செவ்வாய், 1 டிசம்பர், 2015

இஸ்லாத்தின் பெயரால் யூதக் கருத்தைப் புகுத்திய அப்துல்லாஹ் பின் ஸபா


ஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -1)

யூத வேர்களில் உதயமான ஷியா விருட்சம்

அபூஉஸாமா

"ஈரானில் இமாம் குமைனியின் இஸ்லாமியப் புரட்சி', "ஈரான் இஸ்லாமிய வீராங்கனைகளின் ஆயுதப் பயிற்சி' என்ற புகழார வசனங்கள் தமிழக இஸ்லாமிய ஏடுகளில் மாறி மாறி எழுதப்பட்டன. தற்போது அவை நூல் வடிவில் மாறி உலா வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை வெளியிடும் இயக்கங்கள் ஈரானை இமயத்தில் கொண்டு போய் நிறுத்தின.

அப்போதே அந்த இயக்கங்களின் ஆபத்துக்களை உணர்ந்து ஈரானை ஆளும் ஷியாக் கொள்கையானது குர்ஆன், ஹதீசுக்கு எதிரான கொள்கை என்பதை தவ்ஹீது ஜமாஅத் தனது ஏடுகளில் இனம் காட்டியது.

இன்றளவும் ஈரானை இஸ்லாமிய நாடு என்றும் ஷியாக்களின் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி என்றும் பறை சாற்றுபவர்கள் தமிழகத்தில் இருக்கத் தான் செய்கிறார்கள். தவ்ஹீது ஜமாஅத்திற்கு எதிரான பரேலவிஸ ஆலிம்களுடன் இவர்கள் கூட்டுச் சேர்ந்து கொண்டு தங்கள் குருட்டுத் தனத்தில் நீடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் அரபகத்தில் யூதர்களுக்கும், ஷியாக்களுக்கும் எதிராகத் துணிச்சலான பல நடவடிக்கைகளை மேற்கொண்டவரும், இஸ்லாத்தின் இந்த இரண்டு எதிரிகளுக்கு எதிராக அரபகத்தை ஒன்றிணைக்கும் ஆற்றல் கொண்டவர் என்று கருதப்பட்டவருமான இராக் அதிபர் சதாம் ஹுசைனை படுகொலை செய்ய ஏகாதிபத்திய அமெரிக்கா எண்ணிய போது அந்தக் காரியத்தை ஷியாக்கள் ஏற்று கச்சிதமாகச் செய்து முடித்தனர்.

இந்தக் கோழைத்தனமான கொடுஞ்செயலை உலகம் முழுவதும் ஒன்று திரண்டு எதிர்த்த போது இராக்கில் உள்ள ஷியாக்கள் மட்டுமல்ல! உலகெங்கிலும் உள்ள ஷியாக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

இந்தியாவிலும் "சதாம் ஹுசைன் தூக்குத் தண்டனைக்குத் தகுதியானவர் தான்'' என்று அனைத்திந்திய ஷியா சட்ட வாரியத்தின் துணைத் தலைவர் கல்பி சித்தீக் என்பவர்தெரிவித்தார்.

இதன் மூலம் சுன்னத் வல் ஜமாஅத் (தமிழகத்தில் உள்ள சுன்னத் வல் ஜமாஅத் அல்ல) முஸ்லிம்களுக்கும் தங்களுக்கும் உள்ள பகையை ஷியாக்கள் முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டனர்.

இங்கு ஷியாக்கள் தங்களை யார் என்று அப்பட்டமாக அடையாளப் படுத்திக் கொண்டனர். தங்கள் குரோதத்தையும், கோர முகத்தையும் வெளிப்படுத்திக் கொண்டனர்.

குர்ஆன், ஹதீஸை பின்பற்றுவோர் மீது இந்த ஷியாக்கள் கொண்டிருக்கும் பகைமையை, அதன் ஆழத்தை இன்னும் தெளிவாக வரலாற்று ரீதியாக இந்தச் சந்தர்ப்பத்தில் விளக்கி, ஈரானிய மற்றும் ஏனைய ஷியாக்கள் இஸ்லாமியர்களா? அல்லது யூதர்களா? என்பதைப் படம் பிடித்துக் காட்டுவது நமது கடமையாகும்.

