சனி, 2 ஏப்ரல், 2016

நபிகள் நாயகத்தின் துணிவும் வீரமும்

துணிவும் வீரமும்

வீரம் நிறைந்த பலருடைய வரலாறுகளை நாம் அறிந்திருக்கிறோம். அவர்களின் வீரத்திற்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீரத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடிருக்கிறது.

அன்பு, இரக்கம், வள்ளல் தன்மை போன்ற பண்புகளைக் கொண்டவர்கள் மென்மையான சுபாவம் உடையோராக இருப்பதால் அவர்களிடம் வீரத்தைக் காண முடியாது. வீரர்கள் என அறியப்பட்டோரிடம் இரக்கத்தையும், மென்மையான சுபாவத்தையும் காண முடியாது. ஆனால் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நல்லவர்களிடமும், பொதுமக்களிடமும் மென்மையாக நடக்கும் வேளையில் களத்தில் எதிரிகளைச் சந்திக்கும் போது, மாவீரராகத் திகழ்ந்தனர் என்பது மற்ற வீரர்களிடம் இல்லாத தனிச்சிறப்பாகும்.

ஆன்மீகத் தலைவர்கள் பொதுவாக போர்களிலும், போராட்டங்களிலும் பங்கேற்பதில்லை. எவ்வளவு தான் அக்கிரமங்கள் கண் முன்னே நடந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் உயர்ந்த நிலை என்று அவர்கள் நினைக்கின்றனர்.

நியாயத்தின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டும் என்ற பக்குவத் தைக் கூட இத்தகைய ஆன்மீகத்தால் ஏற்படுத்த முடியவில்லை. ஆனால் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனுக் காகவே தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஆன்மீகத் தலைவராக இருந்தும் வீரத்தையும், துணிவையும் வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் வெளிப்படுத்தத் தவறவில்லை. இதையும் ஆன்மீகத்தின் ஒரு அம்சமாகத் தான் அவர்கள் கருதினார்கள்.

அவர்களின் வீரத்தைப் பறைசாற்றும் ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். நபிகள் நாயகம் (ஸல்) நஜ்து என்னும் பகுதியை நோக்கி போருக்குப் புறப்பட்டனர். அங்கிருந்து திரும்பும் போது முள் மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் ஓய்வு எடுக்க இறங்கினார்கள். மக்கள் நிழல் தேடி மரங்களை நோக்கிச் சென்று விட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் ஒரு முள் மரத்தின் அடியில் தங்கினார்கள். அதில் தமது வாளைத் தொங்க விட்டனர். நாங்கள் சற்று நேரம் தூங்கினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தனர். அப்போது அவர்கள் முன்னே ஒரு கிராமவாசி நின்று கொண்டிருந்தார். 'நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது இந்தக் கிராமவாசி எனது வாளை எடுத்துக் கொண்டார். நான் திடுக்கிட்டு எழுந்த போது என்னிடமிருந்து உம்மைக் காப்பவன் யார்? என்று கேட்டார். 'அல்லாஹ்' என்று மூன்று தடவை கூறினேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) விவரித்தனர். அந்தக் கிராமவாசியை இதற்காக நபிகள் நாயகம் (ஸல்) தண்டிக்கவில்லை

மற்றொரு அறிவிப்பில், 'அல்லாஹ் என்று கூறியவுடன் அவரது கையில் இருந்த வாள் கீழே விழுந்தது' என்று கூறப்பட்டுள்ளது.

நூல் : புகாரி 4139, 2913, 2910

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தயவு தாட்சண்யம் இல்லாத வகையில் உண்மையை உடைத்துச் சொன்னதால் எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருந்தனர். அவர்களைக் கொல்வதற்கு பல வகையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் போது கூட அவர்கள் போருக்குச் சென்று விட்டுத் தான் திரும்புகின்றனர். இந்நிலையில் அவர்கள் நடந்து கொண்ட முறையைக் கவனியுங்கள். படை வீரர்கள் அனைவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தனியாக விட்டு விட்டு ஓய்வு எடுக்க மரங்களை நோக்கிச் சென்று விட்டனர். நபிகள் நாயகம் மட்டும் தனியாக ஒரு மரத்தடியில் உறங்கினார்கள்.

