திங்கள், 9 மார்ச், 2015

நம்பிக்கைக் கொண்டவர்களே!

நம்பிக்கைக் கொண்டவர்களே!

திருக்குர்ஆனில் (யா அய்யுஹல்லதீன் ஆமனூ) ஈமான் கொண்டவர்களே என்று அழைத்து பல முக்கியமான விஷயங்களை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். திருக்குர்ஆனில் மொத்தம் 89 இடங்களில் இவ்வாறு கூறுகின்றான். அவற்றில் சில அறிவுரைகள் அந்த காலத்தை கருத்தில் கொண்டு சொல்லப்பட்டவை, சில சட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டவையாக உள்ளது. இவற்றை தவிர்த்து மற்ற அறிவுரைகள் இங்கு தொகுத்து வழங்கப்படுகிறது. 

பொறுமை இருங்கள் 

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 2:155) 

தூய்மையானவற்றை உண்ணுங்கள் 

நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான வற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ் வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்! (அல்குர்ஆன் 2:172) 

பழிக்கு பழி கடமையாகும் 

நம்பிக்கை கொண்டோரே! சுதந்திர மானவனுக்காக (கொலை செய்த) சுதந்திர மானவன், அடிமைக்காக (கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப் பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (நஷ்ட ஈடு) அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது. (அல்குர்ஆன் 2:178) 

நோன்பு வையுங்கள் 

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது. உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரம். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் 'நோன்பு' நோற்பதே சிறந்தது. (அல்குர்ஆன் 2:183,184) 

இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள் 

நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி. (அல்குர்ஆன் 2:208) 

தர்மம் செய்யுங்கள் 

நம்பிக்கை கொண்டோரே! பேரமோ, நட்போ, பரிந்துரையோ இல்லாத நாள் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்! (நம்மை) மறுப்போரே அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன் 2:254) 

செய்த தர்மத்தை செல்லிக் காட்டாதீர் 

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 2:264) 

நல்லதை செலவு செய்யுங்கள் 

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப் படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செல விடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர் களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2:267) 

வட்டி வாங்காதீர் 

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! (அல்குர்ஆன் 2:278) 

நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 3:130) 

கடனை எழுதிக் கொள்ளுங்கள் 

நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட காலக்கெடு விதித்து ஒருவருக்கொருவர் கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள்! எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில் எழுதட்டும். அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தது போல் எழுதிட எழுத்தர் மறுக்காது எழுதட்டும். கடன் வாங்கியவர், எழுதுவதற்குரிய வாசகங்களைச் சொல்லட்டும்! தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அதில் எதையும் குறைத்து விடக் கூடாது. கடன் வாங்கியவர் விபரமறியாதவராகவோ, பலவீனராகவோ, எழுதுவதற்கு ஏற்பச் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நேர்மையாகச் சொல்லட்டும். உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லா விட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!) அவ்விரு பெண்களில் ஒருத்தி மறந்து விட்டால் மற்றொருத்தி நினைவு படுத்துவாள். அழைக்கப்படும் போது சாட்சிகள் மறுக்கக் கூடாது. சிறிதோ, பெரிதோ தவணையைக் குறிப்பிட்டு எழுதிக் கொள்வதை அலட்சியம் செய்யாதீர்கள்! இதுவே அல்லாஹ்விடம் நேர்மையானது; சாட்சியத்தை நிரூபிக்கத் தக்கது; ஒருவருக் கொருவர் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கு ஏற்றது. உங்களுக்கிடையே உடனுக்குடன் நடைபெறும் வியாபாரமாக இருந்தால் தவிர, (கடனில்லாத) வியாபாரத்தை எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்களுக்குக் குற்றமாகாது. ஒப்பந்தம் செய்யும் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! எழுத்தருக்கோ, சாட்சிக்கோ எந்த இடையூறும் அளிக்கப்படக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் மீது குற்றம். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தருவான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன். (அல்குர்ஆன் 2:282) 

வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கு கட்டுப்படாதீர் 

நம்பிக்கை கொண்டோரே! வேதம் கொடுக்கப்பட்டோரில் ஒரு பிரிவினருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நம்பிக்கை கொண்ட உங்களை (ஏக இறைவனை) மறுப்போராக மாற்றி விடுவார்கள். (அல்குர்ஆன் 3:100) 

(திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் முஸ்லிம்களைச் சுற்றி வாழ்ந்த பல தெய்வ நம்பிக்கையாளர்களும், யூதர்களும் முஸ்லிம்களுக்கு எதிராகப் படை திரட்டிக் கொண்டிருந்தார்கள். 

எப்படியாவது முஸ்லிம்களை அழித்து இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்கள். போர் நடக்காத வருடமே இருக்கவில்லை. சில வருடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட போர்களையும் முஸ்லிம்கள் சந்தித்தனர். 

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் சில முஸ்லிம்களின் உறவினர்களும், நண்பர்களும் எதிரிகளின் பகுதிகளில் இருந்தனர். அவர்களுடன் முஸ்லிம்கள் உறவாடி வந்தனர். முஸ்லிம்கள் மூலம் தகவல்கள் அவர்களுக்குக் கிடைத்து விடக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.) 

