திங்கள், 16 பிப்ரவரி, 2015

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?


அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?

'பெண்களை அறைகளில் தங்க வைக்காதீர்கள்! எழுதும் முறையை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்காதீர்கள்! கைத்தறியையும் அந்நூர் அத்தியாயத்தையும் கற்றுக் கொடுங்கள்!' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: ஹாகிம் (3494)

இதே கருத்து தப்ரானியின் முஃஜமுல் அவ்ஸத் என்ற நூலிலும் பைஹகீ அவர்களுக்குரிய ஷுஅபுல் ஈமான் என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்ற பழமொழியை நபி (ஸல்) அவர்கள் தான் சொல்லித் தந்திருப்பார்களோ என்று நாம் எண்ணும் வண்ணம் இந்த செய்தி அமைந்துள்ளது. பெண்கள் வேலை செய்தவற்கு என்றே படைக்கப்பட்டவர்கள்; அவர்களுக்கு படிப்புத் தேவையில்லை; அவர்கள் சிறு தொழிலை கற்றுக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கட்டும்; மார்க்கம் தொடர்பான செய்திகளை அறிந்து நூர் அத்தியாயத்தைக் கற்றுக் கொள்ளட்டும்; அவர்களை நல்ல அறைகளில் தங்க வைக்க வேண்டாம்! என்று இச்செய்தி நமக்கு உணர்த்துகிறது!

முதலில், இந்தச் செய்தி அறிவிப்பாளர் வரிசைப் படி சரியானதா? என்பதை நாம் பார்ப்போம். இச் செய்தியைப் பதிவு செய்த இமாம் ஹாகிம் அவர்கள், 'இந்தச் செய்தி ஆதாரப்பூர்மானது' என்று இச்செய்தியைப் பதிவு செய்து விட்டு அதன் இறுதியில் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இவர்களின் இக்கூற்று சரியானது அல்ல என்பதை இந்த நூலுக்கு விளக்கவுரை எழுதிய இமாம் தஹபீ, தனது தல்கீஸ் எனும் நூலில் 'இது இட்டுக்கட்டப்பட்டது' என்றும் இந்த செய்தியின் அபாயகரமான நபர் (இச் செய்தியின் ஐந்தாவது அறிவிப்பாளர்) அப்துல் வஹ்ஹாப் என்பவராவார். இவரைப் பெரும் பொய்யர் என்று அபூஹாத்திம் கூறியுள்ளார்கள் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

மேலும் இவரைப் பற்றி இமாம் புகாரீ அவர்கள், 'இவரிடம் (அடிப்படை இல்லாத) புதுமையான செய்திகள் உண்டு' என்றும் 'இவர் இட்டுக்கட்டி சொல்பவர்' என்று இமாம் அபூதாவூத் அவர்களும், 'இவர் விடப்பட வேண்டியவர்' என்று இமாம் உகைலீ, தாரகுத்னீ, பைஹகீ ஆகியோரும் குறிப்பிட்டுள்ளனர். இமாம் நஸயீ அவர்கள் 'இவர் நம்பகமானவர் இல்லை' என்றும் இவருடைய பெரும்பாலான செய்திகள் இட்டுக்கட்டப் பட்டவை என்று ஸாலிஹ் பின் முஹம்மத் அவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 6, பக்கம்: 395

எனவே இந்தச் செய்தி அறிவிப்பாளர் வரிசையின் அடிப்படையில் ஆதாரத்திற்கு ஏற்றது அல்ல என்பது நிரூபணமாகிறது. இதே செய்தி இடம் பெறும் தப்ரானீயின் அல்முஃஜமுல் அவ்ஸத் என்ற நூலில் அப்துல் வஹ்ஹாப் என்பவர் அல்லாமல் வேறு அறிவிப்பாளர் வரிசையில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதிலும் பலவீனம் இருக்கிறது. இந்த நூலில் இடம் பெறும் ஐந்தாவது அறிவிப்பாளர், முஹம்மத் பின் இப்ராஹீம் என்பவர் 'பெரும் பொய்யர்' என்று இமாம் தாரகுத்னீ அவர்களும் 'இவருடைய செய்திகளை (இட்டுக்கட்டப்பட்டது என்று) தெளிவு படுத்துவதற்காகவே தவிர அறிவிக்கக் கூடாது.

ஏனெனில் இவர் (நபிகளார் மீது) இட்டுக்கட்டிச் சொல்பவர்' என்று இப்னுஹிப்பான் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். 'இவருடைய பெரும்பாலான செய்திகள் சரியானவை அல்ல' என்று இப்னு அதீ அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 6, பக்கம்: 33

எனவே இந்தச் செய்தியும் அறிவிப்பாளர் வரிசையின் அடிப்படையில் பின்பற்றுவதற்குரிய தகுதியை இழக்கிறது. மேலும் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் யாவும் பெண்கள் கற்றுக் கொள்ளலாம் என்ற கருத்தையே தருகிறன. இஸ்லாமிய மார்க்கம், கல்வியின் சிறப்பைப் பற்றிப் பேசும் போது ஆண்கள், பெண்கள் என்று பிரித்துப் பேசவில்லை. பொதுவாகவே பேசுகிறது. மேலும் அடிமைகள் நிறைந்த அந்தக் காலத்தில், அடிமைப் பெண்களுக்கும் கூட நபி (ஸல்) அவர்கள் கல்வி கற்றுக் கொடுக்க ஆர்வமூட்டியுள்ளார்கள்.

'மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடத்தில்) இரண்டு விதக் கூலிகள் உண்டு. ஒருவர் வேதத்தையுடையவர்களில் உள்ளவர். இவர் தமது (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும் முஹம்மதையும் நம்பியவர். மற்றொருவர் தமது இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் தமது எஜமானனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை. மூன்றாமவர் தம்மிடத்தில் உள்ள ஒரு அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்குக் கல்வியைக் கற்பித்து, அதை அழகுறக் கற்றுத் தந்து பின்னர் அவளை அடிமையிலிருந்து விடுவித்து அவளை மணந்து கொண்டவர். இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) நூல்: புகாரீ (97)

இது போன்ற செய்திகள் மூலம், நபிகளார் பெண்களை எழுதப் படிக்க ஆர்மூட்டிருக்கிறார்கள் என்பதையும் அதை ஆட்சேபணை செய்யவில்லை என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம். மேலும் கல்வி இல்லாத காரணத்தால் தான் இன்று பெண்கள் பரவலாக ஏமாற்றப்படுகிறார்கள். படிப்பு அவர்களிடம் இருக்குமானால் அதன் மூலம் அவர்கள் எச்சரிக்கையாக இருப்பதற்கு உதவும்.

மேலும் மார்க்க விஷயங்களை அறிந்து கொள்வதற்கும் இவை பேருதவியாக இருக்கும். எனவே பெண்கள் கல்வி கற்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை! மாறாக ஆர்வமூட்டவே செய்கிறது என்பது தெளிவான செய்தியாகும்.

- அப்துந்நாசிர் எம்.ஐ.எஸ்.சி