செவ்வாய், 3 நவம்பர், 2015

இணைவைப்பை துடைத்தெறிவோம்


"இணைவைப்பை துடைத்தெறிவோம்" 

சமுதாயத்தின் பேரியக்கமாகத் திகழும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தூய்மையான முறையில் மார்க்க மற்றும் சமூகப் பணிகளைச் செய்து வருகிறது. அதன் வரிசையில், வரும் 2016ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், 31ஆம் தேதி அன்று திருச்சியில் இணை வைப்புக்கு எதிராக, ஷிர்க் ஒழிப்பு மாநாட்டினை நடத்துவதாக அறிவிப்பு செய்துள்ளது.

இணை வைப்பு குறித்து இஸ்லாம் கூறும் செய்திகளை அறிந்து, அதை முறையாக விளங்கி இருப்பவர்களுக்கு இந்த மாநாட்டின் முக்கியத்துவம் நன்கு புரிந்து இருக்கும். காரணம், ஷிர்க் எனும் இணை வைப்பு சம்பந்தமாக அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் கடுமையாக எச்சரித்து இருக்கிறார்கள். திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் இது குறித்து கணக்கில்லா செய்திகள் இருக்கின்றன.

இருப்பினும், இன்னும் நிறைய மக்கள் இதனை முழுமையாக அறியாமலும் சரியாக விளங்காமலும் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் இணை வைப்பு குறித்து சில தகவல்களை சுருக்கமாக இந்தக் கட்டுரையில் காண்போம்.

இஸ்லாத்திற்கு எதிரான இணைவைப்பு

இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பது மட்டும் இஸ்லாம் அல்ல. இறைவன் ஒருவனைத் தவிர வேறு எந்த இறைவனும் இல்லை என்பது தான் இஸ்லாம். லாஇலாஹ இல்லல்லாஹ் எனும் திருக் கலிமாவின் மூலம் நாம் இதைப் புரிந்து கொள்ள முடியும். இதையே இன்னொரு கோணத்தில், அல்லாஹ்வை வணங்குவது மட்டும் இஸ்லாம் அல்ல; அல்லாஹ்வை மட்டும் வணங்குவது தான் இஸ்லாம்.

இந்த வகையில், இணைவைப்பு என்பது எந்த வடிவத்தில் இருப்பினும் அது ஒட்டுமொத்தமாக இஸ்லாத்திற்கு எதிரான, விரோதமான காரியம். இணைவைப்பு இல்லாமல் இருப்பதே தூய்மையான இஸ்லாமிய மார்க்கம் என்பதைப் பின்வரும் நபிமொழி நமக்கு விளக்குகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்கள் முன்வந்தார்கள். அப்போது ஒரு மனிதர் (வாகனமேதுமின்றி) நடந்து வந்து, "அல்லாஹ்வின் துதரே! "ஈமான் (இறைநம்பிக்கை) என்றால் என்ன?'' என்று கேட்டார். அவர்கள், "ஈமான் (இறைநம்பிக்கை) என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனது சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்'' என்று பதிலளித்தார்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! "இஸ்லாம்' (அடி பணிதல்) என்றால் என்ன?'' என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்கு வதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணை வைக்காமல் இருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடைமையான ஸக்காத்தை வழங்கி வருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்'' என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), 
நூல்: புஹாரி (4777)

ஒருவர், அல்லாஹ்வையும் வணங் குகிறார்; கல்லையும் வணங்குகிறார். அவரை இஸ்லாத்தில் இருப்பதாகச் சொல்ல மாட்டோம். அதுபோலவே ஒருவர் இறந்த மனிதர்களுக்கு, விலங்குகளுக்கு தர்ஹா கட்டி வணங்குவது மூலம் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார் என்றால், அவர் இஸ்லாத்தில் நிலையாக, சரியாக இல்லை என்பதே உண்மை.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோம், அதையே பின்பற்றுகிறோம் என்று சொல்பவர்கள் யாராக இருப்பினும், முதலில் அவர்கள் ஷிர்க்கான காரியங்களை விட்டும் விலகி இருக்க வேண்டும். இல்லையெனில், அவர் இஸ்லாத்தில் இருப்பதாகச் சொல்வதற்கும், பெருமிதம் கொள்வதற்கும் கடுகளவும் தகுதி கிடையாது என்பதே மார்க்கத்தின் பகிரங்கமான நிலைப்பாடு.

