திங்கள், 9 மார்ச், 2015

மரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே

மரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே

வணக்கங்கள் யாவுமே அல்லாஹ் ஒருவனுக்கே 

தொழுகையை குறிப்பதற்குக் கூட திருமறைக் குர்ஆனிலும் ஹதீஸிலும் ''கியாம்'' நிற்றல் என்ற பொருள் தரக் கூடிய அரபிச் சொல் தான் பயன் படுத்தப்பட்டுள்ளது. 

அல்லாஹ்வுக்கே கட்டுப்பட்டு நில்லுங்கள். (அல்குர்ஆன் 2:238) 

மேலும், இரவில் நின்று தொழும் தொழுகையைக் குறிப்பதற்கு கியாமுல் லைல் (இரவில் நிற்றல்) என்ற வார்த்தை தான் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதையும் பினவரும் வசனத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம். 

இரவில் குறைவான நேரம் தவிர நிற்பீராக! (அல்குர்ஆன் 73:2) 

யார் ரமலானில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தும் நிற்கிறாரோ அவருடைய முன் பாவங்கள் மன்னிக்கப் படுகிறது. 
நூல்: புகாரி முஸ்லிம் 

தமக்காக மக்கள் எழக் கூடாது என்பதை எந்த அளவுக்கு நபிகள் (ஸல்) வெறுத்தார்கள் 

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே. இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர் களைப் பின்பற்றித் தொழுங்கள். அவர்கள் நின்று தொழுகை நடத்தி னால் நீங்களும் நின்று தொழுங்கள் அவர்கள் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள் என்று கூறினார்கள் 
நுôல்: முஸலிம் 701 

நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுத போது மக்களும் உட்கார்ந்து தொழுததாக 
புகாரி 689, 732, 733, 805, 1114, 688 

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை எனறாலும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம். 

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),நுôல்கள்: அஹ்மது 12068, 11895 திர்மிதி 2678 

அது மட்டுமல்ல. எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் வகையில் எழுந்து நிற்கக் கடாது என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்துள்ளார்கள். 

மன்னராக இருந்தாலும் மரியாதைக்காக எழவேண்டாம் 

நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபதியாகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் சுபைர் அவர்களும் இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அவர்கள் அமருங்கள் என்றார். தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் எனறு யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதை நான் செவியேற்றுள் ளேன் என்று முஆவியா (ரலி) சொன்னார்கள். 
நூல்: அபூதாவூத் 4552 

நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். (அல்குர்ஆன் 33:6) 

உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை, அவரது குழந்தைகள், ஏனைய மக்கள் அளைவரையும் விட நான் மிகவும் பிரியத்திற்குரியவராக ஆகும் வரை அவர் உண்மையான ஈமான் கொண்டவராக மாட்டார். 

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)நூல்: புகாரி 15 

வரவேற்பதற்காக எழுந்து செல்லுதல் 

ஒருவருக்காக அவர் வரும்போது எழுந்து நிற்றல் என்பது அவனைப் பெருமைப்படுத்துவதும் 

தனக்காக யாரும் எழுந்து நிற்கக் கூடாது என்று தடைசெய்த நபியவர்கள் தன்னுடைய பாசமிக்க மகளார் தன்னைச் சந்திக்க வரும்போது அவரை நோக்கி பாசத்தோடு எழுந்து சென்று வரவேற்றிருக்கின்றார்கள் என்பதை பின்வரும் செய்தியிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம் 

அப்துர் ரஹ்மான் பின் யஸீது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களின் அமைப்பிலும் போக்கிலும் நடத்தையிலும் ஒத்தவராக ஃபாத்திமா (ரலி) அவர்களை விட வேறு யாரையும் நான் பார்த்ததில்லை. ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடத்திலே வரும்போது நபியவர்கள் ஃபாத்திமாவை நோக்கி எழுந்து சென்று அவர்களுடைய கையிலே முத்தமிட்டு அவர்களைத் தன்னுடைய இடத்திலேயே அமர வைப்பார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்கள் தன்னிடத்திலே வரும்போது அவர்களை நோக்கி எழுந்து சென்று அவர்களுடைய கையிலே முத்த மிட்டு அவர்களைத் தன்னுடைய இடத்தில் உட்கார வைப்பார்கள். 
நூல்: திர்மிதி 3807 

நபி (ஸல்) அவர்கள் ஃபாத்திமா தன்னுடைய வீட்டிற்கு வரும் போது எவ்வாறு நடந்து கொள்வார்களோ அதே போன்றுதான் ஃபாத்திமா (ரலீ) அவர்களும் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய வீட்டிற்கு வரும் போதும் நடந்து காட்டியுள்ளார்கள். 

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள். (நான் தபூக் போரில் பங்கேற்காமல் இருந்த விவகாரத்தில் எனக்கு மன்னிப்பளித்து இறைவசனம் அருளப்பட்ட பின்) நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கே அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) 

அவர்கள் இருந்தார்கள். அப்பொழுது தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் விரைந்தோடி வந்து என் கரத்தைப் பற்றி எனக்கு வாழ்த்துச் சொன்னார்கள். 
நூல்: புகாரி 4418 

உதவி செய்வதற்காக எழுந்து செல்லுதல் 

ஸஃது பின் முஆது (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தபோது நபி (ஸல்) அன்சாரிகளிடம், உங்கள் தலைவரை நோக்கி எழுந்து செல்லுங்கள் என்று கூறினார்கள் 
நூல்: புகாரி 6262, 4121 

இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு சிலர் மற்றவர்களுக்காக எழுந்து நிற்கலாம் என வாதிடுகின்றனர். ஆனால் இது தவறனாதாகும். நபி (ஸல்) இவ்வாறு கூறியதன் காரணம் ஸஃது (ரலி) அவர்கள் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தான் நபியவர்களைச் சந்திக்க வருகிறார்கள். எனவே தான் அவர்களுக்கு உதவி செய்வதற்காக அவரை நோக்கிச் செல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . 

அஹ்மதுடைய அறிவிப்பில் உங்களுடைய தலைவரை நோக்கி எழுந்து சென்று அவரை (வாகனத் திலிருந்து) இறக்கி விடுங்கள் என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது. (23945) 

அவர்கள் பலஹீனமான நிலையில் இருந்ததால் தான் அவரை இறக்கி விடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

ஜனாஸாவிற்காக எழுந்து நிற்றல் 

ஒரு ஜனாஸா எங்களை கடந்து சென்றது. உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்து நின்றோம். பின்பு நாங்கள் அல்லாஹ்வின் தூதரே இது ஒரு யூதனின் ஜனாஸா என்றோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள் எனக் கூறினார்கள். : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) புகாரி 1311 

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஒரு ஜனாஸா நபி (ஸல்) அவர்களைக் கடந்து சென்றது. அப்போது அவர்கள் எழுந்து நின்றார்கள். இது யூதனுடைய ஜனாஸாவாயிற்றே என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் நாம் நின்றதெல்லாம் மலக்குமார்களுக்காகத் தான் என்று கூறினார்கள். நூல்: நஸயீ 1903 

நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாவிற்காக நின்றதை வைத்துக் கொண்டு நாம் உயிருள்ள மனிதர்களுக்காகவும் எழுந்து நிற்கலாம் எனக் கூறுவது தவறானதாகும். ஜனாஸாவிற்காக நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்றது மனித நேயத்தின் அடிப்படையில் ஆகும்.