வியாழன், 19 பிப்ரவரி, 2015

சிரிப்பின் ஒழுங்குகள்

சிரிப்பின் ஒழுங்குகள்

மனிதனுக்குள் இறைவன் ஏற்படுத்தியுள்ள பண்புகளில் சிரிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. இரக்கம், கோபம், வெட்கம், பயம் போன்ற எத்தனையோ குணங்கள், மனிதன் குறிப்பிட்ட பருவத்தை அடைந்த பிறகு தான் தோன்றுகின்றன. ஆனால் சிரிப்பைப் பொறுத்த வரை மனிதன் பிறந்த உடனே இத்தன்மை குழந்தைக்குத் தொற்றிக் கொள்கிறது. பிறத்தல், மரணித்தல், அழுதல் போன்ற பண்புகள் இயற்கையாகவே மனிதனிடத்தில் குடி கொண்டிருப்பதைப் போல் சிரிப்பும் மனிதனுடன் பின்னிப் பிணைந்துள்ளது. 

இந்தத் தன்மையை இறைவன் மனிதனுக்கு மாத்திரம் பிரத்யேகமாக வழங்கியுள்ளான். மனிதனைத் தவிர்த்து ஆடு, மாடு, யானை, பூனை போன்ற ஏனைய உயிரினங்கள் சிரித்து நாம் பார்த்ததில்லை. எனவே தான் மனிதனுக்கு வரைவிலக்கணம் சொல்லும் போது, சிரிக்கும் உயிரினம் என்று விளக்கம் கொடுப்பார்கள். 

வாழ்வில் சிரமங்களையும் துயரங்களையும் சந்திக்கும் மனிதன் சிரிப்பின் மூலம் இவற்றை எளிதில் மறந்து விடுகிறான். அவனது மனதிற்கு சிரிப்பு, பிணி நீக்கும் 'சிரப்'பாகத் திகழ்கிறது. எப்போதும் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டே இருப்பவர்கள், செல்லும் இடமெல்லாம் நண்பர்களையும் அன்பர்களையும் சம்பாதித்துக் கொள்கிறார்கள். 

இவர்களுடைய மகிழ்ச்சி இவர்களோடு மாத்திரம் நின்று விடாமல் பிறரையும் மகிழ்விக்க உதவுவதால் இவர்களைக் கண்டாலே மக்களுக்குக் குதூகலம் வந்து விடுகிறது. ஏனென்றால் சிரிப்பு என்பது ஒரு தொற்று நோயைப் போன்றதாகும். ஒரு சபையே சிரிப்பதற்கு ஒருவரது சிரிப்பு காரணமாகி விடுகிறது. 

சிரிப்பு என்பது ஆன்மீகத்திற்கு எதிரி என்று கணிசமான மக்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள். முகத்தை உர் என்று வைத்துக் கொண்டு கடவுளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் அவர் பக்திமான் என்று போற்றப்படுகிறார். மரத்தடியில் வாழும் முனிவர்களும் சிரிக்காத புரோகிதர்களும் ஆன்மீகத்தில் முதிர்ச்சி பெற்றவர்கள் என்று மக்கள் கருதி விடுகின்றனர். 

இவர்கள் சிரிப்பை முழுவதுமாக ஓரங்கட்டி விடுவதினால் ஆன்மீகத்திற்கு எதிராகப் பலர் கிளம்பி விடுகிறார்கள். ஆன்மீகம் என்பது பொய்; வாழ்க்கை என்பது மகிழ்வதற்காகத் தான் எனவே எல்லாவற்றிற்கும் ஆசைப்படு என்று புலம்பிக் கொண்டு மனம் போன போக்கில் செல்லக் கூடியவர்களும் உண்டு. 

