புதன், 16 மார்ச், 2016

இஸ்லாத்தை அழிப்பதே ஐ.எஸ். அமைப்பின் இலக்கு!இஸ்லாத்தை அழிப்பதே ஐ.எஸ். அமைப்பின் இலக்கு!

ஓர் இஸ்லாமிய அரசாங்கம் போர் செய்வது, அதற்குரிய தயாரிப்புகளைச் செய்வது, அந்தப் போரில் முஸ்லிம்கள் புறமுதுகு காட்டாமல் இருப்பது, போரில் வீர மரணம் அடைவது போன்ற போர் சம்பந்தமான பல்வேறு விஷயங்களைப் பற்றி இஸ்லாம் பேசுகிறது. அதேசமயம், போர் ஏன்? எதற்கு? எப்படி? என்ற தெளிவான சட்டங்களையும் இஸ்லாம் வகுத்துள்ளது.
வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர்!

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

அல்குர்ஆன் 2:190

தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?

அல்குர்ஆன் 9:13

"போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்'' என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றல் உடையவன்.

அல்குர்ஆன் 22:39

சொந்த ஊரை விட்டு விரட்டியடித்தவர்களுடன் தான் போர்!

அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்!
அல்குர்ஆன் 2:191

"எங்கள் இறைவன் அல்லாஹ் தான்'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்கா விட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளி வாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமை உள்ளவன்; மிகைத்தவன்.

அல்குர்ஆன் 22:40

அநீதி இழைக்கப்படும் பலவீனர்களுக்காகவே போர்!

"எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!'' என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஆண்களில் பலவீனமானவர்கள், பெண்கள், மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?

அல்குர்ஆன் 4:7

போர் செய்வதற்கு இதுபோன்ற நியாயமான காரணங்கள் இருந்தாலும் ஓர் அரசாங்கம் தான் போர் தொடுக்க வேண்டும். தனி நபர்களோ, குழுக்களோ போர் செய்வதற்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.

ஆனால் இன்று திருக்குர்ஆனின் இந்தக் கட்டளைகளுக்கு மாற்றமாக சில பகுதிகளில் சிறு சிறு குழுக்கள் ஜிஹாத் என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது போர் தொடுத்துக் கொண்டிருக்கின்றன. அண்மையில் பாரிஸிலும், மாலியிலும் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற அராஜக அமைப்பு நடத்திய தாக்குதல்கள் இந்த வகையைச் சேர்ந்தவை தான். இந்த அமைப்பினர் முஸ்லிம்களின் பெயரில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க உளவுத்துறையால் உருவாக்கப்பட்ட இயக்கம் என்ற கருத்து தற்போது பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. எனினும் இவர்களும் இதைப் போன்ற மற்ற இயக்கங்களும் தங்கள் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகப் பயன்படுத்துவது ஜிஹாத் தொடர்பான வசனங்களைத் தான்.

ஐ.எஸ். அமைப்பினர் பாரிஸில் அல்ல! மாலியில் அல்ல! உலகில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதும் போர் தொடுத்துள்ளனர். முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காகப் போர் தொடுப்பதாக இவர்கள் கூறிக் கொண்டாலும் உண்மையில் முஸ்லிம்களை அழிப்பதற்காகத் தான் இவர்கள் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடுகின்றார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியவர்களாக (மக்காவை நோக்கிப்) புறப்பட்டார்கள். குறைஷி இறை மறுப்பாளர்கள் அவர்களை இறையில்லம் கஅபாவிற்குச் செல்ல விடாமல் தடுத்து விட்டனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா எனும் இடத்தில் தமது தியாகப் பிராணியை அறுத்து (பலியிட்டு) விட்டுத் தமது தலையை மழித்துக் கொண்டார்கள். மேலும், "வரும் ஆண்டில், தாம் (தம் தோழர்களுடன்) உம்ரா செய்ய (அனுமதிக்கப்பட) வேண்டும்; வாள்களைத் தவிர வேறு ஆயுதங்களை நாங்கள் எடுத்து வர மாட்டோம்; குறைஷிகள் விரும்புகின்ற வரை மட்டுமே மக்காவில் தங்கியிருப்போம்' என்னும் நிபந்தனையின் பேரில் அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அவர்களிடம் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்தின் படியே அடுத்த ஆண்டு உம்ரா செய்ய நாடி, மக்கா நகரினுள் நுழைந்தார்கள். அங்கு மூன்று நாட்கள் தங்கி (முடித்து) விட்ட போது, குறைஷிகள் நபி (ஸல்) அவர்களை (மக்காவை விட்டு) வெüயேறும் படி உத்தரவிட, நபி (ஸல்) அவர்களும் வெüயேறி விட்டார்கள்.

