ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

திட்டுவதும் சபிப்பதும் பாவமாகும்!

திட்டுவதும் சபிப்பதும் பாவமாகும்! 

ஒரு முஸ்லிம் கோபப்படுவது அல்லாஹ்வுக்காகத்தான் என்றானபோது அந்தக் கோபத்தின் நேரத்தில் வெறுப்பான சொற்களைக் கொட்டுவது, அசிங்கமாகத் திட்டுவது போன்ற செயல்கள் அவரிடம் வெளிப்படாமல் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு முஸ்லிம் இயல்பாகவே அருவருப்பாக பேசுதல், ஆபாசமாகத் திட்டுதல், சபித்தல் போன்ற பிறரிடம் வெறுப்பை ஏற்படுத்தும் குணங்களைத் தவிர்த்து, இது குறித்த இஸ்லாமின் வழிமுறையைப் பின்பற்றுவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமஸ்வூத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “முஸ்லிமைத் திட்டுவது பாவமாகும். அவருடன் போர் செய்வது குஃப்ராகும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

“அசிங்கமான செயல்களைச் செய்பவரையும், அசிங்கமான சொற்களைப் பேசுபவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.” (முஃஜமுத் தப்ரானி, முஸ்னத் அஹ்மத்)

“மடத்தனமான செயல்களை செய்பவரையும், ஆபாசமான செயல்களை செய்பவர்களையும் அல்லாஹ் கோபிக்கிறான்.” (முஃஜமுத் தப்ரானி)

“முஃமின் (அல்லாஹ்வை விசுவாசித்தவர்) குத்திக் காட்டுபவராகவோ, சபிப்பவராகவோ, மூடத்தனமான செயலை செய்பவராகவோ, ஆபாசமாகப் பேசுபவராகவோ இருக்கமாட்டார்.” (அல் அதபுல் முஃப்ரத்)

இவை மணம் வீசும் இஸ்லாமியத் தென்றலை சுவாசித்து வரும் முஸ்லிமின் தகுதிக்கு ஏற்றபண்பல்ல. அவரது இதயத்தில் இஸ்லாம் மலர்ந்து மணம் வீசும்.இஆதனால் மனிதர்களை குத்திக் கிழித்து உணர்வுகளைக் காயப்படுத்தும் வார்த்தைகள் அவரிடம் வெளிப்படாது. அழகிய முன்மாதிரியான நபி (ஸல்) அவர்களின் செயல்களைப் பிரதி பலிக்கும் அவரிடம், நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒருபோதும் வெளிப்பட்டிராத வார்த்தைகள் வெளிப்படுவது முற்றிலும் சாத்தியமற்றதாகும்.

அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அருவருப்பான செயலை செய்பவராகவோ, சபிப்பவராகவோ, எசுபவராகவோ இருக்கவில்லை. மிகவும் கோபமான சந்தர்ப்பங்களில் “அவருக்கென்ன நேர்ந்தது. அவரது நெற்றி மண்ணாகட்டும்” என்று சொல்பவர்களாக இருந்தார்கள். ((ஸஹீஹுல் புகாரி)

மேலும் ஏகத்துவ அழைப்பை ஏற்க மறுத்த காஃபிர்களை சபிப்பதிலிருந்தும் நபி (ஸல்) அவர்கள் தவிர்ந்து கொண்டார்கள். அவர்களைக் காயப்படுத்தும் வார்த்தைகளைக் கூறியதில்லை.

இது பற்றி பிரபல நபித்தோழர் அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ”அல்லாஹ்வின் தூதரே! இணை வைப்பாளர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்” என்று கூறப்பட்டபோது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”நான் சபிப்பவராக அனுப்பப்படவில்லை; அருட்கொடையாகவே அனுப்பப்பட்டுள்ளேன்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: மது அருந்திய ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் ”அவரை அடியுங்கள்” என்று கூறினார்கள். எங்களில் சிலர் கைகளைக் கொண்டும், சிலர் செருப்புகளைக் கொண்டும், சிலர் துணியைக் கொண்டும் அவரை அடித்தார்கள். அடித்து முடித்தபோது கூட்டத்திஇருந்த ஒருவர் ”அல்லாஹ் உன்னை இழிவுபடுத்தட்டும்” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் ”அவ்வாறு சொல்லாதீர்! அவருக்கு எதிராக ஷைத்தானுக்கு உதவி செய்யாதீர்!” என்று கூறினார்கள். (ஸஹீீஹுல் புகாரி)

பாவமும், வழிகேடும், வரம்பு மீறுதலுமே வழமையாகக் கொண்டவரிடமும் கருணை காட்டும் இஸ்லாமின் கண்ணோட்டம்தான் எவ்வளவு அற்புதமானது!

