக்குக் கொடுப்பதை அல்லாஹ் கட்டளையிடுகிறான். வெட்கக்கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுவதை உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். 
அல்குர்ஆன் (16:90) 

இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் இந்தக் குணத்தை நயவஞ்சகர்களுடையது என்று கூறியுள்ளார்கள். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெட்கமும், குறைவான பேச்சும் ஈமானுடைய அம்சமாகும். கெட்ட வார்த்தையும், அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும். 

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) நூல்: திர்மிதி (1950) 

நாம் பேசும் பேச்சுக்கள் சொர்க்கத்தையும் நரகத்தையும் தீர்மானிக்கும் அளவுகோலாக சில நேரத்தில் அல்லாஹ்விடம் கருதப்படுகிறது 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்தி விடுகிறான். ஒரு அடியார் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பின் விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (6478) 

அந்நிய ஆண்களிடம் குழைந்து பேசுவது நம் பெண்களிடத்தில் அறவே ஒழிக்கப்பட வேண்டும்.. 

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். 

அல்குர்ஆன் (33:32) 


மோசமான மனிதர் 

தீய வார்த்தைகளால் பிறரை அச்சத்திற்குள்ளாக்குபவரை மோசமானவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

ஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் வர) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''அவரை உள்ளே வரச் சொல்லுங்கள். அந்தக் கூட்டத்தாரிலேயே (இவர்) மோசமானவர்'' என்று சொன்னார்கள். உள்ளே அவர் வந்த போது (எல்லோரிடமும் பேசுவது போல்) அவரிடம் கனிவாகவே பேசினார்கள். (அவர் பேசி விட்டு எழுந்து சென்றதும்) நான், ''அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (அவரைக் கண்டதும்) ஒன்று சொன்னீர்கள். பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே!'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ''ஆயிஷா! யாருடைய அருவருப்பான பேச்சுகளிலிருந்து (தங்களைத்) தற்காத்துக் கொள்ள அவரை விட்டு மக்கள் ஒதுங்குகிறார்களோ அவரே மக்களில் தீயவர் ஆவார்'' (அருவருப்பான பேச்சுகள் பேசும் அவர் குறித்து எச்சரிக்கை செய்யவே அவரைப் பற்றி அவ்வாறு சொன்னேன்) என்றார்கள். 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி (6054) 

சத்தியக் கருத்துக்களால் மக்களை வென்றெடுத்த நபி (ஸல்) அவர்கள் நல்ல வார்த்தைகளால் தான் இத்தகைய மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். இந்த அருமையான குணம் அவர்களைத் தலைவராக சமுதாயம் ஏற்றுக் கொண்டதற்கான முக்கிய காரணமாகும். 

நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. ''உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே!'' என்று அவர்கள் கூறினார்கள் 

.அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: புகாரி (3559) 


ஆதாரமற்ற பேச்சுக்கள் 

உங்கள் நாவுகளால் அதைப் பரப்பியதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள். அதை இலேசானதாகவும் எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது. 
அல்குர்ஆன் (24:15) 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மூன்று செயல்களை வெறுக்கிறான். 'இவ்வாறு சொல்லப்பட்டது; அவர் சொன்னார்' (என ஆதாரமின்றிப் பேசுவது), பொருள்களை வீணாக்குவதும், அதிகமாக (பிறரிடம்) யாசிப்பதுமாகும். 

அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)யின் எழுத்தாளர் நூல்: புகாரி (1477) 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தான் கேள்விப்பட்டதை எல்லாம் ஒருவன் பரப்புவதே அவன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும். 

அறிவிப்பவர்: ஹஃப்ஸ் பின் ஆசிம் (ரலி) நூல்: முஸ்லிம் (6) 


சாதாரண குற்றமல்ல! 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது. இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு 

இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகின்றது. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (6243) 

.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் தம் இரு தாடைகளுக்கு இடையே உள்ளத(ôன நாவி)ற்கும், தம் இரு கால்களுக்கு இடையே உள்ளத(ôன மர்ம உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிக்கிறாரோ அவருக்காகச் சொர்க்கத்திற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். 