நூல்: புகாரி 4252

ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் மக்காவிற்கு உம்ரா எனும் வணக்கத்தைச் செய்ய வருகின்றார்கள். அப்போது மக்காவிற்குள் நுழைய விடாமல் அவர்களை மக்காவிலிருந்து இணை வைப்பாளர்கள் தடுக்கின்றார்கள். அந்த ஆண்டு நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்யாமலேயே திரும்புகிறார்கள்.

நபி (ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் அவ்வாறு தடுக்கப்பட்ட போது, அந்த மக்களை எதிர்த்துப் போர் செய்யக் கூடிய எல்லா நியாயங்களும் இருந்தன. எதிரிகளை அழிக்கும் அளவுக்கு வலிமையும் இருந்தது. ஆனாலும் முஸ்லிம்களைப் போர் செய்ய விடாமல் தடுத்ததற்கு ஒரே காரணம், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை மறைத்துக் கொண்டு மக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்களைக் கருத்தில் கொண்டு தான் நபி (ஸல்) அவர்கள் போர் செய்யவில்லை.

அவர்கள் தாம் (ஏகஇறைவனை) மறுத்தார்கள். மஸ்ஜிதுல் ஹராமை விட்டு உங்களைத் தடுத்தார்கள். தடுத்து நிறுத்தப்பட்ட பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதையும் (தடுத்தார்கள்.) உங்களுக்குத் தெரியாத நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் நீங்கள் தாக்கி, (அவர்கள்) அறியாமல் அவர்களால் உங்களுக்குத் துன்பம் ஏற்படும் என்பது இல்லாவிட்டால் (போரிட அனுமதித்திருப்பான்). தான் நாடியோரைத் தனது அருளில் அல்லாஹ் நுழையச் செய்வான். அவர்கள் (நல்லவர்கள்) தனியாகப் பிரிந்திருந்தால் அவர்களில் (நம்மை) மறுத்தோரைக் கடும் வேதனையால் தண்டித்திருப்போம்.

அல்குர்ஆன் 48:25

போரில் எதிரிகளை அழிக்கும் போது, அடையாளம் தெரியாத அத்தகைய முஸ்லிம்களையும் கொன்று விடக்கூடாது என்பதற்காகத் தான் நபி (ஸல்) அவர்களையும், அவர்களது தோழர்களையும் அல்லாஹ் தடுத்து நிறுத்தினான்.

மக்காவாசிகளின் கொடுமைக்குப் பயந்து, தங்களை வெளிப்படுத்தாமல் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்களைத் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக, பாதிக்கப்பட்ட நிலையிலும் போர் செய்ய வேண்டாம் என்று ஓர் இஸ்லாமிய அரசாங்கத்தையே அல்லாஹ் தடுத்திருக்கும் போது, இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முஸ்லிம்களையே கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கின்றனர். இவர்கள் எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும்?

நம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.

அல்குர்ஆன் 4:93

தெரிந்து, வேண்டுமென்றே முஸ்லிம்களைக் கொல்பவர்களுக்கு நிரந்தர நரகம் என்று அல்லாஹ் கூறுகின்றான். இந்த அடிப்படையிலும் இவர்கள் முஸ்லிம்கள் அல்லர் என்பது தெளிவாகின்றது.

அப்படியானால் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்லலாமா? என்ற கேள்வி இங்கு எழலாம். இஸ்லாம் எந்த ஓர் உயிரையும் அநியாயமாகக் கொலை செய்வதற்கு அனுமதிக்கவில்லை.

அல்லாஹ் தடை செய்துள்ள உயிர்க் கொலையை, தக்க காரணமின்றி செய்யாதீர்கள்!

அல்குர்ஆன் 17:33

இந்த வசனத்தின் அடிப்படையில் மனித உயிர் அனைத்துமே புனிதமானது தான். குற்றவியல் தண்டனை, போர் போன்றவை அரசாங்கத்திற்கான விதிவிலக்குகள். இதையே, "தக்க காரணமின்றி' என்று மேற்கண்ட வசனம் குறிப்பிடுகின்றது. இதைத் தவிர எந்த உயிரையும் கொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.

எனினும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முஸ்லிம்களைக் கொல்கிறார்கள் என்று நாம் இங்கு குறிப்பிட்டுக் கூறுவதற்குக் காரணம், இவர்கள் உண்மையில் முஸ்லிம்களாக இருந்தால் மேற்கண்ட வசனத்தில் கூறப்படும் நிரந்தர நரகம் என்ற தண்டனையைக் கவனத்தில் கொண்டிருப்பார்கள் என்பதை இங்கு விளக்குவதற்காகத் தான்.

