வியாழன், 27 ஏப்ரல், 2017

அகழ்ப் போர்


அல்அஹ்சாப் என்று அறியப்படும் யுத்தம் ஹிஜிரி 5ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தம் ஆகும்.

பனூ நளீர் குலத்து யூதர்களுடன் நடைபெற்ற போரில் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது. இதனால் பனூ குறைழா என்ற யூதர்கள் மிகவும் கவலையடைந்தனர். முஸ்லிம்களை அழிப்பதற்காக பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டினர்.

முஸ்லிம்களுக்கு எதிராக குரைஷிகள், மற்றும் பல்வேறு குலத்தினரை ஒன்று திரட்டுவதில் யூதர்கள் வெற்றி கண்டனர்.

முஸ்லிம்களுக்கு எதிராகப் பல்வேறு குலத்தினரும் பெரும்படை திரட்டி வந்ததினால் இப்போருக்கு ”அல்- அஹ்சாப்- கூட்டுப் படை என்ற பெயர் வந்தது.

இப்பெரும் படை முஸ்லிம்களின் மீது போர்தொடுக்க மதீனாவை நோக்கி வந்தது.

பெரும்படை மதீனாவைத் தாக்க வருகின்ற செய்திகள் கிடைத்தவுடன் நபி (ஸல்) அவர்கள் உடனடியாக ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழுவைக் கூட்டினார்கள். மதீனாவையும் முஸ்லிம்களையும் எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசனை நடத்தினார்கள். பல கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின் மதீனாவைச் சுற்றிலும் அகழ் தோன்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் இதற்கு ”அகழ் யுத்தம்” என்றும் பெயர் கூறப்பட்டுள்ளது. இந்தக் கருத்தை முன்வைத்தவர்கள் ஸல்மான் ஃபார்ஸி (ரழி) என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த முடிவு எடுக்கப்பட்டவுடன் முஸ்லிம்கள் மிகுந்த உற்சாகத்துடன் அகழ் தோண்டுவதில் ஈடுபட்டார்கள். நபியவர்கள் முஸ்லிம்களுக்கு ஆர்வமூட்டி வந்தார்கள்.

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அகழ்ப் போர் சமயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் இருந்தோம். நபித்தோழர்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தனர். நாங்கள் எங்கள் தோள் மீது மண் சுமந்து கொண்டிருந்தோம். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

இறைவா! மறுமை வாழ்வைத்தவிர வேறு (நிரந்தர) வாழ்வு கிடையாது. ஆகவே, (அதற்காக உழைக்கும்) முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் மன்னிப்பருள்வாயாக! என்று (பாடியபடி) கூறினார்கள் நூல் : புகாரி (4098)

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அகழ்ப் போரின் போது) அகழ் (வெட்டும் பணி நடக்கும் இடத்தை) நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் (கடும்) குளிரான காலை நேரத்தில் (அகழ்) தோண்டிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பணியை அவர்களுக்காகச் செய்திட அவர்களிடம் அடிமை(ஊழியர்)கள் இல்லை. அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்ட போது நபி (ஸல்) அவர்கள்,

இறைவா! (நிலையான) வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கை தான். ஆகவே, அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளி என்று (பாடிய வண்ணம்) கூறினார்கள். இதைக் கேட்ட நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பதிலளித்தவண்ணம்,

நாங்கள் வாழும் காலமெல்லாம் இறைவழியில் அறப்போர் புரிந்து கொண்டிருப்போம்' என்று முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதி மொழி தந்துள்ளோம் என்று (பாடிய படி) கூறினார்கள்.

நூல் : புகாரி (2834)

பராஉ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அகழ்ப் போரின் போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் மண்ணைச் சுமந்து கொண்டு செல்வதை நான் பார்த்தேன். மண் அவர்களுடைய வயிற்றின் வெண்மையை மறைத்(துப் படிந்)திருந்தது. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய வண்ணம்) கூறிக் கொண்டிருந்தார்கள்:

(இறைவா!) நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்க மாட்டோம்; தருமம் செய்திருக்கவும் மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட் டோம். நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும்போது எங்கள் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இவர்கள் (குறைஷிகள்) எங்கள் மீது அக்கிரமம் புரிந்து விட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தர மாட்டோம்.

