செவ்வாய், 3 மார்ச், 2015

நபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)

நபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)

அமானிதத்தைப் பேணுவது இறைத்தூதர்களின் பண்பாகும். ரோம மன்னர் ஹிராக்ளியஸ் நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரித்த போது பெருமானாரின் நடத்தைகள் அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. அதில் அமானிதத்தை முறையாக ஒப்படைப்பதும் ஒன்று. இந்த குணங்களை வைத்து அவர் நபி (ஸல்) அவர்களை நல்லவர் என்றும் உண்மையாளர் என்றும் முடிவு செய்தார். ஒருவர் உண்மையாளரா அல்லது பொய்யரா என்று கண்டறிய அமானிதத்தைப் பேணுவது சிறந்த அளவுகோலாகும்.

(ரோம மன்னர்) ஹிராக்ளியஸ் என்னைப் பார்த்து உம்மிடம் முஹம்மத் எதையெல்லாம் கட்டளையிடுகின்றார் என்று நான் கேட்டேன். நீர் அவர் தொழுகை தொழும்படியும் வாய்மையையும் நல்லொழுக்கத்தையும் கடைபிடிக்கும்படியும் ஒப்பந்தத்தையும் வாக்குறுதியையும் நிறைவேற்றும்படியும் நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைச் சரிவரப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படியும் கட்டளையிடுகிறார் என்று சொன்னீர். இது தான் ஒரு இறைத்தூதரின் பண்பாகும் என்று கூறினார்.
அறிவிப்பவர் : அபூசுஃப்யான் (ரலி),  நூல் : புகாரீ (2681)

நபி (ஸல்) அவர்கள் அமானிதத்தைப் பேணுவதைப் போல் எவரும் பேணமாட்டார்கள் என்பது அவர்கள் காலத்தில் வாழ்ந்த யூதர்களுக்குத் தெள்ளத் தெளிவாக தெரிந்த ஒரு விஷயம். ஆனால் நபி (ஸல்) அவர்களை தூதராக ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் மக்கள் மத்தியில் அவரை பொய்யராக சித்தரித்துக் காட்டுவதற்காக மோசடி செய்துவிடுவார் என்று உள்ளத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் ஒன்றைப் பேசினார்கள். மோசடி செய்தார் என்று உறுதிபட சொல்லாமல் மோசடி செய்வார் என்று யூகமாகத் தான் அவர்களால் சொல்ல முடிந்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு கடினமான சிவப்புநிற இரு ஆடைகள் இருந்தது. அவர்கள் அமர்ந்து (பேசும் போது) வியர்வை வெளிப்படுவதினால் அந்த இரு ஆடைகளும் அவர்களுக்கு கஷ்டத்தை அளித்தன. ஷாம் நாட்டிலிருந்து ஒரு யூத நபருக்கு துணிகள் வந்தது. அப்போது நான் (நபியவர்களிடம்) தாங்கள் அந்த யூதரிடம் ஆள் அனுப்பி குறுகிய காலத்தில் (பணத்தை ஒப்படைப்பதாகக் கூறி) இரண்டு துணிகளை வாங்கிக்கொள்ளலாமே என்று கூறினேன். நபி (ஸல்) அவர்களும் அவனிடம் ஆள் அனுப்பி (வாங்கி வரச் சொன்னார்கள்). அதற்கு அவன் முஹம்மத் என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியும். என்னுடைய பொருளை பறித்துச் செல்லத்தான் அவர் நாடுகிறார் என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் அவர்களை விட அதிகம் அல்லாஹ்விற்கு அஞ்சுபவன் என்றும் அதிகம் அமானிதத்தை ஒப்படைப்பவன் என்றும் அவர் அறிந்துகொண்டு பொய் சொல்கிறார் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : திர்மிதி (1134).

நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி மதீனாவில் நான் அஸர் தொழுதேன். அவர்கள் சலாம் கொடுத்ததும் மக்களைத் தாண்டிக்கொண்டு தம் மனைவியரின் ஒருவரின் இல்லத்துக்கு வேகமாகச் சென்றார்கள். அவர்களது விரைவைக் கண்டு மக்கள் திடுக்குற்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள் திரும்ப வந்து தான் விரைவாகச் சென்றது பற்றி மக்கள் வியப்பில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார்கள். என்னிடம் இருந்த (ஜகாத் நிதியான) வெள்ளிக் கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது என் கவனத்தைத் திருப்பி விடுவதை நான் விரும்பவில்லை. அதைப் பங்கீடு செய்யுமாறு கூறிவிட்டு வந்தேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பா (ரலி) நூல் : புகாரி (851)

அமானிதத்தைப் பேணவது தர்மம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனக்கு ஏவப்பட்டதை மனமுவந்து திருப்தியுடன் நிறைவேற்றும் நம்பிக்கைக்குரிய கருவூலக்காப்பாளர் தர்மம் செய்தவராவார்.
அறிவிப்பவர் : அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி) நூல் : அஹ்மத் (18836)

அலட்சியமாக்கப்படும் அமானிதங்கள்

நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஏதோ ஒரு விதத்தில் நமக்கேத் தெரியாமல் அமானிதங்களை ஏற்றவர்களாக இருக்கிறோம். இறைவன் நமக்கு வழங்கிய உடல் உறுப்புக்களும் செல்வங்களும் அமானிதம் தான். இவைகளை நல்லகாரியங்களுக்கு பயன்படுத்துவதற்காக வழங்கியுள்ளான். தீயகாரியங்களுக்கு இவைகளை நாம் பயன்படுத்தினால் இறைவன் நமக்கு வழங்கிய அமானிதங்களை பாழ்படுத்தியவர்களாக ஆகிவிடுவோம். இதை உணராத காரணத்தினால் நம்முடைய கண்கள் தீயகாரியங்களை கண்டு இரசிக்கிறது. நமது கால்கள் செல்லக்கூடாத இடங்களுக்கு வருகை தருகின்றன. மறுமையில் ஒவ்வொரு உறுப்பும் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.

செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.
அல்குர்ஆன் (17 : 36)

இரகசியமாக சொல்லப்பட்ட செய்தியும் அமானிதமே!

அமானிதம் என்பது பொருளை மட்டும் குறிக்காது. ஒருவர் நம்மிடம் ஒரு செய்தியைக் கூறி இதை யாரிடமும் கூற வேண்டாம் என்று சொன்னால் அந்த செய்தி அமானிதமாகிவிடும். ஆனால் இரகிசியமாக எத்தனையோ விஷயங்களைக் கேட்டுவிட்டு நாம் பலரிடம் பரப்பிக்கொண்டிருக்கிறோம். சஹாபாக்களிடம் நபி (ஸல்) அவர்கள் ஒன்றை இரகசியமாகக் கூறினால் அதை அவர்கள் பரப்பியதில்லை.

ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் ரகசியமாக ஏதோ ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். அதைக் கேட்டதும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள். நான் அவர்களிடம் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டேன். மீண்டும் நபி (ஸல்) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் இரகசியமாக எதையோ சொல்ல அதைக் கேட்டு அவர்கள் சிரித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள் என்று ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய இரகசியத்தை நான் பரப்பமாட்டேன் என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் இறக்கும் வரை ஃபாத்திமா (ரலி) ஒன்றும் கூறவில்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி). நூல் : புகாரி (3623)

நான் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். எங்களுக்கு சலாம் சொன்னார்கள். என்னை ஒரு தேவைக்காக அவர்கள் அனுப்பியதால் என்னுடைய தாயிடம் செல்வதற்கு தாமதமாகிவிட்டது. நான் (வீட்டிற்கு) வந்த போது ஏன் தாமதம்? என்று என் தாய் கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தேவைக்காக என்னை அனுப்பினார்கள் என்று கூறினேன். அவர்களுடைய தேவை என்ன? என்று என் தாய் கேட்டார். நான் அது இரகசியமானது என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதருடைய இரகசியத்தை யாரிடமும் சொல்லாதே என்று என் தாய் சொன்னார்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி). நூல் : முஸ்லிம் (4533)

