ஞாயிறு, 8 மார்ச், 2015

முகமன் கூறுதல்

முகமன் கூறுதல்

வீட்டிற்குள் நுழையும் போது சலாம் கூறுதல் 

ஒருவருடைய வீட்டிற்கு நாம் செல்லும் போது அவர் எந்த நிலையில் இருப்பார் என்பதை நாம் அறிந்திருக்கமாட்டோம். பெண்கள் பெரும்பாலும் வெளியே தங்களுடைய உடல்களை மறைக்கும் அளவுக்கு வீட்டில் மறைக்கமாட்டார்கள். தன்னுடைய வீடு என்பதால் ஆடை விஷயத்தில் கவனக்குறைவாக இருப்பார்கள். வருபவர் சலாம் கூறி அனுமதி பெற்று நுழைந்தால் யாரோ ஒருவர் வருகிறார் என்று அவர்கள் புரிந்து கொண்டு எச்சரிக்கையாக நடந்துகொள்வார்கள். 

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். 
(அல்குர்ஆன் 24:27) 

அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! ''திரும்பி விடுங்கள்!'' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன். 
அல்குர்ஆன் (24 : 28) 

நபி (ஸல்) அவர்கள் ஒருவருடைய இல்லத்திற்குச் செல்லும் போது மூன்று முறை சலாம் கூறி அனுமதி கோருவார்கள். பதில் வந்தால் வீட்டின் உள்ளே செல்வார்கள். இல்லெயென்றால் திரும்பச் சென்றுவிடுவார்கள். 

நபி (ஸல்) அவர்கள் சஃத் பின் உபாதா அவர்களிடம் (வீட்டின் உள்ளே வர) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்று சலாம் கூறி அனுமதி கோரினார்கள். சஃத் நபி (ஸல்) அவர்களுக்குக் கேட்காதவாறு (வேண்டுமென்றே) வஅலைக்கும் சலாம் வரஹ்மதுல்லாஹ் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை சலாம் சொல்ல சஃதும் மூன்று முறை பெமானாருக்குக் கேட்காதவாறு பதில்சலாம் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் திரும்பிவிட்டார்கள். சஃத் அவர்களை பின்தொடர்ந்து சென்று அல்லாஹ்வின் தூதரே என்தாயும் தந்தையும் தங்களுக்கு அற்பணமாகட்டும். நீங்கள் கூறிய சலாம் அனைத்தும் என்காதில் விழாமல் இருக்கவில்லை. உங்களுக்குக் கேட்காதவாறு உங்களுக்கு நான் பதில் கூறினேன். உங்களது சலாத்தையும் பரகத்தையும் நான் அதிகம் பெற விரும்பினேன் என்று கூறினார். 
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : அஹ்மத் (11957,14928) 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் (எங்களிடம்) வந்து உறங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பாதவாறு விழித்திருப்பவருக்கு கேட்கக்கூடிய வகையில் சலாம் சொல்வார்கள். 
மிக்தாத் பின் அஸ்வத் (ரலி) முஸ்லிம் (4177), அஹ்மத் (22692) 

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் வந்து நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த மாடியறைக்குச் ஏறிச்சென்றார்கள். (நபி (ஸல்) அவர்களுக்கு) சலாம் கூறினார்கள். ஆனால் யாரும் உமருக்கு பதில் சலாம் சொல்லவில்லை. மீண்டும் சலாம் சொன்னார்கள். அப்போதும் அவர்களுக்கு யாரும் பதில் சலாம் சொல்லவில்லை. பிறகு (மூன்றாம் முறையாக) சலாம் சொன்னார்கள். அப்போதும் யாரும் பதில் சலாம் சொல்லவில்லை. உமர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்தபோது வந்தார்கள். 
இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி (5203) 

கணவன் மனைவிக்குள் சலாம் 

நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் பெருமானாரை விட அதிக வயது குறைந்தவர்கள். ஆனாலும் நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வரும்போது சலாம் கூறி நுழையும் பழக்கம் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். குறிப்பாக ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி கயவர்கள் அவதூறுகளைப் பரப்பியதால் நபி (ஸல்) அவர்கள் அவர்களின் மீது சந்தேகம் கொண்ட நேரத்திலும் சலாம் சொல்வதை கைவிடவில்லை. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து சலாம் கூறிவிட்டு நீங்கள் எப்படி இருக்கிறாய்? என்று கேட்டார்கள். 
ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2661) 

நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஆயிஷா (ரலி) அவர்களின் அறைக்குச் சென்று வீட்டாலே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் (உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்.) என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ் (தங்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்.) தங்களின் (புதிய) துணைவியாரை எப்படிக் கண்டீர்கள்? பாரகல்லாஹ் (அல்லாஹ் தங்களுக்கு சுபிட்சம் வழங்கட்டும்) என்று (மணவாழ்த்துச்) சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தங்களின் துணைவியர் அனைவரின் இல்லங்களையும் தேடிச் சென்று ஆயிஷா (ரலி) அவர்களுக்கு சொன்னது போன்றே (முகமன்) சொல்ல அவர்களும் ஆயிஷா (ரலி)அவர்கள் சொன்னது போன்று (பிரதிமுகமனும் மணவாழ்த்தும்) கூறினார்கள். 
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (4793) 

ஆள்இல்லா வீட்டில் நுழையும் போது 

வீடுகளில் நுழையும் போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். 
அல்குர்ஆன் (24 : 61) 

பலமுறை சலாம் கூறுதல் 

ஒருவரை நாம் சந்திக்கும் போது சலாம் கூறிவிட்டோம். பிறகு மீண்டும் அவர் நம் கண்ணில் தென்படும் போது மறுபடியும் சலாம் கூறிக்கொள்வதில் தவறேதும் இல்லை. நபி (ஸல்) அவர்களுக்கு சஹாபாக்கள் பலமுறை சலாம் கூறியுள்ளார்கள். 

ஒரு மனிதர் பள்ளிவாசலில் நுழைந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் ஓர் ஓரத்தில் அமர்ந்திருந்தார்கள். (பள்ளிக்குள் நுழைந்த அவர்) தொழுதார். பிறகு அவர் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து) அவர்களுக்கு சலாம் கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வஅலைக்கஸ் ஸலாம் திரும்பச் சென்று தொழு. ஏனெனில் நீ முறையாகத் தொழவில்லை என்றார்கள். ஆகவே அவர் திரும்பிச் சென்று தொழுதார். பிறகு வந்து நபி (ஸல்) 

அவர்களுக்கு சலாம் சொன்னார். அப்போதும் அவர்கள் வஅலைக்கஸ் ஸலாம் திரும்பச் சென்று தொழு. ஏனெனில் நீ முறையாகத் தொழவில்லை என்றார்கள். இரண்டாம் தடைவையிலோ அல்லது அதற்குப் பின்போ அவர் அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் (தொழுகை முறையைக்) கற்றுத்தாருங்கள் என்றார். 
அபூஹூரைரா (ரலி) நூல் : புகாரி (6251) 

நாம் சொல்லும் சலாம் யாருக்கு சலாம் சொல்கிறோமோ அவருடைய காதில் விழவில்லையென்றால் மூன்று முறை திரும்பத்திரும்ப சலாம் கூறலாம்.. 

நபி (ஸல்) அவர்கள் ஏதாவது ஒரு வார்த்தைப் பேசினால் அது அவர்களிடமிருந்து புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதைத் திரும்பச் சொல்வார்கள். ஏதாவது ஒரு சமூகத்தாரிடம் சென்றால் மும்முறை சலாம் கூறுவார்கள். 
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (95) 

மூன்று முறை ஸலாம் சொன்ன செய்தியில் ஒரு சமூகத்தாரிடம் சென்றால் என்ற வாசகமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகமான நபர்கள் நிரம்பிய ஒரு சபைக்கு சென்றால் அச்சபையில் உள்ள அனைவரும் தன்னுடைய சலாத்தை செவியேற்று பதில் சலாம் கூறவேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்திருப்பார்கள் என்று விளங்கலாம். 