நூல் : புகாரி 2837

கடுமையான பசி பட்டினிக்கு ஆளாகி இருந்தும் முஸ்லிம்கள் சுறுசுறுப்பாக அகழ் தோண்டுவதில் ஈடுபட்டிருந்தனர்.

இதைப் பற்றி அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: (அகழ் தோண்டிக் கொண்டிருக்கும்) அவர்களுக்கு எனது ஒரு கையளவு வாற்கோதுமை கொண்டு வரப்பட்டு, கெட்டுப் போன கொழுப்புடன் சேர்த்துச் சமைக்கப்பட்டு அந்த மக்களுக்கு முன் வைக்கப்படும். அப்போது அவர்கள் எல்லாரும் பசியுடன் இருப்பார்கள். அந்தக் கெட்டுப்போன கொழுப்பு நாற்றமடித்தபடி தொண்டையிலேயே சிக்கிக் கொள்ளும்.

நூல் : புகாரி (4100)

அபூ தல்ஹா (ரழி) அறிவிக்கிறார்கள் : எங்களின் பசியைப் பற்றி நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டோம். எங்களது வயிற்றில் ஒரு கல்லைக் கட்டி இருந்ததைக் காட்டினோம். நபி (ஸல்) அவர்களோ தங்களது வயிற்றில் இரண்டு கற்கள் கட்டி இருந்ததைக் காட்டினார்கள். நூல் : திர்மிதி (2293)

மேலும் பல அற்புதங்களும் அகழ் யுத்தத்தின் போது நடந்தது.

ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள் ; நாங்கள் அகழ்ப் போரின் போது அகழ் தோண்டிக் கொண்டிருந்தோம். அப்போது கெட்டியான பாறாங்கல்லொன்று வெளிப்பட்டது. (அதை எவ்வளவோ முயன்றும் எங்களால் உடைக்க முடியவில்லை. உடனே இதுபற்றித் தெரிவிக்க) நபி (ஸல்) அவர்களிடம் சென்று, இதோ ஒரு பாறாங்கல் அகழில் காணப்படுகிறது என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் இறங்கிப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டு எழுந்தார்கள். அப்போது அவர்களது வயிற்றில் ஒரு கல் கட்டப்பட்டிருந்தது. (ஏனெனில்,) நாங்கள் மூன்று நாட்கள் எதையும் உண்ணாமலிருந்தோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் குந்தா - எடுத்து பாறை மீது அடித்தார்கள். அது குறுமணலாக மாறியது.

நூல் : புகாரி (4101)

