செவ்வாய், 1 டிசம்பர், 2015

ஷியாக்களை மிஞ்சும் ஷாதுலிய்யாக்கள்


ஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -8)

ஷியாக்களை மிஞ்சும் ஷாதுலிய்யாக்கள்

அபூஉஸாமா

அல்லாஹ்வை மனிதர்களின் நிலைக்கு இறக்குவது அல்லது மனிதர்களை அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்துவது யூதர்களின் கெட்ட குணங்களாகும்.

"உஸைர் அல்லாஹ்வின் மகன்'' என்று யூதர்கள் கூறுகின்றனர். "மஸீஹ் அல்லாஹ்வின் மகன்'' என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப்போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசைதிருப்பப்படுகின்றனர்?

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும்,மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.

அல்குர்ஆன் 9:30, 31

அல்லாஹ்வுக்குப் பிள்ளை இருப்பதாகக் கூறுவது, அவனை சராசரி மனித நிலைக்கு இறக்குவதாகும். உஸைரையும், ஈஸாவையும் அல்லாஹ்வின் பிள்ளைகள் என்று கூறுவது அவ்விருவரையும் அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்துவதாகும். இந்நிலைகளை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.

இதை யூத, கிறித்தவர்கள் அன்றிலிருந்து இன்று வரை செய்து கொண்டிருக்கின்றனர்.அதே காரியத்தை யூதத்தின் செல்லப் பிள்ளைகளான ஷியாக்களும் செய்துவருகின்றனர்.

எப்போதும், எல்லாவற்றையும் அறியும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் சொந்தம். இதை யூதர்கள் உஸைருக்கும், கிறித்தவர்கள் ஈஸாவுக்கும் தூக்கிக் கொடுக்கின்றனர். அதனால் தான் இவ்விருவரையும் கடவுளாக்கினர். அதே பண்புகளை ஷியாக்களும் தங்களுடைய இமாம்களுக்குக் கொடுப்பதன் மூலம், யூதர்களின் பணியை ஷியாக்களும் கச்சிதமாகச் செய்கின்றனர். காரணம் ஷியாயிஸம் என்பது யூதத்தின் செல்லப் பிள்ளை!

ஷாதுலிய்யா சங்கம்

ஷியாக்களின் அந்தப் பணியை சுன்னத் வல் ஜமாஅத் எனும் ஷியா வாரிசுகள் அப்படியே அரங்கேற்றுகின்றனர். இவ்வாறு ஷியாக்களின் அலுவல்களை அன்றாடம் நிறைவேற்றிக் கொண்டு, தங்களை சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக் கொள்வது தான் வேடிக்கையாகும்.

ஷியாக்களின் செயல்களை அரங்கேற்றும் இவர்கள், தங்களுக்குள் பல சங்கங்களை வைத்துக் கொண்டு, "இந்த அரங்கேற்றப் பணியில் எங்களை மிஞ்சியவர் வேறு யாருமில்லை; விமோசனத்திற்கும், விடுதலைக்கும் ஒரே வழி எங்கள் சங்கம் தான்' என்று ஒவ்வொருவரும் மார்தட்டிக் கொள்வார்கள். அந்த சங்கங்களின் பெயர் தான் தரீக்கா என்பதாகும்.

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியைக் கடவுளாகவும், கதாநாயகராகவும் கொண்டு செயல்படும் சங்கத்திற்கு காதிரிய்யா என்று பெயர். காஜா முஹ்யித்தீனைக் கடவுளாகக் கொண்டு செயல்படும் சங்கத்தின் பெயர் ஜிஷ்திய்யா. இது போன்று அபுல் ஹஸன் ஷாதுலியைக் கடவுளாகவும் கதாநாயகராகவும் கொண்டு செயல்படும் சங்கத்தின் பெயர் ஷாதுலிய்யா.

அல்லாஹ்வின் பண்புகளை இந்தக் கடவுளர்களுக்கு, கதாநாயகர்களுக்குத் தூக்கிக் கொடுப்பதில் இவர்களுக்குப் பேரானந்தம், பெருமகிழ்ச்சி!