கணவன் மனைவிக்கு மத்தியில் நடக்கும் இல்லற வாழ்க்கை அமானிதம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவன் தன் மனைவியுடன் இணைந்து அவளும் அவனுடன் இணைந்து விட்டப் பின்பு அவளுடைய இரகசியத்தை (கணவன்) பரப்புவது மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய அமானிதமாகும்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி). நூல் : முஸ்லிம் (2832)

பொறுப்புகளும் அமானிதம்

நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பொறுப்பையாவது பெற்றிருப்போம். நாம் ஏற்றிருக்கக்கூடிய பொறுப்பை உணர்ந்து அதற்குத் தக்கவாறு நாம் செயல்பட வேண்டும். நமது கடமைகளை முறையாக செய்யத் தவறினால் அமானிதத்தைப் பாழ்படுத்திய குற்றத்தை செய்தவராகிவிடுவோம். மக்களை வழிநடத்தும் பதவியில் இருப்பவர்கள் அமானிதத்தை ஏற்றிருக்கிறார்கள். முறையான ஆட்சி புரியாவிட்டால் இறைவனிடத்தில் அவர்களால் தப்ப முடியாது.

நான் (நபி (ஸல்) அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என்னை (எதாவது) பணியில் அமர்த்தக் கூடாதா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய கையால் எனது தோல்பட்டையில் அடித்துவிட்டு அபூதர்ரே! நீர் பலவீனமானவர். அதுவோ அமானிதம். யார் அதை கையாள வேண்டிய முறைப்படி கையாண்டு தன் மீதுள்ள கடமையை நிறைவேற்றுகிறாரோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) மறுமை நாளில் அது இழிவாகவும் கைசேதமாகவும் இருக்கும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி).நூல் : முஸ்லிம் (3729)

மார்க்க நெறிமுறைகளும் அமானிதம்

நமக்கு சரியானப் பாதையைக் காட்டுவதற்காக இறைவன் தன்னுடைய தூதர்களின் மூலம் இஸ்லாமிய மார்க்கத்தை வழங்கியுள்ளான். இந்த மார்க்கம் நமக்கு கிடைப்பதற்காக அந்த இறைத்தூதர்கள் சொல்ல முடியாத அளவுக்கு இன்னலுற்று தூதுத்துவப் பணியை செய்தார்கள். இதற்காக பல இறைத்தூதர்களும் அந்தத் தூதருக்கு பக்கபலமாக இருந்தவர்களும் கொல்லப்பட்டார்கள். கியாமத் நாள் வரை வருகின்ற மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய உபதேசங்கள் சென்றடைவதற்காக இமாம்கள் தங்களுடைய வாழ்நாட்களை மார்க்கத்திற்காக அற்பணித்து அரும்பெருந்தொண்டாற்றினார்கள். இவ்வளவு நபர்களின் தியாகத்தால் ஹதீஸ்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன.

ஒரு காலத்தில் குர்ஆனும் ஹதீஸும் சொல்லப்படாமல் வெறும் கட்டுக்கதைகள் மாத்திரம் மார்க்கமாக போதிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று எத்தனையோ வசனங்களும் ஹதீஸ்களும் உரைகளிலும் புத்தகம் வாயிலாகவும் மாத இதழ்கள் வாயிலாகவும் இலகுவாக கிடைக்கின்றன. ஆனால் நாம் எந்தவிதமான ஆர்வமும் காட்டாமல் இவைகளைப் புறக்கணித்து வருகிறோம். இறைவன் அளித்த இந்த மாபெரும் அமானிதத்தை பேணத் தவறிவிடுகிறோம். வணக்கவழிபாடுகளை நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விற்கு செலுத்த வேண்டிய கடன் என்று கூறியுள்ளார்கள். இவைகளை நிறைவேற்றுவதில் மற்றதை விட அதிக ஆர்வம் நாம் காட்டவேண்டும்.