மாற்றுமதத்தவர்களுக்கு சலாம் கூறுதல் 

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாமியப் பண்புகளில் மிகவும் சிறந்தது எது? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் பசித்தவருக்கு உணவளிப்பதும் உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதாகும் என்று பதிலளித்தார்கள். 

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல் : புகாரி (6236) 

மேலும் நபி (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களும் யஹூதிகளும் முஸ்லிம்களும் கூடியிருந்த ஒரு சபைக்கு வந்தபோது அனைவருக்கும் சேர்த்து சலாம் கூறியுள்ளார்கள். புகாரியில் இடம்பெற்றுள்ள நீண்ட ஹதீஸில் இக்கருத்து இடம் பெற்றுள்ளது. 
அறிவிப்பவர் உஸாமா பின் ஸைத் (ரலி) நூல் புகாரி (5663) 

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். 
அல்குர்ஆன் (60 : 8) 

அதே நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் யஹூதிகளுக்கும் கிரிஸ்தவர்களுக்கும் முதலில் சலாம் கூறுவதை தடை செய்தார்கள். ஏனென்றால் அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் கூறும்போது அஸ்ஸலாமு அலைக்க (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூறுவதற்கு பதிலாக அஸ்ஸாமு அலைக்க (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய போலித்தனத்தை அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் கூறுகிறான். 

(முஹம்மதே!) அவர்கள் உம்மிடம் வரும் போது அல்லாஹ் எதை உமக்கு வாழ்த்தாக ஆக்கவில்லையோ அதை உமக்கு வாழ்த்தாகக் கூறுகின்றனர். நாம் கூறுவதற்காக அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் இருக்க வேண்டுமே என்று தமக்குள் கூறிக் கொள்கின்றனர். அவர்களுக்கு நரகமே போதுமானது. அதில் அவர்கள் கருகுவார்கள். அது கெட்ட தங்குமிடம். 
அல்குர்ஆன் (58 8) 

முஸ்லிம் அழிய வேண்டும் என்ற நோக்கிலேயும் நபி (ஸல்) அவர்கள் மீது அவர்களுக்கு இருந்த வெறுப்பினாலும் இவ்வாறு கூறிவந்தார்கள். ஆகையால் தான் நபி (ஸல்) அவர்கள் இவர்களுக்கு முதலில் சலாம் சொல்ல வேண்டாம் எனத் தடைசெய்தார்கள். முதலில் நாம் சலாம் சொல்லும் போது சாந்தி உண்டாகட்டும் என்று கூறுவோம். ஆனால் அவர்கள் மரணம் உண்டாகட்டும் என்று கூறுவார்கள். ஆனால் அவர்கள் முதலில் மரணம் உண்டாகட்டும் என்று கூறினால் வஅலைக்கும் (உங்கள் மீதும் உண்டாகட்டும்) என்று முஸ்லிம்கள் கூறவேண்டும். 

வேதம்கொடுக்கப்பட்டவர்கள் உங்களுக்கு சலாம் கூறினால் வஅலைக்கும் (உங்கள் மீதும் உண்டாகட்டும்) என்று (மாத்திரம்) கூறுங்கள். 
அனஸ் (ரலி) புகாரி (6258) 

யூதர்களில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கும் மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றிச் சலாம்) கூறினார்கள். அவர்கள் கூறியதைப் புரிந்து கொண்ட நான் வ அலைக்கும் அஸ்ஸாமு வல்லஅனா (அவ்வாறே உங்கள் மீதும் மரணமும் சாபமும் உண்டாகட்டும்) என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா நிதானம்! எல்லா விஷயத்திலும் நளினத்தைக் கையாலுவதையே அல்லாஹ் விரும்புகிறான் என்று சொன்னார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? என்று கேட்டேன், அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான்தான் வஅலைக்கும் (அவ்வாறே உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே (அதை நீ கவனிக்கவில்லையா?) என்று கேட்டார்கள். 
ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (6024) 

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் இறைமறுப்பாளராக இருந்த தனது தந்தைக்கு சலாம் கூறியுள்ளார்கள். 

''உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்புமிக்கவனாக இருக்கிறான். 
(அல்குர்ஆன் 19:47) 

இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர். 
(அல்குர்ஆன் 9:114) 

சலாத்தைச் சுருக்கலாமா? 