அல்லாஹ்வின் பண்புகளை இவ்வளவு தாராளமாக தங்கள் கதாநாயகர்களுக்கு, தெய்வீகக் காதலர்களுக்கு அள்ளிக் கொடுப்பதில் காதிரிய்யா தான் முன்னிலையில் நிற்கிறது என்று இந்தத் தொடரைப் படிப்பவர்கள் கருதலாம். ஏனெனில் இதுவரை முஹ்யித்தீன் மவ்லிதுகளில் உள்ள சங்கதிகளை மட்டுமே பார்த்து வந்துள்ளோம்.

ஆனால் காதிரிய்யாவை மிஞ்சும் வகையில் ஷாதுலிய்யா தரீக்கா அமைந்துள்ளது என்பதை இதைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு ஷாதுலிய்யா சங்கம் - தரீக்கா தங்கள் தலைவர்களைக் கடவுளாக்கி மகிழ்கிறார்கள்.

அசல் ஷியாக்களை இந்த ஷாதுலிய்யாக்கள் அசத்தலாகவே பிரதிபலிக்கிறார்கள். இவர்களின் ஷியாயிஸத்தை நாம் நன்கு தெளிவாக அடையாளம் காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

மற்ற எல்லா தரீக்காக்களை, சங்கங்களை விடவும் இந்த ஷாதுலிய்யா சங்கம் மிகவும் ஆபத்தானது. காரணம், மற்ற தரீக்காக்கள் எல்லாம் ஷரீஅத்தை விட்டு சற்று தாண்டி விட்டது போன்றும், தங்களது தரீக்கா மட்டுமே முழுமையாக ஷரீஅத்தை ஒட்டி அமைந்தது போன்றும் ஒரு தோற்றத்தை இவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதனால் இவர்களது முகத்திரையை முழுமையாகக் கிழித்தாக வேண்டும்.

சுன்னத் வல் ஜமாஅத் என்று ஒரு முதல் போர்வை - அதற்குள் ஷாதுலிய்யா என்று மற்றொரு போர்வை - அதற்கும் உள்ளே ஒளிந்து கிடப்பது பக்கா ஷியா என்பதை உலகுக்குப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

காதிரிய்யாவை விட இந்தத் தரீக்கா கேடு கெட்டது என்பதற்கு ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.

"எனது பாதங்கள், எல்லா அவ்லியாக்களின் பிடரி மீதும் இருக்கின்றன'' என்று தங்கள் எஜமானாகிய அல்லாஹ்விடம் அனுமதி பெற்றுத் தாங்கள் கூறினீர்கள். அவ்வாறு தங்கள் பாதத்தை அனைவரும் மனப் பூர்வமாக ஏற்றுக் கொண்டனர். எல்லா அவ்லியாக்களை விடவும் உயர்ந்து விட்ட முஹய்யித்தீனே!

இவ்வாறு யாகுத்பா என்ற மவ்லிதில் இடம் பெற்றுள்ளது.

அதாவது, எல்லா அவ்லியாக்களின் பிடரி மீதும் தனது பாதங்கள் இருப்பதாக முஹ்யித்தீன் கூறினார் என்று இந்தக் கதை கூறுகிறது.

அவராவது எனது கால்கள் பிடரிகளில் இருக்கின்றன என்று தான் சொல்கிறார். ஆணவம் பிடித்த இந்த ஷாதுலிய்யா சொல்வதைக் கேளுங்கள்.

"என்னுடைய பாதம் அல்லாஹ்வுடைய ஒவ்வொரு வலீயின் நெற்றியிலும் இருக்கிறது'' என்று அபுல் ஹஸன் ஷாதுலி கூறுகிறார். இது தொடர்பாக சந்தேகமில்லாத உத்தரவுப்படியே இவ்வாறு கூறுகிறார்.

ஆதாரம்: ஷாதுலிய்யா தரீக்காவின் அவ்ராது, பைத் மற்றும் மவ்லிது தொகுப்புகள்,பக்கம்: 122

கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை)அஞ்சுவோராக இருப்பார்கள்.