ஈமானை அழிக்கும் இணைவைப்பு

முஃமின்கள் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக் கூடாது? என்பது குறித்து திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் தெளிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. அதன்படி நம்பிக்கையாளர்கள் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவசியம். அதற்கு மாறாக செயல்படுவது, இறை நம்பிக்கையின் உறுதியை வலிமையைத் தகர்த்துவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஆகவேதான் மார்க்கம் எச்சரிக்கும் காரியங்களை விட்டும் விலகிவிடுமாறு நபிகளார் தமது தோழர்களுக்கு அறிவுரை சொன்னார்கள். அவைகளை விட்டுவிடும்படி அவர்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். அந்தக் காரியங்களுள் முதன்மையான ஒன்றாக அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இணைவைப்பைக் குறிப்பிட்டதை நாமெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(அகபா இரவில்) தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் "வாருங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்க மாட்டீர்கள் என்றும், திருடமாட்டீர்கள் என்றும், விபசாரம் புரிய மாட்டீர்கள் என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டீர்கள் என்றும், உங்கள் தரப்பிலிருந்து நீங்களே இட்டுக் கட்டும் அவதூறு எதனையும் புனைந்து கொண்டு வரமாட்டீர்கள் என்றும், எனக்கு நல்ல விஷயங்களில் மாறு செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள். உங்களில் எவர் (இந்த உறுதி மொழியை) நிறைவேற்றுகிறாரோ அவருக்குரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்சொன்ன குற்றங் களில்) எதையேனும் ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலேயே (இஸ்லாமியச் சட்டப்படி) தண்டிக்கப்பட்டு விட்டால், அதுவே அவருக்குப் பரிகாரமாகி விடும். இவற்றில் எதையேனும் ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலக வாழ்வில்) மறைத்து விட்டால் (அவரது மறுமை நிலை குறித்த) அவரது விவகாரம் அல்லாஹ்விடம் உண்டு. (மறுமையில்) அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்'' என்று சொன்னார்கள் நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் அவற்றுக்காக உறுதிமொழி கொடுத்தோம்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)
நூல்: புஹாரி (3892)

இணைவைப்பு என்பது ஈமானுக்கு எதிரானது என்பதை மேலிருக்கும் செய்தி மூலம் விளங்க இயலும். எனவேதான், ஒருபுறம் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டும், மறுபுறம் இணைவைப்பு தெய்வங்களை நம்பிக் கொண்டும் இருந்த மக்கத்து மக்களை இணைவைப்பவர்கள், காஃபிர்கள் என்று அல்லாஹ் திருமறையில் கடுமையாகக் கண்டிக்கிறான்.

அந்த மக்களிடம் இருந்த அதே நிலையை இன்றைய மக்களிடமும் பார்க்க முடிகிறது. அல்லாஹ் மீது முழுமையான நம்பிக்கையை வைப்பதற்குப் பதிலாக, இறந்தவர்கள், கொடிமரங்கள் போன்றவற்றிடம் கையேந்தி ஈமானை இழக்கும் காரியங்களைக் கண்மூடித்தனமாகச் செய்கிறார்கள். பின்வரும் வசனத்தைப் படித்தாவது இணை வைக்கும் மக்கள் மனம் திருந்த வேண்டும், தூய்மையான இறைநம்பிக்கையின் பக்கம் மீள வேண்டும்.

"வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?'' என்று அவர் களிடம் நீர் கேட்டால் "அல்லாஹ்'' என்று கூறுவார்கள். "அல்லாஹ்வை யன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!'' என்று கேட்பீராக! "அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்'' என்று கூறுவீராக!

(திருக்குர்ஆன் 39:38)

இணைவைப்பு என்பது உரிமை மீறல்

அல்லாஹ் நம்மைப் படைத்ததோடு வெறுமனே விட்டுவிடவில்லை. நமக்குத் தேவையான அனைத்தையும் அள்ளிக் கொடுத்திருக்கிறான். அன்போடும் அருளோடும் நம்மைப் பரிபாலித்துக் கொண்டிருக்கிறான். அத்தகைய இறைவனுக்கு நன்றி செலுத்துவது நமது கடமை. தொழுகை, நோன்பு, பிரார்த்தனை என்று மார்க்கம் கூறும் அனைத்து விதமான வணக்கத்திற்கும் வழிபாட்டிற்கும் அவன் மட்டுமே உரிமையானவன். இந்நிலையில், அவனுக்குக் கொடுக்க வேண்டிய இந்த உரிமையை மற்றவர்களுக்குக் கொடுப்பது பகிரங்கமான வரம்பு மீறல். இறந்து போனவர்களிடம் பிரார்த்தனை செய்வது கோரிக்கை வைப்பது, மன்றாடுவது அனைத்துமே அல்லாஹ்வுக்குக் கொடுக்க வேண்டிய உரிமையைப் பாழ்படுத்தும் பயங்கர மான காரியம்; கொச்சைப்படுத்தும் கேவலமான செயல்.

