வியாழன், 5 மார்ச், 2015

இஸ்லாமும் மனிதநேயமும்

இஸ்லாமும் மனிதநேயமும்

ஏழைக்கு உதவுவது இறைவனுக்கு உதவுவதைப் போன்றது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் ஆதமுடைய மகனே நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை என்று கூறுவான். அதற்கு அவன் என் இறைவா நீ அகிலத்தின் இறைவன் உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம்விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம்விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? 

ஆதமுடைய மகனே நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவளிக்கவில்லை என்று கூறுவான். அதற்கு அவன் என் இறைவா நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதை செய்ததாக கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? 

ஆதமுடைய மகனே நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்கு தண்ணீர் கொடுக்கவில்லை என்று கூறுவான். அதற்கு அவன் என் இறைவா நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்கு தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய் என்று கூறுவான். 
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)நூல் : முஸ்லிம் (4661) 

பாதையில் கிடக்கும் இடையூறு அளிக்கும் பொருட்களை அகற்றுவது ஈமானில் ஒரு பகுதி 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஈமான் என்பது எழுபத்து சொச்ச கிளைகளாகும். அவற்றில் உயர்ந்தது வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று கூறுவதாகும். அவற்றில் கடைசி நிலை பாதையில் கிடக்கும் நோவினை தரக்கூடியவற்றை அகற்றுவதாகும். 
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (51) 

(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத (அரை) நிர்வாணிகளாய் வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் முளர் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை. அவர்கள் அனைவரும் முளர் குலத்தைச் சேர்ந்தவர்கள் தாம். 

அவர்களுடைய ஏழ்மையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் நிறமாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு வித தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்று விட்டு வெளியே வந்து பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது மக்களே உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனை பயந்துகொள்ளுங்கள் எனும் (4.1) வது இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும் அல்ஹஷ்ர் என்ற அத்தியாயத்திலுள்ள நம்பிக்கையாளர்களே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்கென்று எதனை அனுப்பியுள்ளதை என்பதை கவனத்திற்கொள்ளட்டும். அல்லாஹ்விற்கு அஞ்சுங்கள் எனும் (59.18)வது வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி) னார்கள். 

அப்போது பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் (தர்மம் செய்யுமாறு அறிவுறுத்தினார்கள்.) உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக்காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு ஸாஉ கோதுமையிலிருந்தும் ஒரு ஸாஉ பேரித்தம்பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் பை (நிறையப் பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது. ஏன் தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர். இறுதியில் உணவுப்பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் பொன்னைப் போன்று மின்னிக்கொண்டிருப்பதையும் கண்டேன். 
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) முஸ்லிம் (1691) 

எதிரிகளிடத்தில் மனிதநேயம் 

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்கள் தொழுகும் பள்ளிவாசலில் நின்று கொண்டு சிறுநீர்கழிக்க ஆரம்பித்தார். இதைப்பார்த்த அவர்களது தோழர்கள் நிறுத்து நிறுத்து என்று கூறி தடுக்க முற்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களைப் பார்த்து அவர் சிறுநீர் கழிக்க இடையூராக இருக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள். அவர் சிறுநீர் கழித்து முடிக்கட்டும் என்று கூறிவிட்டு ஒரு வாளித் தண்ணீரைக் கொண்டு வந்து அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஊற்றும்படி கட்டளையிட்டார்கள். அந்த கிராமவாசி சிறுநீர் கழித்தப் பின்பு நபியவர்கள் அவரை அழைத்து பள்ளிவாசல்களில் அசுத்தம் செய்யக்கூடாது. இங்கு இறைவனை நினைக்கவேண்டும். தொழுக வேண்டும். குர்ஆன ஓத வேண்டும் என்று கூறி உபதேசம் செய்தார்கள். 
அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : முஸ்லிம் (429) 

இன்றைக்கு யாராவது ஒரு கோவிலிலோ அல்லது சர்ச்சிலோ அல்லது பள்ளிவாசலிலோ சென்று அந்த கிராமவாசி செய்தது போல செய்தால் அவர் உயிருடன் வெளியே வருவதில் சந்தேகம் தான். 

பெருமானாரைத் துன்புறுத்தியதில் யூதர்களுக்கும் பங்கு உண்டு. அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று சொல்வதற்கு பதிலாக அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று நேருக்குநேராக சபித்தவர்கள் நபி (ஸல்) அவர்கள் யூதர்களிடத்தில் அன்போடு நடந்து கொண்டார்கள். 

நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்த யூத சிறுவன் ஒருவன் நோயுற்றான். எனவே அவனைப் பற்றி நலம் விசாரிப்பதற்காக அவனிடத்தில் வந்து அவனுடைய தலைக்கு அருகில் அமர்ந்தார்கள். 
அனஸ் (ரலி) நூல் : புகாரி (1356) 

நபி (ஸல்) அவர்களை ஒரு பிரேதம் கடந்துசென்றது. உடனே நபியவர்கள் எழுந்து நின்றார்கள். அப்போது அவர்களிடத்தில் இது ஒரு யூதனின் பிரேதம். (இதற்காகவா நீங்கள் எழுந்து நிற்கிறீர்கள்?) என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் அதுவும் ஒரு உயிர்தானே என்று கூறினார்கள். 
சஹ்ல் பின் ஹுனைஃப் மற்றும் கைஸ் பின் சஃத் (ரலி) புகாரி (1313) 

இஸ்லாம் போரில் சிறுவர்களையும் பெண்களையும் கொல்லக்கூடாது என்று கட்டளையிடுகிறது 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட ஒரு போரில் ஒரு பெண்மனி கொல்லப்பட்டுக்கிடந்தாள். எனவே நபி (ஸல்) அவர்கள் (போரில்) பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதை விட்டும் தடைசெய்தார்கள். 
இப்னு உமர் (ரலி) புகாரி (3015) 

தீங்குசெய்தோருக்கு மனிதநேயம் 

நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். 
அல்குர்ஆன் (41 : 34) 

.ஒரு யூதப் பெண்மனி நபி (ஸல்) அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் விஷம் தோய்க்கப்பட்ட ஆட்டை கொண்டு வந்து கொடுத்தாள். நபி (ஸல்) அவர்களும் அதை உண்டுவிட்டார்கள். இதையறிந்த சஹாபாக்கள் அப்பெண்மனியை நபியவர்களிடம் அழைத்து வந்து இவளை நாங்கள் கொன்றுவிடட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். 
அனஸ் பின் மாலிக் (ரலி) புகாரி (2617) 

தன்னைக் கொல்ல நினைத்தவளை கொலை செய்ய நபி (ஸல்) அவர்களின் உள்ளம் இடம்கொடுக்கவில்லை 

நபி (ஸல்) அவர்கள் ஒரு போரை முடித்துவிட்டு தம் தோழர்களுடன் வந்து கொண்டிருந்தார்கள். இளைப்பாறுவதற்காக ஒவ்வொருவரும் ஒரு மரத்தடியில் தங்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் தனியாக சென்று ஒரு மரத்திற்கு அடியில் இளைப்பாறினார்கள். திடீரென்று ஒருவர் நபி (ஸல்) அவர்களை கொலை செய்வதற்காக தன் கையில் வாளை எடுத்துக்கொண்டு முஹம்மதே இப்போது உன்னை யார் காப்பாற்றுவார் என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் காப்பாற்றுவான் என்று கூறினார்கள். 

பின்பு அவர் கையில் இருந்த வாள் கீழே விழுந்தவுடன் நபியவர்கள் அந்த வாளை எடுத்துக் கொண்டு இப்போது உன்னை யார் காப்பாற்றுவார்? வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறேதுவும் கடவுள் இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறாயா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை இதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஆனால் இனிமேல் உங்களுக்கு எதிராக நான் போரிடமாட்டேன் என்று உறுதிமொழி அளிக்கிறேன் என்றார். நபி (ஸல்) அவர்கள் அவரை தண்டிக்காமல் விட்டுவிட்டார்கள். அவர் தன்னுடைய தோழர்களிடத்தில் சென்று மக்களிலேயே மிகவும் சிறந்த ஒருவரிடமிருந்து நான் வந்திருக்கிறேன் என்று கூறினார். 
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அஹமத் (14401) 

நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான ஹம்ஸா (ரலி) அவர்களை வஹ்ஷீ என்ற கருப்புற நிற அடிமை கொன்றார். பெருமானாருக்கு விருப்பமாக இருந்த ஹம்ஸா (ரலி) அவர்களை கொலையுண்டதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மக்காவை அவர்கள் கைப்பற்றியப் போது வஹ்ஷீயும் பெருமானாருக்கு முன்னால் இருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்து நீ தான் வஹ்ஷீயா? ஹம்ஸாவை கொன்றவர் நீ தானா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று கூறினார். வஹ்ஷீயைப் பார்க்கும் போதெல்லாம் ஹம்ஸா (ரலி) அவர்களின் ஞாபகம் வந்ததால் அவரிடத்தில் நபி (ஸல்) அவர்கள் தயவு செய்து உங்கள் முகத்தை என்னிடத்தில் காட்டாமல் இருக்க முடியுமா? என்று பணிவுடன் வேண்டிக்கொண்டார்கள். இதன் பின்பு வஹ்ஷீ இஸ்லாத்தை தழுவிக்கொண்டார். 
உபைதுல்லாஹ் பின் அதீ (ரஹ்) புகாரி (4072) 

நியாயத் தீர்ப்பும் மனிதநேயமும் 

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகிவிடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். 
அல்குர்ஆன் (5 : 8) 

நபி (ஸல்) அவர்களை வெறுத்தவர்கள் கூட நபியவர்களிடத்தில் வந்து தீர்ப்புக் கேட்டார்கள். 