ஆதம் (அலை) அவர்கள் மலக்குமார்களுக்கு சலாம் சொன்னார்கள். மலக்குமார்கள் ஆதம் (அலை) அவர்கள் கூறிய சலாத்தை விட சிறந்த சலாத்தைக் கூறினார்கள். அந்த மலக்குமார்கள் கூறிய சலாமே முஹம்மது நபியின் சமுதாயமாகிய நாம் கூற வேண்டிய சலாமாகும். 

அல்லாஹ் ஆதமை அவருக்குரிய (அழகிய) உருவில் படைத்தான். அப்போது அவரது உயரம் அறுபது முழங்களாக இருந்தது. அவர்களைப் படைத்தபோது நீங்கள் சென்று அங்கு அமர்ந்துகொண்டிருக்கும் வானவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில் அதுதான் உங்களது முகமனும் உங்களது சந்ததிகளின் முகமனும் ஆகும். என்று இறைவன் சொன்னான். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று) அஸ்ஸலாமு அலைக்கும் என்று முகமன் சொன்னார்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் (சாந்தியும் இறைவனின் கருணையும் உங்கள் மீது நிலவட்டும்) என்று வானவர்கள் பதில் கூறினார்கள். 
அபூஹூரைரா (ரலி) நூல் : புகாரி (6227) 

சலாம் கூறுவதிலும் தொழுவதிலும் குறைவு வைக்கக் கூடாது. 
அபூஹூரைரா (ரலி) நூல் : அபூதாவூத் (793) 

தவறானப் பார்வை 

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமிற்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாசாவை பின்தொடர்வது விருந்தழைப்பை ஏற்றுக்கொள்வது, தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அபூஹூரைரா (ரலி) நூல் : புகாரி (1240) 

ஒரு முஸ்லிம் மூன்று நாட்களுக்கு மேல் தனது சகோதரனிடத்தில் பேசாமல் இருக்கக்கூடாது. சண்டையிட்டுக்கொண்ட இருவரும் ஒருவர் மற்றவருக்கு சலாம் கூறி பேசிக்கொண்டால் அவர்களுக்கு நன்மை உண்டு. ஒருவர் சலாம் கூறி மற்றொருவர் பதில் சலாம் கூறவில்லையென்றால் முதலில் சலாம் சொன்னவர் குற்றத்திலிருந்து விலகிவிடுவார். ஆனால் சலாம் சொல்லதவர் அல்லாஹ்விடத்தில் பாவியாகிவிடுவார். புகாரீ (6077) 

தூரத்தில் இருப்பவருக்கு சலாத்தை எத்திவைக்கும் முறை 

நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) ஆயிஷே இதோ ஜிப்ரீல் உமக்கு சலாம் கூறுகிறார் என்று கூறினார்கள். அதற்கு நான் வஅலைஹிஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ (அவர்கள் மீதும் சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் அபிவிருத்தியும் உணிடாகட்டும்) என்று கூறிவிட்டு (அல்லாஹ்வின் தூதரே) நான் காணாததையெல்லாம் நீங்கள் காணுகிறீர்கள் என்று கூறினேன். 
ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (3768) 

இது போன்று அன்னை கதீஜா (ரலி) அவர்களுக்கும் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் சலாம் கூறியுள்ளார்கள். 

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதரே இதோ கதீஜா தன்னுடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு அல்லது உணவு அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ களைப்போ காணமுடியாத முத்துமாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள் என்று சொன்னார்கள். அபூஹூரைரா (ரலி) நூல் : புகாரி (3820) 

நபி (ஸல்)அவர்களுக்கு சஹாபாக்கள் ஆட்களின்மூலம் சலாத்தை சொல்லி அனுப்பியுள்ளார்கள். 

நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்து தனது மனைவியுடன் உடலுறவு கொண்டுவிட்டார்கள். (அப்போது) எனது தாய் உம்மு சுலைம் அவர்கள் ஹைஸை (பால் நெய் பேரித்தம்பழம் ஆகியவற்றால் ஆன உணவை) தயாரித்து வைத்திருந்தார்கள். நான் அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்று எனது தாய் உங்களுக்கு சலாம் கூறினார்கள் எனக் கூறினேன். 
அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : நஸயீ (3334) 

எனது வாழ்நாள் நீடிக்குமேயானால் மர்யமின் மகன் ஈஸாவை நான் சந்திக்க வேண்டும் என ஆசைப்படுவேன். எனக்கு மரணம் விரைவில் சம்பவித்துவிட்டால் உங்களில் யார் அவரை சந்திக்கிறாரோ அவர் என்புறத்திலிருந்து அவருக்கு சாலம் சொல்லட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அபூஹூரைரா (ரலி) அஹ்மத் (7629,7630) 

நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களுக்கு சலாத்தை எத்திவைக்கும் படி கூறியிருக்கிறார்கள். 

அன்சாரிகளில் ஒரு இளைஞர் அல்லாஹ்வின் தூதரே நான் ஜிஹாத் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். தயார் செய்வதற்கென்று என்னிடத்தில் எந்தப் பொருளும் இல்லை என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) அன்சாரிகுலத்தைச் சார்ந்த இந்த நபரிடம் செல். அவர் (போருக்கான ஏற்பாடுகளை) தயார்செய்து வைத்திருந்தார். பிறகு நோய்வாய்ப் பட்டுவிட்டார். ஆகையால் நீ (அவரிடம் சென்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு சலாம் கூறினார்கள். இன்னும் நீங்கள் தயார் செய்துவைத்திருந்ததை என்னிடத்தில் ஒப்படைக்கும் படி கூறினார்கள் என்று சொல் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அனஸ் பின் மாலிக் (ரலி) அஹ்மத் (12684) 

சலாம் சொல்லக்கூடாத நேரங்கள் 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும் நிலையில் ஒருமனிதர் அவர்களை கடந்து சென்றார். அப்போது அவர் (பெருமானருக்கு) சலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் சலாம் கூறவில்லை. 
இப்னு உமர் (ரலி) முஸ்லிம் (555) திர்மிதி (83) 

நபி (ஸல்) அவர்கள் இயற்கைத் தேவையை நிறைவேற்றிவிட்டு வந்துகொண்டிருந்த போது ஒரு மனிதர் ஜமல் என்ற கிணற்றுக்கு அருகே அவர்களை சந்தித்து சலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் சுவற்றுக்கு அருகே வந்து கைகளை சுவற்றில் வைத்து பிறகு அதை தன் முகத்திலும் கைகளிலும் தடவிக்கொண்டார்கள். பிறகு அம்மனிதருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில்சலாம் கூறினார்கள்.. 
அபூ ஜுஹைர் (ரலி), இப்னு உமர் (ரலி) அபூதாவுத் (280) புகாரி (337) 

ஆரம்பக்காலக்கட்டங்களில் நபித்தோழர்கள் தொழுகையில் இருக்கும் ஒருவருக்கு சலாம் கூறிக்கொண்டு இருந்தார்கள். தொழுபவரும் தொழுகையில் இருந்து கொண்டே பதில் சலாம் கூறுவார். பிறகு இந்த வழிமுறை மாற்றப்பட்டுவிட்டது. 

நபி (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும் நிலையில் நான் அவர்களிடம் வந்து சலாம் சொல்வேன். எனக்கு பதில் சலாம் சொல்வார்கள். (ஒருமுறை) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும் போது அவர்களுக்கு சலாம் கூறினேன். எனக்கு பதில் சலாம் அவர்கள் கூறவில்லை. அவர்கள் (தொழுது முடித்து) சலாம் கொடுத்தபோது மக்களை நோக்கி கண்ணியத்திற்குரிய மகத்துவமிக்க அல்லாஹ் தொழுகையில் அல்லாஹ்வின் திக்ருகளைத் தவிர வேறெதையும் நீங்கள் மொழியக்கூடாது என (புதிதாக) ஏற்படுத்தியுள்ளான். நீங்கள் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நிற்பதற்கு உங்களுக்கு என்ன (சிரமம்)? என்று கேட்டார்கள். 
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல் : நஸயீ (1205)