செவ்வாய், 1 டிசம்பர், 2015

இறந்தவர் உயிர் திரும்புவாரா?


ஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -17)

இறந்தவர் உயிர் திரும்புவாரா?

அபூஉஸாமா

தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர்க்கும் இடையேயுள்ள விவகாரம் வாய்க்கால் வரப்பு தகராறல்ல! சொத்து பத்துத் தகராறல்ல! கொடுக்கல் வாங்கல் அல்ல! சுருக்கமாகச் சொன்னால் சொந்த விவகாரங்கள் அல்ல! பின்னர் என்ன?

இறந்தவர்கள் திரும்ப வருவர்; மாண்டவர் மறு உயிர் பெற்று மீண்டு வருவர் என்று அவர்கள் நம்புகின்றனர். நாம் அதை மறுக்கிறோம். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இவ்வாறு நம்புவது இணை வைப்பு, இறை மறுப்பு என்று அடித்துச் சொல்கிறோம்.

இந்தக் கழிவுகெட்டக் கசடுக் கொள்கையின் வேர்ப்பிடிப்பு எங்கே உள்ளது என்று கண்டுபிடிக்க நாம் கஷ்டப்படத் தேவையில்லை. ஷியாயிஸம் என்ற விஷத்தில் தான்.

இந்த விஷத்தின் வேர்ப்பிடிப்பு யூதயிஸம். இது சீயோனிஸ சிந்தனையும் சித்தாந்தமும் ஆகும். அதாவது யூத மதத்தின் சித்தாந்தமாகும். இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெற்று வருவார்கள் என்பது யூதர்களின் நம்பிக்கை!

ஷியாக்களின் ரஜ்அத்' கொள்கை

அப்துல்லாஹ் பின் ஸபஃ என்பவன் தான் ரஜ்அத் எனப்படும் கொள்கையைத் தோற்றுவித்தான். முஹம்மது நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) ஆகியோர் இறுதி நாளுக்கு முன் உயிருடன் திரும்ப வருவர் என்ற விஷக் கருத்தைத் தூவினான். அதன் பின்னர் அலீயுடன் 11 இமாம்களையும் சேர்த்து மொத்தம் 12 இமாம்களும் மறு உயிர் பெற்று வருவார்கள் என்று ஷியா ஷைத்தான்கள் அந்தப் பட்டியலை விரித்துக் கொண்டனர்.

யார் அந்தப் பனிரெண்டு இமாம்கள்?

1. அபுல் ஹஸன் அலீ பின் அபீதாலிப்

2. அபூமுஹம்மது பின் அல்ஹஸன் பின் அலீ (அல் ஜகீ)

3. அபூஅப்துல்லாஹ் அல் ஹுஸைன் பின் அலீ (ஸய்யித் அஷ்ஷுஹதாஃ - ஷுஹதாக்களின் தலைவர்)

4. அபூமுஹம்மது அலீ பின் அல்ஹுஸைன் (ஜைனுல் ஆபிதீன்)

5. அபூஜஃபர் முஹம்மது அலீ பின் அலீ (அல்பாகிர்)

6. அபூஅப்துல்லாஹ் ஜஃபர் பின் முஹம்மது (அஸ்ஸாதிக் - இவர் தான் பூரியான் ஃபாத்திஹாவின் கதாநாயகர்)

7. அபூஇப்ராஹீம் மூஸா பின் ஜஃபர் (அல்காழிம்)

8. அபுல் ஹஸன் அலீ பின் மூஸா (அர்ரிளா)

9. அபூஜஃபர் முஹம்மது பின் அலீ (அல்ஜவாத்)

10. அபூஹஸன் அலீ பின் முஹம்மது (அல்ஹாதீ)

11. அபூமுஹம்மது அல்ஹஸன் பின் அலீ (அல் அஸ்கரி)

12. அபுல் காஸிம் முஹம்மது பின் அல்ஹஸன் (அல் மஹ்தி)

இந்த 12 என்ற எண்ணிக்கை, யூதயிஸத்தின் பிரதிபலிப்பு தான் என்பதை மூஸா (அலை) அவர்களின் வரலாற்றைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.

இந்த 12 பேரும் திரும்ப உயிர் பெற்று வருவார்கள் என்று சாதாரணமாகச் சொல்லவில்லை. நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நபி (ஸல்) அவர்கள் மீது பொய்யை இட்டுக்கட்டி இந்தச் சித்தாந்தத்தை நுழைக்கின்றார்கள்.

