திங்கள், 9 மார்ச், 2015

முதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்

முதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்

முதுமை என்பது மனிதனுக்கு ஏற்படுகின்ற ஒரு பலவீனமாகும். முதுமையை எட்டியவர்கள் சாப்பிட முடியாமல் நடக்க முடியாமல் தன்னுடைய இயற்கைத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள இயலாமல் மூளை குழம்பி, முழுக்க முழுக்க ஒரு குழந்தை எப்படி பெற்றோரைச் சார்ந்து வாழுமோ அது போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள். 

இதனால் இவர்களும் சிரமப்படுவதோடு மற்றவர்களும் இவர்களுக்காக சிரமப்பட வேண்டிய நிலை உருவாகிறது. எனவே தான் நபி (ஸல்) அவர்கள் தள்ளாத வயதைத் தான் அடைந்து விடக் கூடாது என்று இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி வல்கஸலி வல்ஜுப்னீ வல்ஹரமீ. வஅஊது பிக்க மின் அதாபில் கப்ர். வஅஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்'' என்று பிரார்த்தித்து வந்தார்கள். 

(பொருள்: இறைவா! இயலாமையி லிருந்தும் சோம்பலிலிருந்தும் கோழைத் தனத்திலிருந்தும் தள்ளாமையி லிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இன்னும் வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். 

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி) நூல்: புகாரி 6367 

தான் சிறு குழந்தையாக இருக்கும் போது தன்னை எவ்வளவு சிரமப்பட்டு வளர்த்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்காமல் வயது முதிர்ந்த உடன் அவர்களுடைய சொல்லுக்கு மதிப்பு கொடுக்காமல் அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தராமல் பலர் தங்கள் பெற்றோரை கொடுமைப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். பிள்ளைகளின் கவனிப்பில்லாமையால் ஓய்வெடுக்க வேண்டிய காலத்தில் பலர் பிச்சைஎடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

''என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' என கூறாதே அவ்விருவரையும். விரட்டாதே! மரியாதை அவ்விருவரிடமும் கூறு (அல்குர்ஆன் 17:23) 

''வயதான பெற்றோரைப் பெற்று யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவருடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 4627 

ஒரு நாய்க்கு இரக்கப்பட்டதற்காக ஒரு விபச்சாரம் செய்து கொண்டிருந்த பெண்ணுக்கு அல்லாஹ் சொர்க்கத்தைப் பரிசாக்கினான். நம்மைப் போன்ற ஒரு மனிதருக்கு அதுவும் பலவீனமான மனிதருக்கு இரக்கப்பட்டால் அவன் தரும் பரிசு என்ன என்பதை அவனே மிக அறிந்தவன். 

சில பெண்கள் மார்க்கச் சட்டங்களைக் கரைத்து குடித்து விட்டதைப் போல், கணவனின் பெற்றோருக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்று இஸ்லாம் சொல்லவா செய்கிறது? 

என்று கேட்கிறார்கள். வயது முதிர்ந்த மாமனார், மாமியாரை ஓய்வெடுக்க விடாமல் எதாவது வேலைகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். 


முதியவர்களின் நலம் பேணுதல் 

பேருந்தில் மக்கள் நெருக்கடி அதிகமாக உள்ள போது உட்கார இடமில்லாமல் வயதானவர்கள் தள்ளாடிக் கொண்டிருக்க பலமிக்க உடல் உள்ளவர்கள் ஈவு இரக்கமின்றி சொகுசாக அமர்ந்து பயணம் செய்து வருகிறார்கள். 

இதுபோன்ற இறுகிய உள்ளம் உள்ளவர்களால் தான் அரசுப் பேருந்துகளில் முதியவர் மட்டும், ஊனமுற்றோர் மட்டும் என்று இருக்கைகள் அவர்களுக்கென்று தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. நாம் இப்படி ஒரு நிலையை அடைந்தால் நமது கதி என்ன? என்று இவர்கள் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். 