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி) நூல்: புகாரி (6474) 

உறுப்புகளால் செய்யும் தீய செயல்கள் குற்றங்களாகக் கருதப்படுகிறது. நாவில் எழும் அசிங்கமான வார்த்தைகள் இது போன்று கருதப்படுவதில்லை. இந்த எண்ணத்தில் ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம், நாவினாலும் நாம் தண்டிக்கப்படுவோமா? என்று கேட்ட போது, நாவு சம்பாதித்த தீமைகள் தான் மக்களை நரகில் தள்ளுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''(வணக்க வழிபாடுகள்) அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பதை உனக்கு நான் அறிவிக்கட்டுமா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் அவர்களிடத்தில், ''அல்லாஹ்வின் நபியே! ஆம் (எனக்கு சொல்லுங்கள்)'' என்று கூறினேன். அவர்கள் தன்னுடைய நாவைப் பிடித்து, ''இதை நீ பாதுகாத்துக் கொள்'' என்று கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! நாம் பேசுகின்றவைகளுக்காகவா நாம் தண்டிக்கப்படுவோம்?'' என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆச்சரியத்துடன் ''மக்களை முகம் குப்புற நரகில் தள்ளுவது அவர்களுடைய நாவுகள் அறுவடை செய்தவைகளாகும்'' என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: முஆத் பனி ஜபல் (ரலி) நூல்: அஹ்மத் (21008) 


உண்மையை உடைத்துப் பேச வேண்டும் 

இன்பத்திலும் துன்பத்திலும், விருப்பிலும் வெறுப்பிலும், எங்களை விடப் பிறருக்கு முன்னுரிம அளிக்கப்படும் போதும் (தலைமையின் கட்டளையைச்) செவியுற்று கீழ்படிந்து நடப்போம் என்றும், அதிகாரத்தில் இருப்போரிடம் அவருடைய அதிகாரம் தொடர்பாக சண்டையிடமாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் உண்மையைப் பேசுவோம் என்றும் அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்போரின் பழிப்பிற்கு அஞ்ச மாட்டோம் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாங்கள் உறுதிமொழி எடுத்தோம். 

அறிவிப்பவர்: உபாதத் பின் அஸ்ஸாமித் (ரலி) நூல்: முஸ்லிம் (3754) 

நபி (ஸல்) அவர்கள் வாகன ஒட்டகத்தின் வளையத்தில் காலை வைத்திருந்த நிலையில் ஒரு மனிதர் அவர்களிடம் ''எந்த ஜிஹாத் சிறந்தது?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''அக்கிரமம் புரியும் அரசனிடத்தில் சத்தியத்தை எடுத்துரைப்பது'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி) நூல்: நஸயீ (4138) 


மூத்தவரை முற்படுத்துதல் 

அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவ்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் அவர்களும் ஹுவைய்யிஸா பின் மஸ்ஊத் அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) பேசத் துவங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள், ''பெரியவர்களைப் பேசவிடு. பெரியவர்களைப் பேசவிடு'' என்று கூறினார்கள். அந்த மூவரில் அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். உடனே அவர்கள் மௌனமாகி விட்டார்கள். பின்பு முஹய்யிஸா அவர்களும் ஹுவைய்யிஸா அவர்களும் பேசினார்கள். 

அறிவிப்பவர்: சஹ்ல் பின் அபீ ஹஸ்மா (ரலி) நூல்: புகாரி (3173) 


தெளிவாகப் பேச வேண்டும் 

நபி (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தைப் பேசுகிறார்கள் என்றால் அதை (வார்த்தை வார்த்தையாக எழுத்து எழுத்தாகக் கணக்கிட்டு) எண்ணக் கூடியவர் எண்ணியிருந்தால் ஒன்று 

விடாமல் எண்ணியிருக்கலாம். (அந்த அளவிற்கு நிறுத்தி நிதானமாக தெளிவாகப் பேசி வந்தார்கள்.) 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி (3567) 

நீங்கள் ஹதீஸ்களை ஒன்றன் பின் ஒன்றாக வேக, வேகமாக அறிவிப்பதைப் போல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசர அவசரமாக அறிவித்ததில்லை. 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி (3568) 

நபி (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தை பேசினால் அது அவர்களிடம் நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதைத் திரும்பச் சொல்வார்கள். ஏதாவது ஒரு சமூகத்தாரிடம் சென்றால் மும்முறை ஸலாம் கூறுவார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி (95) 

''நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப் பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' 
அல்குர்ஆன் (31:19)