எல்லாப் பிரச்சனைகளையும் நடுநிலையோடு சீர்தூக்கிப் பார்த்து வழிகளைக் காட்டும் நம் இஸ்லாமிய மாôக்கம் நம்முடன் கலந்து விட்ட இந்தச் சிரிப்பைப் பற்றி என்ன கூறுகிறது என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

இஸ்லாத்தின் பார்வையில் சிரிப்பு

சிரிக்கும் தன்மையை மனிதனுக்கு இறைவன் தான் ஏற்படுத்தினான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. சிரிப்பது ஒரு மோசமான செயல் என்றால் அத்தன்மையை ஏற்படுத்தியவன் நான் தான் என்று இறைவன் தன்னை புகழ்ந்து கூறியிருக்க மாட்டான். 

அவனே சிரிக்க வைக்கிறான். அழவும் வைக்கிறான். அவனே மரணிக்கச் செய்கிறான். உயிர்ப்பிக்கவும் செய்கிறான். அல்குர்ஆன் 53:43

மறுமை நாளில் நல்லவர்களுக்கு இறைவன் அளிக்கும் பாக்கியங்களில் ஒன்று சிரிப்பாகும். அந்நாளில் கெட்டவர்களின் முகங்கள் கடுகடுவென சுருங்கிய நிலையில் இருக்கும். இவர்களுக்குச் சிரிப்பு என்ற பாக்கியத்தை இறைவன் தடுத்து விட்டான். சொர்க்கவாசிகள் சுவனத்தில் அடையும் இந்த இன்பத்தை இந்த உலகத்தில் நாம் ஏன் தவற விட வேண்டும்?

அந்நாளில் சில முகங்கள் ஒளி வீசும். மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருக்கும் அந்நாளில் சில முகங்கள் மீது புழுதி படிந்திருக்கும். அதைக் கருமை மூடியிருக்கும். அவர்களே (ஏக இறைவனை) மறுப்போரான பாவிகள். அல்குர்ஆன் 80:32

அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும். சில முகங்கள் அந்நாளில் சோக மயமாக இருக்கும். தமக்குப் பேராபத்து ஏற்படும் என அவை நினைக்கும். அல்குர்ஆன் 75:22

இறைத் தூதர் சுலைமான் (அலை) அவர்கள், எறும்பு பேசியதைக் கேட்டு சிரித்ததாக குர்ஆன் கூறுகிறது.

அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது ''எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும் அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாது'' என்று ஓர் எறும்பு கூறியது.

அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். ''என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது நல்லடியார்களில் என்னையும் உனது அருளால் சேர்ப்பாயாக!'' என்றார். அல்குர்ஆன் 27:18

பிறரைச் சந்திக்கும் போது மலர்ந்த முகத்துடன் இருப்பதும் நல்ல காரியம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பது உட்பட எந்த ஒரு நல்ல காரியத்தையும் அற்பமாக நினைத்து விடாதே! அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்: முஸ்லிம் 4760

சிரிப்பு ஆன்மீகத்திற்கு எதிரல்ல!

இஸ்லாமிய மார்க்கத்தைக் கடைப்பிடிப்பதிலும் இறைவனுக்குப் பயந்து நடப்பதிலும் நபி (ஸல்) அவர்களை யாராலும் மிஞ்சி விட முடியாது. உன்னதமான ஆன்மீகத் தலைவராகத் திகழ்ந்த நபி (ஸல்) அவர்கள் சிரித்த முகத்துடனே வாழ்க்கையைக் கழித்திருக்கிறார்கள். முழு மனிதத் தன்மையை அடையாதவர்கள் தான் சிரிக்க மாட்டார்கள். பிறரிடம் சிரித்து மகிழ்ந்து பேசாதவன் மனிதத் தன்மையிலும் ஆன்மீகத்திலும் முழுமையடையவில்லை என்பதே உண்மை.

நான் இஸ்லாத்தைத் தழுவிய நாளி­ருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை விட்டு மறைந்து (மறுபடியும்) என்னைக் கண்டால் அவர்கள் சிரிக்காமல் இருந்ததில்லை. அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல்: முஸ்லிம் 4522

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்ற நபித்தோழர் நபியவர்களுக்கு சிரிப்பூட்டிக் கொண்டே இருந்துள்ளார். சிரிப்பூட்டியதற்காக இவரை நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்றொருவர் இருந்தார். அவர் கழுதை என்ற புனைப் பெயரால் அழைக்கப்பட்டார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சிரிக்க வைப்பார். அறிவிப்பவர்: உமர் (ரலி) நூல்: புகாரி 6780

பள்ளிவாச­ல் நபித்தோழர்கள் சிரித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். இவர்களுடன் சோந்து நபி (ஸல்) அவர்களும் சிரிப்பார்களாம். 