மற்றொரு அற்புதமும் நடந்தது

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :(போருக்காக) அகழ் தோண்டப்பட்டுக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்களின் வயிறு (பசியினால்) மிகவும் ஒட்டியிருப்பதைக் கண்டேன். உடனே நான் திரும்பி என் மனைவியிடம் வந்து, நபி (ஸல்) அவர்களின் வயிறு மிகவும் ஒட்டிப் போயிருப்பதைக் கண்டேன். உன்னிடம் ஏதேனும் (உண்ண) இருக்கிறதா? என்று கேட்டேன். உடனே என்னிடம் என் மனைவி ஒரு பையைக் கொண்டு வந்தாள். அதில் ஒரு ஸாவு' அளவு வாற்கோதுமையிருந்தது. வீட்டில் வளரும் ஆட்டுக் குட்டி ஒன்றும் எங்களிடம் இருந்தது. அதை நான் அறுத்தேன். என் மனைவி அந்தக் கோதுமையை அரைத்தாள். நான் (அறுத்து) முடிக்கும் போது அவளும் (அரைத்து) முடித்து விட்டாள். மேலும் அதனைத் துண்டுகளாக்கி அதற்கான சட்டியிலிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்தேன். (நான் புறப்படும் போது என் மனைவி,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் முன்னால் என்னை நீங்கள் கேவலப் படுத்திவிட வேண்டாம். (உணவு கொஞ்சம் தானிருக்கிறது' என்று கூறிவிடுங்கள்) என்று சொன்னாள். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இரகசியமாக, அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குச் சொந்தமான ஆட்டுக் குட்டியொன்றை அறுத்து, எங்களிடம் இருந்த ஒரு ஸாவு' அளவு வாற்கோதுமையை அரைத்தும் வைத்துள்ளோம். எனவே, தாங்களும் தங்களுடன் ஒரு சிலரும் (என் இல்லத்திற்கு) வாருங்கள் என்று அழைத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் உரத்த குரலில், அகழ்வாசிகளே! ஜாபிர் உங்களுக்காக உணவு தயாரித்துள்ளார். எனவே, விரைந்து வாருங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜாபிர் -ரலி- அவர்களிடம்), நான் வரும் வரை நீங்கள் சட்டியை (அடுப்பிலிருந்து) இறக்க வேண்டாம். உங்கள் குழைத்த மாவில் ரொட்டி சுடவும் வேண்டாம் என்று கூறினார்கள். நான் திரும்பி வந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களை அழைத்துக் கொண்டு) அவர்களுக்கு முன்னால் வந்து கொண்டிருந்தார்கள். நான் மனைவியிடம் வந்து சேர்ந்தேன். (நபி -ஸல்- அவர்கள் தோழர்கள் பலருடன் வருவதைப் பார்த்து என் மனைவி கோபமுற்று) என்னைக் கடிந்து கொண்டாள். உடனே நான், நீ நபி (ஸல்) அவர்களிடம் சொல்லச் சொன்ன விஷயத்தை நான் (அவர்களிடம்) சொல்லிவிட்டேன் என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் என் மனைவி குழைத்த மாவைக் கொடுத்தாள். நபி (ஸல்) அவர்கள் அதில் (தமது திரு வாயினால்) ஊதினார்கள். மேலும், மாவில் பரக்கத் - பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு, எங்கள் இறைச்சிச் சட்டியை நோக்கி வந்தார்கள். பிறகு அதில் வாயால் ஊதி பரக்கத் - பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், (என் மனைவியை நோக்கி), ரொட்டி சுடுபவள் ஒருத்தியை (உதவிக்கு) அழை. அவள் என்னோடு ரொட்டி சுடட்டும். உங்களுடைய பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக் கொடுத்துக் கொண்டிரு. பாத்திரத்தை இறக்கி வைத்து விடாதே என்று கூறினார்கள் அங்கு (வந்தவர்கள்) ஆயிரம் பேர் இருந்தனர்.

ஜாபிர் (பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு, அந்த உணவை விட்டுத் திரும்பிச் சென்றனர். அப்போது எங்கள் சட்டி நிறைந்து சப்த மெழுப்பியவாறு கொதித்துக் கொண்டிருந்தது. அது (கொஞ்சமும் குறையாமல்) முன்பிருந்தது போலவே இருந்தது. மேலும், எங்கள் குழைத்த மாவும் (கொஞ்சமும் குறைந்து விடாமல்) முன்பு போலவே ரொட்டியாகச் சுடப்பட்டுக் கொண்டிருந்தது புகாரி (4102)

எதிரிப் படைகள் மதீனாவை அடைவதற்கு முன்பாகவே அகழ் தோண்டும் பணியை முஸ்லிம்கள் முடித்து விட்டனர்.

முஸ்லிம்கள் இந்தக் கூட்டுப் படையைக் கண்ட போது அவர்களின் இறைநம்பிக்கை அதிகரித்து. அவர்கள் சிறிதும் அஞ்சவில்லை. இதைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

நம்பிக்கை கொண்டோர் கூட்டுப் படையினரைக் கண்ட போது "இதுவே அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும், அவனது தூதரும் உண்மையே சொன்னார்கள்'' என்று கூறினர். நம்பிக்கையையும், கட்டுப்படுதலையும் தவிர வேறெதனையும் அவர்களுக்கு (இது) அதிகமாக்கவில்லை

(அல்குர்ஆன் 33 : 22)

ஆனால் முனாஃபிக்கீன்கள் இந்தப் படையைப் பார்த்து அஞ்சி நடுங்கினர். இதைப் பற்றியும் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏமாற்றும் வாக்குறுதியையே அளித்தனர்'' என்று நயவஞ்சகர்களும், உள்ளங்களில் நோய் உள்ளோரும் கூறிய போதும் (சோதிக்கப்பட்டனர்).

(அல்குர்ஆன் 33:12)

எதிரிகள் முஸ்லிம்களைத் தாக்கவும், மதீனாவில் நுழையவும் நாடிய போது அதற்குத் தடையாக அகழ் இருப்பதைப் பார்த்தனர். வேறு வழியின்றி முஸ்லிம்களை முற்றுகையிடுவோம் என்ற முடிவில் அனைவரும் அகழைச் சூழ்ந்து கொண்டனர்.