தான் சொகுசாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர வயதானவர்கள் படும் கஷ்டங்களை அவர்கள் உணர்வதில்லை. 

வயது முதிர்ந்தவர்கள் நீண்ட நேரம் நின்றால் அது அவர்களுக்குக் கஷ்டத்தை அளிக்கும் என்பதால், மக்களுக்குத் தொழ வைப்பவர் சுருக்கித் தொழ வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

உங்களில் ஒருவர் மக்களுக்குத் தொழ வைத்தால் அவர் சுருக்கித் தொழ வைக்கட்டும். ஏனென்றால் அவர்களில் பலவீனரும் நோயாளியும் வயது முதிர்ந்தவரும் இருப்பார்கள். உங்களில் யாரேனும் தனியாகத் தொழுதால் அவர் விரும்பியவாறு அவர் நீட்டிக் கொள்ளட்டும். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 703 

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் சுயநலத்தைப் பார்க்காமல் பலவீன மானவர்களைக் கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு நடக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறார்கள். 

சஹாபாக்களில் அபூபக்கர் (ரலி) அவர்கள் வயதில் மூத்தவராக இருந்தார்கள். அபூபக்கர் (ரலி) அவர்களுக்கே முடி நரைத்திருந்தது என்றால் அவருடைய தந்தை எவ்வளவு முதியவராக இருந்திருப்பார்கள்? 

மக்கா வெற்றியின் போது அபூபக்கர் (ரலி) அவர்கள் தன்னுடைய தந்தையான அபூ குஹாஃபாவை நபி (ஸல்) அவர்களிடம் தூக்கிக் கொண்டு வந்தார்கள். 

அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் இந்த வயதானவரை நீங்கள் வீட்டிலே வைத்திருந்தால் நான் வந்து அவரைப் பார்த்திருப்பேன் என்று கூறினார்கள். பின்பு அபூகுஹாஃபா (ரலி) அவர்களின் முடி நரைத்திருந்ததால் அதனுடைய நிறத்தை மாற்றும் படி கட்டளையிட்டார்கள். 

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி) நூல்: அஹ்மத் 12174 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த மனிதர். மக்காவை வெற்றி கொண்ட அந்நேரத்தில் மக்காவிற்கும் மதீனாவிற்கும் மன்னர் அவர்கள் தான். இந்த நிலையிலும் முதியவரைப் பார்க்க நான் வந்திருப்பேனே என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் முதியவர் நலம் பேண வேண்டும் என்று கூறுகிறது. 

இந்த உலகத்தில் ஒருவர் இன்னொருவரைச் சார்ந்து வாழும் இயல்பிலேயே மனிதனை இறைவன் படைத்துள்ளான். அவன் பிறந்தது முதல் இறக்கும் வரை பல கட்டங்களில் அவன் பிறரைச் சார்ந்துள்ளான். இவனுக்கும் இவன் யாரைச் சார்ந்து இருக்கின்றானோ அவனுக்கும் இந்தச் சார்பு வாழ்வினால் இவ்வுலகில் பலன் ஏற்படுவதால் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறார்கள். 

முஸ்லிம்கள் மறுமைநாளை நம்பியவர்கள். எனவே நம்மைச் சாôந்து வாழும் முதியவர்களுக்கு உதவி புரிவதால் இவ்வுலகத்தில் நமக்குப் பலன் கிடைக்காவிட்டாலும் 

மறுஉலகத்தில் பலன் கிடைக்கும் என்று நம்பினால் நிச்சயம் அல்லாஹ்விடத்தில் இதற்கான கூலி கிடைக்கும். 