சிமாக் பின் ஹர்ப் அவர்கள் கூறியதாவது: நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், ''நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''ஆம்! அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்தி­ருந்து) எழ மாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்து பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள். அறிவிப்பவர்: சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) நூல்: முஸ்லிம் 1188

எப்போதும் சொர்க்கத்தையும் நரகத்தையும் நினைத்துக் கொண்டு மறுமை சிந்தனையில் மாத்திரம் தான் இருக்க வேண்டும் என்று ஹன்ளலா (ரலி) அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அவர்களால் அவ்வாறு இருக்க முடியவில்லை. வீட்டுக்குச் சென்றால் மனைவி மக்களுடன் சந்தோஷமாக மகிழ்ந்து விளையாடுவார்கள். எனவே இதைப் பற்றி அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது சந்தோஷமாக இருப்பது மனித இயல்பு. இது தவறல்ல என்று நபி (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்கள். 

ஹன்ளலா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்கர் (ரலி) அவர்கள் என்னை சந்தித்து, ''ஹன்ளலாவே! நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு நான், ''ஹன்ளலா நயவஞ்சகராக ஆகிவிட்டார்'' என்று கூறினேன். அதற்கு அவர்கள், ''அல்லாஹ் தூய்மையானவன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள்.

அதற்கு நான், ''நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் இருக்கும் போது அவர்கள் நமக்குச் சொர்க்கத்தையும் நரகத்தையும் நினைவூட்டுகிறார்கள். எந்த அளவிற்கென்றால் கண்கூடாக (அவற்றை) நாம் காண்பதைப் போல் (மார்க்கச் சிந்தனையில் இருக்கிறோம்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து பிரிந்து வந்து விட்டால் மனைவிமார்களுடனும் குழந்தைகளுடனும் விளையாடுகிறோம். வியாபாரம் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறோம். அதிகமான (மார்க்க) விசயங்களை மறந்து விடுகிறோம்'' என்று கூறினேன். 

அபூபக்கர் (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாமும் இப்படித் தான் இருக்கிறோம்'' என்று கூறினார்கள். ஆகையால் நானும் அபூபக்கர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தோம். நான், ''அல்லாஹ்வின் தூதரே! ஹன்ளலா நயவஞ்சகனாகி விட்டான்'' என்று கூறினேன். அதற்கு அவர்கள், ''என்ன ஆயிற்று?'' என்று கேட்டார்கள். நான், ''அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களுக்குச் சொர்க்கத்தையும் நரகத்தையும் நினைவூட்டும் போது கண்கூடாக (சொர்க்கம் நரகத்தை) காணுவதைப் போன்ற நிலையில் உங்களிடத்தில் இருக்கிறோம். ஆனால் உங்களிடமிருந்து பிரிந்து சென்று விட்டால் மனைவிமக்களுடன் விளையாட ஆரம்பித்துவிடுகிறோம். 

வியாபாரம் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறோம். அதிகமான (மார்க்க) விசயங்களை மறந்து விடுகிறோம்'' என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! என்னிடத்தில் நீங்கள் இருப்பதைப் போன்றும், இறை தியானத்திலும் நீங்கள் எப்போதும் திளைத்திருந்தால் வானவர்கள் நீங்கள் உறங்கச் செல்லும் இடங்களிலும் செல்லும் வழிகளிலும் உங்களிடத்தில் கை கொடுப்பார்கள். எனவே ஹன்ளலாவே! சிறிது நேரம் (மார்க்க விசயங்களில் கவனத்தைச் செலுத்துங்கள்) சிறிது நேரம் (மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக இருங்கள்)'' என்று மூன்று முறை கூறினார்கள். அறிவிப்பவர்: ஹன்ளலா (ரலி) நூல்: முஸ்லிம் 5305

நபியவர்களை சிரிக்க வைத்த பல நிகழ்வுகள் அவர்களின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது. வாய்விட்டு சிரிக்க வேண்டிய இடங்களில் நபி (ஸல்) அவர்கள் வாய்விட்டு சிரித்திருக்கிறார்கள். பின்வரும் சம்பவங்களில் இதை உணர்ந்துகொள்ளலாம். 