நபி (ஸல்) அவர்கள் மக்களின் உள்ளங்களிலிருந்து குரோதம், விரோதம் ஆகியவற்றைக் களைந்தார்கள். மக்களின் கண்ணியத்தை தகர்க்கும் விதமாக தனது நாவை பயன்படுத்தியவனின் முடிவு எப்படி இருக்கும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

நியாயமற்ற அவதூறுகளையும் வரம்பு மீறிய குற்றச்சாட்டுகளையும் அருவருப்பான வார்த்தைகளையும் பிறர்மீது வீசி எறிபவன் மறுமை நாளில் எண்ணற்ற நன்மைகளைச் சுமந்து வந்தும், அவனது தீய செயல்கள் அனைத்து நன்மைகளையும் சூறையாடிவிடும். தன்னை நரகிலிருந்து காக்கும் எவ்வித சாதனமுமின்றி சபிக்கப்பட்டவனாக நரகில் வீசப்படுவான் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள்: ”பரம ஏழை யாரென்பதை நீங்கள் அறிவீர்களா?” நபித்தோழர்கள் ”எவரிடம் ஒரு திர்ஹம் கூட இல்லையோ, இன்னும் எந்தப் பொருளும் இல்லையோ அவரையே நாங்கள் பரம ஏழையாகக் கருதுவோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”எனது உம்மத்தில் பரம ஏழை யாரெனில், அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத்தைக் கொண்டு வருவார். அதே சமயத்தில் ஒருவரை திட்டியிருப்பார், ஒருவரை அவதூறு பேசியிருப்பார், ஒருவருடைய பொருளை அபகரித்திருப்பார், ஒருவரை கொலை செய்திருப்பார், ஒருவரை அடித்திருப்பார். அவருடைய நன்மைகளை அவர்களில் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். அவர் மீதுள்ள குற்றங்கள் முடிவதற்கு முன்னால் அவரது நன்மைகள் தீர்ந்துவிடும்போது பாதிக்கப்பட்டவர்களின் பாவங்களை எடுத்து அவர்மீது சுமத்தப்பட்டு அவர் நரகில் வீசி எறியப்படுவார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

நற்பண்புகளைக் கொண்ட இஸ்லாமிய சமூகத்தில் வாழும் முஸ்லிம்களின் வாழ்வில் இதுபோன்ற அர்த்தமற்ற, வீணான காரியங்கள் இருக்க முடியாது. அதுபோல அசிங்கமான, தவறான வார்த்தைகளை பயன்படுத்தக் காரணமாக அமையும் சண்டை, சச்சரவுகளும் இருக்க முடியாது.

உண்மையான இஸ்லாமிய சமூகத்தில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு வார்த்தையும் இறைசமூகத்தில் விசாரிக்கப்படும் என்பதை ஆழமாக உணர்ந்திருப்பார். வீண் விவாதம், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதிலிருந்து தன்னை தற்காத்து கொள்வார்.

இவ்விடத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறியதை நினைவில் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒருவரையொருவர் திட்டிக் கொண்டால் மற்றவர் வரம்பு மீறாதிருக்கும் வரை அதன் பாவங்கள் அனைத்தும் அதை ஆரம்பித்தவருக்கே உரியதாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

இதனால்தான் பாவத்தில் வீழ்ந்து வரம்பு மீறிவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தகுந்த காரணங்கள் இருப்பினும் பிறரைத் திட்டுவதிலிருந்து உண்மை முஸ்லிம் தனது நாவைப்பேணி, கொழுந்து விட்டெரியும் கோப ஜுவாலையிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம் தனது வாழ்வில் இறந்தவர்கள் உட்பட பிறரை நாவால் காயப்படுத்துவதிலிருந்து தவிர்ந்து கொள்வார். ஆம்! சில மூடர்கள் தங்களது நாவுகளால் உயிருள்ளவர்களை மட்டுமின்றி மரணித்தவர்களை பற்றியும் தவறாக பேசி வருகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”மரணித்தவர்களைத் திட்டாதீர்கள்! நிச்சயமாக அவர்கள் தாங்கள் முற்படுத்தியதை அடைந்து கொண்டார்கள்.” (ஸஹீீஹுல் புகாரி)

உறுதியான ஆதாரமின்றி எவரையும் இறை மறுப்பாளர், பெரும்பாவி என்று கூறமாட்டார். உண்மை முஸ்லிம் ஏசுவது, திட்டுவது, அருவருப்பாக பேசுவது போன்ற இழி செயல்களிலிருந்து தனது நாவை காத்துக்கொள்வது போல அதைவிட மிக அதிர்ச்சியையும், கசப்பையும் ஏற்படுத்தும் வகையில் மக்களை ஃபாஸிக் (பெரும்பாவி) என்றும், காஃபிர் (இறை மறுப்பாளர்) என்றும் அவதூறு கூறுவதிலிருந்தும் விலகிக்கொள்வார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒரு மனிதர் மற்றவரை காஃபிர், அல்லது ஃபாஸிக் என்ற வார்த்தைகளை கூறி, அம்மனிதர் அதற்குரியவராக இல்லையென்றால் அத்தன்மை கூறியவரிடமே திரும்பிவிடும்.” (ஸஹீீஹுல் புகாரி)

நன்றி: READISLAM.NET