ஞாயிறு, 8 மார்ச், 2015

ஏகத்துவமும் சோதனைகளும்

ஏகத்துவமும் சோதனைகளும்

ஸஃது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 

நான் நபி (ஸல்) அவர்களிடம் ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே (அல்லாஹ்விற்காக) மக்களில் அதிகமாக சோதிக்கப் பட்டவர்கள் யார்?'' என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், ''நபிமார்கள் பிறகு அவர்களைப் போன்றவர்கள். பிறகு அவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு சோதிக்கப்படுவான். அவனுடைய மார்க்கப் பிடிப்பு முதுகெலும்பாக (உறுதியாக) இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும். அவனுடைய மார்க்கப்பிடிப்பு உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப் படுவான். ஒரு அடியான் அவன் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்றவரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்'' என்று கூறினார்கள். 
நூல்: திர்மிதி 2322 

இந்த சத்தியப் பிரச்சாரத்திற்காகத் தான் அல்லாஹ் அனைத்து நபிமார்களையும் அனுப்பியுள்ளான். 

''அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!'' என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம் 
(அல்குர்ஆன் 16:36) 

நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பி வைத்தோம். ''என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை மகத்தான நாளின் வேதனையை உங்கள் மீது நான் அஞ்சுகிறேன்'' என்று அவர் கூறினார் 
(அல் குர்ஆன் 7:59) 

ஆது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஹூதை அனுப்பினோம். ''என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?'' என்று அவர் கேட்டார். 
(அல்குர்ஆன் 7:65) 

ஸமூது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பி வைத்தோம். ''என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை'' என்று அவர் கூறினார் 
(அல்குர்ஆன் 7:73) 

மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். ''என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை'' என்று அவர் கூறினார் 
. (அல்குர்ஆன் 7:85) 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்பாக என்னுடைய சமுதாயத்திலிருந்து ஒரு மனினை தனியாக நிறுத்துவான். அவனுக்கு எதிராகத் தொன்னூற்று ஒன்பது (பாவ) ஏடுகள் விரிக்கப்படும். அதிலிருந்து ஒவ்வொரு ஏடும் பார்வை செல்கின்ற தொலைவின் அளவிற்கு இருக்கும். 

பிறகு அல்லாஹ் அவனிடம் இதிலிருந்து நீ எதையாவது மறுக்கின்றாயா? (அல்லது) பாதுகாவலர்களாகிய என்னுடைய எழுத்தாளர்கள், உனக்கு அநீதி இழைத்து விட்டார்களா? என்று கேட்பான். ''என்னுடைய இரட்சகனே இல்லை (அனைத்தும் நான் செய்த பாவங்கள்தான்) என்று அவன் கூறுவான். (நீ வேதனையிலிருந்து தப்பிக்க) உனக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன் ''என் இரடசகனே ஏதுமில்லை'' என்று கூறுவான். 

அப்போது அல்லாஹ் கூறுவான். அவ்வாறில்லை உனக்கு நம்மிடத்தில் ஒரு நன்மை இருக்கிறது, இன்றைய தினம் உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என்று கூறியவுடன் ஒரு சிற்றேடு வெளிப்படும் அதில் ''அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸுலுஹு'' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன், மேலும் நிச்சயமாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்று சாட்சி கூறுகிறேன்) என்ற ஏகத்துவக் கலிமா இருக்கும். 

நீ உன்னுடைய (நன்மை, தீமைகளின்) எடையைப் பார் என்று அல்லாஹ் கூறுவான். ''என்னுடைய இரட்சகனே (இந்த பாவ) ஏடுகளுடன் இந்தச் சிறிய ஏடு என்ன (பெரிதா?)'' என்று அவன் கேட்பான். அதற்கு அல்லாஹ் ''நிச்சயமாக நீ அநீதி இழைக்கப்பட மாட்டாய்'' என்று கூறுவான். அந்த பாவ ஏடுகள் ஒரு தட்டிலும், அந்த சிற்றேடு ஒரு தட்டிலும் வைக்கப்படும். அந்தப் பாவ ஏடுகள் பறந்தோடிவிடும். அந்தச் சிற்றேடு கனத்து விடும். அல்லாஹ்வின் பெயரை விட எதுவும் கனத்து விடாது. 
அறிவிப்பவர்: அம்ருப்னு ஆஸ் (ரலி) : திர்மிதி (2563) 

மற்றொரு ஹதீஸைப் பாருங்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) அல்லாஹ் (தனக்கு இணை வைக்காத ஒரு அடியானைப் பார்த்து) ''ஆதமுடைய மகனே நீ பூமி நிறைய பாவத்துடன் என்னிடம் வந்திருக்கின்றாய். (ஆனால்) நீ எனக்கு எந்த ஒன்றையும் இணை கற்பிக்கவில்லை. எனவே நான் உனக்கு பூமி நிறைய பாவமன்னிப்பை வழங்குகின்றேன்'' என்று கூறுவான். 
அறிவிப்பவர்: அபூதர்(ரலி) அஹ்மத் 20349 

இறைவனுக்கு இணை வைத்து விட்ட ஒருவன் மறுமையில் இவ்வுலக அளவிற்கு தங்கத்தைத் கொடுத்தாலும் நரக வேதனையிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை பின்வரக்கூடிய ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் ஒரு காஃபிர் (அல்லாஹ்வின் முன்னிலையில்) கொண்டு வரப்படுவான். ''உனக்கு பூமி நிறைய தங்கம் இருந்தால் நீ (நரக வேதனையிலிருந்து தப்பிப்பதற்காக) அதனை ஈடாகக் கொடுத்து விடுவாயா? நீ என்ன கருதுகின்றாய்?'' என்று அவனிடம் கேட்கப்படும். அதற்கு அவன் ''ஆம்'' என்று கூறுவான். ''இதை விட மிக இலேசான ஒன்றை (எனக்கு இணைகற்பிக்காதே என்று) தானே நீ உலகத்தில் கேட்கப்பட்டாய். (ஆனால் நீ அதனைச் செய்து நிரந்தர நரகத்தில் வீழ்ந்து விட்டாய்)'' என்று அவனுக்கு கூறப்படும். 
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) புகாரி 6538 

ஒரு ஏகத்துவ வாதி இந்தப் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் சோதனைகளைச் சந்தித்து தான் தீரவேண்டும். நமக்கு நிரந்தர வெற்றி மறுமையில் தான் இருக்கிறது.