வியாழன், 19 பிப்ரவரி, 2015

சிறாரைச் சீரழிக்கும் சின்னத் திரை

சிறாரைச் சீரழிக்கும் சின்னத் திரை

மனிதனுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட மாபெரும் ஆற்றலைக் கொண்டு நவீன சாதனங்கள் பலவற்றைக் கண்டுபிடித்துள்ளான். அந்தச் சாதனங்கள் மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்தப் பயன்படுவதோடு பெரும்பாலும் மனிதனை சீரழிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

மனிதன் உருவாக்கிய அரிய சாதனங்களில் தொலைக்காட்சியும் ஒன்று. இதனால் எத்தனையோ நல்ல காரியங்களைச் செய்ய முடியும். பல அரிய நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கவும், அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் இயலும்.

ஆனால் இந்தச் சாதனம் பெரும்பாலும் வீணான காரியங்களுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. போனால் கிடைக்காத பொன்னான நேரத்தை வீணடிக்க இந்தச் சாதனம் பெரிதும் பயன்படுகிறது. மேலும் மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும் பெண்களை இன்னும் மூடராக்க ஆன்மீக நாடகங்கள் துணை செய்கின்றன. பெண்களை அடிமையாக்கி நாடகங்களில் மூழ்கச் செய்த இந்த சின்னத்திரை, இப்போது இளம் சிறார்களையும் சீரழிக்கும் முயற்சியில் முயன்று வருகிறது.

லிட்டில் மாஸ்டர், ஜுனியர் சிங்கர்ஸ், சூப்பர் ஜுனியர் என்ற பெயர்களில் இளம் உள்ளங்களைக் கெடுக்க நிகழ்ச்சிகள் தயார் செய்யப்பட்டு வெற்றி நடைபோட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் சினிமா பாடல்களை பாடச் செய்து தேர்வு செய்கின்றனர். ஆபாசமான அருவருக்கத்தக்க பாடல்களை மூன்று வயதி­ருந்து பதிமூன்று வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளைப் பாட வைக்கின்றனர். 

அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம், 'இன்னும் நன்றாகப் பாட வேண்டும்; அடுத்த சுற்றில் வெற்றி பெற கூடுதல் முயற்சி செய்ய வேண்டும்' என வ­யுறுத்தி பிஞ்சு உள்ளங்களில் சினிமா பாடல்களை தினமும் மனனம் செய்ய வைத்து, அறிவை மங்கச் செய்து அநாகரிக உலகத்திற்கு அழைக்கின்றனர்.

இதை விடக் கொடுமை என்னவென்றால் மூன்று, நான்கு வயது சிறுவர், சிறுமிகளை பாடலுக்குத் தோதுவாக ஆட்டம் போட வைத்துத் தேர்வு செய்கின்றனர். அதில், 'சின்னவீடா வரட்டுமா? பெரிய வீடா வரட்டுமா?' என்ற அருவருப்பான பாடலுக்குப் பச்சிளம் குழந்தைகளை ஆட வைத்துத் தேர்வு செய்தது நியாயவான்களை அதிரச் செய்தது.

மூன்று, நான்கு வயதுடையவர்களை மோசமான இந்தப் பாடலுக்கு ஆட வைப்பது அவர்கள் மனதில் எதைப் பதிய வைக்கும்? இந்தச் சிறுவர்கள் வருங்காலத்தில் எப்படி உருவாவார்கள்? இந்தப் பாடலுக்கு ஆடும் சிறுவர்களைப் பார்த்து பெற்றோர்கள் சந்தோஷப்படுவது தான் கொடுமையிலும் கொடுமை!

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவர்களும், சிறுமிகளும், இந்நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளும் எப்படித் தங்கள் வீடுகளில் நடந்து கொள்வார்கள்? சினிமா பாடல்களைப் பார்த்து, ஆட்டம் போடுவார்களா? அல்லது பள்ளிப் பாடங்களைப் படிப்பார்களா? இளம் வயதிலேயே இந்த விஷ நஞ்சுகளை விதைத்தால் இவர்கள் குடும்பத்தைக் காப்பாற்றுவார்களா? சினிமா, நாடகம் என்று ஆபாசக் காட்சிகளின் பக்கம் சென்று சீரழிந்து போவார்களா?

இளம் வயதில் பதியும் செய்திகள் அவர்கள் சாகும் வரை நீடிக்கும். இந்த வயதில் அவர்களிடம் நாகரீகத்தையும் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் போதிக்க வேண்டிய நேரத்தில் ஆபாசப் பாடல்களுக்கு ஆட வைக்கும் பெற்றோர்கள் பிற்காலத்தில் இதற்காக வேதனைப்படத் தான் போகிறார்கள். 

படைப்பாளிகள் இந்தத் தொலைக்காட்சியை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். இளம் சிறார்களின் அறிவை மெருகூட்டும் அறிவு சார்ந்த நிகழ்ச்சிகளை உருவாக்கி அவர்களை இளம் விஞ்ஞானிகளாக உருவாக்கும் நிகழ்ச்சிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

பள்ளிப் பாடங்களை இலகுவாகத் தெரிந்து கொண்டு நன்றாக மதிப்பெண் பெறுவதற்குரிய வழிவகைகளைக் காட்டும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். பண்பாடு, ஒழுக்கம் போன்றவற்றை போதிக்கும் நிகழ்ச்சிகளைத் தயாரிக்க வேண்டும்.

இதை விடுத்து ஆபாசப் பாடல்களைப் பாடுவோராகவும், அதற்கு ஆட்டம் போடுவோராகவும் சிறார்களை உருவாக்கினால் இந்த நாடு ஒழுக்கத்தில் சீரழிந்து போவது நிச்சயம்.

நன்றி: துபை TNTJ