ஒரு நாட்டின் தலைவரும், தளபதியுமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனியாக விடப்பட்டிருக்கிறார்கள். மேலும் யுத்தத்திலிருந்து திரும்பும் வழியில் எதிரிகளின் தாக்குதல் அபாயம் நிறைந்திருக்கும்.

இந்நிலையில் அவர்களும் தனியாக மரத்தடியில் தங்குகிறார்கள். அவர்களின் படை வீரர்களும் தனியாகத் தங்களின் தலைவரை விட்டுச் செல்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அளவிட முடியாத துணிவு இதிலிருந்து வெளிப்படுகிறது. தனியாக ஓய்வெடுக்கும் போது கூட மரத்தின் மீது தமது வாளைத் தொங்க விட்டு விட்டு அயர்ந்து தூங்குவதென்றால் இதற்கு அசாத்தியமான துணிச்சல் இருக்க வேண்டும். அவர்களது வாளையே எடுத்துக் கொண்டு ஒருவர் கொல்ல முயற்சிக்கும் போது கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூப்பாடு போடவில்லை; தமது சகாக்களை உதவிக்கு அழைக்கவில்லை. மாறாக தன்னந்தனியாக எதிரியை மடக்கிப் பிடித்துக் கொண்டு அதன் பிறகு தான் மற்றவர்களை அழைத்தனர். நான் உன்னைக் கொல்லப் போகிறேன் என்று வாள் முனையில் மிரட்டப்பட்ட போதும் கொஞ்சமும் தளராமல் 'என்னை அல்லாஹ் காப்பாற்றுவான்' என்று கூறியதும் அவர்களின் மாவீரத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கூட தமது படையினரைத் துணைக்கு அழைக்க அவர்கள் நினைக்கவில்லை என்றால் இது மாவீரர்களால் கூட சாத்தியமாகாதது. இறுதியில் தம்மைக் கொல்ல முயன்றவரைத் தண்டிக்காது மன்னித்து அனுப்பியது அவர்களின் பெருந்தன்மைக்கும், பொறுமைக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

அல்லாஹ்வைத் தவிர எவருக்கும், எதற்கும் அஞ்சக் கூடாது என்று அவர்கள் போதனை செய்து வந்ததற்கு அவர்களே முன்னுதாரணமாக நடந்து காட்டியதால் தான் மாமனிதர் என்று போற்றப்படுகின்றனர்.

அவர்களின் மாவீரத்துக்கும், அளவற்ற துணிச்சலுக்கும் உதாரணமாக மற்றொரு நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பத்தாண்டுகள் ஊழியராக இருந்த அனஸ் (ரலி) அறிவிக்கிறார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் அழகு படைத்தவர்களாகவும், மிகப்பெரும் வீரராகவும் திகழ்ந்தனர். ஒரு நாள் மதீனாவாசிகள் திடுக்கிட்டனர். உடனே வீட்டை விட்டு வெளியேறி (திடுக்கத்தை ஏற்படுத்திய) சப்தம் வந்த திசை நோக்கிப் புறப்பட்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கழுத்தில் வாளைத் தொங்கவிட்டு, அபூதல்ஹா (ரலி)யின் சேனம் பூட்டப்படாத குதிரையில் எதிரில் வந்தனர். அஞ்சாதீர்கள்! அஞ்சாதீர்கள்! என்று கூறிக் கொண்டே வந்தனர். '(வேகத்தில்) இக்குதிரை கடலாக இருக்கிறது' எனவும் குறிப்பிட்டனர்.

நூல் : புகாரி 2908, 2627, 2820, 2857, 2862, 2867, 2968, 2969, 3040, 6033, 6212

இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா நகரில் ஆட்சியை நிறுவிய பின் நடந்த நிகழ்ச்சியாகும்.

எல்லாவிதமான தீமைகளையும், தீயவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தயவு தாட்சண்யமின்றி எதிர்த்ததால், அவர்கள் அதிக அளவில் எதிரிகளைச் சம்பாதித்திருந்தனர். பலமுறை மதீனா நகரை நோக்கி எதிரிகள் படை திரட்டி வந்தனர். இந்த நிலையில் தான் ஒரு நாள் எதிரிப் படையினர் தாக்க வருவது போன்ற சப்தம் மதீனா நகர் முழுவதும் கேட்டது. எதிரிகள் தாக்கி விடக் கூடாது என்பதற்காக மக்கள் வீட்டை விட்டு வெளியேறி, சப்தம் வந்த திசையை நோக்கி விரைந்தனர்.