இதன் மூலம் ஈரான் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி என்று வர்ணித்து மக்களை நரகப் பாதைக்கு வளைத்துப் போடும் அநியாயத்திலிருந்து காக்க முடியும். அத்துடன் இங்குள்ள சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைக் கூறிக் கொள்வோர் எப்படி ஷியாக்களின் மறு பதிப்பாக உள்ளனர் என்பதையும் அடையாளம் காட்ட வேண்டியது அவசியமாகின்றது. அதற்காகவே இந்தக் கட்டுரை!

ஏகத்துவத்தின் இந்தத் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ள இந்த ஆய்வாக்கங்கள், ஆதார வளங்கள் அனைத்தும் ஷியாக்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அறிஞர் இஹ்ஸான் இலாஹி லஹீரியின் "ஷியாவும் சுன்னத்தும்'' என்ற நூலிலிருந்து பெறப்பட்டவையாகும்.

ஈரானில் ஏனிந்த வேர் பிடிப்பு

ஷியாயிஸத்தின் பிறப்பிடமாக மட்டுமில்லாமல் வளர்ப்பிடமாகவும் ஈரான் இருப்பதற்குக் காரணம் என்ன?

ஈரான் என்ற பாரசீகப் பேரரசின் சாம்ராஜ்யம் தாக்கப்பட்டதும், தகர்க்கப்பட்டதும் அன்றைய இஸ்லாமியப் பேரரசின் இரண்டாவது ஆட்சித் தலைவராக இருந்த உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் வீரமிக்க கைகளால் தான். இதனால் பாரசீக சக்திகள், பாசி படிந்த உயர் சாதியினர் உமர் (ரலி) அவர்களைப் பழி வாங்கத் துடித்தனர்.

பரம்பரை பரம்பரையாக ஆட்சி செய்து வந்த பாரசீகர்கள் பதவிப் பித்தை விட்டு வெளியேறுவது சாதாரண விஷயமல்ல! அதனால் அவர்கள் பழி வாங்கத் துடிப்பது இயல்பு தான். எனவே இவர்களுக்கு சிந்தனையிலும் செயல்பாட்டிலும் ஒத்தசித்தாந்தத்தைக் கொண்டிருந்த யூதர்கள் இவர்களை அடையாளம் கண்டு இவர்களுடன் கை கோர்த்தனர். அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்களுக்கு எதிராக இவ்விரு தீய சக்திகளும் ஒன்று சேர்ந்து களம் அமைத்தனர்.

கைதியான அரசிக்குக் கணவரான ஹுசைன் (ரலி)

இப்படி இவர்கள் சதித் திட்டம் தீட்டிக் கொண்டிருந்த வேளையில் பாரசீகத்திலிருந்து கைதியாக வந்த ஷஹ்ர் பானு என்ற பெண்ணை ஹுசைன் (ரலி) அவர்கள் மணமுடிக்கின்றார்கள். இந்தப் பெண் பாரசீக மன்னர் யஸ்தஜ்ரித் என்பவரின் மகளாவார். இந்நிகழ்வு யதார்த்தமாக நடந்த நிகழ்வாகும்.

இதைப் பயன்படுத்திக் கொண்டு, யூதர்களின் முழு ஒத்துழைப்புடன் பாரசீகர்கள் இஸ்லாமிய அரசுக்குள் குழப்பம் விளைவிப்பதற்கு விரிவான முயற்சிகளை எடுத்துக் கொண்டனர்.

உமர் (ரலி) அவர்கள் மரணித்த பின் இஸ்லாமிய அரசின் மூன்றாவது கலீபா உஸ்மான் (ரலி) அவர்களின் காலத்தில் அலீ (ரலி) அவர்களுக்குப் புனிதமேற்றும் பூர்வாங்கப் பணியில் இறங்கினர். அலீ (ரலி) அவர்களுக்கு விலாயத் இருப்பதாக வாதிட்டனர். அலீ (ரலி) அவர்களின் கவனத்திற்கு வராமலேயே இந்தச் சதி வலையைப் பின்னினர்.

பாரசீகர்கள் ஏற்கனவே தங்களை தெய்வீக வழித் தோன்றல்கள் என்றும் தங்களின் நரம்பு நாளங்களில் தெய்வீக ரத்தம் ஓடுவதாகவும் நம்பியவர்கள்.