ஜுஹைனா கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) எனது தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்தார்கள். ஆனால் அவர்கள் மரணிக்கும் வரை ஹஜ் செய்யவில்லை. எனவே அவர்களுக்கு பகரமாக நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம். அவர்களுக்காக நீங்கள் ஹஜ் செய்யுங்கள். உங்களுடைய தாயின்

மீது கடன் இருந்தால் அதை நீங்கள் தானே நிறைவேற்றுவீர்கள்? அல்லாஹ்விற்கு (செய்ய வேண்டியதை) நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வே நிறைவேற்றுவதற்கு அதிக தகுதிவாய்ந்தவன் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி (1852)

அமானிதமான இந்த மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு அதை முறையாக கடைபிடிக்காமல் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் சுட்டிக்காட்டுகிறான்.

வானங்கள், பூமி மற்றும் மலைகளுக்கு அமானிதத்தை நாம் முன் வைத்தோம். அதைச் சுமக்க அஞ்சி அவை மறுத்து விட்டன. மனிதன் அதைச் சுமந்து கொண்டான். அவன் அநீதி இழைப்பவனாகவும், அறியாதவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் (33 : 72)

நம்பிக்கைத் துரோகத்தால் ஏற்படும் விளைவுகள்

கூட்டு சேர்ந்து நடத்தப்படும் கடைகள் பெரும்பாலும் நீண்ட நாட்கள் நிலைப்பதில்லை. மிகக் குறைந்த நாளிலே பிரச்சனைகள் ஏற்பட்டு அடைக்கப்பட்டுவிடுகின்றன. இதற்குக் காரணம் கூட்டு சேர்ந்தவர்கள் தங்களுக்குரிய பங்கைவிட அதிகமாக லாபத்தை எடுப்பதினாலும் தன்னுடைய உழைப்பை செலுத்தாமல் இருப்பதுமேயாகும். வருகின்ற லாபத்தை அமானிதமாகக் கருதி உரிய முறையில் பங்கு வைத்துக்கொண்டால் அழகிய முறையில் வியாபாரம் செய்து செழித்தோங்கலாம். அல்லாஹ்வின் உதவியும் கிடைக்கும். அல்லாஹ் அவர்களுடன் மூன்றாவது கூட்டாளியாக சேர்ந்துகொண்டு செல்வத்தை வளர்ப்பான்.

அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இரண்டு கூட்டாளிகளில் ஒருவர் தன்னுடைய தோழருக்கு மோசடி செய்யாத வரை நான் அவர்களுடன் மூன்றாவது (கூட்டாளி) ஆவேன். ஆனால் மோசடி செய்தால் அவ்விருவர்களிடமிருந்து நான் வெளியேறிவிடுகிறேன்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : அபூதாவூத் (2936)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நாட்டப்பட்டு இது இன்னாருடைய மகன் இன்னாரின் மோசடி (யைக் குறிக்கும் கொடி) என்று கூறப்படும்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),நூல் : புகாரி (6177)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு உணவுக் குவியலைக் கடந்து சென்றார்கள். அதிலே தன் கையை விட்டார்கள். அவர்களுடைய விரல்களில் ஈரம் பட்டது. (அந்த உணவுக்காரரைப் பார்த்து) உணவுக்குச் சொந்தக்காரரே இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே! மழை நீர் இதில் விழுந்துவிட்டது என்று கூறினார். அதற்கு அவர்கள் மக்கள் பார்க்கும் வண்ணம் இதை உணவுப்பொருளுக்கு மேலே வைத்திருக்கவேண்டாமா? யார் ஏமாற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல என்று கூறினார்கள்..
அறிவிப்பவர் : அபுஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் (164)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்) முஃப்லிஸைப் (திவாலாகிப் போனவன்) பற்றி உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் யாரிடத்தில் பொற்காசுகளும் இன்னும் எந்தப் பொருளும் இல்லையோ அவன் தான் முஃப்லிஸ் (திவாலாகியவன்) என்று கூறினார்கள். என்னுடைய சமுதாயத்தில் முஃப்லிஸ் (திவாலாகியவன்) மறுமைநாளில் தொழுகை நோன்பு ஜகாத்துடன் வருவான். (உலகில் வாழும் போது) இவனை இட்டிகட்டியிருப்பான். இவனை திட்டியிருப்பான். இவனது இரத்தத்தை ஓட்டியிருப்பான். இவனை அடித்திருப்பான். எனவே இவனுக்கு அவனுடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுக்கப்படும். இவனுக்கு அவனது நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுக்கப்படும். அவன் மீது கடமையாக உள்ளவற்றை நிறைவேற்றுவதற்கு முன்பே அவனது நன்மைகள் அழிந்துவிட்டால் அவர்களுடைய தீமைகளிலிருந்து எடுத்து அவன் மீது வைக்கப்படும். பிறகு அவன் நரகில் வீசப்படுவான்.
அறிவிப்பவர் : அபுஹுரைரா (ரலி),நூல் : முஸ்லிம் (46778)