இந்தச் சப்தத்தைக் கேட்டவுடன் யாரும் தன்னந்தனியாக அந்தத் திசை நோக்கிச் செல்ல மாட்டார்கள். எனவே பலருக்கும் தகவல் சொல் போதுமான ஆட்களைத் திரட்டிக் கொண்டு நபித் தோழர்கள் சப்தம் வந்த திசையை நோக்கித் திரண்டார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, தோழர்களுக்கும் முன்னரே சப்தம் வந்த திசை நோக்கிச் சென்று கண்காணித்து விட்டு, பயப்படும்படி ஏதுமில்லை என்று அறிந்து கொண்டு மின்னல் வேகத்தில் திரும்பி வந்து மக்களுக்குத் தகவல் சொல்கிறார்கள்.

வேகமாக குதிரையில் பயணம் செய்வதென்றால், அதில் சேனம் பூட்டி வசதியாக அமர்ந்து கொண்டால் தான் சாத்தியமாகும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ சப்தம் கேட்டவுடன் சேனத்தைப் பூட்டுவதால் ஏற்படும் சிறு தாமதத்தையும் தவிர்க்க, சேனம் பூட்டாத குதிரையில் விரைகிறார்கள்.

சேனம் பூட்டாத குதிரையின் மேல் வேகமாக சவாரி செய்வதற்கு அதிகமான துணிச்சலும், உடல் வலுவும் அவசியம்.

ஒரு வேளை எதிரிகள் வந்தால் தன்னந்தனியாகவே அவர்களை எதிர் கொள்வது என்ற தைரியத்துடன் தான் வாளையும் எடுத்துக் கொண்டு சென்றனர்.

அபூ தல்ஹாவின் வீடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிர் வீடாக இருந்தது. அவர் வசதி மிக்கவராகவும் இருந்தார். எனவே தான் அவரிடம் உடனடியாகக் குதிரையை இரவல் வாங்கிக் கொண்டு துணைக்கு அபூ தல்ஹாவைக் கூட அழைத்துக் கொள்ளாமல் புறப்பட்டனர்.

நள்ளிரவில், தன்னந்தனியாக, எதிரிகள் படை திரண்டு வருகிறார்களா? என்பதை அறிவதற்கு எவ்வளவு பெரிய வீரரும் தனியாகப் போக மாட்டார். அதுவும் மாபெரும் தலைவராக இருப்பவர்கள் இது போன்ற ஆபத்தான பணியில் நேரடியாக இறங்க மாட்டார்கள். இறங்கத் தேவையுமில்லை. யாரையாவது அனுப்பி தகவல் திரட்டி வருமாறு கூறினாலே போதுமானது.

ஆயினும் தலைமை ஏற்பவர் சமுதாயத்தைக் காக்கும் பொறுப்பையும் சுமக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு மற்றவர்களின் தூக்கத்தைக் கலைக்காமல் தாமே நேரடியாகக் களத்தில் இறங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கூறப்படும் ஒவ்வொரு சொல்லும் மாமனிதரின் மாவீரத்தைப் பறை சாற்றுகின்றன.

* எதிரிகள் படை திரட்டி வருகிறார்களோ என்ற அச்சம்

* தன்னந்தனியாகப் புறப்பட்டது

* ஆயுதம் தரித்துப் புறப்பட்டது

* சேனத்தைக் கூட பூட்டாமல், விரைவாக வெறும் குதிரையில் புறப்பட்டது

* மின்னல் வேகத்தில் சென்று மிக விரைவாகத் திரும்பியது

இவையாவும் எந்த வீரரிடமும் காண முடியாதது. எந்த ஆன்மீகத் தலைவரிடமும் எந்தத் தளபதியிடமும், எந்த மன்னரிடமும் காண முடியாததாகும்.

உயிரே போய் விடக் கூடும் என்ற இடத்துக்கு தனியாகப் புறப்பட்டுச் சென்ற இந்த வீரத்துக்கு நிகரான வீரத்தை வரலாற்றில் காணவே முடியாது.

