திங்கள், 9 மார்ச், 2015

அநாதைகளை அரவணைப்போம்

அநாதைகளை அரவணைப்போம்

நபி (ஸல்) அவர்கள் ''நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்'' என்று கூறியபடி தம் சுட்டு விரலையும் நடு விரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளி விட்டு சைகை செய்தார்கள். 

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) 

நூல்கள்: புகாரீ 5304), திர்மிதீ (1841),அபூதாவூத் (4483), அஹ்மத் (21754) 

திருமறைக் குர்ஆன், அநாதைகளுக்கு செலவழிப்பதை ஊக்கப்படுத்துகிறது. 

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். ''நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்'' எனக் கூறுவீராக! 

(அல்குர்ஆன் 2:215) 

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். 

(அல்குர்ஆன் 4:36) 

அனாதைகளைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். ''அவர்களுக்காக நல் ஏற்பாடு செய்தல் சிறந்தது. நீங்கள் அவர்களுடன் கலந்து வாழ்ந்தால் அவர்கள் உங்கள் சகோதரர்கள். சீர்படுத்துவோனையும், சீரழிப்போனையும் அல்லாஹ் அறிகிறான். அல்லாஹ் நாடியிருந்தால் அவன் உங்களுக்குச் சிரமத்தைத் தந்திருப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' எனக் கூறுவீராக! 

(அல்குர்ஆன் 2:220) 

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அநாதைக்கும், சிறைப் பட்டவருக்கும் உணவளிப்பார்கள். 

(அல்குர்ஆன் 79:8) 

நபி (ஸல்) அவர்கள் அவர்கள் அநாதைகளுக்குச் செலவழிக்கும் செல்வம் அவனுக்குச் சிறந்த தோழனாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். 

''இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே ஒரு முஸ்லிம் தன் செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கிறானோ, அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவனாவான். மேலும் மறுமை நாளில் அந்தச் செல்வம் அவனுக்கு எதிராக சாட்சி சொல்லும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: புகாரீ (1465) 

தீயவர்களைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடும் போது, அவர்கள் அநாதைகளை மதிக்க மாட்டார்கள் என்றும், அவர்களை விரட்டுவார்கள் என்றும் குறிப்பிடுகின்றான்.அவ் வாறில்லை! நீங்கள் அநாதையை மதிப்பதில்லை, ஏழைக்கு உணவளிக்கத் தூண்டுவதில்லை. 

(அல்குர்ஆன் 89:17, 18) 

தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? அவனே அனாதையை விரட்டுகிறான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை. (அல்குர்ஆன் 108:1லி3) 

அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக உண்போர் தமது வயிறுகளில் நெருப்பையே உண்ணுகின்றனர். நரகில் அவர்கள் நுழைவார்கள். 

(அல்குர்ஆன் 4:10) 

அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக சப்பிடுவர்கள் பெரும் பாவத்தைச் செய்தவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கிறார்கள். 

''அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் ''அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?'' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், ''அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், 'நியாயமின்றி கொல்லக் கூடாது' என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும், அப்பாவிகளான இறை நம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)'' என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ (2766)