சாசானியர்களான அவர்களிலிருந்து ஷஹ்ர் பானு என்ற பெண் ஹுசைன் (ரலி) அவர்களுக்கு சம்சாரமாகி விட்ட பின்னர், அலீ (ரலி) அவர்களின் குடும்பத்தினருக்குத் தெய்வீகத் தன்மையைக் கொடுப்பதற்குரிய வழி மிகவும் எளிதானது; இலகுவானது.

பாரசீகர்களைச் சேர்ந்த இந்த மனைவியின் மூலமாக ஹுசைன் (ரலி) அவர்களுக்குப் பிறந்தவர் தான் ஜைனுல் ஆபிதீன் என்ற சின்ன அலீ ஆவார். இவருடைய பூத உடலில் ஓடுவது சாதாரண மனித இரத்தமல்ல! புனித இரத்தம் என்று ஒரு புனித வரலாற்றை உருவாக்கினர்.

இதனால் தான் ஈரானில் பெரும்பான்மையானவர்கள் ஷியாயிஸத்தில் நுழைந்தனர்.

இது தான் ஈரான் ஷியாக்களின் பிறப்பிடமாகவும், வளர்ப்பிடமாகவும் இருப்பதற்குக் காரணமாகும்.

இப்போது ஷியாயிஸம் உருவான வரலாற்றைப் பார்ப்போம்.

ஷியாயிஸம் உதயமான வரலாறு

முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதுச் செய்தி என்ற துல்லியமான வெளிச்சம் பூமியெங்கும் பரவத் தொடங்கியதும் புதிய வரலாற்றுப் பக்கங்களை எழுதத் தொடங்கியதும் இறை மறுப்பாளர்கள், இணை வைப்பாளர்கள், குறிப்பாக அரபிய தீபகற்பத்தில் இருந்த யூதர்கள், ஈரானில் உள்ள நெருப்பு வணங்கிகள் ஆகியோரின் உள்ளங்கள் கரியத் தொடங்கின.

இதனால் இஸ்லாத்திற்கு எதிரான சதிகளில் அவர்கள் இறங்கினர்; சூழ்ச்சிகளைச் சுற்றிலும் பின்னினர். ஆனால் அல்லாஹ்வின் ஒளி இத்தனையையும் தாண்டி, சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. இதையே அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடுகின்றான்.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப் படுத்துபவன்.

(அல்குர்ஆன் 61:8)

அப்துல்லாஹ் பின் ஸபா

இஸ்லாம் உதயமானதும் முதன் முதலில் இஸ்லாமிய மார்க்கத்தில் இஸ்லாத்தின் பெயராலேயே யூதக் கருத்தைப் புகுத்தியவன் அப்துல்லாஹ் பின் ஸபா என்பவன் தான்.

இவன் ஒரு யூதன்! இவனுடைய மூதாதையர்களான பனூ குரைளா, பனூ நுளைர், பனூ கயன்காஃ ஆகிய கோத்திரத்தார் இஸ்லாத்தை, அதன் இறைத் தூதரை எதிர்த்துப் படை நடத்தினர். இவர்கள் நடத்திய போர்கள் அனைத்திலும் அடுக்கடுக்காகத் தோல்வியைத் தான் சந்தித்தனர். இதனால் முஸ்லிம்களை அவர்கள் நேருக்கு நேர்களத்தில் சந்திக்கும் காரியத்தைக் கைவிட்டனர்.

ஆனால் திரை மறைவில், முதுகுக்குப் பின்னால் நின்று குரல் வளையை அறுக்கும் கலையைக் கையில் எடுத்தனர்.

இதன்படி யமன் நாட்டைச் சேர்ந்த அப்துல்லாஹ் பின் ஸபாவும் அவனது சதிகார சகாக்களும் ஒரு திட்டம் தீட்டினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரு மகள்களை மணமுடித்தவரும் இஸ்லாமிய ஆட்சித் தலைவர்களில் மூன்றாவது கலீபாவுமான உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியில் தலைநகர் மதீனாவிற்குள் அந்தத் திட்டத்தை அரங்கேற்றினர்.