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கிராமவாசி ஒருவர் அமர்ந்திருக்க பின்வரும் நிகழ்ச்சியை எடுத்துரைத்துக்கொண்டிருந்தார்கள். 

சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர் தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) வாழ்ந்துகொண்டிருக்கவில்லையா? என்று கேட்பான். அதற்கு அவர் ஆம் (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்) ஆனால் நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன் என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகிவிடும். மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய்விடும். அப்போது இறைவன் எடுத்துக்கொள் ஆதமின் மகனே உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது என்று கூறுவான்.

(நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்த கிராமவாசி அல்லாஹ்வின் மீதாணையாக அந்த மனிதர் குரைஷியாகவோ (மக்காவாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ) தான் இருக்க முடியும். அவர்கள் தாம் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர் என்று கூறினார். இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் சிரித்துவிட்டார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (2348)

(நரகத்தி­ருந்து வெளியேறி) இறுதியாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு மனிதர் சில சமயம் நடந்து வருவார். சில சமயம் தவழ்ந்தபடி வருவார். சில சமயம் நரக நெருப்பு அவரது முகத்தை தாக்கி கரித்துவிடும். இந்நிலையில் அவர் நரகத்தைத் தாண்டியதும் அதைத் திரும்பிப் பார்த்து உன்னிடமிருந்து என்னைக் காப்பாற்றிய (என் இறைவன் சுபிட்டமிக்கவன். முன்னோர் பின்னோர் யாருக்கும் வழங்காத (பாக்கியத்)தை அல்லாஹ் எனக்கு வழங்கினான் என்று கூ(றி இறைவனைப் போற்)றுவார். 

அப்போது அவருக்கு ஒரு மரம் காட்டப்படும். உடனே அவர் என் இறைவா அந்த மரத்தின் அருகே என்னை கொண்டு செல்வாயாக. அதன் நிழலை நான் பெற்றுக் கொள்வேன். அதன் (கீழே பாயும்) நீரைப் பருகிக்கொள்வேன் என்று கூறுவார். அதற்கு அல்லாஹ் மனிதா அதை உனக்கு நான் வழங்கினால் வேறொன்றை நீ என்னிடம் கேட்கக்கூடுமல்லவா? என்று கூறுவான். அதற்கு அவர் இல்லை இறைவா வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன் என்று கூறி வாக்குறுதி அளிப்பார். 

அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் காணும் அவருடைய இறைவன் அவருக்கு வாய்ப்பளித்து அவரை அந்த மரத்தின் அருகே கொண்டுசெல்வான். அங்கு அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார். அதன் நீரையும் பருகிக்கொள்வார். 

பிறகு அவருக்கு மற்றொரு மரம் காட்டப்படும். அது முத­ல் காட்டப்பட்ட மரத்தை விட மிகவும் அழகாய் இருக்கும். (அதைக் கண்ட உடன்) அவர் என் இறைவா இதற்கருகே என்னை கொண்டுசெல்வாயாக. நான் அதன் நீரைப் பருகி அதன் நிழலை அடைந்துகொள்வேன். இதைத் தவிர வேறெதையும் நான் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று கூறுவார். மனிதா வேறெதையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு) வாக்குறுதி அளிக்கவில்லையா? அதன் அருகில் உன்னை நான் கொண்டு சென்றால் வேறொன்றை நீ கேட்ககூடுமல்லவா? என்பான். உடனே அவர் வேறெதையும் கேட்கமாட்டேன் என்று வாக்குறுதி அளிப்பார். 

இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு வாய்ப்பளித்து அவரை அதன் அருகே கொண்டுசெல்வான். அவர் அதன் நிழலை அனுபவித்துக்கொண்டு அதன் (கீழே ஓடும்) நீரையும் அருந்துவார். பிறகு சொர்க்கவாசல் அருகே உள்ள மரம் அவருக்குக் காட்டப்படும். அது முத­ரண்டு மரங்களை விடவும் ரம்யமானதாக இருக்கும். உடனே அவர் என் இறைவா அந்த மரத்தின் அருகே என்னை கொண்டுசெல்வாயாக. நான் அதன் நிழலைப் பெறுவேன். அதன் நீரைப் பருகிக்கொள்வேன் என்று கூறுவார். 

இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று கூறுவார். அதற்கு இறைவன் மனிதா வேறெதையும் கேட்கமாட்டேன் என்று (முன்பு) என்னிடம் வாக்குறுதி அளிக்கவில்லையா? என்று கேட்பான். ஆம் என் இறைவா இந்தத் தடவை (மட்டும்). இனி இதன்றி வேறெதையும் கேட்கமாட்டேன் என்று கூறுவார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து அதன் அருகே அவரைக் கொண்டுசெல்வான். 

அவர் அந்த மரத்தை நெருங்கும் போது சொர்க்கவாசிகளின் குரல் அவருக்குக் கேட்கும். உடனே அவர் என் இறைவா சொர்க்கத்திற்குள் என்னை அனுப்புவாயாக என்று கேட்பார். அதற்கு இறைவன் மனிதா ஏன் என்னிடம் கேட்பதை நீ நிறுத்திக்கொண்டாய்? உலகத்தையும் அது போன்று இன்னொன்றையும் நான் உனக்கு வழங்கினால் உனக்கு மகிழ்ச்சி ஏற்படும்தானே? என்று கேட்பான். அதற்கு அவர் என் இறைவா அகிலத்தின் அதிபதியே நீ என்னை பரிகாசம் செய்கிறாயா? என்று கேட்பார். 

(இதை அறிவித்த போது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் சிரித்தார்கள். பிறகு நான் ஏன் சிரித்தேன் என்று என்னிடம் நீங்கள் கேட்கமாட்டீர்களா? என்று கேட்டார்கள். அப்போது மக்கள் ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் இவ்வாறு தான் (இதை அறிவிக்கையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். அதற்கு நபித்தோழர்கள் ஏன் சிரிக்கிறீர்கள்? அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அகிலத்தின் அதிபதியாகிய நீயே என்னைப் பரிகாசம் செய்கிறாயா? என்று அந்த மனிதர் கூறும் போது அதைக் கேட்டு இறைவன் சிரிப்பான். (அதனால் தான் நான் சிரித்தேன்). மேலும் நான் உன்னைப் பரிகாசம் செய்யவில்லை. மாறாக நாடியதைச் செய்கின்ற ஆற்றல் உள்ளவன் நான் என இறைவன் கூறுவான் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல் : முஸ்லிம் (310)

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் அழிந்துவிட்டேன் என்றார். நபி (ஸல்) அவர்கள் உமக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நான் நோன்புவைத்துக் கொண்டு என் மனைவியுடன் கூடிவிட்டேன் என்று அவர் சொன்னார். நபி (ஸல்) அவர்கள் விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். தொடர்ந்து இருமாதம் நோன்பு நோற்க சக்தி இருக்கிறதா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் இல்லை என்றார். 

நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போது நபி (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த (அரக்) என்னும் அளவைக் கொண்டுவரப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் கேள்வி கேட்டவர் எங்கே? என்றார்கள். நான்தான் என்று அவர் கூறினார். இதைப் பெற்று தர்மம் செய்வீராக என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர் அல்லாஹ்வின் தூதரே என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட என் பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது கடவாய்ப் பற்கள் தெரியும் அளவிற்குச் சிரித்தார்கள். பிறகு இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக்கொடுத்து விடுவீராக என்றார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (1936)

நகைச்சுவையுடன் நபிகள் நாயகம்

பிறர் நகைச்சுவையுடன் பேசும் போது அதை நபி (ஸல்) அவர்கள் ஆமோதித்து இருக்கிறார்கள். பல நேரங்களில் பிறரிடத்தில் அவர்களும் நகைச்சுவையுடன் பேசியும் இருக்கிறார்கள். பின்வரும் சம்பவங்களி­ருந்து இதை உணர்ந்துகொள்ளலாம். 