அமானிதத்தைப் பேணாமல் தடுக்கப்பட்ட முறையில் உண்பவர்கள் செய்யும் பிரார்த்தனைகளுக்கு இறைவனிடத்தில் சற்றும் மதிப்பிருக்காது. அந்தப் பிரார்த்தனைகள் எல்லாம் அசுத்தமானவைகளாகத் தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதை அல்லாஹ் திருமறைக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.
அல்குர்ஆன் (2 : 168)

நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்!
அல்குர்ஆன் (2 : 172)

அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய, அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! நீங்கள் நம்புகின்ற அல்லாஹ்வையே அஞ்சுங்கள்!
அல்குர்ஆன் (5 : 88)

அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து அனுமதிக்கப்பட்ட தூய்மை யானதை உண்ணுங்கள்! நீங்கள் அவனையே வணங்குவோராக இருந்தால் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள்!
அல்குர்ஆன் (16 : 114)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கிறான். அல்லாஹ் தன் தூதர்களுக்குக் கட்டளையிட்டதையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான் என்று கூறிவிட்டு (ப் பின்வரும் இருவசனங்களை) ஓதிக்காட்டினார்கள். தூதர்களே! தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நல்லறம் செய்யுங்கள்! நீங்கள் செய்வதை நான் அறிந்தவன். (23 : 51) நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானப் பொருட்களிலிருந்து உண்ணுங்கள். நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத் தான் வணங்குகிறீர்களென்றால் அவனுக்கு நன்றிபாராட்டுங்கள். (2 : 172)

பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். அவர் தலைவிரிக் கோலத்துடனும் புழுதிபடிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி என் இறைவா என் இறைவா என்று பிரார்த்திக்கிறார். ஆனால் அவர் உண்ணும் உணவு தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது. அவர் அருந்தும் பானம் தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது. தடைசெய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்? என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ ýரைரா (ரலி), நூல் : முஸ்லிம் (1844)

அமானிதங்களைப் பேணாதவர்கள் மறுமை நாளில் நரகத்தின் மீதுள்ள பாலத்தைக் கடக்கும் போது அவர்களை கடக்கவிடாமல் இந்த அமானிதம் தடுக்கும்.

... பின்னர் மக்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்வார்கள். உடனே அவர்கள் எழு(ந்து பரிந்துரைக்க அனுமதி கோரு)வார்கள். அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அப்போது நம்பகத்தன்மையும் இரத்தபந்த உறவும் அனுப்பிவைக்கப்படும். அவையிரண்டும் (நரகத்தின் மீதுள்ள ஸிராத் எனும்) அப்பாலத்தின் இருமருங்கிலும் வலம் இடமாக நின்றுகொள்ளும். அப்போது உங்களில் முதல் அணியினர் மின்னலைப் போன்று அதைக் கடந்துசெல்வார்கள்.
அறிவிப்பவர் : அபுஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் (329)

எனவே அமானிதங்களை ஒழுங்காக பேணி இறைகட்டளையின்படியும் இறைத்தூதரின் வழிகாட்டுதலின்படி நடக்க முயற்சிப்போம்.