செவ்வாய், 3 மார்ச், 2015

தொழுகையின் முக்கியத்துவம்


தொழுகையின் முக்கியத்துவம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை என்றும், முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலைநிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமலானில் நோன்பு நோற்றல் ஆகிய ஜந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி (8)

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் (ஜிப்ரீல்) இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள் கூறினார்கள்: இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீ இணையாகக் கருதாத நிலையில் அவனை நீ வணங்குவதும், தொழுகையை நீ நிலைநிறுத்து வருவதும், கடமையாக்கப்பட்ட ஜகாத்தை நீ வழங்கி வருவதும், ரமலான் மாதத்தில் நீ நோன்பு நோட்பதுமாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (50)

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில் (தொங்கியவர்களாக) வெளியே வந்தார்கள். (அவர்களின் கால்களை சரியாக ஊன்ற முடியாமையால்) பூமியில் அவர்களது இருகால்களும் கோடிட்டுக் கொண்டு சென்றன.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (198)

அபூபக்கர் (ரலி) தொழ வைத்தார்கள்

நபி (ஸல்) அவர்கள் மூன்று நாட்களாக வெளியில் வரவில்லை. தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டதும் அபூபக்கர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்துவதற்கு முன் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது அறையின் திரையை உயர்த்திப்பார்த்தார்கள். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தோற்றமளித்த போது அவர்களின் முகத்தை விடவும் மகிழ்ச்சியான எந்த ஒரு காட்சியையும் நாங்கள் பார்த்ததில்லை.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (681)

மரணநேரத்தில் நபியின் போதனை

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது தன்னுடைய சமுதாயத்திற்கு தொழுகையை கடைபிடிக்கும் படி மிகவும் வலியுறுத்திக் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு மரண வேளையில் அவர்களுடைய மூச்சு மேலும் கீழும் சென்றுகொண்டிருந்த போது அவர்கள் பெரும்பாலும் தொழுகையைப் பற்றியும் உங்களுடைய வலக்கரம் சொந்தமாக்கியுள்ள (அடிமைகளைப்) பற்றியும் வலியுறுத்திச் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : இப்னு மாஜா (2688)

அடியான் முதன் முதல் விசாரிக்கப்படுவது அவனுடையத் தொழுகையைப் பற்றித்தான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : நஸயீ (463)

தொழாதவர்களுக்கு எச்சரிக்கை

போர்புரிய வேண்டும்


மனிதர்கள் வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை. முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போர்புரிய வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல் : புகாரி (25)

இறைமறுப்புச் செயல்

தொழுகையை விடுவது என்பது சாதாரணமான குற்றமில்லை. இறைமறுப்புச் செயல் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

மனிதனுக்கும் இணைவைப்பு மற்றும் இறைமறுப்பு ஆகியவற்றுக்குமிடையே (பாலமாக இருப்பது) தொழுகையை கைவிடுவது தான்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் (116)

தொழுகை ஒரு முஃமினிடத்தில் இருக்க வேண்டிய முக்கியமான அம்சம் என்பதால் ஆட்சியாளர்கள் தொழுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராக போர்க் கொடி தூக்கக் கூடாது என்று சொன்னார்கள்.

ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களிடம் நாங்கள் சண்டையிடமாட்டோம். எந்த விஷயம் பகிரங்கமான இறைமறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளர்களிடம் நாங்கள் கண்டாலேத் தவிர என்று எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும்.

அறிவிப்பவர் : உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) நூல் : புகாரி (7056)

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எனக்குப் பின்) சில தலைவர்கள் வருவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள். தீமையையும் காண்பீர்கள். யார் (தீமையை தெளிவாக) அறிந்து கொண்டாரோ அவர் பிழைத்தார். யார் வெறுத்தாரோ அவர் தப்பித்தார். (இதற்கு மாற்றமாக) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணைபோனாரோ (அவருக்கு குற்றத்தில் பங்குண்டு) என்று கூறினார்கள். மக்கள் அவர்களுடன் நாங்கள் போரிடலாமா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இல்லை. அவர்கள் தொழுகையை நிறைவேற்றும் வரை (வேண்டாம்) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி) நூல் : முஸ்லிம் (3447)

சொர்க்கவாசி நரகவாசி தர்க்கம்

மறுமை நாளில் நரகவாசியிடம் சொர்க்கவாசிகள் ஏன் நரகத்தில் வந்து அவதிப்படுகிறீர்கள் என்று கேட்பார்கள்

அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் ''உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். ''நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம் (எனக் கூறுவார்கள்)

அல்குர்ஆன் (74 : 40)

தொழுகையை கெடுக்கும் தூக்கம்

நபி (ஸல்) அவர்கள் கணவில் கண்ட தலை நசுக்கப்படும் மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டு அவர் குர்ஆனைக் கற்று அதைப் புறக்கணித்துக் கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர் என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஸமுரா (ரலி) நூல் : புகாரி (1143)

ஜமாஅத்துடன் தொழுவது அவசியம்

தொழுகைக்காக பள்ளிக்கு வராதவரின் வீட்டைத் தான் நபி (ஸல்) அவர்கள் எரிக்க வேண்டும் என்று நாடினார்கள்..