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே (வாகனத்தில்) என்னை ஏற்றிவிடுங்கள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒட்டகக் குட்டியின் மீது உம்மை நாம் ஏற்றிவிடுவோம் என்று கூறினார்கள். அம்மனிதர் ஒட்டகக் குட்டியை வைத்து நான் என்ன செய்வேன்? (அதில் பயணிக்க முடியாதே) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (எல்லா) ஒட்டகங்களும் தாய் ஒட்டகத்திற்கு குட்டிகளாகத்தானே இருக்கின்றன? என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : அபூதாவூத் (4346)

நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களை சந்திப்பவர்களாக இருந்தார்கள். உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்களின் மூலமாக ஒரு மகன் இருந்தார். அவர் அபூ உமைர் என்று அழைக்கப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் தமாஷ் செய்வார்கள். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் அபூ உமைரிடம் வந்த போது அபூ உமைர் கவலையுடன் இருப்பதைப் பார்த்து அபூ உமைரை கவலையுடன் பார்க்கிறேனே என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் அவர் விளையாடிக்கொண்டிருந்த அவரது குருவி இறந்துவிட்டது என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் (அபூ உமைரிடம்) அபூ உமைரே உனது சின்னக்குருவி என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மா­க் (ரலி) நூல் : அஹ்மத் (12389) 

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு

சிரிப்பதை அனுமதிக்கும் நம் மார்க்கம் அதை அளவுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. சிரிக்கக்கூடாத இடங்களில் சிரிப்பதை தடைசெய்கிறது. சிரிக்கத் தகுதியற்ற இடங்களில் சிரிப்பது என்பது தேவையற்றது. சிரிப்பு வராவிட்டாலும் ஏதோ ஒரு நோக்கத்திற்காக வேண்டுமேன்றே சிரிப்பதை போல் சிலர் காட்டிக்கொள்கிறார்கள். 

கவலைப்பட வேண்டிய சூழ்நிலையில் நிலமைபுரியாமல் சிரிப்பவர்களும் உண்டு. பொறுத்தமற்ற இந்த சிரிப்புகள் பிறரை மகிழ்விப்பதற்கு பதிலாக கவலையிலும் துக்கத்திலும் ஆழ்த்திவிடும். பிறர் துன்பப்படும் போது அதைப் பார்த்து கே­செய்து சிரித்தால் அதன் மூலம் பலர் பரவசம் அடைந்தாலும் சிலர் புண்படுகிறார்கள். இத்தகைய சிரிப்புகள் அனுமதிக்கப்பட்டவை அல்ல.

நாம் சொல்லும் நகைச்சுவையினால் எப்போது எல்லோரும் மகிழ்கிறார்களோ அப்போதே நாம் சரியான அடிப்படையில் பிறரை சிரிக்கவைத்திருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நம் உள்ளத்திற்கு நிம்மதியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக மனதில் இறுக்கத்தையும் மூளைக்குத் திரையையும் சிரிப்பு ஏற்படுத்திவிடக்கூடாது.

விபத்துக்கள் அழிவுகள் தொடர்பாக செய்திகள் கிடைத்தால் மரணத்திற்கு பயப்பட வேண்டுமேத் தவிர சிரித்து கும்மாளம் அடித்துக்கொண்டிருக்கக்கூடாது. மண்ணறைகளை கடந்து செல்லும் போது மரணபயத்துடன் செல்ல வேண்டும். இடி மின்னல் போன்ற இயற்கை சீற்றங்கள் தலைதூக்கும் போது இறைவனின் பயம் வர வேண்டும். 