முஸ்லிம்களாகவே மரணியுங்கள் 

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்! (அல்குர்ஆன் 3:102) 

தீயவர்களை உற்ற நண்பர்களாக்காதீர் 

நம்பிக்கை கொண்டோரே! உங்களை விடுத்து மற்றவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! அவர்கள் உங்களுக்குத் தீங்கு இழைப்பதில் எந்தக் குறையும் வைக்க மாட்டார்கள். நீங்கள் சிரமப்படுவதை விரும்புவார்கள். அவர்களின் வாய்களிலிருந்தே பகைமை வெளியாகி விட்டது. அவர்களின் உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பது அதை விட அதிகம். நீங்கள் விளங்குவோராக இருந்தால் (நமது) வசனங்களை தெளிவு படுத்தி விட்டோம். (அல்குர்ஆன் 3:118) 

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை உற்ற நண்பர் களாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்கு எதிராக தெளிவான சான்றை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறீர்களா? (அல்குர்ஆன் 4:144) 

கொள்கை விஷயத்தில் இறைநிராகரிப்பவர்களுக்கு கட்டுபடாதீர் 

நம்பிக்கை கொண்டோரே! (ஏக இறைவனை) மறுப்போருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் உங்களை வந்த வழியே திருப்பி விடுவார்கள். இதனால் நஷ்டமடைவீர்கள்! (அல்குர்ஆன் 3:149) 

இறைவழியில் ஏற்பட்ட நஷ்டங்கள் பற்றி கவலை கொள்ளாதீர் 

நம்பிக்கை கொண்டோரே! பயணம் மேற்கொண்ட, அல்லது போருக்குச் சென்ற தம் சகோதரர்களைக் குறித்து ''அவர்கள் நம்முடன் இருந்திருந்தால் இறந்திருக்க மாட்டார்கள். கொல்லப் பட்டிருக்கவும் மாட்டார்கள்'' என்று கூறிய (ஏக இறைவனை) மறுத்தோரைப் போல் நீங்கள் ஆகி விடாதீர்கள்! அவர்களின் உள்ளங் களில் கவலையை ஏற்படுத்தவே அல்லாஹ் இதைச் செய்தான். அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன். (அல்குர்ஆன் 3:156) 

உறுதியாக இருங்கள் 

நம்பிக்கை கொண்டோரே! சகித்துக் கொள்ளுங்கள்! சகிப்புத் தன்மையில் (மற்றவர்களை) மிகைத்து விடுங்கள்! உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 3:200) 

பெண்களை நிர்பந்தம் செய்து திருமணம் செய்யாதீர் 

நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான். (அல்குர்ஆன் 4:19) 

தவறான முறையில் உண்ணாதீர்கள் 

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கிடையே உங்கள் பொருட் களைத் தவறான முறையில் உண்ணாதீர் கள்! திருப்தியுடன் நடக்கும் வியாபாரத் தைத் தவிர. உங்களையே கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:29) 

அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படுங்கள் 

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண் பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத் தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும். (அல்குர்ஆன் 4:59) 

எச்சரிக்கையுடன் இருங்கள் 

நம்பிக்கை கொண்டோரே! எச்சரிக்கையுடன் இருங்கள்! தனித்தனிக் குழுக்களாகப் புறப்படுங்கள்! அல்லது அனைவரும் சேர்ந்து புறப்படுங்கள்! (அல்குர்ஆன் 4:71) 

உலக இன்பத்திற்காக நம்பாமல் இருக்காதீர் 

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் (போருக்குச்) சென்றால் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! உங்களுக்கு ஸலாம் கூறியவரிடம் இவ்வுலக வாழ்க்கையின் பொருட்களைப் பறிப்பதற்காக ''நீ நம்பிக்கை கொண்டவன் இல்லை'' என்று கூறி விடாதீர்கள்! அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. இதற்கு முன் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்தான். எனவே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:94) 

நேர்மையாக செயல்படுங்கள் 

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலை நாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்! (வாதியோ பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்குமே அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:135) 

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.(அல்குர்ஆன் 5:8) 

சரியாக ஈமான் கொள்ளுங்கள் 

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், அவனது தூதரையும், தனது தூதர் மீது அவன் அருளிய வேதத்தையும், இதற்கு முன் அவன் அருளிய வேதத்தையும் நம்புங்கள்! அல்லாஹ்வையும், வானவர்களையும், வேதங்களையும், அவனது தூதர்களையும், இறுதி நாளையும் ஏற்க மறுப்பவர் தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார். (அல்குர்ஆன் 4:136) 

ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள் 

நம்பிக்கை கொண்டோரே! ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள்! (அல்குர்ஆன் 5:1) 

வரம்பு மீற வேண்டாம் 

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வின் (புனிதச்) சின்னங்கள், புனித மாதம், பலிப்பிராணி, (பலிப் பிரா ணியின் கழுத்தில் அடையாளத்திற்காகப் போடப்பட்ட) மாலைகள், மற்றும் தமது இறைவனின் அருளையும், திருப்தியையும் தேடி இப்புனித ஆலயத்தை நாடிச் செல் வோர் ஆகியவற்றின் புனிதங்களுக்குப் பங்கம் விûளைவித்து விடாதீர்கள்! இஹ்ராமி லிருந்து விடுபட்டதும் வேட்டையாடுங்கள்! மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் உங்களைத் தடுத்த சமுதாயத்தார் மீதுள்ள பகைமை, 