இந்த நிகழ்ச்சி நடக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 53 வயதைக் கடந்திருந்தார்கள். அனைவரும் தளர்ந்து விடக் கூடிய வயதில் சேனம் பூட்டாத குதிரையில் மின்னல் வேகத்தில் ஏறிச் செல்ல உடல் நல்ல வலுவுடன் இருக்க வேண்டும்.

இது போல உஹதுப் போரின் போது முஸ்லிம்களுக்கு ஆரம்பத்தில் வெற்றி கிடைத்தாலும் இடையில் அவர்களுக்குப் பேரிழப்பு ஏற்பட்டது. தோற்று ஓடிய எதிரிகள் மலைக்குப் பின் புறமாக வந்து சுற்றி வளைத்த போது, செய்வதறியாமல் நபித் தோழர்கள் சிதறி ஓட்டம் பிடித்தனர். ஆனால் எதிரிகள் சுற்றி வளைத்துக் கொண்ட பின்பும், தமது தோழர் களில் பெரும்பாலானோர் சிதறி ஓடிய பின்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் களத்திலிருந்து ஓட்டம் பிடிக்கவில்லை. அபூதல்ஹா (ரலி) போன்ற மிகச் சிலருடன் சேர்ந்து கொண்டு சமர் புரிந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் முகத்தில் கடுமையான வெட்டுக் காயம் ஏற்பட்டது.

நூல் : புகாரி 4064, 3811

பொதுவாக போரின் போது மன்னர்கள் கட்டளை தான் பிறப்பிப்பார்கள். தாங்கள் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொள்வார்கள். தோல்வி முகம் ஏற்பட்டால் ஓடுவதற்கு ஏற்ற இடத்தில் கூடாரம் அமைத்துக் கொள்வது வழக்கம். ஆனால் மாமன்னராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தளபதிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதையும், உத்தரவிடும் தளபதியாக மட்டுமல்லாமல் களத்தில் வாளேந்தும் தளபதியாகவும் திகழ்ந்தார்கள் என்பதையும் இந்நிகழ்ச்சிகளிலிருந்து அறிந்து கொள்கிறோம். அவர்களின் வீரத்திற்கு எடுத்துக் காட்டாக இன்னும் பல நிகழ்வுகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகத்தான வீரத்துக்கு ஹுனைன் போர் மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

இந்தப் போரின் போது முஸ்லிம்களின் படை பலம் வலிமையுடைய தாக இருந்தது. இதனால் முஸ்லிம்கள் மிகவும் கர்வம் கொண்டிருந் தார்கள். எதிரிகளை எளிதாக வென்று விடலாம் என்று கணக்குப் போட்டனர். இது பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

பல களங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். ஹுனைன் (போர்) நாளில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களுக்கு மமதையளித்த போது, அது உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை. பூமி விசாலமாக இருந்தும் உங்களுக்கு அது சுருங்கி விட்டது. பின்னர் புறங்காட்டி ஓடினீர்கள். பின்னர் அல்லாஹ் தனது அமைதியைத் தன் தூதர் மீதும், நம்பிக்கை கொண்டோர் மீதும் அருளினான். நீங்கள் பார்க்காத படைகளையும் அவன் இறக்கினான். (தன்னை) மறுத்தோரைத் தண்டித்தான். இது மறுப்போருக்குரிய தண்டனை. பின்னர், தான் நாடியோரை அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 9:25,26,27

முஸ்லிம்கள் பின் வாங்கி ஓட்டம் பிடித்ததாகவும் பின்னர் இறைவன் தனது வானவர் படையை அனுப்பி எதிரிகளை வெற்றி கொள்ள வைத்ததாகவும் இவ்வசனங்கள் கூறுகின்றன.

ஹவாஸின் எனும் கூட்டத்தினருக்கு எதிராக ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு நடைபெற்ற இப்போரில் பத்தாயிரம் நபித்தோழர்களும் மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தை ஏற்றவர்களும் இருந்ததாக புகாரி 4333 வது ஹதீஸ் கூறுகிறது.