தங்கள் காரியத்தை அரங்கேற்றுவதற்கு அலீ (ரலி) அவர்களைக் கவசமாக்கிக் கொண்டு மதீனாவில் குளறுபடிகளையும், குழப்பத்தையும் தோற்றுவித்தனர். மக்களின் மனங்களில் விஷக் கருத்துக்களைத் தூவினார்கள்.

தபூக் போர் நடந்த காலம் மிகவும் கஷ்டமான காலமாகும். "இந்த இக்கட்டான காலத்தில் உதவுபவர் யார்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது உஸ்மான் (ரலி) அவர்கள் ஆயிரம் தீனார்களைக் கொண்டு வந்து நபி (ஸல்) அவர்களிடம் அர்ப்பணித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த நாளுக்குப் பின்னர் (உஸ்மான்) இப்னு அஃப்பான் செய்யும் (பாவமான) காரியம் அவரைப் பாதிக்கச் செய்யாது'' என்று பல தடவை கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸமுரா(ரலி)

நூல்: அஹ்மத் 19713, திர்மிதீ 3632

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களைப் பாராட்டியது மட்டுமில்லாமல் அவர்களுக்குச் சுவனத்தையும், வீர மரணத்தையும் கொண்டு சுபச் செய்தி கூறினார்கள்.

இப்படிப்பட்ட உஸ்மான் (ரலி) அவர்கள் மீது முஸ்லிம்களைத் தூண்டி விட்டவர்கள் அப்துல்லாஹ் பின் ஸபாவும், அவனது யூத சகாக்களும் தான்.

யூத இனத்தின் வெற்றி

இவர்கள் தான் இஸ்லாத்தின் அடிப்படை ஏகத்துவக் கொள்கைக்கு எதிரான, இஸ்லாத்திற்குக் கடுகளவும் சம்பந்தமில்லாத கொள்கைகளை முஸ்லிம்களிடம் பரப்பினர்.

தூய இஸ்லாத்திற்குத் துரோகம் இழைத்த இந்தக் கூட்டம் தங்களுக்குச் சூட்டிக் கொண்ட பெயர் தான் ஷியா ஆகும்.

அலீ (ரலி) அவர்களுக்கு ஆதரவானவர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டனர். (ஆனால் அலீ (ரலி) அவர்கள் இதில் சம்பந்தப்படவில்லை) ஷியா என்றால் சமுதாயத்தினர், சாரார் என்று பொருள். இவர்கள் தான் முஸ்லிம்களை ஒருவரை மற்றொருவருக்கு எதிராக மூட்டி விட்டனர்; ஒருவரை மற்றவருடன் மோத விட்டனர்.

இந்த வகையில் யூதம் வெற்றி கண்டு விட்டது. பாரசீகம் முஸ்லிம்களைத் தோற்கடித்து விட்டது. யூதர்கள் தயாரித்து அனுப்பிய அப்துல்லாஹ் பின் ஸபா அரிய பலனைக் கொடுத்தான்.

யூதர்களிடத்தில் உயர் மரியாதையையும் உரிய இடத்தையும் பெற்றிருந்த அவன், ஷியாக்களிடமும் உயர் மரியாதையையும் உரிய இடத்தையும் பெற்று விடுகின்றான். இந்த அடிப்படையில் தான் ஷியாவின் வேர்கள் யூத மதத்தில் ஆழப் பதிந்தவை என்று கூறுகின்றோம்.

அப்துல்லாஹ் பின் ஸபாவைப் பற்றி அறிஞர்கள்

"குர்ஆன் ஒன்பது பாகங்களில் ஒரு பாகமாகும். அதன் ஞானம் அலீயிடம் உள்ளது என்று இவன் நம்பிக்கை கொண்டிருந்தான். இதை அலீ (ரலி) உறுதியாக மறுத்து விட்டார்கள்'' என்று இமாம் ஜவ்ஸஜானி கூறுகின்றார்.

"இவனது ஊர் யமன் ஆகும். இவன் யூதனாக இருந்து பின்னர் தன்னை முஸ்லிம் என்று பிரகடனம் செய்து கொண்டான். தலைவர்களுக்கு முஸ்லிம்கள் கட்டுப்படாமல் தடுப்பதற்காக அவர்கள் வாழும் ஊர்களைச் சுற்றி வந்து அவர்களிடம் இந்தத்தீமைகளைப் புகுத்தினான். உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தத்தீய நோக்கத்தில் திமிஷ்க் என்ற ஊருக்குள் நுழைந்தான்'' என்று இப்னு அஸாகிர் தமது தாரீக் எனும் நூலில் குறிப்பிடுகின்றார்கள்.