வரம்பு மீறுவதற்கு உங்களைத் தூண்ட வேண்டாம். நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங் கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் 5:2) 

தொழுகைக்கு உளூச் செய்து கொள்ளுங்கள் 

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கை களையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப் படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான். (அல்குர்ஆன் 4:6) 

அல்லாஹ்வின் அருளை எண்ணிப்பாருங்கள் 

நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயத்தினர் உங்களுக்கு எதிராகத் தம் கைகளை நீட்ட திட்டமிட்ட போது, அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவர்களின் கைகளை உங்களை விட்டும் அவன் தடுத்தான். அல்லாஹ்வை அஞ்சிக் கெள்ளுங்கள்! நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 5:11) 

வஸீலா தேடுங்கள் 

35. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள் ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 5:35) 

(வஸீலா என்பதன் பொருள் சாதனம். கடல் பயணம் செய்ய கப்பல் 'வஸீலாவாக' சாதனமாக உள்ளது என்பர். 

''நாம் நல்வழியில் நடக்கத் தேவையில்லை; எந்த நல்லறமும் செய்யத் தேவையில்லை; எந்தத் தீமையிலிருந்தும் விலகத் தேவையில்லை; ஏதாவது ஒரு மகானைப் பிடித்துக் கொண்டால் போதும்; கடவுளை நெருங்கிடலாம்'' என்ற நம்பிக்கை உலகில் உள்ள பல மதங்களிலும் இருக்கிறது. 

இஸ்லாம் இந்த நம்பிக்கையை நிராகரிக்கின்றது. இறைவனை நெருங்க நினைப்பவர்கள் நல்லறங்கள் எனும் 'வஸீலாவை' சாதனத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று இங்கே கட்டளையிடப்படுகின்றது. 

இறைவனை நெருங்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் நல்லறங்கள் செய்து அதன் மூலமே நெருங்க வேண்டும். அவ்வாறின்றி மகான்களை இடைத் தரகர்களாகப் பயன்படுத்தி வெற்றி பெற முடியாது என்பதே 'வஸீலா தேடுங்கள்!' என்பதன் கருத்தாகும்.) 

மார்க்கத்தை விட்டு சென்றுவிடாதீர் 

நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏக இறை வனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப் போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப் பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 5:54) 

மார்க்கத்தை கேலியாகவும் விûயாட்டாகவும் ஆக்கி கொள்பவர்களை உற்ற நண்பர்களாக்காதீர் 

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிலும் (ஏக இறைவனை) மறுப்போரிலும் உங்கள் மார்க்கத்தைக் கேலியாகவும், விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டோரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (அல்குர்ஆன் 5:57) 

அல்லாஹ் அனுமதித்தை தடைசெய்யாதீர் 

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த தூயவற்றை விலக்கப்பட்டவைகளாக்கி விடாதீர்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 5:87) 

மது, சூதாட்டம் வேண்டாம் 

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! (அல்குர்ஆன் 5:90) 

தனிமையிலும் அல்லாஹ்வை அஞ்சுங்கள் 

நம்பிக்கை கொண்டோரே! 'தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?' என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும் உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களை அல்லாஹ் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. 

நம்பிக்கை கொண்டோரே! இஹ்ரா முடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும். தனது வினையின் விளைவை அவன் அனுபவிப்பதற்காக (இது அவசியம்). இதற்கு முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்தான். மீண்டும் செய்பவரை அல்லாஹ் தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன். (அல்குர்ஆன் 5:94,95) 

வீண் கேள்விகளைக் கேட்காதீர் 

நம்பிக்கை கொண்டோரே! சில விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்பாதீர்கள்! அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்குத் தீங்கு தரும். குர்ஆன் அருளப்படும் நேரத்தில் அவை பற்றி நீங்கள் கேள்வி கேட்டால் அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு விடும். அவற்றை அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மையுள்ளவன். (அல்குர்ஆன் 5:101) 

(என் தந்தை யார் என்று கூட சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டனர். (நூல் புகாரி 4621, 4622) 

இது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டால், இவர் யாரைத் தந்தை என நினைக்கிறாரோ அவர் அல்லாதவர் தந்தையாக இருந்து விட்டால் தேவையற்ற மனச் சங்கடத்தை அவர் சந்திப்பார். 

எனவே தான் இறைத் தூதரிடம் சில விஷயங்கள் குறித்து கேள்வி கேட்கக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது.) 

தற்காத்துக் கொள்ளுங்கள் 

நம்பிக்கை கொண்டோரே! உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் நேர் வழி நடக்கும் போது வழி கெட்டவனால் உங்களுக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. நீங்கள் அனைவரும் மீள்வது அல்லாஹ்விடமே. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு (அப்போது) அறிவிப்பான். (அல்குர்ஆன் 5:105)