அல்குர்ஆன் 10:62, 63

ஈமான் கொண்டு, இறைவனை அஞ்சுகின்ற அனைவருமே அல்லாஹ்வின் நேசர்கள் - அவ்லியாக்கள் ஆவர். அந்த அடிப்படையில் ஈமான் கொண்டு, இறைவனை அஞ்சும் அத்தனை முஃமின்களின் நெற்றியிலும் இவருடைய பாதங்கள் இருக்கின்றன என்று ஷாதுலிய்யா சங்கம் கூறுகிறது.

தங்களை உயர் பிறவியினராகக் கருதுபவர்கள் யூதர்கள். தங்களை உயர் பிறவியினராகக் கருதுபவர்கள் ஷியாக்கள். அந்த வேலையை அபுல் ஹஸன் ஷாதுலி அழகாகவே செய்கிறார்.

இப்படி ஒரு வழிகேட்டில் உள்ள இந்தக் கூட்டம் தான், இந்தத் தரம் கெட்ட தரீக்காவினர் தான் தங்களை மற்ற தரீக்காக்களை விட உயர்ந்ததாக, ஷரீஅத்துடன் ஒன்றியதாக நிலை நிறுத்தப் பார்க்கிறார்கள். எனவே இவர்களையும் நாம் முழுமையாக அடையாளம் காட்ட வேண்டியது அவசியமாகும்.

இந்தப் பின்னணியைக் கொண்ட இவர்கள், ஷியாக்களைப் பின்பற்றி, தங்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாகக் கூறுகிறார்கள். அதை இப்போது அலசுவோம்.

மறைவான ஞானம் தங்களுக்கு இருப்பதாக ஷியா இமாம்கள் கூறுவதை இங்கு மீண்டும் ஒருமுறை நினைவு கூர்கிறோம்.

தனக்கு ஷியாக்களின் 8வது இமாம் அலீ பின் மூஸா எழுதினார் என அப்துல்லாஹ் பின் ஜுன்துப் அறிவிப்பதாவது:

நாம் அல்லாஹ்வின் பூமியில் அவனது நம்பிக்கை நட்சத்திரங்கள். (மக்களுக்கு வரும்) சோதனைகள், மரணங்கள் பற்றிய ஞானங்கள் நம்மிடம் இருக்கின்றன. அரபியர்கள் தலைமுறை இஸ்லாத்தில் உருவாக்கம் பற்றிய ஞானமும் நம்மிடம் இருக்கிறது.

ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவரது உள்ளத்தில் குடியிருப்பது இறை நம்பிக்கையின் தன்மையா? அல்லது நயவஞ்சகத் தன்மையா? என்று நாம் அறிந்து கொள்வோம். நம்முடைய ஷியாக்களின் பெயர்களும் அவர்களது தந்தைமார்களின் பெயர்களும் பதியப்பட்டவர்களாவர். அல்லாஹ் நம்மிடமும் அவர்களிடமும் வாக்குறுதி எடுத்திருக்கிறான்.

அல்காஃபி ஃபில் உசூல், கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம்: 1, பக்கம்: 223

இது ஷியாக்களின் திமிர் பிடித்த வாசகங்களாகும். இப்போது அவர்களின் வாரிசுகளான ஷாதுலிய்யாக்களின் சொல்லைப் பாருங்கள்.

"பார்வைக்கு எட்டிய தொலைவு வரையில் உள்ள ஓர் ஏடு எனக்கு வழங்கப் பட்டிருக்கிறது. அதில் இறுதி நாள் வரை உள்ள என்னுடைய தோழர்கள், தோழர்களுடைய தோழர்கள் ஆகியோரின் பெயர்கள் பதியப்பட்டிருக்கின்றன. கொழுந்து விட்டெரியும் நரகத்திலிருந்து விடுதலையை நான் வேண்டுகிறேன். ஷரீஅத் என்ற கடிவாளம் மட்டும் என் நாவின் மீது இல்லையெனில் எவ்விதத் தாமதமும் இன்றி இறுதி நாள் வரை நிகழவிருப்பவற்றை, நிகழ்வுகளை, சம்பவங்களை உங்களுக்கு நான் அறிவித்து விடுவேன்'' என்று அபுல் ஹஸன் ஷாதுலி தெரிவிக்கின்றார்.

