சனி, 2 ஏப்ரல், 2016

நபிகள் நாயகத்தின் மக்கா, மதீனா வாழ்க்கை


வரலாற்றுச் சுருக்கம்

இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா என்னும் நகரத்தில் கி.பி. 571 ஆம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.

குலப் பெருமையையும், சாதி வேற்றுமையையும் வேரோடு பிடுங்கி எறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்று அரபு மண்ணில் உயர்ந்த குலமாகக் கருதப்பட்ட குரைஷ்' என்னும் குலத்தில் பிறந்தார்கள்.

தாயின் வயிற்றிலிருக்கும் போதே தந்தை அப்துல்லாஹ்வையும், தமது ஆறாம் வயதில் தாயார் ஆமினாவையும் பறிகொடுத்து அனாதையாக நின்றார்கள்.

பின்னர் பாட்டனார் அப்துல் முத்தலிபின் அரவணைப்பிலும், அவர் மரணித்த பின் பெரிய தந்தை அபூதாலிபின் பராமரிப்பிலும் வளர்ந்தார்கள்.

சிறு வயதில் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்பதால் அற்பமான காசுக்காக ஆடு மேய்த்தார்கள். ஓரளவு விபரம் தெரிந்தவுடன் தமது பெரிய தந்தையுடன் சேர்ந்து சிரியா நாட்டுக்குச் சென்று வியாபாரம் செய்தார்கள். இதனால் இளமையில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. எழுதவோ, படிக்கவோ அவர்களுக்குத் தெரியாது.

தமது 25 வது வயதில் வியாபாரத்தைக் கற்றுத் தேர்ந்தார்கள். மக்காவில் மிகப் பெரிய செல்வச் சீமாட்டியாகவும், பெரும் வணிகராகவும் திகழ்ந்த கதீஜா அம்மையார் நபிகள் நாயகத்தின் ஒழுக்கம், பண்பாடு, நேர்மை மற்றும் வியாபாரத் திறமை ஆகியவற்றைக் கேள்விப்பட்டு நபிகள் நாயகத்தை மணந்து கொள்ள விரும்பினார். நபிகள் நாயகத்தை விட அதிக வயதுடையவராகவும், விதவையாகவும் இருந்த கதீஜா அம்மையாரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள்.

இதன் மூலம் மக்காவில் மிகப் பெரிய செல்வந்தர் என்ற நிலைக்கு உயர்ந்தார்கள்.

தமது நாற்பது வயது வரை அவர்கள் சாதாரண மனிதராகவும், ஒரு வியாபாரியாகவும் தான் இருந்தார்கள். நாற்பது வயது வரை எந்த ஒரு இயக்கத்தையும் அவர்கள் தோற்றுவிக்கவில்லை. எந்த ஒரு கொள்கைப் பிரச்சாரமும் செய்ததில்லை.

நாற்பது வயது வரையிலான நபிகள் நாயகத்தின் வரலாற்றுச் சுருக்கம் இது தான்.

நாற்பது வயதுக்குப் பின்னுள்ள நபிகள் நாயகத்தின் வாழ்க்கை இரு பெரும் அத்தியாயங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று மக்கா வாழ்க்கை. மற்றொன்று மதீனா வாழ்க்கை. இது குறித்தும் ஓரளவு அறிந்து கொள்வோம். நாற்பது வயது வரை சராசரி மனிதர்களில் ஒருவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதில் தம்மைக் கடவுளின் தூதர் என்று பிரகடனம் செய்தார்கள்.

'அகில உலகையும் படைத்தவன் ஒரே கடவுள் தான்; அந்த ஒரு கடவுளைத் தவிர யாரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் கடவுளிடமிருந்து தமக்கு வருகின்ற முக்கியமான செய்தி' என்றார்கள்.

'கொலை, கொள்ளை, வட்டி, சூதாட்டம், விபச்சாரம், போதைப் பொருட்கள், பொய், பித்தலாட்டம், மோசடி, ஏமாற்றுதல், போன்ற எல்லாத் தீமைகளிலிருந்தும் மனிதர்கள் விலகி இருக்க வேண்டும்' என்ற செய்தியும் கடவுளிடமிருந்து தமக்கு வருவதாகக் கூறினார்கள்.

கஃபா என்னும் ஆலயத்திலும், அதைச் சுற்றிலும் 360 சிலைகளை நிறுவி தினம் ஒரு சிலைக்கு வழிபாடு நடத்திய சமுதாயத்தில் 'ஒரே ஒரு கடவுளை மட்டும் தான் வணங்க வேண்டும்; மற்றவை கடவுள் அல்ல' என்று கூறினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை வரலாற்றைப் படிக்காதவர்களும் அனுமானிக்க முடியும்.