''யார் ஒரு முஸ்லிமின் கவலையை அகற்றுகிறாரோ மறுமை நாளில் அவருடைய கவலையை அல்லாஹ் அகற்றுவான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: புகாரி 2442 

''யார் நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாமலும் சிறியவருக்கு இரக்கம் காட்டாமலும் அறிஞரின் தகுதியை அறிந்து (அதற்குத் தக்கவாறு அவரிடம் நடந்து) கொள்ளாமலும் இருக்கிறார்களோ அவர்கள் எனது சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அல்லர்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித்(ரலி) நூல்: அஹ்மத் 21693 

மார்க்கத்திற்கு முரணாக முதியவர்கள் கூறும் போது அதற்கு நாம் கட்டுப்பட வேண்டியதில்லை. ஆனால் அவர்களுக்கும் நமக்கும் மத்தியில் கொள்கையில் வேறுபாடு இருப்பதினால் அவர்களிடத்தில் நாம் காட்ட வேண்டிய பணிவை சற்றும் குறைத்து விடக் கூடாது. 

கொள்கை வேறுபாட்டினால் சிலர் அறியாமல் முதியவர்களைக் கேலி செய்து கொண்டும் அவர்களிடத்தில் கடினமாக நடந்து கொண்டும் இருக்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டிய செயல். நம்மை விரும்பாதவர்களாக அவர்கள் இருந்தாலும் அவர்கள் நோய்வாய்ப் படும் போது அவர்களை நலம் விசாரிக்கச் செல்ல வேண்டும். 

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்குச் செய்யும் கடமைகளை முழுமையாக அவர்கள் விஷயத்திலும் நிறைவேற்ற வேண்டும். கொள்கை வேறுபாட்டால் முதியவருக்கு இளையவர் சலாம் சொல்வதை விட்டு விடக் கூடாது. 

பெரியவருக்குச் சிறியவர் சலாம் சொல்ல வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் ஒரு வழிமுறையை கற்றுத் தந்துள்ளார்கள். பெரியவருக்கு மரியாதை செய்து பணிவாக நடக்க வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் இந்த ஒழுங்கு முறையைக் கற்றுத் தந்துள்ளார்கள். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

சிறியவர் பெரியவருக்கும் நடந்து செல்பவர் உட்கார்ந்திருப்பவருக்கும் குறைவானவர்கள் அதிகமான வர்களுக்கும் சலாம் சொல்லட்டும். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6231 

சில குடும்பங்களில் பெரியவர்கள் பெரும்பாலான விஷயங்களில் ஒதுக்கப் படுகின்றார்கள். வயதாகி விட்ட காரணத்தினால் அவர்களை யாரும் பொருட்படுத்தாமல் முன்னுரிமை அளிப்பதில்லை. அவர்களிடத்தில் ஆலோசனை செய்யாமல் பல காரியங்கள் நடத்தப்படுகின்றன. 

ஆனால் நபி (ஸல்) அவர்கள் பல விஷயங்களில் வயதைக் கவனித்து பெரியவர்களை முற்படுத்தியுள்ளார்கள். வயதில் மூத்தவர்களாக இருப்பதால் இவ்வாறு செய்வது அவர்களுக்குக் கண்ணியம் சேர்ப்பதாகவும் அவர்கள் அனுபவம் மிகுந்தவர்களாக இருப்பதால் நல்ல ஆலோசனையைத் தருவார்கள் என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஒரு கூட்டத்திற்கு அவர்களில் அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவர் இமாமத் செய்யட்டும். அவர்கள் ஓதுவதில் சமமாக இருந்தால் அவர்களில் சுன்னாவை நன்கு அறிந்தவர் இமாமத் செய்யட்டும். அவர்கள் சுன்னாவில் சமமாக இருந்தால் அவர்களில் முதலில் ஹிஜ்ரத் செய்தவர் இமாமத் செய்யட்டும். ஹிஜ்ரத்திலும் அவர்கள் சமமானவர்களாக இருந்தால் அவர்களில் மூத்தவர் இமாமத் செய்யட்டும். 

