முஹம்மது ஒலி, எம்.ஐ.எஸ்.சி.
மனிதர்கள் இறைவனால் படைக்கப்பட்டாலும் இந்தப் படைப்புகளில் பொருளாதார ரீதியில் உயர்வு, தாழ்வு இருக்கத்தான் செய்கிறது. இந்த ஏற்றத்தாழ்வுகளின் மூலம் இறைவன் மனிதர்களில் ஒருவர் மற்றவர்களுக்கு உதவக்கூடிய மனிதாபிமானத்தைத் தான் நம்மிடம் எதிர்பார்க்கிறான்.
பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள் கூட இயற்கைச் சீற்றங்களினால் அனைத்தும் இழந்து ஏழைகளாக மாறிவிடுகின்றனர். இந்த நேரத்தில் நம்மிடம் உதவக் கூடிய நல்லுள்ளத்தை இறைவன் எதிர்பார்க்கிறான்.
சமீபத்தில் (டிசம்பர் 2015) தமிழகத்தில் பரவலாகப் பெய்த கனமழையின் காரணமாக சென்னை, கடலூர் போன்ற சில மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டன. அங்கு வசிக்கும் மக்களின் வீடுகள் நீரில் மிதந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையே முடங்கிப் போனது. மக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைக்காக வீதியில் இறங்கிப் போராடக்கூடிய நிலை ஏற்பட்டது. இதில் தமிழக அரசு தன்னால் இயன்ற சில உதவிகளைத் தான் செய்தது.
ஆனால் இஸ்லாம் மார்க்கம் இதுபோன்ற நிலையில் மனிதர்கள் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதில் அழகிய முறையில் நமக்கு வழிகாட்டியுள்ளது.
இஸ்லாத்தில் சிறந்த செயல்
இஸ்லாம் மார்க்கம் மனித வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு கருத்துகளைக் கூறினாலும் அதில் சிறந்ததாக பசித்தோருக்கு உணவளிக்கும் செயலைக் குறிப்பிடுகிறது. நாம் மட்டும் உண்டு கழித்து சுகபோகத்தில் வாழக்கூடிய சுய நலத்தை நமக்குக் கற்றுத் தரவில்லை.
இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும்போது,
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது' எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் (முகமன்) கூறுவதுமாகும்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி 12
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்
''ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்'' - இது மனிதர்கள் சொல்லும் பழமொழி (இறைவனை இவ்வுலகில் யாரும் காண முடியாது என்பது இஸ்லாத்தின் ஆழமான நம்பிக்கை). ஆனால் இதன் சிறப்பை உணர்ந்து மக்கள் நடப்பது போல் தெரியவில்லை. ஆனால் இஸ்லாம் மார்க்கம் இதன் சிறப்பை அழகிய முறையில் எடுத்துரைக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), "ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?'' என்று கேட்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்'' என்று கூறுவான். மேலும் அல்லாஹ், "ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை'' என்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்'' என்று கூறுவான். மேலும் "ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை'' என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்து கொள்: அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்'' என்று கூறுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் 5021
உணவளிக்காதவன் நரகம் செல்வான்
மறுமையில் நரகம் செல்வதற்குரிய கெட்ட செயல்களை இறைவன் தன் திருமறையில் பல இடங்களில் கூறியுள்ளான். அதில் மறுமையில் சொர்க்கவாசிகள், நரகவாசிகளிடம் கேட்கும் சில கேள்விகளும் அடங்கும்.
இது பற்றி இறைவன் கூறும்போது,
அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் "உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதி வந்தோம். உறுதியான காரியம் (மரணம்) எங்களிடம் வரும் வரை'' (எனவும் கூறுவார்கள்).
அல்குர்ஆன் 77:42-47
மறுப்போரின் பண்பு
இறைவனை மறுப்போர் எப்படி இவ்வுலக வாழ்வில் நடப்பார்கள் என்பதற்கு இறைவன் பல பண்புகளை திருமறையில் கூறியுள்ளான். இந்தப் பண்புகள் முஸ்லிம்களாகிய நமது வாழ்க்கையில் வராமல் இருப்பதற்கு அதிகக் கவனத்தோடு வாழ்வது நம் அனைவரின் பொறுப்பாகும்.