உண்மையாளர், நம்பிக்கைக்கு உரியவர் என்றெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பாராட்டிய மக்கள் இந்தக் கொள்கை முழக்கத்துக்குப் பின் கடும் பகைவர்களாகி விட்டனர். பைத்தியம் என்று பட்டம் சூட்டினார்கள். அவர்களையும், அவர்களது கொள்கையை ஏற்றுக் கொண்ட விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரையும் சொல்லொனாத துன்பத்துக்கு ஆளாக்கினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முதலில் எதிர்த்தவர்களும், கடுமையாக எதிர்த்தவர்களும் அவர்களது குடும்பத்தினர் தாம் என்பது குறிப்பிடத்தக்கது. 'தமது குலத்தைச் சேர்ந்த ஒருவரே எல்லோரும் சமம்' என்று பிரச்சாரம் செய்கிறாரே! தாழ்த்தப்பட்டவர்களையும், இழிகுலத்தோரையும், கறுப்பர்களையும், அடிமைகளையும் உயர் குலத்துக்குச் சமம் என்கிறாரே! தம்மோடு சரிக்குச் சரியாக அவர்களையும் மதித்து குலப்பெருமையைக் கெடுக்கிறாரே' என்ற ஆத்திரத்தில் தம்மை மிகவும் உயர் குலம் என்று நம்பிய நபிகள் நாயகத்தின் குலத்தினர் கடுமையாக நபிகள் நாயகத்தை எதிர்த்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பிரச்சாரத்தை இரகசியமாக நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்ட அப்பாவிகளையும், கேட்பதற்கு நாதியற்றவர்களையும் கொன்று குவித்தார்கள். சிறுவர்களை ஏவி விட்டு கல்லால் அடிக்கச் செய்தார்கள்.

ஒரு கட்டத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள கணவாய்க்கு நபிகள் நாயகத்தையும், அவர்களது சகாக்களையும் விரட்டியடித்து சமூகப் புறக்கணிப்பும் செய்தனர். பல நாட்கள் இலைகளையும், காய்ந்த சருகுகளையும் மட்டுமே உணவாகக் கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள்.

'நபிகள் நாயகத்துடன் யாரும் பேசக் கூடாது; அவருடன் யாரும் எந்த உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது' என்றெல்லாம் ஊர்க் கட்டுப்பாடு போட்டார்கள்.

நபிகள் நாயகத்தின் சகாக்கள் ஒரு கட்டத்தில் ஊரை விட்டே ஓட்டம் பிடிக்கும் நிலைக்கு ஆளானார்கள். நபிகள் நாயகத்தின் அனுமதியோடு சிலர் அபீசீனியாவுக்கும், வேறு சிலர் மதீனா எனும் நகருக்கும் குடி பெயர்ந்தார்கள்.

இத்தனை அடக்குமுறைகளையும் மீறி நபிகள் நாயகத்தின் கொள்கை வளர்ந்து கொண்டு தான் இருந்தது.

முடிவில் 'இவரை உயிரோடு விட்டு வைத்தால் ஊரையே கெடுத்து விடுவார்; எனவே கொலை செய்து விடுவோம்' என்று திட்டம் வகுத்தார்கள்.

இச்செய்தியை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொத்து, சுகம், வீடுவாசல் அனைத்தையும் அப்படியே போட்டு விட்டு எளிதாக எடுத்துச் செல்ல இயன்ற தங்க நாணயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு தம் தோழர் அபூபக்ருடன் மதீனா என்னும் நகர் நோக்கி தியாகப் பயணம் மேற்கொண்டார்கள்.

நாற்பதாம் வயதில் ஆரம்பித்த மக்கா வாழ்க்கை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 53 ஆம் வயது வரை நீடித்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த போது அவர்களது கொள்கைப் பிரச்சாரம் பற்றிக் கேள்விப்பட்டு மதீனாவிலிருந்து சிலர் வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்கனவே சந்தித்திருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய கொள்கை விளக்கத்தையும் ஏற்றிருந்தனர்.

'மக்காவில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டால் நீங்கள் எந்தத் தயக்கமும் இன்றி மதீனா வரலாம்; எங்கள் உயிரைக் கொடுத்தேனும் உங்களைக் காப்போம்' என்று அவர்கள் உறுதிமொழியும் கொடுத்திருந்தனர். மதீனா சென்று நபிகள் நாயகம் (ஸல்) போதனை செய்த ஒரு கடவுள் கொள்கையைப் பிரச்சாரம் செய்து ஓரளவு மக்களையும் அவர்கள் வென்றெடுத்திருந்தனர்.

இதன் காரணமாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா நகருக்குப் புறப்பட்டார்கள்.