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (ஒரு வாகனத்தில்) அமர்ந் திருந்தேன். அப்போது அவர்கள், "முஆதே!'' என்று அழைத்தார்கள். நான், "இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)'' என்று சொன்னேன். பிறகு இதைப் போன்றே மூன்று முறை அழைத்துவிட்டு, "மக்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்று நீ அறிவாயா?'' என்று கேட்டார்கள். நான், "இல்லை (எனக்குத் தெரியாது)'' என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், "மக்கள் மீது அல்லாஹ்வுக்கு உள்ள உரிமை என்னவென்றால், மக்கள் அவனையே வணங்கிட வேண்டும். அவனுக்கு எதனையும்(எவரையும்) இணைவைக்கக் கூடாது'' என்றார்கள். பிறகு சிறிது தூரம் சென்றபின் "முஆதே!' என்று அழைத்தார்கள். நான், "இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)'' என்று சொன்னேன். "அவ்வாறு செயல்படும் மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன தெரியுமா? அவர்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமல் இருப்பதுதான்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: முஆத் (ரலி)
நூல்: புஹாரி (6267)

மிகப்பெரும் அநியாயம் மாபெரும் வழிகேடு

நாம் வாழும் சமுதாயத்தில் அநியாயங்களுக்குப் பஞ்சமில்லை எனுமளவிற்கு எண்ணற்ற காரியங்கள் நடக்கின்றன. நாடெங்கும் விதவிதமான வழிகேடான காரியங்கள் பரவிக் கிடக்கின்றன. இவைகளுள் மிகவும் உச்சகட்டமானது, இறைவனுக்கு இணைவைக்கும் காரியங்கள் ஆகும்.

நேர்வழியில் நிலைத்து இருக்க வேண்டும்; வழிகேட்டில் விழுந்து விடக் கூடாது; அநியாயங்களை செய்து விடக் கூடாது என்று நினைப்பவர்கள் முதலில் இணைவைப்பு காரியங்களை தூக்கியெறிய வேண்டும். காரணம், படைத்தவனுடைய இடத்தில் படைப் பினங்களை வைத்து வழிபடுவது போன்ற மிகப்பெரும் அநியாயம். மாபெரும் வழிகேடு வேறெதுவும் இல்லை.

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ் வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.

(திருக்குர்ஆன் 4:116)

லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது "என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித் தல் மகத்தான அநீதியாகும்'' என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!

(திருக்குர்ஆன் 31:13)

மன்னிப்பே இல்லாத பெரும்பாவம்

மனிதர்கள் செய்யக் கூடாத பாவங்களை இஸ்லாம் மிக அழகாகத் தெளிவுபடுத்தி இருக்கிறது. அவை அனைத்தும் தனிமனிதனையும் சமுதாயத்தையும் நாசப்படுத்தும் தன்மை கொண்டவை என்பதால் அவற்றைச் செய்பவர்களை இஸ்லாம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

வட்டி, வரதட்சணை, மோசடி, திருட்டு என்று பாவங்களை பெரும் பட்டியல் போடலாம். இருந்தாலும், இவைகளைக் காட்டிலும் மிகவும் பாரதூரமான பெரும்பாவம் இணை கற்பித்தலாகும். காரணம், மற்ற மற்ற பாவங்களை அல்லாஹ் நாடினால் மன்னித்துவிடுவான். ஆனால். இணைவைப்பான செயல்களை அல்லாஹ் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளவும் மாட்டான். அதை மன்னிக்கவும் மாட்டான்.