அப்பாஸ் (ரலி) கூறுகிறார்:

நானும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஹுனைன் போரில் பங்கெடுத்தேன். நானும், அபூ ஸுஃப்யானும் நபிகள் நாயகத்தைப் பிரியாமல் பக்கபலமாக நின்றோம். முஸ்லிம்களும், நிராகரிப்பவர்களும் மோதிக் கொண்டு முஸ்லிம்கள் பின் வாங்கி ஓட்டம் பிடித்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கோவேறுக் கழுதையை நிராகரிப்பவர்களை நோக்கிச் செலுத்தினார்கள். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கோவேறுக் கழுதையின் கடிவாளத்தைப் பிடித்து அது வேகமாகச் செல்வதைத் தடுத்துக் கொண்டிருந்தேன். அபூ ஸுஃப்யான் சேனத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். 'அப்பாஸே மரத்தடியில் உடன்படிக்கை எடுத்தவர்களை அழைப்பீராக' என்று என்னிடம் கூறினார்கள். நான் உரத்த குரலுக்குரியவனாக இருந்தேன். 'மரத்தடியில் உடன்படிக்கை செய்தோர் எங்கே?' என்று எனது உரத்த குரல் அழைத்தேன். தாய்ப் பசு கன்றை அழைப்பதைப் போல் உணர்ந்த அவர்கள் லப்பைக் (இதோ இருக்கிறோம்) என்று விடையளித்தனர். 'போரிடுங்கள்! அன்ஸாரிகளையும் அழையுங்கள்' என்று கூறினேன், அவர்கள் அன்ஸாரிகளை அழைத்தனர். 'பனுஹாரிஸ் கூட்டத்தாரை அழையுங்கள்' என்றேன்; அவர்களும் பனூஹாரிஸ் கூட்டத்தினரே என அழைத்தனர். பின்னர் தமது கைப்பிடியில் சிறு கற்களை எடுத்து வீசி 'முஹம்மதின் இறைவன் மேல் ஆணையாக தோற்றுப் போயினர்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அதன் பின்னர் எதிரிகள் தோல்வி முகம் கண்டனர்.

நூல் : முஸ்லிம் 3324

சுமார் நூறு நபித்தோழர்களைத் தவிர அனைவரும் ஓட்டம் பிடித்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் துணிவுடன் களத்தில் நின்றார்கள். எந்தத் தலைவரும் தனது படையினரின் பின் பலத்தில் தான் களம் காண்பார். படையினர் ஓட்டம் பிடித்து விட்டால் தலைவர்கள் களத்தில் நிற்க மாட்டார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த இக்கட்டான நேரத்திலும் களத்தை விட்டு ஓடவில்லை.

தமது சகாக்கள் பின் வாங்கி ஓடும் போது கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளை நோக்கி தமது கோவேறுக் கழுதையைத் துணிவாக செலுத்துகிறார்கள்.

எதிரிகள் சுற்றி வளைத்த நேரத்தில் தைரியமாக கழுதையை விட்டும் கீழே இறங்கி இருக்கின்ற வீரர்களை அணிவகுக்கச் செய்கின்றனர். பதட்டப்படவில்லை; நிதானம் இழக்கவில்லை.

ஆன்மீகத் தலைவராகவும், இரக்க குணம் கொண்டவராகவும் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தளபதியாகவும், மாவீரராகவும் இருந்தார்கள் என்பது மேலும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.

பத்ர் போரில் நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வீரம் குறித்து அலீ (ரலி) பின்வருமாறு கூறுகிறார்.

பத்ருப் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலமே எங்களை நாங்கள் காத்துக் கொண்டோம். அவர்கள் தான் எதிரிகளுக்கு எங்களை விட நெருக்கத்தில் இருந்தனர். அன்றைய தினம் அவர்கள் தாம் கடுமையாகப் போரிட்டனர்.

நூல் : அஹ்மத் 619, 991

எதிரிகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத போது அலீ (ரலி) போன்ற மாவீரரே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னே நின்று தம்மைக் காத்துக் கொண்டதாகவும், எதிரிகளுக்கு மிக நெருக்கத்தில் நின்று நபிகள் நாயகம் (ஸல்) போரிட்டதாகவும் கூறுவதே அவர்களின் மாவீரத்தை அறிந்திடப் போதுமானதாகும்.