இணைவைப்பவர்கள் மிகக் கோபத்துடன் அகழைச் சுற்றி வந்தார்கள். எங்காவது ஒரு சிறு வழி கிடைத்தால் அதன் மூலம் சென்று விடலாம் என்று முயன்றனர். ஆனால், முஸ்லிம்கள் அகழின் பக்கம் எதிரிகளை நெருங்கவிடாமல் அம்பால் தாக்கினர்.

எதிரிகள் அங்கு முற்றுகையிட்டிருந்த சில நாட்களில் பலமுறை அகழியில் இறங்குவதற்கும், அதன் மீது பாதை அமைப்பதற்கும் மிகத் தீவிரமாக முயன்றனர். ஆனால், முஸ்லிம்களின் அம்பு மழைக்கு எதிராக அவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. இதுபோன்ற தற்காப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால் நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சில நேரத் தொழுகைகள் தவறின.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:அகழ்ப் போரின் போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் குறைஷிக் குல இறைமறுப்பாளர்களை ஏசிக் கொண்டே வந்து, சூரியன் மறையத் தொடங்கும் வரை என்னால் அஸ்ர் தொழுகையை தொழ முடியாமல் போய்விட்டது என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் (இதுவரை) அஸ்ர் தொழவில்லை என்று கூறினார்கள். பின்னர் புத்ஹான் எனும் பள்ளத்தாக்கை நோக்கி நாங்கள் சென்றோம். அங்கே தொழுகைக்காக நபி (ஸல்) அவர்கள் உளூ செய்தார்கள். நாங்களும் தொழுகைக்காக உளூச் செய்தோம். சூரியன் மறைந்த பிறகு அஸ்ர் தொழுதார்கள். அதன் பின்னர் மஃக்ரிப் தொழுதார்கள். (அவர்களுக்குப் பின் நின்று நாங்களும் தொழுதோம்).

நூல் : புகாரி 596)

தொழுகைகள் தவறியதற்குக் காரணமாயிருந்த இணைவைப்பவர்களுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். இது குறித்து அலீ (ரலி) கூறுகிறார்கள்:

அஹ்ஸாப் (அரபுக் குலங்கள் அனைத்தும் ஒன்றுதிரண்டு தாக்க வந்த அகழ்ப்) போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் (எதிரிகளுடைய) வீடுகளையும் புதை குழிகளையும் நெருப்பால் நிரப்புவனாக! அவர்கள் சூரியன் மறையும் நேரம் வரை நடுத் தொழுகை(யான அஸர் தொழுகை) யிலிருந்து நமது கவனத்தைத் திருப்பி விட்டார்கள் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி (2931)

இதிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவெனில்: எதிரிகள் அகழைக் கடக்க முயற்சி செய்ததும், முஸ்லிம்கள் அதை எதிர்த்ததும் பல நாட்களாக நீடித்தது. ஆனால் இரு படைகளுக்கும் இடையில் அகழ் தடையாக இருந்ததால் நேரடியான சண்டையோ, பலத்த சேதமோ யாருக்கும் ஏற்படவில்லை. இரு தரப்பிலிருந்தும் அம்பெறிந்தே தாக்குதல் நடந்தது.

இவ்வாறு இருதரப்பினரும் அம்பெய்து கொண்டதில் விரல்விட்டு எண்ணும் அளவுக்கு இரு தரப்பிலும் ஒரு சிலர் கொல்லப்பட்டனர்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அகழ்ப் போரின் போது சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் தாக்கப்பட்டார்கள். அன்னாரது கை நரம்பில் குறைஷிகளில் ஒருவனான ஹிப்பான் பின் அரிஃகா என்றழைக்கப்பட்டவன் அம்பெய்து (அவர்களைக் காயப்படுத்தி) விட்டான். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்கு வசதியாக (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலிலேயே (அவருக்குக்) கூடாரமொன்றை அமைத்தார்கள்.

(புகாரி 4122)

இந்நிலையில் மதீனாவில் முஸ்லிம்களுக்கு மிக அருகில் இருந்த பனூ குறைழா குலத்து யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மறைமுகமாக உதவி செய்து கொண்டு இருந்தாலும் வெளிப்படையாக நபியவர்களுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக முறித்தனர். முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த முற்பட்டனர்.