இந்த 12 பேரும் இறுதி நாள் வருவதற்குள் திரும்ப வருவார்கள்; திரும்ப வந்து இவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட ஆட்சியுரிமையை மீட்பார்கள். பறித்தவர்களைப் பழிவாங்குவார்கள்.

இப்படி இவர்களது விஷம சரித்திரம் நீள்கிறது.

ஷியாக்களின் ஆதாரம்

இதற்கு இவர்கள் காட்டுகின்ற ஆதாரங்கள் என்ன?

இவர்களின் முதல் முக்கிய ஆதாரம் 2:243 வசனமாகும்.

இவர்கள் வைக்கும் இரண்டாவது ஆதாரம் 28:85 வசனம்.

மூன்றாவது ஆதாரம் 40:11 வசனம்.

இந்த விளக்கங்களை ஷியாக்களின் குர்ஆன் விளக்கவுரை நூலான தஃப்ஸீர் அல்கிம்மியில் நாம் பார்க்கின்றோம்.

முதல் ஆதாரம்

மரணத்திற்கு அஞ்சி தமது ஊர்களை விட்டு வெளியேறியோரை நீர் அறியவில்லையா? அவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தனர். "செத்து விடுங்கள்!'' என்று அவர்களுக்கு அல்லாஹ் கூறினான். பின்னர் அவர்களை உயிர்ப்பித்தான். மனிதர்கள் மீது அல்லாஹ் அருளுடையவன். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.

அல்குர்ஆன் 2:243

இது மூஸா (அலை) அவர்களது காலத்தில் அல்லது அவர்களுக்குப் பிந்திய காலத்தில் நடந்த சம்பவம். சுருக்கமாகச் சொன்னால் நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்பு நடந்த சம்பவம். இதே போன்று நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நிகழவுமில்லை. அவ்வாறு நிகழவும் செய்யாது என்று திருக்குர்ஆன் தெளிவாகத் தெரிவித்து விட்டது. முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

அல்குர்ஆன் 23:99, 100

திருக்குர்ஆனின் இந்த வசனங்களின்படி, முஹம்மத் (ஸல்) அவர்களின் சமுதாயத்தில் கியாமத் நாள் வரை எவரும் உயிர் பெற்றுத் திரும்ப வரமாட்டார்கள் என்பது தெளிவாகின்றது.

இதில் ஒரேயொரு விதிவிலக்கு உண்டென்றால் இறுதிக் காலத்தில் பெரும் சோதனையாக வரும் தஜ்ஜால், ஒரு மனிதனை உயிர்ப்பிப்பது மட்டும் தான். இதுவும் ஒரு முறை தான் அவனால் முடியும். இரண்டாவது இந்தக் காரியத்தைச் செய்ய முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள்.

இதன் பின்னரும் 2:243 வசனத்தை ஆதாரமாகக் கொண்டு வந்து நிறுத்துகின்றார்கள் என்றால் இவர்கள் குர்ஆனை ஆதாரமாகக் கொண்டு வந்து நிறுத்தவில்லை. இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட யூதர்களின் சிந்தனையைத் தான் ஆதாரமாக நிறுத்துகின்றார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

இரண்டாவது ஆதாரம்

(முஹம்மதே!) உமக்கு இந்தக் குர்ஆனை விதித்தவன் உம்மை வந்த இடத்திலேயே மீண்டும் சேர்ப்பவன். "நேர் வழியைக் கொண்டு வந்தவன் யார்? தெளிவான வழி கேட்டில் உள்ளவன் யார்? என்பதை என் இறைவன் நன்கறிந்தவன்'' என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 28:85

இந்த வசனம் குறிப்பிடுவது, மக்காவைத் துறந்து மதீனா சென்ற நபி (ஸல்) அவர்கள் மீண்டும் மக்காவை வெற்றி கொள்வார்கள் என்பதைத் தானே தவிர, இறந்து மீண்டும் உயிர் பெற்று வருவதையல்ல.

மூன்றாவது ஆதாரம்

"எங்கள் இறைவா! எங்களை இரண்டு தடவை மரணிக்கச் செய்தாய். இரண்டு தடவை உயிர்ப்பித்தாய். எங்கள் குற்றங்களை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். தப்பிக்க வழி ஏதும் உள்ளதா?'' என்று அவர்கள் கேட்பார்கள்.

