புதன், 11 ஜனவரி, 2023

திக்ருகளின் பெயரால் அரங்கேறும் பித்அத்கள்

 
திக்ருகளின் பெயரால் அரங்கேறும் பித்அத்கள்

எதிர்வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி 2023 அன்று பித்அத் மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாட்டை அறிவித்துள்ளோம். அதை மையப்படுத்தி மாதந்தோறும் ஒரு தலைப்பில் பித்அத் பற்றிய தலைப்பில் பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. செப்டம்பர் மாதம் திக்ருகளின் பெயரால் அரங்கேறும் பித்அத்கள் என்ற தலைப்பில் பிரச்சாரம் செய்ய உள்ளோம் . இன்ஷா அல்லாஹ்.

திக்ருகளின் பெயரால் அரங்கேறும் பித்அத்கள்.
மனிதனையும் ஜின்களையும் என்னை வணங்குவதற்காக அன்றி படைக்க வில்லை. என்று இறைவன் கூறுகிறான். எனவே இஸ்லாமியர்களுக்கு இறையச்சத்தை ஏற்படுத்தக் கூடிய, அதிகமதிகம் நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய வணக்கங்களை இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது. அதில் ஒன்று தான் திக்ருகள்.

காலையில் எழுந்தவுடன் ஓதும் திக்ருகள், இரவில் படுக்கச் செல்லும் போது ஓதும் திக்ருகள், தொழுகைக்கு பிறகு ஓதும் திக்ருகள் என இவை போன்ற ஏராளமான திக்ருகள் நமக்கு கற்றுத் தரப்பட்டுள்ளது.

வார்த்தைகளில் குறைந்ததாகவும் நன்மைகளில் நிறைந்ததாகவும் அமைந்த திக்ருகளும் அதிகமதிகம் உள்ளன.

உமது மனதிற்குள் பணிவுடனும், அச்சத்துடனும் சொல்லில் உரத்த சப்தமின்றியும் உமது இறைவனைக் காலையிலும் மாலையிலும் நினைவு கூர்வீராக. அலட்சியும் செய்வோறுள் ஒருவராக ஆகிவிடாதீர் அல்குர்ஆன்: 7: 205

அவர்களின் விலாப் புறங்கள் படுக்கைகளை விட்டு விலகிவிடும். அவர்கள் அச்சத்துடனும் ஆவலுடனும் தமது இறைவனை பிரார்த்திப்பார்கள். அல்குர்ஆன்: 32:16

அவர்களே இறைநம்பிக்கை கொண்டவர்கள் அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் நிம்மதி அடைகின்றன. அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் நிம்மதி அடைகின்றன. அல்குர்ஆன் 13: 28

இவ்வாறு திக்ருகளை வலியுறுத்தக்கூடிய திருமறை வசனங்களும், நபிமொழிகளும் நிறைந்து காணப்படுகின்றன.

இத்தகைய திக்ருகளை அதிகமதிகம் ஓதுவதன் மூலம் அதிகமான நன்மைகளும் மனஅமைதி உள்ளிட்டவையும் நமக்கு கிடைக்கின்றது. எனவே அதிகமதிகம் இறைவனுக்கு திக்ரு செய்யக்கூடியவர்களாக நாம் மாற வேண்டும்.

ஆனால் திக்ருகள் என்ற பெயரில் திருமறைக் குர்ஆனும், நபியவர்களும் காட்டித்தராத பலவற்றை மக்கள் ஓதி வருகின்றனர்.

அவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு தருகிறோம்.

  • இருட்டு திக்ர் ஓதுதல்
  • ஹல்கா ஓதுதல்
  • ராத்திப் ஓதுதல்
  • ஹு ஹு. அஹ் அஹ் என்று அல்லாஹ்வின் பெயர்களை திரித்து திக்ரு ஓதுதல்.
  • ஸலவாத்துன் நாரியா ஓதுதல்.
  • தராவீஹ் தொழுகையின் ரக்அத்களுக்கிடையே ஓதப்படும் திக்ருகள்.
  • திருமணத்தின் போது மாப்பிள்ளையை அழைத்துச் செல்லும் போது ஓதப்படும் திக்ருகள்
  • திக்ருகள் ஓதும் போது ஆட்டம் போடுதல்.
  • திக்ருகள் ஓதிய பிறகு வழங்கப்படும் சீருணிகளில் பரக்கத் இருப்பதாக நினைப்பது.
  • தஸ்பீஹ் மணி வைத்து திக்ர் செய்தல்

இன்னும் இது போன்ற ஏராளமான பித்களை திக்ருகளின் பெயரால் மக்கள் அரங்கேற்றி வருகின்றனர். இவை அனைத்தும் வழிகேடாகும்.

பித்அத்கள் குறித்த நபிகளாரின் எச்சரிக்கைகள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்படும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்: புகாரி: 2697

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும், நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். செய்திகளில் மிகக் கெட்டது (மார்க்த்தின் பெயரால்) புதிதாக உருவானவையாகும், புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல் : நஸாயி 1560

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் உங்களை (மார்க்கம்) வெண்மையாக(தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள்.
அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா (ரலி)
நூல்: அஹ்மத் 16519

நபி (ஸல்) அவர்கள் தனக்கு பின்னால் இந்த மார்க்கத்தில் இல்லாததை நிச்சயம் மக்கள் உருவாக்குவார்கள் என்றும் முன்னோர்களின் பாதையை பின்பற்றுவார்கள் என்றும் அவர்கள் குர்ஆன் ஹதீஸில் இல்லாத எதை செய்தாலும் அது மறுக்கப்படும் என்று எச்சரித்து அத்தகைய பித்அத் நரகில் கொண்டு சேர்க்கும் என்றும் எச்சரித்துள்ளார்கள்.

தவறான புரிதலின் அடிப்படையிலும் இவ்வாறு செய்வதற்கு அதிக நன்மை கிடைக்கும் என்று எண்ணியும் தான் திக்ருகள் தொடர்பான பித்அத்தான காரியங்களை மக்கள் செய்து வருகின்றனர். இது தவறாகும்.

எனவே மார்க்கம் நமக்குக் காட்டித் தந்த திக்ருகளை மட்டுமே ஓத வேண்டும். மார்க்கத்தில் இல்லாத பித்அத்களை விட்டொழிக்க வேண்டும். அதற்கு அல்லாஹ் அதற்கு உதவி செய்வானாக.