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

(திருக்குர்ஆன் 4:48)

"அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகப் பெரியது?'' என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைவைப்பது தான் (பெரும் பாவம்)'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல்: புஹாரி (4761)

(ஒரு முறை) "பெரும் பாவங் களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங் கள்)'' என்று சொன்னார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை)'' என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, "அறிந்துகொள்ளுங்கள்: பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்) தான்'' என்று கூறினார்கள். "நிறுத்திக் கொள்ளக் கூடாதா' என்று நாங்கள் சொல்கின்ற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டே இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
நூல்: புஹாரி (2654)

இணை கற்பித்தால் நல்லறங்கள் அழியும்

எந்தவொரு நல்ல செயலையும் மிச்சம் வைக்காமல் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் மார்க்கம் சொல்லிவிட்டது. இப்படியிருக்க, தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற மிகச் சில காரியங்களையே நாம் செய்து கொண்டிருக்கிறோம். கடலளவு இருக்கும் மார்க்கத்தில் கையளவு காரியங்களைக் கூட நாம் பரிபூரணமாகக் கடைப்பிடிப்பது இல்லை. இருப்பினும், நமது அமல்கள் அனைத்தும் அல்லாஹ் வினால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனும் ஆவல் அனைவருக்கும் இருக்கிறது.

இந்நிலையில், நாம் செய்கிற காரியங்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் எனில் கண்டிப்பாக இணைவைப்புக் காரியங்களை விட்டும் விலகி இருக்க வேண்டும். தாயத்து கட்டுவது, தகடு மாட்டுவது என்று இணைவைப்புகளைச் செய்து கொண்டு ஒருவர் எவ்வளவுதான் சிறப்பான அமல்களைச் செய்தாலும் அவை வீணாகி விடும். அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாமல், நன்மை கிடைக்காமல் அழிந்து போய்விடும். இதோ அல்லாஹ் எச்சரிப்பதைப் பாருங்கள்.

"நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் இழப்பை அடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!'' என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

(திருக்குர்ஆன் 39: 66)

இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

(திருக்குர்ஆன் 6:88)

வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறினான்: நான் இணையாளர்களை விட்டும் இணை கற்பித்தலை விட்டும் அறவே தேவையற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால், அவனையும் அவனது இணை வைப்பையும் (தனியே) விட்டுவிடுவேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (5708)

இறைச் செய்தியை போதித்து அதன்படி வாழ்ந்து காட்டும் நபிமார்களாக இருந்தாலும் இணை வைத்து விட்டால் அவர்களது அனைத்து நல்லறங்களும் பாழாகி விடும் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான். இப்படியிருக்க, சாதாரண மக்களாக இருக்கும் நமது நிலை என்னவாகும் சிந்தித்து பாருங்கள். பல்வேறு சிரமங்கள், தியாகங்களுக்கு மத்தியில் குறைவான அமல்கள் செய்து அதற்கும் கூட நன்மை கிடைக்காத நிலையில் நாம் மாட்டிக் கொள்ளக் கூடாது. இனியாவது ஜோசியம், சகுனம் என்று இணைவைப்பில் மூழ்கி இருப்பவர்கள் பாவ மன்னிப்பு கேட்டுத் திருந்த வேண்டும். இதுவே ஏகத்துவவாதிகளின் கோரிக்கை.

இணை கற்பித்தால் நிரந்தர நரகம்

இந்த உலக வாழ்க்கை என்பது அற்பமானது, நிரந்தரம் அற்றது. மறுமை வாழ்க்கை மட்டுமே நிரந்தரமானது. அதிலும், நரக வாழ்க்கையோ கொடூரமானது; கொடுமையானது. சொர்க்க வாழ்க்கையோ கண்ணியமானது; இனிமையானது.

எனவே தான் மறுமையில் சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதற்காக நாமெல்லாம் முஸ்லிம்களாக வாழ்ந்து வருகிறோம். எப்படியும் வாழலாம் என்று சொல்லும் மதங்களைப் புறக்கணித்து விட்டு, இப்படித் தான் வாழ வேண்டும் என்று எல்லாவற்றிலும் கட்டுப்பாடு களைக் கொண்டிருக்கும் மார்க்கத்திலே இருக்கிறோம்.

இந்த நோக்கம் நிறைவேற வேண்டுமெனில், இணைவைப்பை விட்டும் நீங்கி இருக்க வேண்டும். ஏனெனில், இணை வைப்பவர்கள் தண்டனை பெற்ற பிறகு சொர்க்கம் போக முடியாது. இவர்கள் ஒருபோதும் சொர்க்கம் செல்லாமல் நரகத்தில் நிரந்தரமாக இருப்பார்கள் என்று இஸ்லாம் எச்சரிக்கிறது.