அறிவிப்பவர்: அபூ மஸ்ஊத் (ரலி) நூல்: முஸ்லிம் 1079 

கருத்துத் தெரிவிக்கும் போது முதலில் பெரியவர் பேச வேண்டும் 

ஒரு கூட்டம் முக்கியமான நபரைப் பார்த்துப் பேசுவதற்காகச் சென்றால் அக்கூட்டத்தில் பெரியவர் முதலில் பேச வேண்டும். பெரியவர்களைப் பின் தள்ளி விட்டு இளையவர்கள் முந்திக் கொள்ளக் கூடாது. 

அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவ்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் அவர்களும் ஹுவைய்யிஸா பின் மஸ்ஊத் அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) பேசத் துவங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள், ''பெரியவர்களைப் பேச விடு! பெரியவர்களைப் பேச விடு!'' என்று கூறினார்கள். அந்த மூவரில் அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். உடனே அவர்கள் (வாய் மூடி) மௌனமாகி விட்டார்கள். பின்பு முஹய்யிஸா அவர்களும் ஹுவைய்யிஸா அவர்களும் (நபி (ஸல்) அவர்களிடம்) பேசினார்கள். 

அறிவிப்பவர்: சஹ்ல் பின் அபீ ஹஸ்மா (ரலீ) நூல்: புகாரி 3173 


மூத்தவருக்கு முதலிடம் 

சாப்பாடு, பானம் போன்று ஏதேனும் பொருட்களைக் கொடுக்கும் போது முதலில் வயதில் மூத்தவருக்கு வழங்க வேண்டும். பின்பு அவரை விட வயது குறைந்தவருக்கு வழங்க வேண்டும். பெரியவர்களுக்குக் கண்ணியம் கொடுப்பதற்காக இவ்வழிமுறையை இஸ்லாம் பேணச் சொல்கிறது. 

நமக்குத் தேனீர் வழங்கப்படும் போது முதலில் நம்மை விட மூத்தவருக்கு மரியாதைக்காகக் கொடுத்து விட்டு பின்பு நாம் குடிக்கின்றோம். நம்மை விட மூத்தவர்கள் வந்திருக்கும் போது அவர்களைக் காக்க வைத்து இளையவர்கள் உண்டால் அது மரியாதைக் குறைவாகக் கருதப்படும். 

ஆனால் மூத்தவர்கள் உண்ண இளையவர்கள் காத்திருந்தால் இதை மரியாதைக் குறைவு என்று யாரும் கூற மாட்டார்கள். 

மூத்தவரோடு இளையவர் சரிக்கு சமமாக ஏதேனும் ஒரு விஷயத்தில் போட்டி போட்டால், என்ன தான் இருந்தாலும் அவர் வயதில் மூத்தவரில்லையா? என்று நாம் கேட்கிறோம். பெரியவர் மீது தவறே இருந்தாலும் சிறியவன் நீ பணிந்து தான் போக வேண்டும் என்று உபதேசம் செய்கிறோம். பெரியவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கிறோம். இந்த ஒழுங்கு முறையைத் தான் நபி (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் உணர்த்துகிறார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

நான் பல் துலக்கும் குச்சியால் பல் துலக்கிக் கொண்டிருந்தவாறு கனவு கண்டேன். அப்போது இரண்டு மனிதர்கள் (பல்துலக்கும் குச்சி வேண்டி) என்னிடத்தில் வந்தார்கள். அவர்களில் ஒருவர் மற்றொருவரை விடப் பெரியவர். அவர்களில் சிறியவருக்கு அக்குச்சியை நான் கொடுத்தேன். அப்போது ''பெரியவருக்கு முதலில் கொடுங்கள்'' என்று என்னிடம் கூறப்பட்டது. எனவே அதை நான் பெரியவரிடத்தில் கொடுத்தேன். 