ஷியாக்களின் அதே ஆணவம் அப்படியே இங்கு ஷாதுலியாரின் வார்த்தையில் கொப்பளிப்பதை நாம் பார்க்க முடிகிறது.

இங்கு இவர் மூன்று விஷயங்களைக் குறிப்பிடுகிறார்.

1. இறுதி நாள் வரை வரப் போகிற இவர்களது பக்த கோடிகளின் பட்டியல் இவருக்குத் தெரியுமாம்.

2. அத்துடன் அவர்களுக்கு நரகத்திலிருந்து விடுதலை வேண்டுவாராம். மறுவார்த்தையில் சொல்ல வேண்டுமாயின் மற்ற சங்கத்திலிருந்து விலகி இவரது சங்கத்தில் வந்து சேர்ந்தால் அவர்களுக்கு நரகத்திலிருந்து விடுதலை வாங்கிக் கொடுப்பதாகக் குறிப்பிடுகிறார்.

எப்படி மற்ற சங்கத்தில் அதாவது தரீக்காவில் உள்ள ஆட்களைத் தங்கள் சங்கத்திற்கு இழுப்பதற்கு ஆசை காட்டியிருக்கிறார் என்று பாருங்கள்.

3. கியாமத் நாள் வரை நடைபெறும் விஷயம் இவருக்குத் தெரியுமாம். ஆனால்ஷரீஅத்தின் கடிவாளம் பிடித்து இழுப்பதால் தான் அதை அவர் அவிழ்த்து விடவில்லையாம்.

இம்மூன்று விஷயங்களிலும் தனக்கு மறைவான ஞானம் இருப்பதாக இவர் வாதிடுகின்றார். அதாவது அல்லாஹ்வுக்குரிய மறைவான ஞானத்தை அறியும் ஆற்றல் தனக்கு இருப்பதாக வாதிடுகிறார்.

ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் தனது தூதரிடம் சொல்லச் சொல்கிறான்.

"அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! "குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?'' என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 6:50

"அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 7:188

நூஹ் (அலை) அவர்களையும் இவ்வாறு கூறச் செய்கின்றான்.

"என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூறமாட்டேன். உங்கள் கண்கள் இழிவாகக் காண்போருக்கு அல்லாஹ் எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன். (அவ்வாறு கூறினால்) நான் அநீதி இழைத்தவனாகி விடுவேன்'' (எனவும் கூறினார்.)

அல்குர்ஆன் 11:31

நபி (ஸல்) அவர்களால் கியாமத் நாளின் அடையாளங்களைத் தான் சொல்ல முடிந்ததே தவிர உறுதியாக இந்த நாள் தான் என்று அவர்களால் சொல்ல முடியவில்லை.

வஹீயின் தொடர்பில் இருந்த அவர்களாலேயே அதைச் சொல்ல முடியவில்லை. ஆனால் இவர்களோ சர்வ சாதாரணமாக, கியாமத் நாள் வரை உள்ள விஷயங்களை அறிந்திருப்பதாகக் கதை அளக்கின்றனர்; காதில் பூச்சுற்றுகின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் மறைவான ஞானத்தை அறிய மாட்டார்கள் என்று ஆயிஷா (ரலி) தெளிவாக அடித்துச் சொல்கிறார்கள். (பார்க்க: புகாரி 4855)

இது தான் அல்லாஹ்வின் தூதருடைய உண்மை நிலை எனும் போது, மற்றவர்களுக்கு இது போன்ற ஞானம் இருக்கிறது என்று கற்பனை செய்து பார்க்க முடியுமா? நிச்சயமாக முடியாது.

ஆனால் ஷியாக்களும், இந்த ஷாதுலிய்யாக்களும் தங்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாகக் கற்பனை செய்யவில்லை, உறுதியாகவே நம்புகின்றனர். இப்படி நம்புகிறவர்கள் ஒரு போதும் முஸ்லிம்கள் கிடையாது என்பதை மேற்கண்ட வசனங்கள் மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.