சனி, 16 ஜூலை, 2016

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமிய(?) பாடல்கள்


இவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொரு உயிரும் மரணித்தே தீரும் என்பது இஸ்லாத்தின் அடிப்படை. அல்லாஹ் மட்டுமே மரணிக்காமல் என்றென்றும் உயிருடன் இருப்பவன்.

இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும்.

அல்குர்ஆன் (55: 26,27)

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்.

அல்குர்ஆன் (3: 2)

நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே.

அல்குர்ஆன் (4: 78)

ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியவர். பின்னர் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

அல்குர்ஆன் (29: 57)

"உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்" என்று கூறுவீராக!

அல்குர்ஆன் (32: 11)

இந்த வசனங்களும், இதுபோன்ற இன்னும் ஏராளமான வசனங்களும் அல்லாஹ்வைத்தவிர அனைவரும் மரணிக்கக்கூடியவர்கள் தான். மேலும் ஒவ்வொருவருடைய உயிரையும் அவர்களுக்கென்று இறைவனால் நியமனம் செய்யப்பட்ட வானவர் கைப்பற்றுவார் என்ற இந்த அடிப்படையை நமக்கு எடுத்துரைக்கிறது.

அல்லாஹ்வை இறைவனாக ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வைத்தவிர அனைவரும் மரணிப்பவர்களே என்ற இந்த சிந்தாந்தத்தை ஆழமாக நம்ப வேண்டும். அவ்வாறு நம்பினால்தான் அவர் இறைநம்பிக்கையாளராகக் கருதப்படுவார்.

அவ்வாறில்லாமல், மனிதனும் மரணிக்காமல் சாகாவரம் பெறலாம் என்று நம்பினால் அது நரகிற்கு அழைத்துச்செல்லும் தெளிவான இணைவைப்பே! இதுபோன்று இஸ்லாத்திற்கு எதிரான ஒரு அடிப்படையைத்தான் “நமனை விரட்ட” என்று துவங்கும் நாகூர் ஹனீபாவின் பாடல் தெரிவிக்கின்றது.

“நமனை விரட்ட மருந்தொன்றிருக்குது நாகூர் தர்ஹாவிலே!
அன்பு நாணயம் கொண்டு சென்றால், பெறலாம் குருநாதர் பதப்பூவிலே”
"விஞ்ஞான பண்டிதர் சாஹுல் ஹமீது ஒலிவிற்கும் அருமருந்து
அது அஞ்ஞான அந்தகாரத்தை விலக்கும் அருளெனும் மாமருந்து”

இதுதான் அந்த பாடலின் ஆரம்ப வரிகளாகும்.

“நமன்” என்றால் தமிழில் “எமன்” என்று பொருளாகும். எமன் என்ற வார்த்தை உயிரைக் கைப்பற்றுபவர் என்ற அர்த்தத்தில் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகின்றது.

அன்போடும், பக்தியோடும் நாகூர் தர்காவில் அடங்கியிருக்கும் ஷாஹுல் ஹமீதைத் தரிசித்தால், உயிரைக் கைப்பற்றுவதற்கு இறைவனால் நியமனம் செய்யப்பட்ட வானவரை விரட்டிவிட்டு நாம் மரணிக்காமல் இருந்துவிடலாம் என்று இந்த வரிகள் கூறுகின்றன.

வானவர்கள் என்பவர்கள் இறைவன் கட்டளையிட்ட விஷயத்தை மட்டுமே செய்வார்கள். அவனுக்கு ஒருபோதும் மாற்றம் செய்ய மாட்டார்கள்.

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே சஜ்தா செய்கின்றன. வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள். தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.

அல்குர்ஆன் (16: 49,50)

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும், உங்கள் குடும்த்தினரையும் நரகை விட்டுக் காத்துக்கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்ட்டளையிட்டதை செய்வார்கள்.

அல்குர்ஆன் (66: 6)

இறைக்கட்டளைப்படியே நடப்பது வானவர்களின் இயற்கை குணம். மனிதர்களின் மீது இரக்கம் அல்லது பாசம் கொண்டு இறைக்கட்டளைக்கு மாறுசெய்து விடமாட்டார்கள் என்று மேற்கொண்ட வசனங்கள் நமக்கு தெரிவிக்கின்றன.

அனால், இந்த பாடலோ வானவர்கள் நாகூர் ஷாஹுல் ஹமீதுக்குக் கட்டுப்பட்டு அவருடைய பக்தர்களின் உயிரை கைப்பற்றாது விட்டுவிடுவார்கள் என்று கூறி இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கின்றது.

மேலும், நாகூரில் தரிசித்தபின் ஒருவர் சாகாவரம் பெற்றுவிடலாம் என்ற விஷமக்கருத்தையும் இப்பாடல் தெரிவிக்கின்றது.

இந்தப்பாடல் வரிகள் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு மாற்றமாக இருப்பது ஒருபுறமிருக்க, நிதர்சனத்திற்கும் கூட மாற்றமாக இருக்கிறது.

- நாகூர் இப்னு அப்பாஸ் எம்.ஐ.எஸ்.சி.
(ஏகத்துவம் - ஜூலை 2016 இதழில் கத்தர் மண்டலம் சார்பாக வெளிவந்த கட்டுரை)