ஓர் இஸ்லாமிய அரசாங்கமே போர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதில் முதியவர்களைக் கொல்லக் கூடாது; பெண்கள், குழந்தைகளைக் கொல்லக் கூடாது; மதகுருமார்களைக் கொல்லக்கூடாது; சொத்துக்களைச் சூறையாடக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை இஸ்லாம் விதித்துள்ளது. இஸ்லாம் கூறும் இந்த நிபந்தனைகளைப் பின்பற்றாமல் போரிடுவதாகக் கூறுபவர்கள் எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும்?

தெரிந்தே ஒரு முஸ்லிமைக் கொல்பவருக்கு நிரந்தர நரகம் என்று திருக்குர்ஆன் கூறியிருக்கையில், இந்தப் பயங்கரவாதிகள் கொத்துக் கொத்தாக முஸ்லிம்களையே கொல்வது, இவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதையே காட்டுகின்றது.

இந்தப் பயங்கரவாதிகள் நேரடியாக முஸ்லிம்களைக் கொல்கின்ற கொடுமையுடன் எதிர்விளைவாகவும் முஸ்லிம்களை அழித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களின் தாக்குதலுக்குப் பழிவாங்குவதற்காக இப்போது பிரான்ஸ், சிரியாவின் மீது தாக்குதல் தொடுத்துள்ளது. இந்த வான்வெளித் தாக்குதலில் கொல்லப்படுவது ஐ.எஸ். பயங்கரவாதிகள் மட்டும் கிடையாது. சிரியாவிலுள்ள அப்பாவி மக்கள், குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள் போன்ற பலவீனர்கள் தான் அதிகமாகக் கொல்லப்படுகின்றனர். இப்படி எதிர்விளைவின் மூலமாகவும் இவர்கள் முஸ்லிம்களைத் தான் அழிக்கின்றார்கள்.

இத்தகைய எதிர்விளைவால், பெற்றோரை இழந்து அனாதைகளான பிள்ளைகள், பிள்ளைகளைப் பலி கொடுத்த பெற்றோர்கள், கணவனை இழந்த மனைவிமார்கள் என்று பாதிக்கப்படும் முஸ்லிம்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

இந்தக் கொடுமையைத் தாங்க முடியாமல் ஐரோப்பாவை நோக்கி, உரிய பயண ஆவணங்கள் இல்லாமல், உடுத்திய துணியோடு, வாரிச் சுருட்டிய படுக்கையோடு அகதிகளாக சிரியாவிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறி வருகின்றனர். பாதுகாப்பான வாகனங்களில் செல்லாமல் படகுகளில் செல்வதால் கடும் குளிரில் உறைந்து, கடலில் விழுந்து முஸ்லிம்கள் சாவதற்கும் இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் தான் காரணம்.

துருக்கி கடற்கரையில் கரை ஒதுங்கிய மூன்று வயதுச் சிறுவன் அய்லான் குர்தியின் உடல் இதற்கு ஒரு சாட்சியாகும். அய்லான் குர்தியின் உடல், உலகில் வாழ்கின்ற முஸ்லிம்களின் உள்ளங்களை மட்டுமல்ல! அனைத்து சமுதாய மக்களின் உள்ளங்களையும் உலுக்கி விட்டது. கண்களில் கண்ணீரை உதிர வைத்துவிட்டது.

இரக்கமும், ஈரமும் கொண்ட ஐரோப்பிய மக்கள் லட்சக்கணக்கான சிரிய அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க முன்வருகின்ற வேளையில் அந்த வாசலையும் அடைக்கின்ற வேலையை பாரிஸ் தாக்குதல் மூலம் இந்த ஐ.எஸ். அமைப்பு அரங்கேற்றியுள்ளது.

இது மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள மார்க்க அறிவற்ற இளைஞர்களை ஜிஹாத் என்ற போர்வையில் அழைத்து, அவர்களைத் தற்கொலைச் சாவில் மடிய வைக்கின்றது. இந்த வகையிலும் முஸ்லிம்களை இந்த இயக்கம் அழித்து வருகின்றது.

சஹ்ல் பின் சஅத் அஸ் ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் இணை வைப்போரும் (கைபர் போர்க் களத்தில்) சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகளில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித் தோழர்களுக்கு விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார். (அவரது துணிச்சலான போரைக் கண்ட) நபித் தோழர்கள், "இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை'' என்று (வியந்து) கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், "அவரோ நரகவாசியாவார்'' என்று கூறினார்கள்.

அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர், "நான் அவருடன் இருக்கிறேன் (அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு)'' என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

நூல்: புகாரி 2898

போரில் கூட தற்கொலை செய்து கொள்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது. ஆனால் இந்த பயங்கரவாதிகளோ சர்வசாதாரணமாக தற்கொலைத் தாக்குதல் என்ற பெயரில் முஸ்லிம்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் இவர்கள் கிலாபத் ஆட்சியை அமைக்கப் போவதாகக் கூறிக் கொள்கிறார்கள்.

இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லிம்களின் வாழ்வுரிமை சங்பரிவாரக் கும்பல்களால் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில், அதிலும் குறிப்பாகத் தமிழகத்திலும் இந்தத் தற்கொலைப் படையில் சிலர் இருப்பதாக ஊடகங்கள் பரப்பி வருகின்றன. இது இங்கு வாழ்கின்ற முஸ்லிம்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. சங்பரிவார்கள் இதைச் சாக்காகப் பயன்படுத்தி இங்குள்ள முஸ்லிம்களைக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, உலகெங்கிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் ஒருவிதமான அச்சத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் மேலும் இன்னலுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.

அல்காயிதா செய்த செயல்களின் எதிர்விளைவுகளை விட்டு இந்த முஸ்லிம் சமுதாயம் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு, நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தற்போது ஐ.எஸ். அமைப்பினரின் எதிர்விளைவுகளில் முஸ்லிம்கள் மாட்டித் தவிக்கின்றனர்.

இவையெல்லாம் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்ற பாடம், இவர்கள் முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காகப் போரிடவில்லை. உலகில் உள்ள முஸ்லிம்களை அழிப்பதற்காகத் தான் போரிடுகின்றனர். எனவே இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முஸ்லிம்களாக இருக்க முடியாது என்பதையே இவர்களின் நடவடிக்கைகள் நமக்கு உணர்த்துகின்றன.

இங்குள்ள பரேலவிகள் ஐ.எஸ். அமைப்பின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்புணர்வை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வஹ்ஹாபிகள் தான் இந்த அமைப்பில் இருக்கிறார்கள் என்று போகிற போக்கில் அடித்து விடுகின்றார்கள். ஊடகங்களும் இதை அப்படியே வாந்தியெடுக்கின்றன. வஹ்ஹாபிகள் என்று இவர்கள் குறிப்பிடுவது ஏகத்துவவாதிகளைத் தான்.

திருக்குர்ஆனுக்கும், நபிகளாரின் ஹதீஸ்களுக்கும் மாற்றமாகச் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முஸ்லிம்களே அல்ல என்பது தான் நமது நிலைப்பாடு! இவர்கள் எப்படி ஏகத்துவவாதிகளாக இருக்க முடியும்?

இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளைப் பற்றி முகநூலில் வலம் வரும் ஒரு செய்தியை இங்கு தருகிறோம்.

ஒரு மலைப்பாதையில் காரில் சென்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் சிலர் வழிமறித்து, "நீங்கள் எந்த மதம்?'' என்று கேட்டார்கள். காரில் இருந்தவர்கள், "நாங்கள் இஸ்லாமியர்கள்'' என்றனர்.

உடனே தீவிரவாதிகள், "அப்படியானால் குர்ஆனிலிருந்து சில வரிகளைச் சொல்லுங்கள், பார்க்கலாம்'' என்றனர். காரில் இருந்தவர்கள் குலை நடுங்கி விட்டனர். உடனே காரில் இருந்த ஒரு குழந்தை, பைபிளில் இருந்து சில வரிகளைச் சொல்லிவிட்டது. "செத்தோம்' என்று காரில் இருந்த மற்றவர்கள் அதிர்ச்சியடைய, தீவிரவாதிகளோ, "சரியாகச் சொன்னாய், நீங்கள் செல்லலாம்'' என்றனர்.

சிறிது தூரம் சென்றதும், காரில் இருந்தவர்கள் குழந்தையிடம், "எப்படி நீ கொஞ்சம் கூடப் பயமில்லாமல் குர்ஆனுக்குப் பதில் பைபிள் வரிகளைச் சொன்னாய்? ஒருவேளை அந்தத் தீவிரவாதிகள் கண்டுபிடித்திருந்தால் நம் நிலை என்னவாகியிருக்கும்?'' என்று கடிந்து கொண்டனர்.

"அவர்களுக்குக் குர்ஆன் தெரியாது''

"எப்படிச் சொல்கிறாய்''

"அவர்கள் குர்ஆனை முழுவதுமாகப் படித்து உணர்ந்திருந்தால், இப்படி ஆயுதம் ஏந்தி அப்பாவி மக்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்யும் தீவிரவாதிகளாக மாறியிருக்க மாட்டார்கள். எந்தவொரு மதமும் கொலை செய்யச் சொல்லி தூண்டுவதில்லை. தீவிரவாதிகளுக்கு மதமும் கிடையாது, மனமும் கிடையாது''

மேற்கண்ட சம்பவம் கற்பனையாக இருந்தாலும் யதார்த்தம் இதுதான்.

- ஏகத்துவம், டிசம்பர் 2015