யூதர் ஒருவர் (சந்தையில்) தம் சரக்கை எடுத்துக் காட்டிய போது மிகக் குறைந்த விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதை அவர் விரும்பவில்லை. உடனே அவர் மனிதர்கள் அனைவரையும் விட (சிறந்தவராக) மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவனின் மீது சத்தியமாக (நான் இந்த விலையை வாங்கிக் கொள்ள) மாட்டேன் என்று கூறினார். இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டுவிட்டார். உடனே எழுந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து நபி (ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்துகொண்டிருக்க மனிதர்கள் அனைவரையும் விட மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவனின் மீது சத்தியமாக என்றா கூறுகிறாய்? என்று கேட்டார். 

உடனே அந்த யூதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அபுல்காசிம் அவர்களே (என் உயிர் உடைமை மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்துள்ளீர்கள். என் முகத்தில் அறைந்தவரின் நிலை என்ன? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை நோக்கி நீ ஏன் இவருடைய முகத்தில் அறைந்தாய்? என்று கேட்டார்கள். அவர் விஷயத்தை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்களின் முகத்தில் கோபக்குறி தென்படுகின்ற அளவிற்கு அவர்கள் கோபமடைந்தார்கள். பிறகு அல்லாஹ்வின் நேசர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு பாராட்டாதீர்கள் என்று கூறினார்கள். 
அபூஹுரைரா (ரலி) புகாரி (3414) 

அடிமைகளிடத்தில் மனிதநேயம் 

நான் ஒருவரை (அவருடையத் தாயைக் குறிப்பிட்டு) ஏசிவிட்டேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். நபி (ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) இவரது தாயாரைக் குறிப்பிட்டு நீர் குறை கூறினீரா? என்று கேட்டார்கள். பிறகு உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவார்கள். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான். ஆகவே எவருடைய ஆதிக்கத்தின் கீழ் அவருடைய சகோதரர் இருக்கின்றாரோ அவர் தன் சகோதரருக்கு தான் உண்பதிலிருந்து உண்ணத்தரட்டும். தான் உடுத்துவதிலிருந்தே உடுத்தத்தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படியே அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது நீங்கள் சுமத்தினால் (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள் என்று கூறினார்கள். 
அபூதர் (ரலி) புகாரி (2545) 

நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டுவந்தால் அவர் அப்பணியாளனைத் தம்முடன் (உட்கார வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) உட்கார வைக்கவில்லையென்றாலும் அவருக்கு ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள் அல்லது ஒரு வாய் அல்லது இரு வாய்கள் கொடுக்கட்டும். ஏனெனில் அதைத் தயாரிக்க அந்தப் பணியாள் பாடுபட்டிருப்பார். 
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)நூல் : புகாரி (2557) 

ஆன்மீகத்தில் மனிதநேயம் 

நபி (ஸல்) அவர்கள் உரைநிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்கள். எனவே அவரைப் பற்றி (மக்களிடத்தில்) விசாரித்தார்கள். மக்கள் அவர் அபூஇஸ்ராயீல் 

ஆவார். உட்காராமல் வெயிலில் நிற்பதாகவும் பேசாமல் இருப்பதாகவும் நோன்புவைப்பதாகவும் அவர் நேர்ச்சை செய்துள்ளார் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரை பேசச் சொல்லுங்கள். அவர் நிழலில் வந்து அமரட்டும். நோன்பை பூர்த்தி செய்யட்டும் என்று கூறினார்கள். 
இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி (6704) 

நான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி (ஸல்) அவர்களுடன் வந்தேன். அவர்களுடன் இருபது நாட்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்கக்குணமுடையவராகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் செல்ல வேண்டும் என்ற எங்கள் ஆர்வத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் நீங்கள் சென்று அவர்களுடன் தங்கி அவர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக்கொடுங்கள். தொழுங்கள். தொழுகையின் நேரம் வந்துவிடுமானால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் பெரியவர் இமாமாக இருக்கட்டும் என்று கூறினார்கள். 
மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) புகாரி (628) 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையை துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கின்றேன். (எனக்குப் பின்னால் தொழுதுகொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதினால் தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுகிறேன். 
அபூகதாதா (ரலி) புகாரி (707) 

மக்களிடத்தில் மனிதநேயம் 

. கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர் களையும் கொலை செய்தவர் போலாவார். ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார். 
அல்குர்ஆன் (5 : 32) 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான். 
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) புகாரி (7376) 

இஸ்லாம் மனிதர்களிடம் நேயத்துடன் நடப்பதைப் போல மிருகத்திடமும் நேயத்துடன் நடக்கச் சொல்கிறது. 

ஒரு மனிதர் (ஒரு பாதையில்) நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே அவர் (அங்கிருந்த) கிணற்றில் இறங்கி அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தபோது நாய் ஒன்று தாகத்தால் தவித்து நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) எனக்கு ஏற்பட்டதைப் போன்று (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும் என்று எண்ணிக்கொண்டார். உடனே (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக்கொண்டு அதை வாயால் கவ்விக்கொண்டு மேலே ஏறிவந்து அந்த நாய்க்குப் புகட்டினார். 

அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை மன்னித்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை செவியுற்ற நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே கால்நடைகளுக்கு (உதவுவதினாலும்) எங்களுக்குப் பலன் கிடைக்குமா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (ஆம்) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும் என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (2363)