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)  நூல்: முஸ்லிம் 5324 

நபி (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் பானம் கொண்டு வரப்பட்டால் அதை அருந்தி விட்டு மீதத்தை வலது புறத்தில் இருப்பவருக்குத் தருவார்கள். ஆனால் ஒரு முறை பெருமானாரிடத்தில் குவளையில் பானம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்களின் வலது புறம் சிறுவனும் இடது புறம் பெரியவர்களும் அமர்ந்திருந்தார்கள். 

பெரியவர்களுக்கு முதலில் தர வேண்டும் என்று எண்ணி அந்தச் சிறுவனிடத்தில், ''இதை நான் இந்தப் பெரியவர்களுக்குத் தரட்டுமா?'' என்று அனுமதி வேண்டினார்கள். ஆனால் அந்த சிறுவன், ''அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து எனக்கு கிடைக்கக் கூடிய மீதத்தை 

நான் எவருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்'' என்று கூறினார். எனவே நபி (ஸல்) அவர்கள் அதை அச்சிறுவனுடைய கையில் வைத்து விட்டார்கள். 

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி) நூல்: புகாரி 2351 

வழமையாக நபி (ஸல்) அவர்கள் வலது புறத்தில் உள்ளவருக்குத் தான் தருவார்கள். ஆனால் இடது புறத்தில் பெரியவர்கள் இருந்ததால் அவர்களுக்குத் தர வேண்டும் என்று எண்ணினார்கள். ஆனால் அந்தச் சிறுவர் பெருமானாரின் மீது வைத்திருந்த அன்பினால் அவர்கள் வைத்த மீத பானத்தை நான் தான் குடிப்பேன் என்று கூறினார். 

இங்கே இன்னொரு முக்கியமான விஷயத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களுக்கு இரக்கப்பட வேண்டும் என்று கூறியதால் விபரம் தெரியாத சிறு குழந்தைகளின் உள்ளம் உணவை எதிர்பார்த்து ஏங்காமல் இருப்பதற்காக முதலில் அக்குழந்தைகளுக்குக் கொடுப்பதில் குற்றம் இல்லை. 

சில ஊர்களில் பெரியவர்கள் முதலில் உண்ட பின்பு தான் குழந்தைகள் உண்ண வேண்டும் என்ற ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள். அவர்கள் பசியால் அழுது துடித்தாலும் அவர்கள் அதைக் கண்டு கொள்வதில்லை. 

இந்த இடத்தில் பெரியவர்களை விட சிறு குழந்தைகள் பலவீனர்களாக இருப்பதால் முதலில் சிறு குழந்தைகளுக்கு உணவைக் கொடுக்க வேண்டும். சிறியவர்களை விட பெரியவர்களை முற்படுத்த வேண்டும் என்ற ஒழுங்கு முறை சிறியவர்கள் குழந்தைப் பருவத்தைத் தாண்டி விபரம் தெரிந்தவர்களாக இருக்கும் போது தான். 

இன்னும் இந்தச் சட்டம் பெரியவர்களும் சிறியவர்களும் ஒரே நேரத்தில் இருக்கும் போது தான் பொருந்தும். பெரியவர்கள் விருந்திற்கு இன்னும் வரவில்லை என்ற போது சிறியவர்கள் காத்திருக்க வேண்டியதில்லை. 

முதியோர் இல்லங்கள் பெருகுவதற்கான காரணங்கள் 


சதிசெய்யும் மனைவி 

பெரும்பாலும் பிள்ளைகள் தங்களுக்குத் திருமணம் ஆகுவதற்கு முன்பு வரை பெற்றோர்களின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பார்கள். பாசத்தில் பங்குபோட ஒருத்தி வந்த உடன் சரியான விகிதத்தில் பாசத்தை பகிர்ந்தளிக்கத் தெரியாத மகன்கள் முழுவதுமாக மனைவியிடம் சாய்ந்துவிடுவார்கள். மனைவி போடும் தாளங்களுக்கு தலையாட்டுவார்கள். 