இது குறித்து இறைவன் தன் திருமறையில் கூறும்போது,
அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! என்று அவர்களிடம் கூறப்படும் போது "(இல்லாதவருக்கு) நாங்கள் உணவளிக்க வேண்டுமா? அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்கு உணவளித்திருப்பானே! தெளிவான வழிகேட்டிலேயே நீங்கள் இருக்கிறீர்கள்'' என்று (ஏக இறைவனை) மறுப்போர் நம்பிக்கை கொண்டோரிடம் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் 36:47
உணவளிக்கத் தூண்டாதவனின் நிலை
பசித்தோருக்கு உணவளிப்பது என்பது பொருளாதாரத்தில் சிறந்து விளங்கக்கூடியவர்களும், நடுத்தரத்தில் இருப்பவர்களும் செய்ய வேண்டிய அவசியமான பண்பாகும். ஆனால் பொருளாதாரத்தில் கீழ் நிலையில் இருப்பவர்களால் இந்தக் காரியத்தைச் செய்ய முடியாவிட்டாலும் பிறரிடத்தில் எடுத்துக் கூறியாவது பசித்தோரின் பசி போக்கப் பாடுபட வேண்டும்.
இந்தக் கருத்தில் இறைவன் பல வசனங்களை தன் திருமறையில் கூறியுள்ளான்.
புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் "எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரிய வில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே'' எனக் கூறுவான். அவனைப் பிடியுங்கள்! அவனுக்கு விலங்கு மாட்டுங்கள்! பின்னர் நரகில் கருகச் செய்யுங்கள்! பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கிலியால் அவனைப் பிணையுங்கள்! (எனக் கூறப்படும்). அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பாதவனாக இருந்தான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டவும் இல்லை.
அல்குர்ஆன் 69:25-34
அவ்வாறில்லை! நீங்கள் அனாதையை மதிப்பதில்லை. ஏழைக்கு உணவளிக்கத் தூண்டுவதில்லை. வாரிசுச் சொத்துக்களை நன்றாக உண்டு வருகிறீர்கள். செல்வத்தை அதிகம் விரும்புகிறீர்கள். அவ்வாறில்லை! பூமி தூள் தூளாக நொறுக்கப்படும் போது, வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும் போது, அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் தான் மனிதன் (உண்மையை) உணர்வான். (அப்போது) இந்தப் படிப்பினை எப்படிப் பயன் தரும்?
அல்குர்ஆன் 89:17-23
தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? அவன் அனாதையை விரட்டுகிறான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை.
அல்குர்ஆன் 107:1-3
நபிகளாரிடம் முன்மாதிரி
அகிலத்தாருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனைத்து விஷயங்களிலும் முன்மாதிரியாக இருப்பது போல் ஏழைகளுக்கு உணவளிக்கும் விஷயத்திலும் முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள். தன்னிடத்தில் உணவளிக்க ஏதும் இல்லாதிருந்த போதும் கூட பிறரிடம் எடுத்துக் கூறி மற்றவர்களின் பசி போக்க அதிக முனைப்பு காட்டினார்கள்.
இதனைப் பின்வரும் செய்தி நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்-அனுப்பினார்கள். அப்போது அவர்கள், "எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை'' என்று பதிலளித்தார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), "இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?''... அல்லது "இவருக்கு விருந்தளிப்பவர் யார்?''... என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், "நான் (விருந்தளிக்கிறேன்)'' என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார். (மனைவியிடம்) "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து'' என்று சொன்னார்.
அதற்கு அவருடைய மனைவி, "நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை'' என்று சொன்னார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், "உன் உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி(விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து)விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு'' என்று சொன்னார்.
அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார். பிறகு விளக்கைச் சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்து விட்டார். பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண்டான்
...அல்லது வியப்படைந்தான்'' என்று சொன்னார்கள். அப்போது அல்லாஹ், "தமக்கே தேவை இருந்தும் கூட, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், எவர் தன் உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு விட்டார்களோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்'' என்னும் (59:9ம்) வசனத்தை அருளினான்.
நூல்: புகாரி 3798
மேலே குறிப்பிடப்பட்ட செய்திகள் அனைத்தும் மற்றவர்கள் பசியோடிருக்க நாம் மட்டும் உண்டு கழித்து சுயநலத்தோடு வாழ்வதை இஸ்லாம் விரும்பவில்லை என்பதைத் தெளிவாகக் குறிப்படுகிறது. இத்தகைய செய்திகளை உணர்ந்து பொது நலத்துடன் வாழ்ந்து இஸ்லாத்தின் சிறப்புத் தன்மையை அனைத்து மக்களுக்கும் எடுத்துக் காட்டுவது நம் அனைவரின் கடமையாகும்.