ஏனென்றால் மழையின் அறிகுறியாக தோன்றும் இடி பல உயிர்களை கொன்றுவிடுகிறது. தேவைக்கு அதிகமாக மழை பெய்துவிட்டாலும் அதிகமாக உயிர்சேதமும் ஏற்படுகிறது. கட்டிடங்கள் வலுவிழந்து வசிப்பவர்களுக்கு மண்ணறைகளாக மாறிவிடுகின்றது. ஆகையால் தான் நபி (ஸல்) அவர்கள் கடும் காற்றையோ மேகம் திரள்வதையோ கண்டால் படபடப்புடனும் பரபரப்புடனும் காணப்பட்டார்கள். 

மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால் நபி (ஸல்) அவர்களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். (ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதரே மக்கள் மேகத்தைக் காணும் போது அது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால் தாங்கள் மேகத்தை காணும் போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக்காணுகின்றேனே (ஏன்?) என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆயிஷாவே அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. (ஆத் எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்து விட்டு இது நமக்கு மழையை பொழிவிக்கும் மேகம் என்றே கூறினர் என பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (4829)

பொய் சொல்­லி சிரிக்கவைக்கக் கூடாது

பிறரை சிரிக்க வைப்பதற்காக நடக்காத நிகழ்வுகளையெல்லாம் நடந்ததாக சொல்வது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட ஒன்று. நான்கு பேர் கூடிவிட்டாலே வாய்க்கு வந்ததையெல்லாம் கூறி சிரித்துக்கொண்டிருக்கும் வழக்கம் ஆண்களிடத்திலும் பெண்களிடத்திலும் அதிகமாக பரவியிருக்கிறது.

சின்னத்திரைகளில் ஒளிபரப்பப்படும் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் சொல்லப்படும் பெரும்பாலான நகைச்சுவைக் கருத்துக்கள் கற்பனையாக உருவாக்கப்பட்டவை. நகைச்சுவையிலும் உண்மையைத் தான் சொல்ல வேண்டும் என்று மார்க்கம் பணிக்கிறது. சிரிக்க வைப்பதற்காக பொய் சொல்வதை தடைசெய்துள்ளது. 

(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில்) மக்கள் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எங்களிடத்தில் தமாஷ் செய்கிறீர்களே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லவில்லையே என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி (1913)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவன் (பிற) கூட்டத்தினரை சிரிக்க வைப்பதற்காக பொய்யான செய்தியைக் கூறுகிறானோ அவனுக்கு கேடு தான். அவனுக்கு கேடு தான். அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி) நூல் : திர்மிதி (2237)

பிறரை பாதிப்புக்குள்ளாக்கி சிரிக்க வைக்கக்கூடாது

மற்றவர்களை பயமுறுத்தியோ ஏமாற்றியோ கேலி செய்தோ நமது நகைச்சுவைகள் இருக்கக்கூடாது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் எவரும் வேண்டுமென்றோ அல்லது விளையாட்டாகவோ தனது நண்பரின் பொருளை எடுத்துக்கொள்ள வேண்டாம். தனது நண்பரின் கைத்தடியை கண்டாலும் அதை நண்பரிடத்தில் ஒப்படைத்துவிடட்டும். அறிவிப்பவர் : யசீத் பின் சயீத் (ரலி) நூல் : அஹ்மத் (17261)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களின் தோழர்கள் ஒரு பயணத்தில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒருவர் உறங்கிவிட்டார். வேறு சிலர் (உறங்கிக்கொண்டிருந்தவருடன்) இருந்த அம்புகளுக்கு அருகில் சென்று அதை எடுத்துவைத்துக் கொண்டார்கள். அம்மனிதர் உறங்கி எழுந்தவுடன் (அம்பு காணாமல் போனதைக் கண்டு) திடுக்குற்றார். (இதைப் பார்த்த) கூட்டம் சிரித்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் ஏன் நீங்கள் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இவரது அம்புக்களை நாங்கள் எடுத்து (மறைத்து) வைத்துக் கொண்டோம். அவர் விழித்தவுடன் திடுக்குற்றார் என்று கூறினார்கள். ஒரு முஸ்லிமை திடுக்குறச் செய்வது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா நூல் : அஹ்மத் (21986)

நன்றி: துபை TNTJ