அவர்கள் எதிர்பார்த்தது போல அவ்வூரில் மகத்தான வரவேற்பு அவர்களுக்குக் காத்திருந்தது. அவ்வூர் மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) பிரச்சாரம் செய்த கொள்கையையும் ஏற்றார்கள். நபிகள் நாயகத்தைத் தங்களின் தலைவராகவும் ஏற்றுக் கொண்டார்கள்.

மதீனா நகரின் மக்கள் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள மக்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் நுழைந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) தமது 63 ஆம் வயதில் மதீனாவில் மரணிக்கும் போது இன்றைய இந்தியாவை விட அதிக நிலப்பரப்பைத் தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்திருந்தார்கள்.

இந்தியா போன்ற பெரும் நிலப்பரப்பை ஒரு நாடாக ஆக்குவதற்கு எண்ணூறு ஆண்டு கால முஸ்லிம்களின் ஆட்சியும், இருநூறு ஆண்டு கால வெள்ளையர்களின் ஆட்சியும் ஆக ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டன.

ஆயிரம் ஆண்டுகளில் உருவாக்கப்பட வேண்டிய ஒரு அகண்ட ராஜ்ஜியத்தைப் பத்தே ஆண்டுகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கினார்கள். அதுவும் அடக்குமுறையினால் இல்லாமல் தமது கொள்கைப் பிரச்சாரத்தின் மூலம் மக்களை வென்றெடுத்து இந்த ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள். இத்தகைய சாம்ராஜ்ஜியம் நபிகள் நாயகத்துக்கு முன்போ, பின்போ உலகில் எங்குமே ஏற்பட்டதில்லை எனலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த கால கட்டத்தில் இத்தாயும், பாரசீகமும் உலகில் மிகவும் வலிமை மிக்க நாடுகளாக இருந்தன. உலகின் மிகப் பெரிய வல்லரசுகளாக இவ்விரு நாடுகளும் இருந்தன. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தே ஆண்டுகளில் தமது ராஜ்ஜியத்தை உலகின் ஒரே வல்லரசாக உயர்த்தினார்கள்.

அன்றைக்கு உலகில் மிகவும் வலிமை மிக்க இராணுவ பலம் கொண்டதாகவும், கூக்காக பணி செய்யாத வீரர்களைக் கொண்டதாகவும் நபிகள் நாயகத்தின் இராணுவம் இருந்தது. அது போல் கேள்வி கேட்பாரில்லாத வகையில் அதிக அதிகாரம் பெற்ற தலைவராகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தார்கள்.

சக்தி வாய்ந்த இரண்டு தலைமை

ஆட்சித் தலைமை மட்டுமின்றி மற்றொரு தலைமையும் அவர்களுக்கு இருந்தது. அவர்கள் அறிமுகப்படுத்திய இஸ்லாம் என்னும் ஆன்மீகப் பாதைக்கும் அவர்களே தலைவராக இருந்தார்கள். ஒரு வகையில் பார்த்தால் இது ஆட்சித் தலைமையை விட வலிமையானது என்று கூறலாம்.

ஆட்சித் தலைமைக்குக் கட்டுப்படும் போது பயத்தின் காரண மாகவே மக்கள் கட்டுப்படுவார்கள். முழு ஈடுபாட்டுடன் கட்டுப்பட மாட்டார்கள். மதத் தலைமைக்கு பக்தியுடன் கட்டுப்படுவார்கள். ஆன்மீகத் தலைவருக்கு முன்னால் ஆட்சித் தலைவர்களும், அறிஞர்களும் மண்டியிட்டுக் கிடப்பதையும், நாட்டையே ஆளும் தலைவர்கள் கூட ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிட்டு நிற்பதையும் இன்றைக்கும் நாம் பார்க்கிறோம்.

யாரோ உருவாக்கிய ஒரு மதத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஆன்மீகவாதிகளில் ஒருவராக இருப்பவருக்கே இந்த நிலை என்றால், ஒரு மார்க்கத்தை உருவாக்கிய ஒரே ஆன்மீகத் தலைவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களால் எவ்வளவு மதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதைக் கூறத் தேவையில்லை.

இதனால், நபிகள் நாயகத்தின் நடை, உடை, பாவணையைக் கூட அப்படியே பின்பற்றக் கூடிய தொண்டர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றிருந்தார்கள்.

கேள்வி கேட்பாரில்லாத ஆன்மீகத் தலைமையும், அசைக்க முடியாத ஆட்சித் தலைமையும் அவர்களிடம் இருந்தும் அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள்?

தலைமைக்கு ஆசைப்படுபவரும், இது போன்ற பதவிகளையும், அதிகாரத்தையும் அடைந்தவரும் எவ்வாறு நடந்து கொள்வார்களோ, அவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடக்கவில்லை. பதவியையும், அதிகாரத்தையும் பெற்றவர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவார்களோ அவ்வாறு அவர்கள் பயன்படுத்தவும் இல்லை.