அல்குர்ஆன் 40:11

"இரு முறை எங்களை உயிர்ப்பிக்கச் செய்தாய்; இரு முறை மரணிக்கச் செய்தாய் என்று குற்றமிழைத்தோர் மறுமையில் கதறுவார்கள்'' என இவ்வசனம் கூறுகிறது.

இரு முறை உயிர்ப்பித்தல் என்பது நமக்கு விளங்குகிறது. இந்த உலகத்தில் ஒரு முறை பிறக்கிறோம். மரணித்த பிறகு அழிக்கப்பட்ட பிறகு மறுபடியும் இறைவன் எழுப்புகிறான்.

ஆனால் ஒரு முறை தான் நாம் மரணிக்கிறோம் எனும் போது இரண்டு முறை மரணிக்கச் செய்தாய் என்று எப்படிக் கூற முடியும்? இதைத் திருக்குர்ஆன் 2:28 வசனம் தெளிவாக விளக்குகிறது. இவ்வசனத்தில் மனிதன் படைக்கப்படுவதற்கு முன் இருந்த நிலைமையைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது "நீங்கள் மரணித்தவர்களாக இருந்தீர்கள், உங்களை உயிர்ப்பித்தான்; பின்னர் மரணிக்கச் செய்து மீண்டும் உயிர்ப்பிப்பான்'' என்று கூறுகிறான்.

படைக்கப்படாமல் இருந்த அந்த நிலையைத் தான் முதல் மரணம் என்று அல்லாஹ் கூறுகிறான். இதே அடிப்படையில் தான் இரு முறை மரணிக்கச் செய்தாய் என்று குற்றமிழைத்தோர் மறுமையில் கூறுகிறார்கள்.

இதை ஷியாக்கள் தங்களது 12 இமாம்கள் உயிர் பெற்று வருவார்கள் என்ற கொள்கைக்கு ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். ஆனால் இந்த வசனமோ குற்றவாளிகளைப் பற்றிப் பேசுகின்றது. இதிலிருந்தே ஷியாக்களின் புரட்டுத்தனத்தைப் புரிந்து கொள்ளலாம்.

ஆக, இந்த மூன்று ஆதாரங்களுமே ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல! நிராகரிக்கத்தக்கவை!

நாம் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் ஷியாக்களின் இந்தக் கொள்கையைத் தான் சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர் கொண்டிருக்கின்றனர்.

யூத மற்றும் ஷியாயிஸத்தின் கொள்கைகளைத் தான் இவர்கள் பின்பற்றுகிறார்கள் என்பதற்கு ஒரு நடைமுறை எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

குத்பிய்யத் என்ற குருட்டு நம்பிக்கை

குத்பிய்யத் என்பது விளக்கை அணைத்துக் கொண்டு, இருட்டில் உட்கார்ந்து முஹ்யித்தீனை ஆயிரம் தடவை அழைத்து திக்ர் செய்வதற்குப் பெயராகும். யாகுத்பா என்ற பாடலில் இது இடம்பெறுகின்றது.

"எவர் ஒருவர் தனிமையில் அமர்ந்தவராகவும், தனது உறக்கத்தைக் களைந்தவராகவும், உறுதியான நம்பிக்கையுடனும் என் திருநாமத்தை ஆயிரம் தடவைகள் அழைப்பாரோ அவர் (என்னை) அழைத்த காரணத்திற்காக விரைந்தோடி வந்து நான் அவருக்கு மறுமொழி சொல்வேன். எனவே, யா அப்துல் காதிர் முஹ்யித்தீனே என்று அவர் அழைக்கட்டும்''

இந்த குத்பிய்யத் தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்களிலும் இலங்கை போன்ற நாடுகளிலும் நடைபெறுகின்றது. தமிழக முஸ்லிம்கள், கேரள முஸ்லிம்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கும் இது நடைபெறுகின்றது. இந்த குத்பிய்யத்தின் போது முஹ்யித்தீன் ஆஜராகின்றார் என்றே நம்புகிறார்கள். ஆம்! முஹ்யித்தீன் ரஜ்அத்' அடிப்படையில் உயிர் பெற்றுத் திரும்ப வருகின்றார் என்றே உறுதியாக நம்புகின்றனர்.