இறுதியில் அவளது சதியில் சிக்கி தன்னை உருவாக்கிய பெற்றோர்களை உதாசீனப்படுத்தும் அளவிற்கு முட்டாலாக மாறுகிறார்கள். 

இந்த உலகத்தில் எத்தனையோ உறவுகள் நமக்கு இருக்கின்றது. நெருக்கமானவர்களும் விருப்பமானவர்களும் பலர் உண்டு. இந்த மனித குலத்தில் நாம் நல்லவிதமாக நடந்துகொள்வதற்கான முதல் தகுதி நம்மை பெற்றெடுத்த பெற்றோர்களுக்கே உண்டு. 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் ஒரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''உன் தாய்'' என்றார்கள். அவர், ''பிறகு யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''உன் தாய்'' என்றார்கள். அவர், ''பிறகு யார்?'' என்றார். ''உன் தாய்'' என்றார்கள். அவர், ''பிறகு யார்?'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''பிறகு, உன் தந்தை'' என்றார்கள். 

நூல் : புகாரி (5971) 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 

(முன் காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், 'நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்றனர். 

அவர்களில் ஒருவர், 'இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் 

கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக நான் வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தைகள் பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உனது திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓரிடைவெளியை ஏற்படுத்து' எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது. 

அறிவிப்பவர் : இப்னு உமர் (ர) அவர்கள் நூல் : புகாரி (2215) 


சகிப்புத் தன்மை இல்லாமை 

பெற்றோர்கள் வயது முதிர்ந்த பருவத்தை அடையும் போது அவர்களால் பிள்ளைகளுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன. இதை சகித்துக்கொள்ள இயலாத பிள்ளைகள் பெற்றோர்களை வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள். இந்நேரத்தில் நம்மால் பெற்றோர்கள் அடைந்த கஷ்டங்களை சற்று நினைத்துப்பார்த்தால் அவர்களால் நமக்கு ஏற்படுகின்ற சிரமங்கள் ஒன்றும் பெரிதல்ல. இந்நேரத்தில் பிள்ளைகள் பின்வருமாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அல்லாஹ் போதனை செய்கிறான். 

''என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு! 

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! ''சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!'' என்று கேட்பீராக! அல்குர்ஆன் (17 : 23) 


வயது முதிர்ந்த பெற்றோர்கள் மூலம் சொர்க்கம் செல்ல முடியும் 

:நபி (ஸல்) அவர்கள், ''மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்'' என்று கூறினார்கள். ''யார் (மூக்கு), அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்கப்பட்டது.அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் (மூக்குத் தான்)'' என்று பதிலளித்தார்கள். 

அபூஹுரைரா (ர) நூல் : முஸ்ம் (4987) 


பொருளாசை 

பெற்றோர்களை தன் பொறுப்பில் வைத்துக்கொண்டால் அவர்களின் மருத்துவச் செலவு உணவு உடைக்கான செலவுகள் எல்லாம் தன்னையேச் சாரும் என்பதால் பலர் பெற்றோர்களை புறக்கணிக்கிறார்கள். 

பெற்றோர்கள் மூலமே பிள்ளைகள் உருவானார்கள் என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது. எனவே நாம் சம்பாதித்த செல்வங்களை பெறுவதற்கான முதல் தகுதி பெற்றோர்களுக்கே உண்டு. 

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். ''நல்லவற்றிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்'' எனக் கூறுவீராக! 

அல்குர்ஆன் (2 : 215) 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 

கொடுக்கும் கை உயர்ந்ததாகும். உனது தாய் உனது தந்தை உனது சகோதரன் உனது சகோதரி ஆகிய நெருங்கிய உறவினர்களிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! பிறகு உனக்கு நெருக்கமானவர்கள். 

அறிவிப்பவர் : தாரிக் அல்முஹாரிபீ (ர) அவர்கள் நூல் : நஸயீ (2485)