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

(திருக்குர்ஆன் 9:17)

(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.

(திருக்குர்ஆன் 98:6)

மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்'' எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். "இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனு மாகிய அல்லாஹ்வை வணங்குங் கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'' என்றே மஸீஹ் கூறினார்.

(திருக்குர்ஆன் 5:72)

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர் களிடம் வந்து, "(சொர்க்கத்தையும் நரகத்தையும்) கட்டாயமாகத் தேடித் தருகின்ற இரண்டு விஷயங்கள் என்னென்ன?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் (நிச்சயமாகச்) சொர்க்கம் செல்வார். யார் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவராக இறந்து விடுகிறாரோ அவர் (நிச்சயமாக) நரகம் செல்வார்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (151)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசான வேதனை தரப் படுபவரிடம், "பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன் வருவாய் அல்லவா?'' என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், "ஆம்'' என்று பதிலளிப்பான்: அப்போது அல்லாஹ், "நீ ஆதமின் முதுகந்தண்டில் (கருவாகாமல்) இருந்த போது இதை விட இலேசான ஒன்றை -எனக்கு (எதையும் எவரையும்) இணை கற்பிக்காமல் இருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பிய போது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக் கொள்ளவில்லை'' என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புஹாரி (3334)

இணைவைப்பவர்கள் இழக்கும் பாக்கியம்

ஏக இறைவன் கொடுத்திருக்கும் பகுத்தறிவு எனும் பொக்கிஷத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதே இணை வைப்பிலே வீழ்வதற்கு முக்கியக் காரணம்.

படைத்தவனின் மகத்துவத்தை, மாண்பை மறந்துவிட்டு அவனை விட அற்பமான படைப்பினங்களை மிகவும் மரியாதையாக, கண்ணியமாக நினைக்கிறார்கள். இவ்வாறு கொஞ்சமும் யோசிக்காமல் இணை வைப்பு வாசலில் நிற்பவர்களுக்கு ஈருலகிலும் பல இழப்புகள் இருக்கின்றன. குறிப்பாக, இங்கு வாழும் போதே நமது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு அல்லாஹ் பல்வேறு வாய்ப்புகளை வைத்திருக்கிறான். இந்தப் பயன்கள் இணைவைக்கும் மக்களுக்கு அறவே கிடைக்காது. இவர்களின் குற்றங்கள் மன்னிக்கப்படுவதற்கு மலக்குகள் பிரார்த்தனை செய்ய மாட்டார்கள்; பாவமன்னிப்புத் தேட மாட்டார்கள். இன்னும் சொல்வதெனில், மறுமை நாளிலே எந்த விஷயத்திலும் இவர்களுக்காக நபிகளார் உட்பட யாரும் பரிந்துரை செய்ய மாட்டார்கள்.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட்கிழமையும் (மனிதர்களின் அனைத்துச்) செயல்களும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப் படுகின்றன. அன்றைய தினத்தில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், தனக்கு எதையும் இணை வைக்காத ஒவ்வொரு மனிதருக்கும் மன்னிப்பு அளிக்கின்றான்; தமக்கும் தம் சகோதரருக்குமிடையே பகைமை உள்ள ஒரு மனிதரைத் தவிர. அப்போது இவ்விருவரும் சமாதானமாகிக் கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்'' என்று கூறப்படுகிறது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: முஸ்லிம் (5014)

ஒரு நன்மை செய்தவருக்கு அதைப் போன்ற பத்து மடங்கு நற்பலன்கள் உண்டு. அதைவிடக் கூடுதலாகவும் நான் வழங்கு வேன். ஒரு தீமையைச் செய்தவருக்கு அதைப் போன்ற ஒரு தீமையே (குற்றமே) உண்டு. அல்லது (அவரை) நான் மன்னித்துவிடுவேன். யார் என்னிடம் ஒரு சாண் அளவுக்கு நெருங்குகிறாரோ நான் அவரிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறேன். யார் என்னிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறாரோ நான் அவரிடம் (விரிந்த) இரு கைகளின் நீட்டளவுக்கு நெருங்குகிறேன். யார் என்னிடம் நடந்து வருகிறாரோ நான் அவரிடம் ஓடிச் செல்கிறேன். ஒருவர் எதையும் எனக்கு இணை வைக்காமால் பூமி நிறைய (சிறு) பாவங்களுடன் என்னிடம் வந்தாலும் அதைப் போன்று (பூமி நிறைய) மன்னிப்புடன் நான் அவரை எதிர்கொள்கிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: முஸ்லிம் (5215)

ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை உண்டு; எல்லா இறைத்தூதர்களும் அந்தப் பிரார்த்தனையை அவசரப்பட்டு (இம்மையிலேயே) கேட்டுவிட்டனர். நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். அல்லாஹ் நாடினால் என் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணிக்கிறாரோ அவருக்கு அது கிடைக்கும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்(338)

துரும்பளவும் பயனளிக்காத இணைவைப்பு

அனைத்து ஆற்றலும் அதிகாரமும் கொண்டவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே! மறுமை நாளில் அவனிடம் இருந்து இணை வைக்கும் மக்கள் எந்த வகையிலும் தப்பிக்க இயலாது. இங்கு வாழும்போது, எங்கெல்லாம் உதவி தேடிக் கொண்டும், வணங்கிக் கொண்டும் இருந்தார்களோ அந்த மனிதர்கள், பொருட்கள் என்று எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது.

இக்கட்டான நேரத்தில் உதவி செய்வார்கள், பரிந்துரை செய்வார்கள், பாதுகாப்பு தருவார்கள் என்று முஷ்ரிக்குகளால் தப்பும் தவறுமாக எதிர்பார்க்கப்படும் எவரும் அவர்களுக்குக் கைகொடுக்க மாட்டார்கள். அல்வியாக்கள், மகான்கள், ஷேக் மார்கள் என்று எவரும் காப்பாற்ற வரமாட்டார்கள்; காணாமல் போய்விடுவார்கள்.

அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளில் இணை கற்பித்தவர்களை நோக்கி "நீங்களும், உங்கள் தெய்வங்களும் உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்!'' என்று கூறுவோம். அப்போது அவர் களிடையே பிளவை ஏற்படுத்து வோம். "நீங்கள் எங்களை வணங்கவே இல்லை'' என்று அவர் களின் தெய்வங்கள் கூறுவார்கள். "எங்களுக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். நீங்கள் (எங்களை) வணங்கியதை அறியாதிருந்தோம்'' என்றும் கூறுவார்கள்.

(திருக்குர்ஆன் 10:28)

இணை கற்பித்தோர் தங்கள் தெய்வங்களைக் காணும் போது "எங்கள் இறைவா! அவர்களே எங்கள் தெய்வங்கள். உன்னையன்றி அவர்களையே பிரார்த்தித்து வந்தோம்'' என்று கூறுவார்கள். "நீங்கள் பொய் சொல்கிறீர்கள்'' என்று அவர்கள் மறுமொழி கூறுவார்கள். அன்று அல்லாஹ்விடம் சரணாகதியைச் சமர்ப்பிப்பார்கள். அவர்கள் இட்டுக்கட்டியவை அவர்களை விட்டும் மறைந்து விடும்.

(திருக்குர்ஆன் 16:86, 87)

இவை மட்டுமல்ல, அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பது குறித்தும், அதனால் நேரும் பாதிப்புகள் குறித்தும் இன்னும் ஏராளமான செய்திகள் இருக்கின்றன.

ஷிர்க் என்பது இஸ்லாம், ஈமான், மறுமை வெற்றி ஆகியவற்றுக்கு எதிரானது. எனவே தான், இதற்கு எதிராக மாநாடு நடத்துவதாக தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.

பொதுவாகவே, அல்லாஹ்வை தூய்மையான முறையில் வணங்க வேண்டும்; அவனுக்கு எவ்வகை யிலும் இணைக் கற்பிக்கக் கூடாது எனும் அடிப்படையில் இந்த ஜமாஅத் ஆரம்பம் முதல் பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. இந்தப் பணியை வீரியப்படுத்தும் வகையில் இந்த மாநாடு திட்டமிடப் பட்டுள்ளது.

நாம் மட்டுமல்ல! நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்து மக்களும் ஏக இறைவனை மட்டும் வணங்கு பவர்களாக வாழ்ந்து ஈருலகிலும் வெற்றிபெற வேண்டும். இதற்காக நாம் தன்னலம் பாராமல் இயன்றளவு உழைக்க வேண்டும். இந்தத் தூய இலக்கை மையமாக வைத்து நடத்தவிருக்கும் இந்த மாநாடு வெற்றியடைய அல்லாஹ் உதவி புரிவானாக!

- எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்
ஏகத்துவம் அடோபர் 2015