"அப்துல்லாஹ் பின் ஸபாவின் விவகாரங்கள் வரலாற்று நூல்களில் பிரபலமானவையே! அவன் எந்த ஹதீஸையும் இதுவரை அறிவிக்கவில்லை. இதற்குரிய புகழ் அல்லாஹ்வுக்கே! ஸபாயிய்யா என்று அழைக்கப்படும் இவனது ஆதரவாளர்கள் அலீ (ரலி) அவர்களைக் கடவுளாகக் கருதினார்கள். இவர்களை அலீ (ரலி) அவர்கள் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் நெருப்பினால் கொளுத்தினார்கள்'' இவ்வாறு ஹாபிழ் இப்னு ஹஜர் தன்னுடைய லிஸானுல் மீஸானில் தெரிவிக்கின்றார்கள்.

இந்த மேற்கோள்கள் அனைத்தும் சுன்னத் வல் ஜமாஅத்தின் இமாம்கள், ஹதீஸ் கலை அறிஞர்களின் கருத்துக்களாகும். இது லிஸானுல் மீஸான் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.

"அப்துல்லாஹ் பின் ஸபா யூதத்திலும், இஸ்லாத்திலும் விலாயத் என்ற கொள்கையை கொண்டிருந்தான்; அலீயை கடவுளாகக் கொண்டிருந்தான்'' என்ற கருத்தை இந்த அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.

அப்துல்லாஹ் பின் ஸபா இந்தக் கொள்கையை உடையவன் தான் என்பதை ஷியா இமாம்களும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் அவனது கொள்கையைச் சரி காண்கின்றனர்.

இவனைப் பற்றி ஷியா இமாம் கஷிய்யி என்பவர் கூறுவதைப் பாருங்கள்.

"அப்துல்லாஹ் பின் ஸபா யூதனாக இருந்து இஸ்லாத்தைத் தழுவினான். அலீயை வலியாக எடுத்துக் கொண்டான். அவன் யூதத்தில் இருக்கும் போது, மூஸா (அலை) அவர்களுக்குப் பின்னர் தோன்றிய யூஷஃபின் நூனுக்கு இதே விலாயத்தைக் கற்பித்தான். முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்த பிறகு இதே விலாயத்தைக் கற்பித்தான்'' என்று அறிஞர்களில் ஒருவர் கூறுகின்றார்.

இவ்வாறு ஷியா இமாம் கஷிய்யி தனது "பிரசித்தி பெற்ற வாழ்க்கைக் குறிப்புகள்'' என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.

ஷியா இமாம்களில் ஒருவரான நவ்பக்ஸியும் இதே கருத்தைக் குறிப்பிடுகின்றார்.

(ஷியா வசுன்னத், பக்கம்: 17)

இந்தக் கொள்கையைத் தான் ஷியாக்கள் கொண்டிருக்கின்றார்கள். இதிலிருந்து ஷியாயிஸத்தின் ஆணி வேர் யூத மதம் தான் என்பது நன்கு தெளிவாகின்றது.

அந்த யூத மதம், ஏகத்துவக் கொள்கையை, அந்தக் கொள்கையை உறுதியாகக் கடைப்பிடிக்கும் நபித்தோழர்களை ஒரு போதும் சகித்துக் கொள்ளாது.

ஏகத்துவத்திற்கு எதிரான கருத்துக்களை, ஏகத்துவத்தைப் பின்பற்றிய நபித்தோழர்களுக்கு எதிரான கருத்துக்களை யூதத்தின் கள்ளப் பிள்ளையான ஷியாயிஸம் தனது தாய் மதத்திலிருந்து தன்னகத்தே வடித்து வைத்திருக்கிறது.

அதன் அடிப்படையில் ஷியாயிஸம் எங்கெங்கு புகுந்து இஸ்லாத்தின் அடிப்படையானஏகத்துவக் கொள்கையைத் தகர்க்கின்றது என்பதை அடுத்த தொடர்களில் பார்ப்போம்.