முஸ்லிம்களுக்கு இது மிக இக்கட்டான நிலையாக இருந்தது. குரைளா யூதர்கள் பின்புறத்திலிருந்து தாக்குதல் நடத்தினால் அதைத் தடுக்கவும் முடியாது. எதிர்த் திசையிலோ மிகப் பெரிய படை. அதை விட்டு எங்கும் செல்லவும் முடியாது.

முஸ்லிம்களுடன் இருந்த சில நயவஞ்சகர்களின் வஞ்சகத்தனம் அப்போது வெளிப்பட்டது. அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏமாற்றும் வாக்குறுதியையே அளித்தனர்'' என்றும் ‘‘எங்களின் வீடு பாதுகாப்பின்றி இருக்கின்றது. எனவே, நாங்கள் போரிலிருந்து திரும்பி விடுகிறோம். எங்களது வீடுகள் மதீனாவிற்கு வெளியில் இருக்கின்றன'' என்று முனாஃபிக்கீன்கள் கூறினர். இவர்களைப் பற்றியே பின்வரும் குர்ஆன் வசனம் இறக்கப்பட்டது.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏமாற்றும் வாக்குறுதியையே அளித்தனர்'' என்று நயவஞ்சகர்களும், உள்ளங்களில் நோய் உள்ளோரும் கூறிய போதும் (சோதிக்கப்பட்டனர்) . யஸ்ரிப் (மதீனா)வாசிகளே! உங்களால் (எதிர்த்து) நிற்க முடியாது. எனவே திரும்பிச் செல்லுங்கள்!'' என்று அவர்களில் ஒரு சாரார் கூறிய போதும் (சோதிக்கப்பட்டனர்). பாதுகாப்பானவையாக இருந்தும் "எங்கள் வீடுகள் பாதுகாப்பற்றவையாக உள்ளன'' எனக் கூறி நபியிடம் அவர்களில் ஒரு பிரிவினர் அனுமதி கோரினார்கள். அவர்கள் வெருண்டோடுவதைத் தவிர வேறெதனையும் விரும்பவில்லை.

(அல்குர்ஆன் 33:12, 13)

இந்த இக்கட்டான நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடினார்கள்.

அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

(அரபுக் குலங்கள் அனைத்தும் திரண்டு வந்த அகழ்ப் போரான) அஹ்ஸாப்' போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இறைவா! வேதம் அருளியவனே! விரைவாகக் கணக்கு வாங்குபவனே! இந்தக் குலங்களைத் தோற்கடிப்பாயாக! அவர்களை நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள் நூல் : புகாரி (7489)

அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் வேண்டுதலை ஏற்று எதிரிப்படைகளை நிலைகுலையச் செய்தான். அவர்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்பட்டது. அது மிகவும் கடுமையான குளிர்காலமாகவும் இருந்தது. இதனால் எதிரிப்படையினர் மிகவும் பலவீனமடைந்தனர். எனவே அவர்கள் மக்காவை நோக்கித் திரும்ப ஆயத்தமாகினர்.

அல்லாஹ் தனது இஸ்லாமியப் படைக்குக் கண்ணியத்தையும் வெற்றியையும் வழங்கினான். தனது அடியாருக்கு உதவி செய்தான். எதிரி ராணுவங்களை அவனே தோற்கடித்தான். நபியவர்கள் தங்களது படையுடன் மதீனா திரும்பினார்கள்.

இந்த அகழ்ப்போரில் பெரும் நஷ்டங்கள் ஏதும் ஏற்படவில்லை. இதில் கடுமையான மோதலும், சேதங்களும் ஏற்படவில்லை. இருப்பினும் இது இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான போராக விளங்குகிறது.

எதிரிப் படைகள் வெளியேறிய பின் நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :(அகழ்ப் போரில் தோல்வியுற்று எதிர்) அணியினர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பிய போது இப்போது (போர் புரிவதானால்) நாம் தாம் அவர்களுடன் போர் புரியவேண்டும்; (இனி) அவர்கள் நம்முடன் போர் புரியமுடியாது; நாம் தாம் அவர்களை நோக்கிச் செல்லவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.

புகாரி (4110)