ஒரு தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் மக்கள் வராமல் இருப்பதைப் பார்த்துவிட்டு மக்களுக்கு தொழவைக்கும் படி நான் ஒருவரை ஏவிவிட்டு தொழுகைக்கு வராதவர்களை நோக்கிச் சென்று அவர்களுடன் அவர்களுடைய வீடுகளை கொழுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எழும்புள்ள கொழுத்த கறித்துண்டு கிடைக்கும் என அவர்களில் யாருக்காவது தெரியுமானால் இஷா தொழுகையில் கலந்துகொண்டு விடுகிறார் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (1040)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுடைய தோழர்கள் (முதல் சஃபை) விட்டு பிந்துவதைப் பார்த்தார்கள். எனவே அவர்களிடத்தில் முந்திவந்து என்னைப் பின்தொடர்ந்து தொழுங்கள். உங்களுக்கு பின்னால் வருபவர்கள் உங்களைப் பின்தொடரட்டும். ஒரு கூட்டம் (முதல் வரிசையை விட்டும்) பிந்திக்கொண்டே இருக்கிறது. இறுதியில் அல்லாஹ் அவர்களை (தன் அருளிலிருந்து) பின்தள்ளிவிடுவான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல் : முஸ்லிம் (662)

மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள் தாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (43)

ஜமாஅத் தொழுகைக்கு தாமதமாக வருவதை நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருப்பதுடன் தொழுகைக்காக சீக்கிரம் வந்து காத்திருந்தால் கிடைக்கும் சிறப்புகளைப் பற்றியும் கூறியுள்ளார்கள்.

ஒருவர் தமது வீடு அல்லது கடைவீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஜந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது. அதாவது ஒருவர் உளூ செய்து அதை அழகாகவும் செய்து பின்னர் தொழவேண்டும் என்ற எண்ணத்திலேயே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் செல்வாரானால் அவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அல்லாஹ் ஒரு அந்தஸ்த்தை உயர்த்துகிறான். ஒரு பாவத்தை அழிக்கிறான். அவர் தொழுமிடத்தில் இருக்கும் போதெல்லாம் அவருக்காக மலக்குகள் பிரார்த்திக்கின்றனர். தங்கள் பிரார்த்தனையில் இறைவா நீ இந்த மனிதன் மீது அருள்புரிவாயாக, உனது கருணையை அவருக்கு வழங்குவாயாக என்றும் கூறுவார்கள். உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்திருக்கும் போதெல்லாம் அவர் தொழுகையிலேயே இருக்கிறார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (647)

ஜமாஅத்துடன் தொழுதால் பாவங்கள் மன்னிக்கப்படும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக ஒருவர் உழூவை முழுமையாகச் செய்துவிட்டு கடமையானத் தொழுகைக்காக அவர் நடந்து சென்று மக்களுடன் அதை தொழுதால் அல்லது ஜமாஅத்துடன் அதை தொழுதால் அல்லது பள்ளிவாசலில் அதைத் தொழுதால் அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்.

அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) நூல் : முஸ்லிம் (341)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இமாமுடன் தொழக்காத்திருக்கிறாரோ அவர் (தனியாகத்) தொழுதுவிட்டு உறங்கிவிடுபவரை விட அதிக நன்மை அடைபவராவார்.

அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி) நூல் : முஸ்லிம் (1064)

தொழுகையை அதற்கான நேரத்தில் தொழ வேண்டும்

அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும் என்று பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல் : புகாரி (527)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் தொழுகையை அதன் உரிய நேரத்தை விட்டுத் தாமதப்படுத்துபவர்கள் அல்லது தொழுகையை அதன் உரிய நேரத்தில் நிறைவேற்றவிடாமல் சாகடிப்பவர்கள் உங்களுக்குத் தலைவர்களாய் அமைந்தால் உங்களது நிலை எப்படி இருக்கும் என்று கேட்டார்கள். நான் (அப்போது) என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவுவிடுகிறீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுதுகொள்ளுங்கள். பிறகு அவர்களுடன் நீங்கள் தொழுகையை அடைந்துகொண்டால் அப்போதும் (அவர்களுடன் இணைந்து) தொழுது கொள்ளுங்கள். அது உங்களுக்கு கூடுதலான தொழுகையாக அமையும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி) நூல் : முஸ்லிம் (1027)

இரவுத் தொழுகை

இரவுத் தொழுகை ரமலான் மாதத்திற்கு மட்டும் உரியது என்று சிலர் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத காலங்களிலும் 11 ரக்அத்துகள் தான் தொழுதார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். எனவே இரவுத் தொழுகை என்பது ரமலானில் மாத்திரம் செய்கின்ற வணக்கம் இல்லை. பொதுவாக எல்லா நாட்களிலும் இரவில் இதை தொழ வேண்டும். இந்தச் சட்டத்தை விளங்கியவர்கள் கூட இரவுத்தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்த இரவுத்தொழுகையை நிறைவேற்றுவதின் மூலம் ஒருவர் சிறந்தவராக மாறுகிறார்.

அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் மனிதர்களில் அவர் மிக நல்லவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதன் பிறகு நான் இரவில் தொழுபவனாகிவிட்டேன்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல் : புகாரி (1158)

கடமையானத் தொழுகைக்குப் பின்பு சிறந்த தொழுகையாக இருப்பது இரவுத்தொழுகையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (1982)

சில சமயம் நபி (ஸல்) அவர்கள் கால் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்கப்படும் போது நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா? என்று கேட்பார்கள்.

அறிவிப்பவர் : முகீரா (ரலி) நூல் : புகாரி (1130)

தொழுவதினால் கிடைக்கும் நன்மைகள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுத்தம் ஈமானில் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் (என்று கூறுவது நன்மை) தராசை நிரப்பிவிடும். சுப்ஹானல்லாஹ் மற்றும் அல்ஹம்துலில்லாஹ் (ஆகியவற்றைக் கூறுவதால் கிடைக்கும் நன்மை) வானங்கள் மற்றும் பூமிக்கு இடையில் இருப்பவற்றை நிரப்பிவிடும். தொழுகை ஒளியாகும். தர்மம் ஆதாரமாகும்.

அறிவிப்பவர் : அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) நூல் : முஸ்லிம் (328)

இந்த ஹதீஸில் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் ஒளி என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. மறுமை நாளில் இருள் சூழ்ந்திருக்கும் போது நாம் முறையாக இந்த உலகத்தில் தொழுகையை கடைபிடித்திருந்தால் அந்தத் தொழுகை நமக்கு வெளிச்சமாக வந்து உதவும். தொழுகையைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் சொல்லும் போது அது மானக்கேடான மற்றும் அருவறுக்கத்தக்க செயல்களிலிருந்து தடுக்கிறது என்று கூறுகிறான். தொழுகையாளிக்கு தொழுகை தீய வழியில் செல்லவிடாமல் தடுத்து நல்ல வழியில் செலுத்தும் என்ற கருத்தும் ஒளி என்று சொல்லப்பட்டதிலிருந்து விளங்கப்படுகிறது..

அல்லாஹ் தனக்கு கட்டளையிட்டவாறு ஒருவர் உழூவை பூரணமாகச் செய்தால் கடமையானத் தொழுகைகளுக்கு இடையில் (அவர் செய்த சிறுபாவங்களுக்கு) பரிகாரமாக கடமையானத் தொழுகைகள் ஆகிவிடுகின்றன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) நூல் : முஸ்லிம் (339)

உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை குளிக்கிறார். அவரது மேனியில் உள்ள அழுக்குகளில் எதுவும் மிஞ்சியிருக்குமா? கூறுங்கள் என்று தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவரது அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது என நபித்தோழர்கள் கூறினர். இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (528)

ஒரு மனிதர் அன்னியப் பெண்னை முத்தமிட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விபரத்தைக் கூறினார். பகலின் இரு ஓரங்களிலும் இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலைநிறுத்துவீராக. நிச்சயமாக நல்லகாரியங்கள் தீயகாரியங்களை அகற்றிவிடும் (11 : 114) என்ற வசனத்தை இறைவன் அருளினான். அப்போது அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரே இது எனக்கு மட்டுமா? என்று கேட்டார். அதற்கு என் சமுதாயம் முழுமைக்கும் என நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : புகாரி (526)

நயவஞ்சகர்களுக்கு மிகக் கடினமானத் தொழுகை இஷா தொழுகையும், ஃபஜர் தொழுகையுமாகும். அவ்விரண்டில் உள்ள (நன்மையை) அவர்கள் அறிந்துகொண்டால் தவழ்ந்தாவது அவ்விருதொழுகைகளுக்கு வந்துவிடுவார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (1041)